Sunday, September 9, 2012

அனார் கவிதைகள்

1 கருமை
முற்று முழுதாய் இருட்டி
கறுத்துப்போன அமாவாசையின் ஏணியில்
உன் உயரங்களுக்கு
ஏறிவருகின்றன என் கால்கள்

இருட்டிய மழைக் காற்று
தூசிகளாலும் காய்ந்த இலைகளாலும்
ஆகாயத்தை நிரப்புகிறது

கருமுகில் மூட்டங்கள் மூடிய வானத்தின் கீழ்
காகங்கள் மாத்திரமே பறவைகள்

வீசிக்கொண்டிருக்கும் புயலுக்குள்
ஒரு ஜன்னல் என
என் கண்கள் திறந்துகிடக்கின்றன

முதலும் முடிவுமற்ற
உன் உச்சரிப்புகள்
இடத்தைப் பாழ்படியவைத்து
வவ்வால்களாகத் தலைகீழாய்த் தொங்குகின்றன

என் உதடுகளை
விரல்களைச்
சுழலும் காற்றில் உதிர்த்துவிடுகிறேன்

காரிருளில் பாய்ந்தோடும்
கறுப்புக் குதிரையின் கண்களில்
இறுகி மின்னுகிறது
என்னுடைய கண்ணீர்

கறுப்புமொழியின் கரைகளிலே
எங்கோ ஒதுங்கிக்கிடக்கும்
இரு கூவல் சங்குகள்
என்னுடைய காதுகள்
2 போகும் ரயில்
நிலைகொள்ளாது ஆடும்
பொன் மிளிர்வுத் தூவல்களில்
ரயில் பட்டுப்புழுவைப் போல் நீளுகிறது

வெள்ளைப் பேய்களும். . . கரும் பூதங்களும். . . உலவும்
ஆகாயம். . . பூமிக்கிடையேயான தண்டவாளத்தில்

எனக்குள் கேட்கின்ற ரயிலில்
காலங்களின் வெளியே
பயணித்துக்கொண்டிருந்தேன்

ரயிலின் பெட்டிகள் அனைத்திலும்
பருவங்களின் பன்மைகளாய். . .
பல்வேறு உருவங்கள் கொண்ட
நான் அமர்ந்திருக்கிறேன்

எங்கோவோர் திசையில் வைத்து
மறைந்த சூரியன்
பெட்டியில் வந்தமர்ந்துள்ளது

உலகம் இருளிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும் பயணத்திலிருந்தேன்

அருகாமையில் இருந்த அனைத்தும்
தூரத்துக்கே போய்விடுகின்றன

புகைக்கோடுகளில்
பழுப்புநிறத்தில்
பிரகாசமும் மங்கலுமான தடங்கள்

உள் நரம்புகளில்
ரயில் போகும் தடக். . . தடக். . . ஓசை
குளிரும் பனியின் வசியமாகக் கவியும் மேகப்பஞ்சு. . .
ரயிலின் நினைவைத் தழுவுகின்றன

அந்த ராட்சதப்பூரான்
வெறும் பெட்டிகளையா?
நிரப்பிவிடப்பட்டவற்றையா இழுத்துச் செல்கிறது?

3 படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பவன்
கோடை அந்தி நிழல் சாயும்
சதுக்கமொன்றின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தான்

தொலைவுப் பாலத்தின் மேலே
சூரியனையும்
படிக்கட்டுகளின் கீழே
செவ்விரத்தம் பூக்களையும் பார்த்துக்கொண்டிருந்தான்

முழுச் சிவப்பேறிய சூரியன் பாலத்தின் மத்திக்கு
வந்ததும்
‘கொலை முயற்சி நடந்துகொண்டிருக்கையில்
எதையும் ரசிக்கமுடியாதென’
அன்று எழுந்து சென்றுவிட்டான்

படித்துறையில் அமர்ந்தவாறு
தூண்டிலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கையிலும்
சேர்ந்து குளிக்கையிலும்
‘சடுதியாக வெடித்து
வித்துகளை உதிர்க்கின்ற பருத்திகள்’ என
உலைந்து
நிலைகுலையுமொரு துயரப்பாடலையே
விடாமல் பாடிக்கொண்டிருந்தான்

நேர்ந்த விபத்தொன்றின் பிறகு
கடைசியாகப் பார்த்தபொழுது
மணல் குன்றுகளும் தாழை மரங்களும் தாண்டி
பாழடைந்த பேய் வீட்டின்
உடைந்த குட்டிச் சுவரருகே
காளான்களும். . . புற்களும் மண்டிய. . .
எட்டாவது படிக்கட்டில்
அவன் அமர்ந்திருந்தான். =

No comments: