Thursday, June 28, 2012

பா. அகிலன் கவிதைகள்


கால்
மனிதர்கள் சுவாசிக்க முடியாதவொரு காலை
எடுத்துவந்தார்கள் இன்று
தற்காப்புப் படைகள் தரித்த பின்
ஒழுகும் சீழுக்கு ஒரு கிண்ணமும்
சிதம்பிய தசைக்கு இன்னொரு பாத்திரமும் வைத்தபின்
பிடுங்கியுடன் அமர்ந்து
நெளியும் புழுக்களைப் பிடுங்கத் தொடங்கினேன்.

அதிசயம் தெரியுமா?
காலுக்கு ஒரு தலையும்
தலைக்கு இரண்டு கண்களும் இருந்தன.

பிண இலக்கம் 178
இரத்த விளாறாய்க் கிடந்தான்:
பாதித்தலை
பிளந்த நெஞ்சறையில் நூலிட்டு இறங்க
திரவமாய்க் கசிந்தது இருள்
தடுமாறிக் கடந்தால்
காத்துப் பசித்தவொரு முதிய தாய்
ஒரு நோயாளித் தந்தை
மாலையிட்ட சில புகைப்படங்கள்

தேகத்தின் பாதாளத்துள் இறங்க முதல்
முற்றிலாக் கேவலால் துரத்துண்டோம்
முள்ளாள் கிடந்த கனத்தது கண்ணீர்

அவசரமாய் வெளியேறிய பின்
மூடி
துணிப் பந்தொன்றை அடைத்து
தைக்கத் தொடங்கினேன்.

பிண இலக்கம் 182
சிதைவாடை
நீக்கினால்
ஓலமுறைந்து சீழ்கொண்ட இன்னோராடை

முலையொன்றில்லை:
மறு முலையில் கிடந்தது ஒரு சிறுவுடல்
பிரித்தால் பிரியாது
ஓருடலாய் ஒட்டிக் கிடந்தது

சுத்தப்படுத்திய பின் எழுதினேன்
பிண இலக்கம் 182.

பிண இலக்கம் 182உம்,
உயிரிலக்கம் 02உம்
உயிரில்லை:
இரத்தம் ஒரு சேலை
யோனியிற் தொங்கிய தொப்புழ் வீழ்தில்
ஆடியது ஓர் புத்துடல்.
வெட்டிப் பிரித்தோம்:
குலுக்கிய பின் அழுதது.

எழுதினேன் பேரேட்டில்
பிண இலக்கம் 183
உயிரிலக்கம் 02.

பொதி இலக்கம் 106 உம் பிறவும்
முண்டத்திற்கு மேலும் கீழும் ஒன்றுமில்லை.
இரத்த வெடில்
சிதம்பியழுகிய உடலைத் தொட முதல்
முறிந்தன என்புகள்

“குழந்தைகள் போலும்”

முடையாய்க் கட்டிய பின்
ஓரமாய்க் குவிக்கத் தொடங்கினோம்.

மாந்தோவின் பெண்கள்*
ஒட்டிக் கிடந்தது உயிரின் கடைசிச் சவ்வு

அருகு வர
யாந்திரிகமாய் நீக்கினாள் கீழாடை
இரத்தக் கிடங்கில்
மொய்த்துக் கிடந்தன ஆயிரமாண் குறிகள்

நீரள்ளிப் பெய்த பின்
அவள் மூளையிலிருந்து
ஒவ்வொரு ஆண்குறியாய் பிடுங்கத் தொடங்கினேன்.

காலம் கலங்கியபடி மடிந்தது.

*சதாத் ஆசன் மந்தோவின் சிறுகதை ஒன்றில் வரும் தொடர்ச்சியாக வன்புணர்ச்சிக்கு உட்பட்ட பெண் பாத்திரம்.
கைகள்
மணிக்கட்டுகள் சில
முழுக்கைகள் சில
அங்குமிங்குமாய் உடைந்தும் கிழிந்த வேறும் பல

ஒன்றெடுத்தேன்
பராயம் இருபதிருக்குமோர் ஆண் கை
முரட்டு விரல்கள்
நெடிய ஆயுள்ரேகை கைவிட்டிறங்கி
மேலும் பயணமானது

இறங்கிப் பார்த்தேன்
பச்சை குத்தியிருந்தான்
“சஞ்சுதா”

விசரி
காயமேதும் இல்லை.

ஒற்றையாடையில் மலமும்
மாதவிடாய் இரத்தமும் ஊறிக்கிடக்க
மாற்றுடை மறுத்தாள்
ஊன் மறுத்தாள்
பகலையும் இரவையும் ஊடறுத்தலறினாள்
மகவே
மகவே
மாயமே

துரத்தி
விலங்கிட்டுக் கூடிய பின்
உள மருத்துவருக்கு சிபாரிசு செய்தோம்.

பா.அகிலன்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். முதலாவது கவிதைத் தொகுதியான பதுங்கு குழி நாட்கள் 2001இல் வெளியானது. இரண்டாவது கவிதைத் தொகுதி சரமகவிகள் என்னும் தலைப்பில் 2011இல் யாழ்ப்பாணத்தில் வெளியாகியுள்ளது. சரமகவிகள் தொகுதியிலிருந்து இந்தக் கவிதைகள் எடுக்கப்பட்டன.

No comments: