"இன்றோ...நாளையோ...
இப்போதோ...பிறகோ...
விழுந்து விடுவேன்...
உயிரின் கடைசி இழையில்
ஊசலாடி நிற்கிறேன்...
உரசும் காற்று
உணர்ச்சிவசப்பட்டாலோ
முத்து மழைத் துளியொன்று
மூக்கில் விழுந்தாலோ
என் கிளையில் ஒரு பறவை
சிவ்வென்றமர்ந்து சிறகடிக்கும் அதிர்ச்சியிலோ...
நான் விழுந்து விடுவேன்...
விடை கொடு கிளையே
விடை கொடு...
இருந்தவரை என் மீது
எத்தனை குற்றச்சாட்டு?
காற்றின் தப்புத் தப்பான பாடலுக்கும்
தலையாட்டுவேனாம்!
எச்சமிட்டுவரும் பட்ச்சிகளுக்கும்
பச்சைக் கொடி காட்டுவேனாம்...
பக்கத்து இலைகளோடு
ஒவ்வொரு பொழுதும் உரசல்தானாம்...
இதோ
சாவை முன்னிட்டு என்னை
மன்னித்துவிட்டன சக இலைகள்...
அப்படியாயின்
வாழ்வு குறை குடமா?
மரணமே பூரணமா?
*
நிறைந்த வாழ்வு என் வாழ்வு
நான் குளித்த மிச்சத்தில்
பூமி குளித்தது...
சூரியக் கீற்று
என்னைத தொட்ட பிறகுதான்
மண்ணைத் தொட்டது
பகலில் நான் விட்ட மூச்சில்
பாழ்பட்ட காற்று
பத்தினியானது...
இந்த மரத்தில் நான்
எடுத்தது பகுதி
கொடுத்தது மிகுதி...
என் வாழ்விலும்
சாயம் போகாத சம்பவங்கள்
இரண்டுண்டு...
அடையாளம் தெரியாத புயலொன்று
தளிர்களையும் தலை வாங்கிப் போனதே
அந்த ராட்சத ராத்திரியும்
பூவில் வண்டு
கலந்த காட்சி கண்டு
பக்கத்து இலை கொண்டு
முகம் மூடிக்கொண்டேனே
அந்த மன்மதப் பகலும்...
*
ஒரு நாள்
ஒண்ட வந்த ஒரு பறவை
கிண்டியது என்னை...
'மலராய் ஜனிக்காமல்
கனியாய் பிறக்காமல்
இவ்வடிவு கொண்டதெண்ணி
என்றேனும் அழுதாயோ
ஏழை இலையே!'
காற்றின் துணையோடு
கலகலவென்று சிரித்தேன்...
'நல்லவேளை
நான் மலரில்லை...
தேனிக்கள் என் கற்பைத்
திருடுகிற தொல்லையில்லை...
நல்ல வேளை
நான் கனியில்லை
கிளிக்கூட்டம் என் தேகம்
கிழிக்கின்ற துன்பமில்லை...
இயல்பே இன்பம்
ஏக்கம் நரகம்'
*
அதோ அதோ
வாயு வடிவில்
வருகுதென் மரணம்...
இதோ இதோ
பூமியை நோக்கி
விழுகுதென் சடலம்...
வழிவிடு வழிவிடு
வண்ணத்துப் பூச்சியே
விலகிடு விலகிடு
விட்டில் கூட்டமே
நன்றி மரணமே
நன்றி...
வாழ்வுதராத வரமொன்றை
வழங்க வந்தாய் எனக்கு
பிறந்த நாள் முதல்
பிரிந்திருந்த தாய் மண்ணை
முதன்முதல் முதன் முதல்
முத்தமிடப் போகின்றேன்...
வந்துவிட்டேன் தாயே
வந்துவிட்டேன்
தழுவிக்கொள் என்னைத்
தழுவிக்கொள்...
ஆகா
சுகம்
அத்வைதம்...
*
வருந்தாதே விருட்சமே
இது முடிவில்லை
இன்னொரு தொடக்கம்...
வாழ்வு ஒரு சக்கரம்
மரணம் அதன் ஆரம்
சக்கரம் சுற்றும்
கிளைக்கு மறுபடியும்
வேறு வடிவில் உன்
வேர்வழி வருவேன்
எங்கே
எனக்காக ஒருமுறை
எல்லா இலைகளையும்
கைதட்டச் சொல்
************
Tuesday, November 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment