"இந்த முறையும் அம்மா
ஈசல் வறுத்து அனுப்பியிருக்கிறாள்...
பொரி அரிசியுடன் கலந்து
அம்மா வருக்கும்
ஈசல்களின் ருசி
மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ் (ஒரிஜினல்)
ஓட்டல்களின்
சமையலறைக்கு புலப்படாது...
வேட்டைகளில்
விருப்பமுள்ளவன் நான்...
கடாவிளக்கும்
கொஞ்சமே கொஞ்சூண்டு
குழந்தை குதூகலமும் போதும்
ஈசல் வேட்டையாட...
வறட்டி தட்டுவதற்கு
சாணம் கொட்டிவைத்த நிலத்தில்
ஈசல் குழிகள் ஏராளம் இருக்கும்
கூளத்திற்காய் குவித்த
வைக்கோல் துணுக்குகளில்
முளைவிட்டிருக்கும்
நெல் மணிகளை
மிதிக்காமல் நெருங்கி,
கண்ணாடி ரெக்கைகள்
உள்ளங்கையில் குறுகுறுக்க
கொத்தாகப் பிடிப்போம்...
அந்தியில் பறக்கும் ஈசல்களிடமிருந்து
அடைமழைக்கான
சாத்தியங்கள் தேடும்
வயதைத் தொலைத்து,
நதியில் நடந்த பாதங்கள்
நகரத்திற்கு வந்து
நாளாயிற்று...
இப்போதும்
வேட்டையாடிக்கொண்டுதானிருக்கிறேன்...
காகிதத்தில் எண்ணெய் தேய்த்து
விளக்கிற்கடியில் தொங்கவிட்டு...
கொசுக்களை..."
Sunday, December 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment