'இது என்ன ஸ்டேஷன்?' என்று கேட்டார்,
இரவுப் பயணம் முடிவை நெருங்கிய அதிகாலையில்.
'கிருஷ்ணராஜபுரம்' என்றேன் வெளியே பார்த்து.
'இங்கே என்ன ஃபேமஸ்?' என்று கேட்டார் சகஜமாக.
திடுக்கிட்டேன் நான்.
இன்னொரு முறை கேட்டார்.
என்னவாக இருக்கும்?
மலைக்கோயிலா, அருவியா,
மத்திய அமைச்சரா,
இனிப்புப் பலகாரமா,
நாடி ஜோசியனா…
என்னவாக இருக்கும்?
இறங்கி உள்ளே போய்
ஊர்க்காரன் எவனையாவது
பிடித்துக் கேட்கலாம்.
ஆனால், ஒன்றுமே ஃபேமஸ் இல்லாவிட்டால்,
அவமானத்தில் அவன்
மனம் உடைந்து விடக்கூடும்.
இல்லாவிட்டால், சனிக்கிழமைதோறும் கூடும்
சாதாரண சந்தையைப் பற்றி உற்சாகமாக
ஒரு மணி நேரம் பேசவும் கூடும்,
என்னைப் பிடித்து வைத்துக்கொண்டு.
ரயிலோ இரண்டு நிமிஷம்தான் நிற்கும்.
அட, வெட்கம் கெட்ட கிருஷ்ணராஜபுரமே!
உனக்கெல்லாம் ஸ்டேஷன் ஒரு கேடா?
Saturday, December 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment