மாறிவரும்
இந்த நட்சத்திரங்களா உயிரற்றவை
அன்பின் மொட்டுகளை யார் அங்கே விதைத்தது
படர்ந்து கிடக்கும் ஒவ்வொரு பூவும்
மெல்லத் துடிப்பது
யாருடைய அன்பைச் சொல்ல
இனியொருமுறை
இவற்றை எரி கல்லெனப் பார்க்க முடியுமா
மாறிக்கொண்டே வருகிறது எல்லாம்
புகைபோலப் படரும் பாதி வெளிச்சத்தில்
நகரும் நம் உடல்கள்
எந்த விருட்சத்தின் இலைகள்
எந்தக் காற்று நம்மை அள்ளியெடுத்து
வெளியெங்கும் இறைக்கப்போகிறது?
பழசாகிப்போன பரிசுகள் இருக்கும் அறை
பழசாகிப்போன பரிசுகள் நிறைந்த அறையில்
ஏற்கனவே திறந்து உலர்ந்த முத்தங்களும்
திறந்திருக்கும் நோட்டுப்புத்தகத்தின் நடுவில்
ஒளிந்திருக்கும் ஒரு துளி கண்ணீரும்
அதில் கசியும் ரகசியமும்
ஒரு சொல்லின் கதவு மூட
ஒரு சொல்லின் கதவு திறக்கிறது
பழசாகிப்போன பரிசுகள் இருக்கும் அறையின் கதவை
இனி திறக்க முடியாது
அங்கிருந்து வெளியேறவும் முடியாது
பரிசுகளின் அவிழ்ந்த ரிப்பன்கள்
ஞாபகப் பாம்புகளாய்ச் சீறலுடன் காலைச் சுற்ற
உள்ளே
உள்ளுக்கும் உள்ளே
தவிர
வெளியெங்கும் வேறு இல்லை
எங்கிருந்தோ கேட்கும் ஒரு பிரார்த்தனை
யாருடைய குரல்போல இருக்கிறது?
பரிசுகளின் பெருமூச்சைக் கடக்க முடியுமா?
யார் தட்டுவது கதவை
இதயத்தை உடைப்பதுபோல்
வெளியிலிருந்து?
அமிர்தத் துளி
கண்களுக்குள் பெயரற்ற நிறங்கள் மிதக்கும்
இருந்தும்
நீலமாகவே எல்லாவற்றையும் பார்க்கிறேன்
மழையால் ஆன உலகத்தில்
இருளைப் பிதுக்கி விரிகிறது
எலுமிச்சை ஒளி
அதில் மிதந்தபடி உலகை அறிந்துகொள்கிறாள்
ஒரு குட்டிப் பெண்
உறக்கத்தின் மூடிய கதவுகளுக்குப் பின்னால்
வளையும் வானவில்
விரல்களைப் பற்றுகிறது
ஒரு குழந்தையின் கைப்பிடியிலிருந்து
விரல்களை எப்படி விடுவித்துக்கொள்ளுவது
இப்போது மிதக்கும் அமிர்தத் துளி
எந்தப் பனிப்பாறைக்குள் ஒளிந்திருந்தது
இத்தனை காலம்?
உன்னிடம் வருவேன்
நம் உலகம் மழையால் ஆகும்போது
உன்னிடம் வருவேன்
அப்போது
தூரம் என்பது கிடையாது
நானும் மழையாவேன்
நீயும்கூட
இந்தப் பாடலும் மழையாகும்
மழை செய்யும்
உலகத்தில்
பெய்யும் மழையில்
மிதக்கும் காலடிச்சுவடுகள்
எங்கு செல்லும்?
உன் கண்ணீர்த் துளியின்
மூடிய கதவுகளைத்
திறந்து நான் வருவேன்
நடனம்
மிருகத்துடன்
நடனமாடும் சிறுமி
காலத்தை மாற்றுகிறாள்
சிறுமியின் விரல் அசைவில் மழை பொங்குகிறது
அவளுடைய கண்ணசைவில் மரங்கள் பூத்துக்குலுங்குகின்றன
அவளுடைய நகரும் பாதங்களுக்குக் கீழே உறைபனி படர்கிறது
மிருகத்தின் மூச்சுக் காற்றில் சிறுமியின் பாவாடை உயர்ந்து குடையாய் விரிகிறது
மிருகம் பசியுடன் நடனமாடுகிறது
சிறுமியின் பசி வேறு மாதிரியானது
காலம் சுழல்கிறது சிறுமியின் இடையைப் போல்
இரவுக்கும் பகலுக்கும் இடையில் விழித்தவனைச் சுற்றி
சிறுமியும் மிருகமும் ஆடுகிறார்கள்
அவனுடைய நினைவுகள் குழம்புகின்றன
அடையாளம் சொல்ல முடியாத குரல்கள்
அவனை அழைக்கின்றன
அவனுடைய கால்களுக்கடியில் நிலம் நகர்ந்துகொண்டே போகிறது
ஒரு அசைவுமின்றி நகராமலேயே
அவனும் அந்த நடனத்தை
ஆடிக்கொண்டிருக்கிறான்
என்று அறியும்போது
அந்த நடனத்திற்கான பாடலை அவன் இதயம்
எழுதத் துவங்குகிறது
Tuesday, September 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment