காக்கைப்பாட்டு
அந்தக் காக்கைக்கு
அடுத்த தலைமுறை வந்து
பேரக் காக்கைகள் பறக்கின்றன இப்போது
ஆகாயமே சொந்தமாய் இருந்தும்
அண்டி வாழத் துடிப்பவை
எச்சில் பருக்கைக்கு
ஏங்கி அலைகிறவை
குப்பைத் தொட்டியை
அட்சயப் பாத்திரமாய் நம்பிக் கிளறுபவை
சென்றவாரம் மின்னடிபட்ட
சககாக்கையை மறந்து திரிகிறவை
வெகுளிகளை ஏமாற்றி
தட்டிப் பறித்துத் தின்கிறவை
மின்னணுக் கோபுரத்தின் சன்ன ஒலித்
தாக்குதலில் குருவியினம் அழிவதை
விசனிக்காதவை
என்றாலும்
எல்லாக் காக்கைகளும் காக்கைகள் அல்ல
விலகிவந்த காக்கை ஒன்று
என் ஜன்னல் தட்டில் அமர்கிறது
வழக்கமான பார்வை இன்றி
வேறொரு கோணத்தில் தலைசாய்த்து
ஓரசைப் பதங்களை
நீட்டியும் குறுக்கியும்
புதுமொழி பேசுகிறது
காக்கைக் குரலில் இசைமை சேர்க்கும்
நாடகத் தன்மை
பாராமுகம் காட்டும் இல்லத்தரசிமேல்
லேசான விமர்சனம்
எதிர்வரும் காக்கைகள்
யாருடைய பித்ருக்களோ என்றார்
ஆத்மாநாம்
ஆத்மாநாமேதானோ
வியக்கிறேன் நான்
o
மொட்டை மாடியில் கிடந்தேன்
சும்மாத்தான்
மழைக்காலப் பகல்
வெயிலும் இல்லை வெக்கையும் இல்லை
கட்டாந்தரையில் அழுந்திய முதுகின் கீழ்
அழுந்திய பருக்கைக் கற்கள்
கண்ணில் நிறைவது வானம் இல்லை
பார்வையின் அளவே பரந்து கிறங்கிய
மனம் என்றது மனம்
அளப்பரிய விரிவின் முன்
அடையாளம் எதுவுமற்று
நசுங்கிக் கிடக்கும்
பருக்கைக் கல்லென உணர்ந்தேன்
அற்பன் அற்பன் என்று துடித்தது நாடி
கொதிக்கும் வாழ்வு பலிகொண்ட தருணங்களும்
தினசரியின் பூகம்பத்தில் புதைந்த ஆசைகளும்
நிலவு உறங்கிய நேரத்தில்
கொள்ளைபோன கனவுகளும்
இன்னும் இன்னுமென்று வழக்கம்போல்
துயரத்தின் புதைகுழியில்
அமிழ்ந்துகொண்டேயிருந்தேன்
மதகுடைந்து பெருகியதில்
அணை முழுதும் வெளியோடி
நீர்க்கொடிகளின் பசுமை மண்டி
வறளவும் தொடங்கியது
துரிதமாய்ப் படர்ந்த பாலையின் பரப்பில்
தகித்து ஊர்ந்தபோது
நெற்றியில் சொட்டியது
ஈரத்தின் குளுமையொன்று
எச்சமோ
- என்று விதிர்த்தேன்.
இல்லை, நீர்த்துளி.
பெயரற்ற பெருங்கருணை
விரலால் தீண்டியதோ?
விம்மியது மனம்
அற்பன்தான் நான். ஆனாலும்
அவ்வளவு அற்பமில்லை.
Saturday, December 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment