"கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர் சிலபேர்
ரூபாய்க்கு மூன்று தோட்டா வாங்கிச்
சுட்டுப் பார்த்தனர் - அங்கே ஊதிப் பெருத்த
வட்ட வட்ட முட்டைத தலைகளோ
தோட்டாவிற்க்குத் தன்னை கொடுத்து
தட்டியில் கட்டிய வெள்ளைத்
திரைக்கு பொருந்தி வரிசையாய் நிற்கின்ற
வண்ண பலூன்கள் -
சுட்டுப் பார்க்க வந்தோரில் ஒருவர்
கவனமாய் நெடுநேரம்
குறிவைத்துத் தவறவிட்டவர்-
எடுத்தேன் சுட்டேனென்று சுட்டுச் சென்றவன்-
காதலி அருகே
கவலையுடன் சுடுகின்ற வாலிபன் -
பெரியோர் சுடப் பார்த்துத்
தானும் சுடுவேனென்று
பிடிவாதம் காட்டிய சிறுவனும் சுட்டான் -
வருவோர் போவோர்
இச்சைப் பட்டு விளையாட்டாய்ச் சுட்டுச்
சிதறிக் கிடக்கும் பொத்தல் பலூன்கள்
பல வண்ணத் தோல்கள் -
சுடுவதற்கெவரும் இல்லாதபோது
பிழைப்புக் குரியவன் தானே சுட்டுப்
பார்த்ததும் போக -
எஞ்சிய சிலவை
நேரமானதும் கொத்துப் போல
உருவிக் கட்டுகிறான் அவன் -
அப்படிக் கட்டும் போது
கட்டவிழ்ந்து தப்பியோடப் பார்த்தன
ஓர்சில - மணர் கூரையில்
ஓடப் பார்த்த அவற்ற்றிலிரண்டை
ஓடிப் பிடிக்கிறான் சிறுவனொருவன் -
ஆனால் ஆரஞ்சு வண்ணப் பலூன் ஒன்று
அகப்படாது செல்கிறது -
எண்ணத்ற்றவரின் ஈயத் தோட்டக்களுக்கும்
கழுத்தை நெரித்த கரங்களுக்கும்
துரத்திப் பிடிக்கும் சிறுவனுக்கும் தப்பி
எட்டாமல் பறக்கிறது காற்றில் எழும்பி
மேலே மேலே மேலே....."
Saturday, December 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment