புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்...
சலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ
எதுவோ நகரும் இக்கணத்தில்
வரையப்பட்ட மண்டையோட்டின்
சாயலில் காண்கிறேன் என்னை
வளைந்து நெளிந்து செல்லும்
இப்பாதையொரு முடிவிலி
இரு மருங்குப் புதர்களிலிருந்தும்
வெளிப்பட்டிருக்கும்
புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்
புதையுண்ட மனித உயிர்கள்
காலக்கண்ணாடியைவிட்டும்
இரசம் உருள்கிறது
அதில் தென்பட்ட விம்பங்கள்தான்
புதையுண்டுபோயினவோ
வேர்களில் சிக்கியிருக்கும்
உடல்களிலிருந்து எல்லாச் செவிகளையும்
உறிஞ்செடுத்த விருட்சங்கள்
எவ்விசை கேட்டு வளரும்
விதியெழுதும் பேனா
எக்கணத்தில் முறிந்திடுமோ
காத்திருக்கலாம்
இங்குப் பூதம் காத்த விளக்காய் நான்
கால்களை விரித்தாடும்
எனது நிழல்களில்
ஒரு குழந்தை
ஒரு கொடூர விலங்கு
இணைந்திரண்டும்
ஒரு கணமேனும் விடாது அசைகின்றன
பார்வைக்குத் தெரியாத இழையொன்றால்
பிணைக்கப்பட்டிருக்கிறேனா
தெரியவில்லை
கடந்த காலத்தைக் காட்டிட
பறவைகளிடமில்லை
என்னிடமிருக்கின்றன
தேய்ந்தழியக் காத்திருக்கும் எனதேயான
பாதத்தடங்கள்
சுற்றிவரச் சட்டமிட்ட கூண்டுக்குள்
வளரும் தளிர் நானா
எவ்வாறாயினும் என்னில் வரையும்
எந்த வண்டிலுமில்லை
உணர்கொம்பில் ஒட்டிய தேன்
மண்டையோட்டிலுமில்லை
குருதியின் ஈரலிப்பு
பிறகும்
என் முகம் எதிலும் இல்லை
இருக்கக்கூடும்
இவ்வரிகளின் ஏதேனுமொரு மூலையில் நான்
நானாகவே
கடிகாரத்திலிருந்து உதிரும் காலம்
ஆடையின் நூலிழைகளைக்
காற்றசைத்துப் பார்க்கும் காலம்
பட்டுத் தெறிக்கும் வெளிச்சப் புள்ளியில்
துளித் துளியாய்த் திணறும்
ஓவியம் தீட்டும்
தூரத்து மின்னல்
ஆகாயம் கிழித்துக் குமுறிட
அதிவேக விலங்கொன்றென
மழை கொட்டும் பொழுதொன்றில்
வனாந்தரங்களைத் திசைமாற்றவென
எத்தனிக்கும் அதே காற்று
செட்டைகளைத் தூக்கி நகரும்
வண்ணத்துப் பூச்சிக்கு
ஏரி முழுவதும் குடித்திடும் தாகம்
சோம்பலில் கிடத்தியிருக்கும்
உடலுக்குள் உணர்த்தப்படும்
தூரத்து ரயிலினோசை
மழை, காற்று, குளிர்
விழிகள் கிறங்கியே கிடக்கும்
பணி நாள் காலை
கடிகாரத்திலிருந்து உதிர்கின்றன
காலத்தின் குறியீடுகள்
துளித் துளியாய்
ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா
‘ஓ பரமபிதாவே’
துளி நம்பிக்கையும் சிதறிப்போன அன்று
ஆச்சியின் அழுகை ஓலம்
ஆஸ்பத்திரி வளாகத்தை
அதிரச் செய்திருக்கக்கூடும்
சளி இறுகிச் சிதைந்த நெஞ்சுக்கூட்டோடு
வசதிகள் குறைந்த வவுனியா வைத்தியசாலை
பல நூறு கிலோ மீற்றர்கள் தொலைவில் அவளைக்
கண்டிக்கு அனுப்பியிருந்தது
வானமும் அதிர்ந்த நாளதில்
உயர்மருத்துவம்
மகளை எப்படியும் காப்பாற்றிடும்
நம்பிக்கையும் ஜெபமாலையும் துணையாக
ஆச்சியும் வந்திருந்தாள்
பார்வையாள விருந்தினராக
இருவர் மட்டுமே உள்ளனுப்பப்படும்
அவர்களுக்கென்று யாரும் வராத
வாயிலையே பார்த்தபடி
எப்பொழுதும் கட்டிலருகே
மெலிந்த ஆச்சி அமர்ந்திருப்பாள்
குழாய்கள் வழியே வரும்
உயிர்க்காற்று, மருந்து, கரைசல் உணவு
எல்லாவற்றையும் ஏற்றிருக்கும் ஆரோக்கியமேரி
வற்றிய உடல் சுவாசத்துக்கு மட்டுமே அசைய
கண்களில் மீதமிருக்கும் உயிர்
யாரையோ தேடியபடி கண்மணியாயசையும்
அவர்களறியாச் சிங்கள மொழியை
தமிழுக்கு மாற்றிச் சொல்ல உதவப்போய்
அவ்விருவர் துயர்க் கதையறிந்தேன்
பிறப்பிடம்
யாழ்ப்பாணத்தினொரு கடற்கரைப் பிரதேசம்
தற்பொழுது முகாம் வாசம்
மேரிக்கு ஒரே மகன்
சென்ற வருடம் கடத்தப்பட்ட அவனுக்கு
வயது பதினேழு
கணவனும் மற்ற உறவுகளும் போரில் இறந்திட
ஆச்சியும் அவளும் மட்டுமே மிச்சம்
ஷெல்பட்ட தொண்டையில் சத்திரச் சிகிச்சை
அதனோடு சேர்ந்து சளி கட்டிச் சிக்கலாகி
வவுனியா ஆஸ்பத்திரியோடு சில மாதங்கள் வாசம்
அங்கிருந்து கண்டிக்கு வந்து
இன்றோடு பத்து நாள்
‘தம்பி எங்களை வவுனியாவுக்கே
அனுப்பிவிடச் சொல்லுங்கோ
இஞ்ச மொழியும் தெரியேல்ல
கவனிக்கிறாங்களுமில்ல
பொட்டொன்றைக் கண்டால் போதும்
புலியென்று நினைப்பு இவங்களுக்கு
அங்கயெண்டாலும் அயல்கட்டிலுக்கு வாற சனம்
பார்த்துப் பேசிச் செல்லும்
மனசாரப் பேச்சைவிட
மருந்தெல்லாம் எதுக்கு ராசா’
இரு வாரங்களின் பிற்பாடு
மீளப்போய்ப் பார்க்கையில்
அவர்களிருக்கவில்லை
மேரி ஃபிலோமினாவை மரணம் கூட்டிச் சென்று
ஒரு கிழமையாயிற்றென
மருத்துவத் தாதி கூறி நடந்தாள்
காப்பாற்ற வந்த உயிரைக்
காலனின் கையில் பறிகொடுத்த ஆச்சி என்னவானாள்
தெரியாத மொழி பேசும் சூனியப் பூமி
நெரிசல் மிக்க பெருநகரம் அவளை
எந்த வாய் கொண்டு விழுங்கியதோ....
எங்கே போனாளென
எவர்க்கும் தெரியாத இருளை ஊடறுத்துத்
தளர்ந்த பாதங்களினால்
அழுதபடி நடந்தாளோ....
ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட
மேரி ஃபிலோமினா
மரணித்த வேளையில்
‘ஓ பரமபிதாவே’
துளி நம்பிக்கையும் சிதறுண்ட அந்நாளில்
ஆச்சியின் அழுகை ஓலம்
ஆஸ்பத்திரி வளாகத்தையே
அதிரச்செய்திருக்கும்
Tuesday, October 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment