Monday, March 12, 2012

ரவிசுப்ரமணியன் கவிதை



நெருக்கமான அந்நியனைத் தேடி வருபவர்கள்
புலன்களுக்கு அகப்படாத
ஸ்தூலமான பிறவி
அவன்.
உணர்வுகளால் சித்திக்கும் ஸ்பரிசங்களை
முரட்டு அழுத்தத்தால் சொல்ல இயலாது.
புரிதலின்றி உன்னியல்பில்
திரிபுகொள்ளாதே மகளே
வெய்யிலின் உக்கிரத்தில் அலைந்து திரிந்தோ
மழையின் ஈரக்குளிரில் நனைந்தபடியோ வரலாம்


பயணக் களைப்பில் சோர்ந்திருக்கலாம்
முகவரியை விசாரித்தரிய அலைந்திருக்கலாம்.


அவன்
நல்ல தந்தை இல்லையென்றும்
நல்ல கணவன் இல்லையென்றும்
வருபவர்களிடம் சொல்லாதே


நேசிப்பை அதிகப்படுத்தத்தான்
விலகிச்செல்கிறான்
சொற்களைவிடவும்
உயர்ந்தது செயலென்றே
மௌனித்திருக்கிறான்
மன அவசம் கொள்ளாது
தெளிவுகொள்
அவனின் ப்ரியங்களில் திளைத்தபடியோ
பாடிய குரலின் ஞாபகத்திலோ
உரையாடலின் தொடர்ச்சியாகவோ
குழந்தைகளுக்கெனச்
சிறு பழம் ஒன்றை வாங்கிவரும்
நினைவின்றியோகூட யாரும் வரலாம்
வீடு இது
ஆனால் வசிப்பிடம் இல்லையென
அவன் ஏன் உணர்ந்தானென யோசி
நானறிந்த
அவன் விலகலின் அண்மையை
அண்மையின் தூரத்தை
எப்படிச் சொல்வேன் மகளே உனக்கு
உன்னின் விதியோ
அவனின் விதியோ
இருவரும் இணைந்தது


சமூகத்தை நேசிப்பவன்
கலைகளைக் கொண்டாடுபவன் என
வருபவர்கள் நினைவிலிருக்கும்
கூட்டைக் கலைத்து
சம்பாதிக்கத் தெரியாதவன்
பூர்வ சொத்தைத் தவறவிட்டவன்
கோபக்காரன் என்றெல்லாம் சொல்லிப் புலம்பாதே
மண்ணில் மழையாய்க் குழைபவன் அல்ல அவன்
நிலத்திலிருந்தபடி ஆகாயம் நேசிப்பவன்
முகம் தெரியா அதிதி ஆயினும்
சுணக்கம் கொள்ளாதே.
சில நிமிஷம் ஆசுவாசம்கொள்ள
ஒரு நாற்காலி கொடு
நம்மிடமிருக்கும் அவல் பொறியில்
ஒரு கைப்பிடி கொடு
ஒரு குவளைத் தண்ணீர் கொடு


மலர்ந்த முகத்தோடு
சில வார்த்தைகளேனும்
பேசி வழியனுப்பு.


ஒருவேளை
நீ துயரென நினைக்கும்
கவலைகளைத் தீர்க்கும்
தேவதூதன் யாரேனும்கூட
மாற்று ரூபத்தில் வரக்கூடும் மகளே.

No comments: