Sunday, March 3, 2013

மைதிலி மொழிக் கவிதை - டாக்டர் ஷெபாலிகா வர்மா ஆங்கிலம் வழி தமிழில்: கி. சீனிவாச ராகவன்

பெண்


நான் ஒரு பெண்ணாய்ப் பிறந்து விட்டேன்
அது என் பிழையல்ல
ஆம், பெண்ணாய்ப் பிறந்தது என் பிழையல்ல
உன் கற்பனையின் ஒப்பனையில்
நான் ஒரு சாதாரண மானுட ஜன்மமல்ல --
மாதவம் செய்து பிறந்த மங்கை
தேவியென பூஜிக்கப்படும் தெய்விக நங்கை

ஆனால்,
எதார்த்தத்தில் என் நிலை என்ன தெரியுமா --
பாவம்செய்தோரை பாதாளப் படுகுழியில் தண்டிக்கும்
நரகதேவதையும் கதறியழுவாள் என் அவலக்குரல் கேட்டு
ஆற்றாது நான் வடிக்கும் கண்ணீர்
வற்றாத கோசி நதியாய் பிரவாகமெடுக்கும் --
இருள் சூழ்ந்த இரவுகள்,
வசந்தத்தைக்காணாத வாழ்க்கை
அசோகவனத்து சீதையின் ஆழ்ந்த சோகம்
என் விழிகளில் --

என் ஜாதகத்தில் மட்டுமல்ல
என் சேலைத்தலைப்பின் வேலைப்பாட்டில்கூட
நன்மைக்கு அதிபதியாகும் நட்சத்திரங்களில்லை
சாதகத்தைத்தரும் சந்திரனும் சஞ்சரிக்கவில்லை
பாதகத்தையே தரும் ராகுவும் கேதுவும்தான் அங்கு
அலங்கரிக்கும் சித்திரங்கள்

இந்த இழிநிலை இன்றோடு அகலட்டும்
இனி,
வீசும் காற்றும் என்னை மாசுபடுத்தாது விலகட்டும்
நரம்பும் சதையும், உடம்பில் ஓடும் குருதியும்
இருபாலர்க்கும் ஒன்றே எனில்
ஏற்றத்தாழ்வுக்கு இடமேது
மென்மைத்தன்மை பெண்மைக்குப் பெருமையெனில்
எனக்குமட்டும் ஏனிந்த கொடுமை

பூங்கொடி நான் --
அசைந்தாடுவேன்
தென்றல் வீசினால்
ஆர்த்தெழுவேன்
ஆணாதிக்கம் பேசினால்
பிறந்துவிட்டது புதுயுகம--பெண்களுக்குப்
புரிந்து விட்டது சுதந்திரத்தின் சுகம்

இனி,
அகத்திலும், எங்கள் முகத்திலும்
இருள் என்பதே இல்லை
ஆகாயமே எங்கள் எழுச்சியின் எல்லை
சடங்குகள், சம்பிரதாயங்கள் -- இவை
தடைக்கற்களானால் தகர்த்தெறிவோம்
புதுயுகம், புத்தொளிபரப்பும் புதுப்பிக்கப்பட்ட வானம்
நவீன சமுதாயம் நோக்கி பெண்களின் வெற்றிப்பயணம்

இத்தனை மாற்றங்களுக்கிடையேயும்
என் தாயுள்ளத்தின் கனிவு மாறவில்லையே
கவனித்தாயா மகனே --
கர்ப்பத்தில் உன்னை உருவாக்கி
பத்துமாதம் சுமப்பதில் சுகம் கண்டு
மானுடப்பிறவியை உனக்கு அளிக்கிறேன்
ஆனால்,
உன்னையே படைக்கும் என்னை
ஆட்டிப்படைக்கும் ஆண்டவன் ஆகிறாய் நீ
ஆண்மைய கருத்தாடலைத் தவிக்கவும்
பெண்மைய கருத்தாடலைத் தொடங்கவும்
இதுவே சரியான தருணம்

Thursday, January 10, 2013

சோலைக்கிளி கவிதைகள்


நான் தயிர்போடுவதும் பூவால்தான்
காற்றே உன்னில் நான் ஏறி ஓர் இடத்திற்கு
விஜயம் செய்ய வேண்டுமென
விரும்புகிறாய்

போகும் வழியெல்லாம் பூப்பறித்து நான் தருவேன்
முகர
என்று நினைக்கின்றாய்

சரிதான்
மழை இல்லாத ஒரு கோடை இதுவாக
இருந்தாலும் என்னால்
பூக்கள் கொய்ய முடியும்
பூவாலே உழுது பூக்களையே விதைத்து
பூக்களையே அறுக்கும் மானிடன் நான்
பூக்கள்தாம் எனது கத்தி
கட்டில்
கண்ணாடி
கூதலுக்குப் போர்த்தும் ஆடையென்று
எல்லாமாய்
பூப் பேனையையும் வைத்திருக்கும் ஒருவன்

என் தலைமுடியே பூப்பனதான்
நான் தயிர் போடுவதும் பூவால்தான்

என் வீட்டுப் பூனைக்குட்டி
பேண்டு மூடுவதும் பூவை
பூவை
பூவை
விளக்காக வைத்துத்தான்
பாட்டும் எழுதுகிறேன்

பூ நிறைந்த ஒருவன்
எனக்குள் பூங்குருவி கத்துது

ஆனபடியால்
நீ நினைப்பதொன்றும் தவறில்லை
எனக்கு முன்னாலே
ஒரு குட்டிக் குதிரையைப் போல் துள்ளும்
தென்றலே
என் கண்ணுக்கு நேராக வந்து
கதவைத் திறக்கும் வாகனமே

என் மனைவி ஒருத்தியும் இருக்கின்றாள்
ஒரு மயிர் என்றாலும் என் மண்டையிலே முளைத்தது
அவளும் ஒரு பச்சைப் பூ

அது வேண்டாமா உனக்கு

அவள் மிளகு என்றால் நான் காய்ந்த கொச்சிக்காய்1
சேர்ந்து இடித்தால்தான் சுவைக்கும்

இந்த இடிகலவை சள்ளல் மீனு2க்குள் தூவி
ஆக்கிக் குலுக்கினால்தான் மணக்கும்

கொச்சிக்காய் இடிக்கத் தெரியாத குளிர்காற்றே
எங்கே விஜயம்
விருப்பம்தான்
என் மிளகையும் கூப்பிடு
உன்னோடு வந்தால் ஊர்ப் பலத்தை ஆய்ந்து
பழுக்கவைத்துச் சாப்பிடலாம்
ஒவ்வொரு மாம்பழம் ஒவ்வொரு ஊரும்
கனியவைத்தால்
o
1 கொச்சிக்காய் - மிளகாய்
2 சள்ளல்மீன் - ஒரு மீன் இனம்

நான் வேறுஎங்கோ இருக்கின்றேன்
காகம் ஏன் குரைக்கிறது
நான் கட்டிலில் படுப்பதை ஜன்னலால் கண்டு
எலும்புத் துண்டென்று நினைத்ததா

இது நாயின் தம்பியா
அரசியல்வாதிகளின் புதல்வனா

இதன் நாட்டில் தேர்தலா
இது நிற்கும் எனது பாக்குமரம்
பிரச்சார மேடையா

தண்ணீர் குடித்துக் குடித்துக் குரைக்கிறது

காதுகள் இரண்டையும் பொத்தியபடி
ஜன்னலை நன்றாகத் திறக்கிறேன்

காதுதான் இப்போது மக்களுக்குப் பாரமான
ஓர் உறுப்பு
இந்தக் காதுக்குள் நெருப்பை காய்ச்சி ஊற்றுகின்ற
திரு நாட்டில்
மழைக்கும் வாய்
மயிலாடி மழை வந்த காலங்கள் கருகி
குரங்கின் வாலில்தான் தீப்பந்தம்
ஊர் ஒளிர

இந்தக் காகத்தின் வாயிலும் தேன் என்று
நினைக்கின்ற குழந்தைகள்
முளைக்கின்ற உலகத்தில்

நான் வேறு எங்கோ இருக்கின்றேன்
இந்த
சமகால உலகத்தில்
வரவே மறுத்தவனாய்
எனக்குள்ளே நானொரு பெட்டிசெய்து
அதற்குள்ளே ஒளித்தவனாய்
நான் போகும் இடத்திற்கான பாதைகளை அமைத்து
அதற்கான வாகனமாய் ஞானத்தூக்கங்களை மாற்றி

என்னை உரித்து
உரிமட்டை எறிந்து
பால் தேங்காய் உருளுகையில் படுக்கையிலே
இந்தத் தொல்லை
என்னைத் தீட்டுவது
இருளைப் பிரிக்கிறவன் மகன்
இருட்டுது
என் மகன் எங்கே
என் இருதயத்தைச் சுமந்த சில்வண்டு
போன இடம் தெரியுமா
மாலை வகுப்பிற்கு போய்வந்து நீ வைத்த
தேநீரைப் பருகிவிட்டு
யாரோ ஒருவனின் பெயரைக் கொறித்தபடி ஓடியவன்
என்னைப்போல்
வேறெங்கோ ஒளித்திருந்து
இருளைப் பிரிக்கிறானா
கும்மிருட்டுள்
வெளிச்சம் தேடுகின்ற ஒருவனின் புதல்வன்
வயது ஏழரை
சின்ன வகுப்பில் படிக்கிறவன்

மதியம் போல்
அவன் செய்துவைத்திருக்கும் கடதாசித் தோணி
அவன் மேசையைக் கடலாக்கி
நிற்கிறது
புத்தகக் கல்லில் பாய்ந்ததா

ஓடாத அந்த
காகிதக் கப்பல்போல்
வழியைப் பார்த்தபடி நானும்

வழி என்பது இவனது வருகையை
எதிர்பார்க்கும் எனக்கு
மனம் முழுக்க ஆணி அடிக்கின்ற
தச்சுத் தொழிற்சாலை
தச்சன் கவலை

இதோ கும்மிருட்டுக்குள் புரண்டபடி வருகின்றான்
நிலவுதான் இவனைக் கழுகி எடுக்கவேண்டும்

வீட்டுக்குள் வந்தவனைத் தேடி
தாயான நீ
அலைகின்றாய்
நிலவும் அலைகிறது
அலைச்சலில்தான் அணையாத தீபங்கள் ஒளிர்கின்றதோ

இந்த வாழ்க்கை புரிபவனும் அலைகின்றான்
காலக்;கிரமத்தில் மெல்லமெல்ல ஜொலிக்கின்றான்
பிறகு
அவனுக்குப் பின்னால் உலகம் சுழல்கிறது

ராணிதிலக் கவிதைகள்


எழுதிக்கொண்டிருந்தேன்
என்
இருக்கையில் அமர்ந்தபடி
எழுதிக்கொண்டிருந்தேன்
நான்கு
ஐந்து
வார்த்தைகளை
மனம்
வலை வீசிக்கொண்டிருக்க
வெளியே
ஆந்திமந்தாரை மரத்தின்
கீழே
முற்றத்தில்
நான்கு
ஐந்து
மலர்கள்
வீழ்ந்துகொண்டிருந்ததைப்
பார்த்துக்கொண்டு
இருந்தேன்.
மதிய சாலை
இன்று
காலை முதல்
என்
எல்லா வெற்றிகளையும்
யார் யாருக்கோ
கையளித்துவிட்டு
சந்தோஷத்தில்
நிழலற்ற மதிய சாலையில்
தன்னந்தனியாக
நடந்து செல்கிறேன்
என் தலைக்குமேல்
மிதந்தபடி
வரும்
இந்தக் கத்திக்கப்பலுக்கு
என்ன
செய்வேன்?

Sunday, November 11, 2012

வே. பாபு கவிதை


நான்கு இட்லிகளும்
ஒரு தண்ணீர்ப் பாட்டிலும்
முதல் இட்லியோடு
K தெருவின் 23ஆம் எண் வீட்டிற்குள்
அவன் நுழைந்தபோது
கோழிகள்
கூடையினுள் அடைந்துகொண்டிருந்தன
இரண்டாவது இட்லியோடு
போனபோது
அவை
குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தன
மூன்றாவது இட்லியோடு
போனபோது
அவற்றின் கண்கள்
கேமராபோல் சுழன்றுகொண்டிருந்தன
நான்காவது இட்லியோடு
தண்ணீர்ப் பாட்டிலையும்
எடுத்துச் சென்றபோது
அவை
அவனைப் பின்தொடர ஆரம்பித்தன

அப்பொழுதிலிருந்துதான்
நான்கு இட்லிகள்
ஒரு தண்ணீர்ப் பாட்டிலை
யார்
எடுத்துச் சென்றாலும்
அறம் அறம் எனக்
கோழிகள் கூவ ஆரம்பித்தன.

அகச்சேரன் கவிதை


அந்திக் கருக்கலில்
பறவைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்
அந்திக் கருக்கலில்
மிதக்க ஆரம்பித்து விடுகிறது
என் நிச்சலனத் தனி ஏரி

அதில்
ஒரு பரிசல்
ஒரு துடுப்பு
உங்களை அழைக்கிறது
என் வற்புறுத்தலுக்குப் பிறகும்

இரும்பு ரேழிக்கு வெளியே
பேசத் துடிக்கும்
பைத்தியத்தின் கைபோல.

ஹெச். ஜி. ரசூல் கவிதைகள்


ஒரு மலைப் பாம்பின் மீது அமர்ந்திருக்கின்றேன்
யாரைக் கூப்பிட்டாலும்
என்னைக் கூப்பிடுவதுபோல் இருக்கிறது
எதிரே மரத்தின் இலை அசையும் போதும்
பயம் தொற்றிக்கொள்கிறது
எனது நிழலைப் பார்த்தபோது
கூரிய ஆயுதங்களோடு
அது என்னைத் துரத்திவருகிறது.
எனது பெயரை திரும்பக் கூப்பிடுகிறாய்
அது எனது பெயரல்ல என்பது தெரிந்தும்.
எழுந்துநின்று வணங்குகிறேன்
வெவ்வேறு சைகைகள் காட்டி
என் இருப்பையே நிலைகுலையச் செய்கிறாய்.
எழுதிய பேனாவின் ரத்தத் துளியில்
வெற்றுத்தாள் நனைந்திட
எழுத்துகள் எதுவும் தெரியவில்லை.
ஒவ்வொருதடவையும் வெவ்வேறு வேண்டுதல்களோடு
கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன.
எனது பெயர் சொல்லி
என்னையே நான் கூப்பிட்டுக் கொள்கிறேன்
உட்கார்ந்திருந்த இருக்கை
திடீரென அசைகிறது.
ஒரு மலைப்பாம்பின் மீது அமர்ந்திருக்கின்றேன்.
நான் குடித்த விஷம்
எனது கடைசி நம்பிக்கையை
இந்த மனுவில் சுமந்துகொண்டு வந்திருக்கிறேன்.
நீ இதை வாசித்து முடிக்குமுன்
ஒருவேளை
நான் குடித்த விஷம்
என்னைக் கொன்றுவிடக் கூடும்.
உன் முதுகில் அமர்ந்திருக்கும் குழந்தை
மிகப் பிரமாண்ட கட்டடங்களின் வாசலோரம்
ஒரு சின்ன எறும்பாய்
ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறேன்.
உன் முதுகில் அமர்ந்திருக்கும்
குழந்தை கதறி அழுகிறது
குழந்தையின் அழுகையை அடக்க
வாயைப் பொத்துகிறாய்
மூச்சுத் திணறி
அது செத்துக் கொண்டிருப்பதை
உன்னால் உணர முடியவில்லை.
கடலின் கிளர்ச்சி
\கடலைக் கொல்வதற்கு ஒத்திகைப் பார்க்கிறாய்.
கடல் பிணமாகிவிட்டால்
எந்த அலைகளையும்
கடலால் எழுப்பமுடியாதென்ற
இறுமாப்பில் இருக்கிறாய்.
கடல்நீரை வற்றச் செய்வதற்கு
நீ செய்த மந்திரவாத வேலைகள்
பலனளிக்காமல் போய்விட்டது.
ஆழிக் காத்து வீசி எறிந்த
கடற்கரை மணல்துகள்பட்டு
கண்களைக் கசக்கிக் கொள்கிறாய்.
ராட்சச திமிங்கலங்களைப் பிடிப்பதற்கு
வலைகளை மணலில் வீசி காத்திருக்கிறோம்.
துப்பாக்கிகளால் குறிவைத்து
கடலலையைத் துளைக்கிறாய்.
தன் குஞ்சுக்கு உணவூட்டிக்கொண்டிருந்த
தாய்மீன் மடிந்து போகிறது.
கடலில் மிதக்கும் வள்ளங்கள்
கன்ணீரால் நிறைந்திருக்கிறது.
குண்டு துளைக்காத ஆடை போட்டு
அணு மின்பொம்மை
தனது ஆட்டத்தைத் துவக்குகிறது.
கடல் மீண்டும் கிளர்கிறது.
கொலைகாரன் இசைக்கத் துவங்கிய பாடல்
திறக்காத புத்தகத்தின் பக்கங்களை
அவன் வாசித்துவிட்டதாக
என்னிடம் கூறுகிறான்
ஒரு புத்தகத்தைத் திறந்து பார்க்காமலே
வாசித்துவிட்ட அவன்
எழுதப்படாத எனது புத்தகத்திற்கு
விமர்சனமும் சொல்கிறான்.
அவனின் அதீத ஆற்றல் கண்டு
புத்தகம் திகைத்து நிற்கிறது.
புத்தகத்தின் வரிகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்த
கொலைகாரன் எழும்பிவந்து
விமர்சகனைத் தாக்க முற்பட்டபோது
புத்தகம் கிழிந்து தொங்க ஆரம்பித்தது.
விதவிதமாகப் புத்தகங்களை
கிழித்துத் தொங்கவிட்ட பெருமிதத்தில்
கொலைக்காரன்
புல்லாங்குழலெடுத்துத் தனது பாடலை
இசைக்கத் தொடங்குகிறான்.

Thursday, October 18, 2012

Salutes The Author

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! 
வசதியாகத்தான் இருக்கிறது மகனே… 
நீ கொண்டு வந்து சேர்த்த 
முதியோர் இல்லம் 

பொறுப்பாய் என்னை 
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ 
வெளியேறிய போது, முன்பு நானும் 
இது போல் உன்னை 
வகுப்பறையில் விட்டு விட்டு 
என் முதுகுக்குப் பின்னால் 
நீ கதறக் கதறக் 
கண்ணீரை மறைத்தபடி 
புறப்பட்ட காட்சி 
ஞாபகத்தில் எழுகிறது! 

முதல் தரமிக்க 
இந்த இல்லத்தை 
தேடித் திரிந்து 
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட 
அன்று உனக்காக நானும் 
பொருத்தமான பள்ளி 
எதுவென்றே 
ஓடி அலைந்ததை 
ஒப்பீடு செய்கிறேன்! 

இதுவரையில் 
ஒருமுறையேனும் 
என் முகம் பார்க்க 
நீ வராமல் போனாலும் 
என் பராமரிப்பிற்கான 
மாதத் தொகையை 
மறக்காமல் 
அனுப்பி வைப்பதற்காக 
மனம் மகிழ்ச்சியடைகிறது 
நீ விடுதியில் 
தங்கிப் படித்த காலத்தில் 
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற 
ஆவல் இருந்தாலும் 
படிப்பை நினைத்து 
உன்னை சந்திக்க மறுத்ததன் 
எதிர்வினையே இதுவென்று 
இப்போது அறிகிறேன்! 

இளம் வயதினில் 
நீ சிறுகச் சிறுக சேமித்த 
அனுபவத்தை 
என் முதுமைப் பருவத்தில் 
மொத்தமாக எனக்கே 
செலவு செய்கிறாய் 
ஆயினும்… 
உனக்கும் எனக்கும் 
ஒரு சிறு வேறுபாடு 
நான் கற்றுக்கொடுத்தேன் 
உனக்கு… 
வாழ்க்கை இதுதானென்று 
நீ கற்றுக் கொடுக்கிறாய் 
எனக்கு… 
உறவுகள் இதுதானென்று!