Sunday, November 30, 2008

குதிரைக் கவிதைகள் - பாலகுமாரன் - தொடர்ச்சி

"ஏழாம் பாடம்...

அவல ஆடுகள் கூட இங்கே
கொம்புடன் ஜனித்ததாக
கீச்சுப் பூனைகள் கொண்டதிங்கே
கூரிய நகமும் பல்லும்

யாருக்கும் தீங்கு செய்யா
நத்தைக்கும் கல்லாய் ஓடு
பச்சோந்தி நிறத்தை மாற்றும்
பல்லிவால் விஷத்தைத் தேக்கும்

குதிரைகள் மட்டுமிங்கே
கொம்பின்றி பிறந்ததென்ன ?
வெறுப்புடன் பிறந்த மாக்கள்
பயத்தினைத் துணையாய்க் கொள்ள
விருப்புடன் பிறந்த குதிரைக்கு
கொம்பில்லை ; விஷமுமில்லை
தர்மத்தைச் சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவர் ?
குதிரைகள் காதைப் பாரும்
உள்ளங்கை சிவப்பு தோற்கும்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஏழாம் பாடம்.

***

இதுவரை வெளிவராத கவிதை இது, இரும்பு குதிரை நாவலில் ஐந்தாம் பாடம் இல்லையே என்று கேட்டதற்கு எழுதிக் கொள்ளுங்கள் என்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் மூன்று நிமிடத்தில் சொன்ன கவிதை இது...

மனிதரின் செருமல் போல
குதிரையின் கனைப்பு இல்லை
குதிரைகள் கனைப்பின் மூலம்
செய்திகள் சொல்வதில்லை.
அது அடிக்குரல் பேச்சு அல்ல
அந்தரங்க கேலியுமில்லை
குதிரைகள் தனக்குத் தானே
பேசலின் முயற்சி கனைப்பு
சிலசமயம் குதிரை கனைப்பில்
சின்னதோர் அலுப்பு உண்டு
அடுத்ததாய் செய்யப் போகும்
வேலையின் முனைப்பு உண்டு

குதிரையின் கனைப்பைக் கேட்டு
மறு குதிரைத் திரும்பிப் பாரா
ஒரு கனைப்புச் சத்தம் கேட்டு
மறு கனைப்பு பதிலாய் தாரா.
குதிரைகள் உலகம் எளிது
எதிர்பார்ப்பு ஏதும் இல்லை.
தன் நெஞ்சைத் தானே நோக்கி
குதிரைகள் பேச்சே கனைப்பு

மற்றவர் என்ன சொல்வார்
என்பதே மனிதர் உலகம்
உற்றவர் எனக்கு நானே
என்பதே குதிரை வாழ்வு
குதிரையின் கனைப்பு கேட்க
எனக்கு நான் வணக்கம் சொல்வேன்
வேறெவரும் வாழ்த்த வேண்டாம்
வேறெவரும் வணங்க வேண்டாம்
என் செய்கை எனக்குத் தெரியும்
பூமாலைத் தேவையில்லை
தொடர்ந்து போ மேலே மேலே
குதிரையின் கனைப்புச் சொல்லும்

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஐந்தாம் பாடம்.

குதிரைக் கவிதைகள் - பாலகுமாரன்

"குதிரைகள் சொன்ன பாடங்களாக “இரும்பு குதிரைகள்” என்ற பரிசும், புகழும் பெற்ற எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் இரண்டாவது நாவலில் இடம் பெற்ற கவிதைகளின் சிறு தொகுப்பு...

முதலாம் பாடம்...

குதிரைகள் பசுக்கள் போல
வாய் விட்டு கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம்

தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்காப் பணிந்து போகும்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் முதலாம் பாடம்.

***
இரண்டாம் பாடம்...

குளம்படி ஓசைக் கவிதை
குதிரையின் கனைப்புக் கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் இரண்டாம் பாடம்.

***
மூன்றாம் பாடம்....

குதிரைகள் பயணம் செய்யா
கூட்டமாய்ப் பறவை போல
இலக்குகள் குதிரைக்கில்லை
முன்பின்னாய் அலைதல் தவிர.
குதிரையை மடக்கிக் கேளு
போவது எங்கே என்று
புறம் திரும்பி அழகு காட்டும்
கேள்வியே அபத்தம் என்று இலக்கில்லா மனிதர் பெரியோர்
உள்ளவர் அடைய மாட்டார்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் மூன்றாம் பாடம்.
***
நான்காம் பாடம்...

நிலம் பரவி கால்கள் நீட்டி கன்னத்துப் பக்கம் அழுந்த
குதிரைகள் தூங்குவதில்லை
மற்றைய உயிர்கள் போல. நிற்கையில் கண்கள் மூடி
களைப்பினைப் போக்கும் குதிரை தொட்டதும் புரிந்து கொள்ளும்
தொடுதலைப் புரிந்து கொள்ளும் தூங்குதல் பெரிய பாபம் தூங்கவா பிறந்தீர் இங்கு
வாழ்வதோ சிறிது நாட்கள்
அதில் சாவினை நிகர்த்த தூக்கம் புரிபவர் பெரியோர் அல்லர்
வாழ்பவர் தூங்க மாட்டார் குதிரைகள் கண்கள் மூடி
குறி விறைத்து நிற்கும் காட்சி யோகத்தின் உச்ச கட்டம்
நெற்றிக்குள் சந்திர பிம்பம் - இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் நான்காம் பாடம். ***
ஆறாம் பாடம்...

நீர் குடிக்கக் குனியும் குதிரை
நிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுது மிருகம் என்பார்
சீர் குணம் அறியமாட்டார்.

வேறொன்று குடிக்கும் போது
தான் கலக்கல் கூடாதென்று
குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
மிருகத்தில் குழந்தை ஜாதி. கால் வைத்த இடங்கள் எல்லாம்
பூ முளைக்கும் இடமென்றெண்ணி
குளம்பது விளிம்பில் நிற்கும்
குதிரையா மிரளும் மிருகம்
குதிரையின் குளம்பைப் பாரும்
இடுக்கிலே ரோமம் சிரிக்கும்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஆறாம் பாடம்.
***

மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம் - சுந்தர ராமசாமி

"கொஞ்சம் முகம் பார்த்து
தலை சீவ ஒரு சந்திரன்
லோஷன் மணக்கும் பாத்ரூம்
என் மனக்குதிரைகள் நின்று
அசைபோட ஒரு லாயம்
என் கையெழுத்துப்
பிரதியில் கண்ணோடமுகம்
கொள்ளும் ஆனந்தச் சலனங்கள்
நான் காண ஒரு பெண்
சிந்திக்கையில்
கோத ஒரு வெண்தாடி
சாந்தமான சூரியன்
லேசான குளிர்
அடிமனத்தில் கவிதையின் நீரோடை..."

Saturday, November 29, 2008

ஆத்மாநாம் கவிதை

"அவர் எங்கே செல்கிறார்?
தலையில் கை வைத்தபடி
தலை மேல் இருப்பது அவர் கையல்ல
வளர்த்த விட்டுக் கை எங்கே செல்கிறார் அவர்?
ஓஹோ! ஓட்டளிப்பதற்கு...
பிறந்த நாட்டுக்குக் கடமையாற்றுவதற்கு ஓ! இன்னுமொரு கை
அவர் முதுகில் தாங்கிற்றே...
அது எந்தக் கை? அதிகாரத்தின் கை
நாயகக் கடமை செய்யப்
பலாத்காரம் செய்யும் கை..."

தரிசனம் - ஆத்மாநாம்

"கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை.
அவருறும் புன்னகைத்துப்
போய் விட்டார்.
ஆனாலும்
மனதிலே ஒரு நிம்மதி..."

பஞ்ச தந்திரக் கவிதைகள் யுக பாரதி

"
ஒன்று....

தந்திரம் நிரம்பிய நரி
தனது கூட்டணியினரோடு
பேசிக் கொண்டிருந்தது.

எதிர்க் கட்சிகளின்
அதீத மக்கள் பணியை
எப்படி முறியடிப்பதென...

எதற்கெடுத்தாலும்
அறிக்கை தருவதன் மூலம்
ஓரளவு சமாளிக்கலாம்...

கடுமையான வெயிலுக்கு
காரணம் இவர்களென்று
கருத்து பரப்பலாம்...

வித விதமான
விவாதம் குறித்து
எதிர்க்கட்சி நரிகளிடம்
கருத்துக் கேட்க
அவை சொல்லின
'தேர்தல் வரப் போகிறது'


இரண்டு....

பேசுதலே
பெரிதென்றிருக்கும்
தவக்களைகள்
தமக்குள் அடித்துக் கொண்டன
செம்மொழியானதற்கு
யார் காரணமென்று...

மொழியே காரணமென்று
எதிர்க்குரல் கொடுத்தன
முதலைகள்...

வலுத்தது சண்டை
அக்கடைசியில்
செம்மொழியின் சிறப்பு
கெட்ட வார்த்தைகளில்
வெளிப்படலாயிற்று ...

போக்கத்த பிரஷைகளோ
புலம்பத் தொடங்கினர்
குளம்வற்றும் வரைதான்
தவளைக் குச்சல்
கூட்டணி இருக்கும் மட்டும்
கொடி பிடிக்கும்
முதலைகளின் மொழிப்பற்று...

பசிக்கிறது எனச்சொல்ல
செம்மொழியானாலென்ன?
கம்பளியானாலென்ன?


மூன்று...

நதிகளை
இணைப்பதொன்றே
தீர்வென்றன ஒட்டகங்கள்...

தாளாத தாகத்தில்
செத்தொழிதல் பொறுக்காமல்

சூழல் கெடுமே சொல்
இதை விடவும் கெடுவதற்கு
இருக்கிறதா சூழல்...

நாடு கிடக்கிறது
பஞ்சத்தில்
நாசமிழைபோர் மஞ்சத்தில்...


இருதரப்பு பேச்சு வார்த்தை
கேட்ட பிறகு
ஐ நா கரடி அமைதியானது...

தேசிய இனங்கள்
சிலிர்த்தெழுதல்
பயங்கரவாதமென்றும்
சிறுபான்மை
சீற்றம் கொண்டால்
தீவிரவாதமென்றும்
மாளிகை வெள்ளை
நடைமுறை கருப்பு...

தேடினாலும்
கிடைக்கவில்லை பின்லேடன்
தினசரி நடக்கிறது அநியாயம்...


நான்கு...

பட்டமில்லாது வாழ்தல்
பாவமெனக் கருதியது
பச்சோந்தி எனவே

நிறத்துக்கொரு பெயர்
நேரத்திற்கொரு
புனைப்பெயர்...

கெட்டதைத்
தொடர்ந்து செய்தால்
கிடைக்கும் சில கௌரவம்
பட்டதை
உரைக்காவிட்டால்
பாராட்டு விருது உண்டு...

தலைவர்கள் மருத்துவர்கள்
தமிழ்மக்கள் நோயாளிகள்..."

Sunday, November 23, 2008

பட்டாம் பூச்சி - கவிதா பாரதி

"மலர்கள் தவிர்த்து
நதியிடம் எந்த உரிமையும் இல்லை
ஒரு பட்டாம் பூச்சிக்கு...

மீன் கொத்திக்கன்றி
பட்டாம்பூச்சிக்குத் தருவதற்கு
எதுவுமில்லை நதிக்கும்...

சுழித்தோடும் கண்ணாடியில்
மௌனம் பார்த்துக் கொள்ளும்
பட்டாம் பூச்சிக்கு
அப்படியென்ன சந்தோசம் இருந்துவிடக்கூடும் ...

நதிக்கும்
பட்டம் பூச்சிக்குமான உறவில்
நமக்கென்ன வேலை..."

மழை - யுக பாரதி

"ஈரமில்லாமல்
பொழிகிற
இந்த மழைக்கு தெரியுமா
என் கூரைகள்
கரைவது பற்றி ...

தெரிந்தாலும்
தெரியாவிட்டாலும்
நனைக்கவே
செய்யும் மழை...

நனைக்கத்தான்
மழை
நனையத்தான்
குடை..."

Saturday, November 22, 2008

அடுத்த கட்டத்தில் - தேவதச்சன்

"அடுத்த கட்டத்தில் கால் வைத்துகொண்டது
மனித குலம். இது வெளிப்படை
சமூகவியலார் மனிதப்பயணம் பற்றி நிறைய சொல்லியாயிற்று
கூடவே எந்திரமெனும் துணையும் கூட்டாயிற்று
இந்தச்சிட்டுக் குருவியும் நானும் சுமந்து செல்கிறோம்
நான் போரை, அது அமைதியை
விடுதலை தூரப் பொருளல்ல என்றே காட்சி தருகின்றன
காலைக் குரல்கள், மரங்கள், சத்தமற்று சேருமுன் சிறுநீர்
குதிரையாய் இருந்தபடி குதிரை ஏறும் தப்புக்கு முன்னால்
வயிற்றின் அமிலத்தில் வதங்குகிறது குதிரை
எல்லாம் கண்டதால் அமைதியும், எதுவும்
காணாததால் முயற்சியும் இங்கொரு மனம்
தேடியபடி இருக்கிறது இயல்வதை..."

கவிதை1 - தேவதச்சன்

"காற்றில் வாழ்வைப்போல்
வினோத நடனங்கள் புரியும்
இலைகளைப் பார்த்திருக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும் போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது.."

Thursday, November 20, 2008

விட்டு விடுதலையாகி - சின்ன கபாலி

"குதிரையை லாயத்தில் கட்டு
கடிவாளம், கண்பட்டைகளை அகற்று
சற்றே ஓய்வு கொள்ளட்டும்...

நடந்து செல்
நாற்றிசையும் கூர்நது நோக்கு
மனிதர்களை,
விலங்குகளை,
புழு பூச்சிகளை,
பறவைகளை,
மரங்களை,
உறுமிச் செல்லும் வாகனங்களை
அன்பாய் கவனி...

அண்ணாந்து வான் நோக்கு...
அதிசயங்களில் மெய் மற.
குனிந்து பூமியை தரிசி;
ஏதேனும் பிடிபட்டால்
எடுத்துச் செல்
இல்லையேல்
உண்டுறங்கி ஓய்வு கொள்..."

உலக மகா யுத்தம் - ஆத்மாநாம்

"ஒரு கூரை மேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த
காக்கை பறந்தது
காக்கை பறக்க, அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது, காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை...:

பாடம் - கல்யாண்ஜி

"பேசும் என் கிளி என்றான்
கூண்டைக் காட்டி
வால் இல்லை
வீசிப்பறக்கச் சிறகில்லை
வானம் காய்ப்பட வழி இல்லை
'பார் பார் இப்போது பேசும்' என
மீண்டும் மீண்டும அவன் சொல்ல
'பறவை என்றால் பறப்பது' எனும்
'பாடம் முதலில் படி' என்றேன்..."

குருவிக் கூடு - தேவதேவன்

" நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டை மாடியை தந்தது வீடு
இரண்டடி இடத்தையே எடுத்துக்கொண்டு
உயர்ந்தது
தன் அன்பை விரித்திருந்தது மரம்
அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக் கூடாய்
அசைந்தது.
நான் அமர்ந்திருந்த அந்த மொட்டை மாடி..."

Monday, November 17, 2008

கதவை திற - பசுவையா

"கதவைத் திற, காற்று வரட்டும்

சிறகை ஓடி
விசிறியின்
சிறைகை ஓடி,
விசிறிக்குள் காற்று
மலடிக் குழந்தை.

கதவைத் திற, காற்று வரட்டும்.

உணவை ஒழி
உடலின்
உணவை ஒல்ழி.
உணவில் உயிர்
நீருள் நெருப்பு.

கதவைத் திற, காற்று வரட்டும்.

சிலையை உடை
என்
சிலையை உடை
கடலோரம்
காலடி சுவடு.
கதவைத திற, காற்று வரட்டும்."

Saturday, November 15, 2008

வீதி விளக்குகள் - கலாப்ரியா

"அருகே வரும் வரை
பின்னாலிருந்து

தாண்டும் வரை
காலடியில்

தள்ளிப்போக தள்ளிப்போக
பூதாகரமாய்
முன்னால் விரிகிறது
வெறுங்கையுடன்
வீடு திரும்புவனின் நிழல்

திடீரென அணைந்த பொழுது
கள்ளன் போலிசோ
கல்லா மண்ணாவோ
சட்டென விளையாட்டை
நிறுத்திவிட்டு
ஒன்றுக்கொன்று பயமுறுத்தி
தடைப்பட்ட மின்சாரம்
பளிரென மீளும் போது
தன்னிச்சையாய் கை தட்டி
கூக்குரல் எழுப்பும்
குழந்தைகளின்
ஜாடைகளற்ற
சந்தோஷ வெளிச்சம்
காணாமலாக்கும்
கவலையின் நிழல்களை..."

ஆறாவது நிலம் தொகுப்பிலிருந்து - கரிகாலன்

"வளர்ப்பு நாயின் சுகவீனத்தால்
கவலை கொள்ளும்
சிறுமியின் பிரார்த்தனை
கடவுளுடைய இருப்பிற்கான
பரிசோதனையாய் மாறுகிறது...

நாயின் மரணம் சம்பவித்தவேளையில்
உருளும் கண்ணீர் துளியில்
தோல்வியை ஒப்புக்கொண்டபடி கரைகிறது
சிறுமியின் மனதிலிருந்து
கடவுளெனும் கற்பிதம்..."

Friday, November 14, 2008

தேடல் - வெ கிருஷ்ணவேணி

"கிணற்றில் குழந்தை
தவறி விழுந்த
சேதி கேட்டு
ஓடி வந்தார்கள்
காடு கழனிகளுக்கு
சென்றவர்கள்!
பதற்றத்துடன்
பரபரப்புடன்
எல்லோரும் தேடினார்கள்
அவரவர் குழந்தைகளை!"

கவனம் - சே சதாசிவம்

"நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி..."

Thursday, November 13, 2008

மழை-விக்ரமாதித்யன்

"சூல் கொண்ட
மேகங்கள் பொழிகின்றன...

சூல்
கொள்வது எப்படி?

சத்துவமுள்ள
பூமி போகம் காணுகிறது ...
சத்துவம் ஆவது
எங்கனம்?
மண் மழை சார்ந்து
மானுடம்..."

Wednesday, November 12, 2008

அப்துல் ரகுமான்...

"ஒரு
நெருப்பு உதட்டின்
வாசிப்பில்
புல்லாங்குழலே
உருகுகிறது..."

"நெருப்பின் நாக்கு
நிருபித்த
கற்பை
ஒரு வண்ணானின்
நாக்கு
அழுக்காக்கியது..."

ஐயாம் லிவிங் - சிட்டிசன், தாயம்மா

"நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை...
முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறியதில்லை...
கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்லை..
அடுக்குப் பானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை...
ஆனாலும் சொல்கிறாய்
ஐயாம் லிவிங் என்று..."

Tuesday, November 11, 2008

இலை - வைரமுத்து

"இன்றோ...நாளையோ...
இப்போதோ...பிறகோ...
விழுந்து விடுவேன்...

உயிரின் கடைசி இழையில்
ஊசலாடி நிற்கிறேன்...

உரசும் காற்று
உணர்ச்சிவசப்பட்டாலோ

முத்து மழைத் துளியொன்று
மூக்கில் விழுந்தாலோ

என் கிளையில் ஒரு பறவை
சிவ்வென்றமர்ந்து சிறகடிக்கும் அதிர்ச்சியிலோ...
நான் விழுந்து விடுவேன்...

விடை கொடு கிளையே
விடை கொடு...

இருந்தவரை என் மீது
எத்தனை குற்றச்சாட்டு?

காற்றின் தப்புத் தப்பான பாடலுக்கும்
தலையாட்டுவேனாம்!

எச்சமிட்டுவரும் பட்ச்சிகளுக்கும்
பச்சைக் கொடி காட்டுவேனாம்...

பக்கத்து இலைகளோடு
ஒவ்வொரு பொழுதும் உரசல்தானாம்...

இதோ
சாவை முன்னிட்டு என்னை
மன்னித்துவிட்டன சக இலைகள்...

அப்படியாயின்
வாழ்வு குறை குடமா?
மரணமே பூரணமா?
*
நிறைந்த வாழ்வு என் வாழ்வு

நான் குளித்த மிச்சத்தில்
பூமி குளித்தது...

சூரியக் கீற்று
என்னைத தொட்ட பிறகுதான்
மண்ணைத் தொட்டது

பகலில் நான் விட்ட மூச்சில்
பாழ்பட்ட காற்று
பத்தினியானது...

இந்த மரத்தில் நான்
எடுத்தது பகுதி
கொடுத்தது மிகுதி...

என் வாழ்விலும்
சாயம் போகாத சம்பவங்கள்
இரண்டுண்டு...

அடையாளம் தெரியாத புயலொன்று
தளிர்களையும் தலை வாங்கிப் போனதே
அந்த ராட்சத ராத்திரியும்

பூவில் வண்டு
கலந்த காட்சி கண்டு
பக்கத்து இலை கொண்டு
முகம் மூடிக்கொண்டேனே
அந்த மன்மதப் பகலும்...
*

ஒரு நாள்
ஒண்ட வந்த ஒரு பறவை
கிண்டியது என்னை...

'மலராய் ஜனிக்காமல்
கனியாய் பிறக்காமல்
இவ்வடிவு கொண்டதெண்ணி
என்றேனும் அழுதாயோ
ஏழை இலையே!'

காற்றின் துணையோடு
கலகலவென்று சிரித்தேன்...

'நல்லவேளை
நான் மலரில்லை...

தேனிக்கள் என் கற்பைத்
திருடுகிற தொல்லையில்லை...

நல்ல வேளை
நான் கனியில்லை

கிளிக்கூட்டம் என் தேகம்
கிழிக்கின்ற துன்பமில்லை...

இயல்பே இன்பம்
ஏக்கம் நரகம்'
*

அதோ அதோ
வாயு வடிவில்
வருகுதென் மரணம்...

இதோ இதோ
பூமியை நோக்கி
விழுகுதென் சடலம்...

வழிவிடு வழிவிடு
வண்ணத்துப் பூச்சியே

விலகிடு விலகிடு
விட்டில் கூட்டமே

நன்றி மரணமே
நன்றி...

வாழ்வுதராத வரமொன்றை
வழங்க வந்தாய் எனக்கு

பிறந்த நாள் முதல்
பிரிந்திருந்த தாய் மண்ணை
முதன்முதல் முதன் முதல்
முத்தமிடப் போகின்றேன்...

வந்துவிட்டேன் தாயே
வந்துவிட்டேன்

தழுவிக்கொள் என்னைத்
தழுவிக்கொள்...

ஆகா
சுகம்
அத்வைதம்...
*

வருந்தாதே விருட்சமே

இது முடிவில்லை
இன்னொரு தொடக்கம்...

வாழ்வு ஒரு சக்கரம்
மரணம் அதன் ஆரம்
சக்கரம் சுற்றும்

கிளைக்கு மறுபடியும்
வேறு வடிவில் உன்
வேர்வழி வருவேன்

எங்கே
எனக்காக ஒருமுறை
எல்லா இலைகளையும்
கைதட்டச் சொல்
************

பிழை

மழை வேண்டி
யாகம்...
கட்டைகளை
எரித்து...