முடிவுரை
என் வேட்கையே!
நீ இவ்வளவு தாமதமாக வந்து இவ்வளவு
விரைவாகப் புறப்பட்டு விட்டாயே!
நீ வந்தபோது இனிமேல்தான் என்
வாழ்க்கை தொடங்கப் போகிறது என்று
எண்ணினேன்.
‘போய் வருகிறேன்’ என்று நீ உன்
வாயினாலேயே சொன்னதும் நான் என்றோ
இறந்துவிட்டதாக எண்ணினேன்.
நீ வந்தபோது என் வாழ்வுக்கு முன்னுரை
எழுத வந்திருக்கிறாய் என்று கருதினேன்;
நீயோ முடிவுரை எழுத வந்திருக்கிறாய்.
நீ பறக்கப் பார்க்கிறாய்; நான் கூண்டுக்குள்
அடைபட்டு நிற்கிறேன்.
என் வேதனை உன் விழிகளை நனைக்கிறது.
அந்தப் பழைய படகின் பக்கம் நின்று
கொண்டு இதழ்கள் நடுநடுங்க “நீங்கள்
நன்றாக இருக்க வேண்டும்”
என்று வாழ்த்துகிறாய்.
இது என்ன பேதைமை?
நான் இருந்தால் அல்லவா
நன்றாக இருக்க முடியும்?
நீ இல்லாமல் நான் எப்படி இருக்க முடியும்?
இராமன் இல்லாத தேர், சுமந்திரன் கண்
ணுக்குச் சூனியமாகத் தெரிந்ததைப் போல்
இந்த உலகம் இனி எனக்குச் சூனியமே.
பாரி இல்லாத பறம்பு, கபிலன் பார்வைக்குப்
பாழாய் விரிந்ததைப் போல்
எல்லாம் இனி எனக்குப் பாழே.
வந்த நோக்கம் நிறைவேறாமல் நான் புறப்
பட்ட இடத்திற்குத் திரும்பப் போகிறேன்.
பஞ்ச பூதங்களும் என்னைப் பாசத்தோடு
எதிர்பார்க்கின்றன.
வெளி என்னை விளிக்கிறது.
அந்திக் காற்று என்னை அழைக்கிறது.
என் இடது கால் முன்னே நிற்கிறது.
போகுமுன்...
என் கையால் ஏதேனும் உனக்குத்
தராவிட்டால் என் இதயம் அமைதி
அடையாது.
நீ எனக்குக் காதலைத் தந்தாய்;
அது உழைப்பாளியின் வியர்வையைப் போல்
உயர்வானது.
நான் உனக்கு இந்த வசன காவியத்தைத்
தருகிறேன்; இது, ஏழையின் கண்ணீரைப்
போல் உண்மையானதா என்று பார் .
இதை நீ பார்க்கவில்லையென்றால் எனக்கு
நிம்மதி இருக்காது.
உன்னைச் சந்தித்தது முதல் பாலைப்பாடல்
என் செவிப்பறையைத் தாக்கும் இந்த
வினாடி வரை, நான் உன்னோடு உனக்குத்
தெரிந்தும் தெரியாமலும் அனுபவித்த
தவிப்புக்களையும் தாபங்களையும் இதில்
இறக்கி வைத்துள்ளேன்.
என் சத்தியமே!
எனக்கு ஓவியம் எழுதத் தெரியாது. தெரிந்
திருந்தால் உன்னையும் உன்னைச் சுற்றி
வட்டமிட்ட என் உள்ளுணர்வுகளையும்
வண்ணங்களில் வழங்கியிருப்பேன்.
அதற்காக எந்த ஓவியனின் கையையும்
நம்பியிருக்க விரும்பவில்லை;
நீயும் விரும்ப மாட்டாய்.
உன் மனம் எனக்குப் புரியுமே..
என் மனமும் உனக்குப் புரியுமே.
என்னை நீ புரிந்து கொள்ளவில்லையென்றால்
வேறு யார் புரிந்து கொள்ளக்கூடும்?
என்னை நீ புரிந்து கொள்ளவில்லையென்றால்
வேறு யார் புரிந்து கொண்டுதான் என்ன?
என் அந்தரங்கமே!
இதோ, என் சொல்லோவியம்...
நம் உள்ளப் புணர்ச்சிக்குப் பிறந்த
உயிரோவியம்... உன் காலடியில் வைக்கிறேன்.
விசுவாமித்திரனைப் போல்
வேண்டாம் என்று சொல்லி விடாதே.
ஆராதனை
சாவ தெனில்நான் சாவேன் உன்றன்
சந்நி தானத்தில்-அங்கே
போவ தெனில்நான் போவேன் கண்ணீர்ப்
பூவி மானத்தில்
ஆரா தனையில் ஆருயிர் வாசனை
அழகுகள் சொரிந்தேனே-தினமும்
பாரா யணமாய் உன்திருப் பெயரைப்
பாடித் திரிந்தேனே!
வேகம் குறைய வில்லை; மேலும்
வேதனை கூட்டாதே-என்றன்
பாகம் பிரியா நாயகி யேஉன்
பக்தனை வாட்டாதே!
முன்போர் சமயம் தீண்டி யவன்என
முகத்தை வெறுக்காதே-பொங்கும்
அன்போர் சமயமும் அடங்கா(து); உனைச்சரண்
அடைந்தேன் மறுக்காதே
தேவி, உனதருள் தேடிவந் தேன்;உயிர்த்
தீர்த்தம் கொடுப்பாயே-இல்லை
‘பாவிஇவன்’ எனப் பட்டால் எனை நீ
பலியாய் எடுப்பாயே!
சாவ தெனில் நான் சாவேன் உன்றன்
சந்நி தானத்தில்-அங்கே
போவ தெனில்நான் போவேன் கண்ணீர்ப்
பூவி மானத்தில்!
கனவுகள் + கற்பனைகள்
உன்னை வரவேற்கிறேன்.
என்னை மீண்டும்
இசைக்க வைக்க வந்துள்ளாய்;
உன்னை வரவேற்கிறேன்.
நான் மகரயாழ்;
உன் மணிக்கரம்
தீண்டினால் போதும்.
என்னால்
உனக்குப் பெருமை வரும்;
உன்னால்
எனக்கு வாழ்வு வரும்.
உன்னை வரவேற்கிறேன்.
1
நீ இவ்வளவு காலம்
எங்கிருந்தாய்?
பதினைந்து பதினாறு கார்த்திகைக்குப்பின்
ஒரு நிலவறையிலிருந்து
பதப்படுத்தப்பட்டு வெளிவந்த
வீறுமிக்க மதுவைப் போல்-
பதினாறு பதினேழு மார்கழிக்குப் பின்
ஒரு களங்கமற்ற இதயத்தில்
கருவாயிருந்து
கலை அலங்காரத்தோடு உருவாகி வந்த
ஓர் உயிருள்ள காவியம் போல்-
பதினேழு பதினெட்டுத் தைக்குப் பின்
ஒரு சின்னஞ் சிறிய தீவில்
ஒதுங்கியிருந்து
வைரக் குப்பையோடு கடல்வாசல் வந்த
ஒரு சுதேசிக் கப்பலைப் போல்-
நீ என் கண்ணைக் கவர்கிறாய்.
உன் வருகையால்
இன்பச் சிகரத்தைக்
கையால் எட்டித் தொடுகிறேன்-
என்றாலும்
இவ்வளவு காலமும்
உன்னைக் காணாமல்
வீணாகப் போய்விட்டதே
என்று எண்ணிக்
கவலைப் பள்ளத்தில் கால் வழுக்கி
விழவும் செய்கிறேன்.
2 நீ எனக்குத் தாகவெறி தந்தாய்
பிறகுதான்-
என் இதயம்
வறண்ட நிலமாய்க் கிடந்தது
எனக்குப் புரிந்தது
நீ என்னிடத்தில் பசியைக் கிளறினாய்;
பிறகுதான்-
என் ஆன்மா
ஒட்டிய வயிறாய் இருந்தது
எனக்குப் புரிந்தது.
உன்னால்
இந்தத் தாகம், இந்தப் பசி
நிரந்தரமாகத் தணியும்,
காரணம்
நீ ஆகாய கங்கை!
அமுத சுரபி!
3
நியூட்டன்
புவியீர்ப்புச் சக்தியைக்
கண்டுபிடித்தான்.
நான்
என் உயிர் ஈர்ப்புச் சக்தியைக்
கண்டு பிடித்தேன்.
என் கண்டு பிடிப்பே,
நீ வாழ்க.
4
இலக்கியத் துறையிலிருந்து
விமர்சனத் தோணி ஓட்டும்
என் சகோதரர் ஒருவர்...
காதல் என்பது
பொய்யா மெய்யா
என்று கேட்டார்,
ஓ...நல்ல வேளை!
சரியான நேரத்தில்
உன்னைச் சந்தித்தேன்.
இல்லாவிட்டால்
தவறான விடையைச்
சொல்லியிருப்பேன்.
5
நீரிலே நெடுநாட்களாகக் கிடந்தாலும்
கருங்கல் கரைவதில்லை;
ஓராயிரம் இளம் பார்வைகளில்
மூழ்கியும்
முன்பெல்லாம்
என் மனம் கரையவில்லை.
இன்று-இது என்ன அதிசயம்!
ஒரே வினாடியில்
உன் ஈரப் பார்வையில்
என் மனம் உப்பாகி விட்டதே!
6
‘உலகப்பன் பாட்டைப்’ படித்துவிட்டு
நிலத்தை மீட்கப் போனேன்.
நிலத்தைப் பறிக்கப் போகிறேன்
என்று என்னைக்
கைது செய்தார்கள்
என் புரட்சி வாய்ந்த
மனத்தைப் பறித்துப் போகிறாயே-
இந்த நாட்டுச் சட்டம்
உனக்குச்
சாதகமாகத் தானே இருக்கிறது!
7
உனக்கென்ன-
ஒரு பார்வையை
வீசிவிட்டுப் போகிறாய்...
என் உள்ளமல்லவா,
வைக்கோலாய்ப்
பற்றி எரிகிறது.
உனக்கென்ன-
ஒரு புன்னகையை
உதிர்த்துவிட்டுப் போகிறாய்...
என் உயிரல்லவா,
மெழுகாய்
உருகி விழுகிறது.
உனக்கென்ன-
போகிறாய்...போகிறாய்...
என் ஆன்மாவல்லவா,
அனிச்சமாய்
உன் அடிகளில் மிதிபடுகிறது.
8
மலைத்தொடர்கள்
ஆகாயத்தில்
அலையும் மேகங்களை
இழுத்தணைத்துக் குளிர்வித்து
இன்ப வியர்வையைச்
சிந்த வைக்கின்றன.
கற்கள்
ஒன்றோடொன்று உராய்ந்து
பிஞ்சுச் சுடர்களைப்
பெற்றெடுக்கின்றன.
ஆறுகள்
ஆசை மலர்களை ஏந்திச் சென்று
கடல்தேவன் மேனியில் தூவிக்
காதல் அருச்சனை
செய்கின்றன.
நீயும் நானும்
இந்த ஊமை நாடகங்களை
ஏன்
உண்மையாக்கக் கூடாது?
விலகி நின்று
வேடிக்கை பார்க்கவா
பிறவி எடுத்தோம்?
இப்படி
இருவராயிருந்தால்
இந்த உலகம் நம்மைத்
தீண்டத் தகாதவர்களாய்
ஒதுக்கிவிடும்.
9
என் வீட்டு முற்றத்தில் பெய்யும் மழை
உன் வீட்டு முற்றத்திலும் பெய்கிறது.
என் தோட்டத்தில் பாடும் குயில்
உன் தோட்டத்திலும் பாடுகிறது.
என் கண்ணில் படும் நிலா
உன் கண்ணிலும் படுகிறது.
என் இதயத்தில் நுழையும்
காதல் மட்டும்
உன் இதயத்தில் நுழையவில்லையா?
10
என்னுடைய நண்பர்களே
என்னைக்
கர்வம் பிடித்தவன் என்கிறார்கள்.
என் அறையில்
முத்துக்களையும் மணிகளையும்
குவித்து வைத்திருக்கவில்லை.
என் தலையில்
நிலா ஒளிவீசும்
மகுடம் தாங்கி
கங்கை கொண்ட
இராசேந்திரன் போல்
உலா வரவில்லை.
என் உடலில்
பட்டணிந்து பகட்டவில்லை.
பிறகு ஏன்
இப்படிப் பேசுகிறார்கள்
ஓ...காரணத்தைக்
கண்டு கொண்டேன்...
நீ என்னை நேசிக்கிறாய்...
அதனால்தான்
அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள்.
11
இந்த உலகம் -
இதுவரை
முட்காடாக வலித்தது;
இப்போது
முல்லைக்காடாக மணக்கிறது.
இதுவரை
எரிமலையாகத் தகித்தது;
இப்போது
பனிமலையாகக் குளிர்கிறது.
இதுவரை
கானல் நீராகக் கசந்தது;
இப்போது
காவிரி நீராக இனிக்கிறது.
என் எண்ணங்களில் பாடும்
கன்னங் கரிய குயிலே,
எல்லாம் உன் ரசவாதம்தான்!
12
நீ முதல்முறை
என்னைத் தலைசாய்த்துக்
கடைக்கண்ணால் பார்த்தபோது
என் உள்ளத்தில்
முள் பாய்ந்தது.
அதை இன்னும் எடுக்கவில்லை.
முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்?
எங்கே, இன்னொரு முறை பார்.
13
நீ வானத்தைப் பார்;
சூரியன் குளிரட்டும்.
நீ பூமியைப் பார்;
பாலைவனங்கள் குளிரட்டும்.
நீ என்னையும் பார்;
என் இதயமும்
கொஞ்சம் குளிரட்டுமே!
14
கிழக்கிலிருந்து
அரசியல் மேதை ஒருவன்
வரப்போகிறான் என்கிறார்கள்;
அவன்
எந்தத் திசையிலிருந்து
வந்தால் தான்
எனக்கென்ன?
மேற்கிலிருந்து
விஞ்ஞானி ஒருவன்
வரப்போகிறானாம்
நாகரிகவேட்பாளர்கள்
அந்தத் திசையைப்
பார்த்துக்கொண்டிருக்கட்டும்
எனக்கென்ன?
வடக்கிலிருந்து
ஞானி ஒருவன்
வரப்போகிறானாம்;
அவன் உபதேசங்களுக்காகக்
காதைத் திறந்து வைத்திருப்போர்
அந்தத் திசையை நோக்கிக்
கண்ணையும் திறந்து வைத்திருக்கட்டும்.
எனக்குத்
தெரிந்திருக்கும் திசையெல்லாம்--
தேவையுள்ள திசையெல்லாம்
ஒரே ஒரு திசைதான்...
என் தென்றலே,
நீ வரும் திசைதான்.
15
உன்னால் தினமும் தவிக்கிறேன்--
ஒவ்வொரு கணமும் துடிக்கிறேன்
என்பது உனக்குத் தெரியாதா?
தெரிந்தும்
கொஞ்சமும் இரக்கமில்லாமல்
இதமாக ஒன்றும் சொல்லாமல்
விரைந்து செல்கிறாயே!
காயப்படுத்திவிட்டுக்
கட்டுப் போடாமல்
பறந்து செல்கிறாயே!
நடைவண்டி பழகும்
நாத சொரூபம் மேல்
மிதிவண்டியை ஏற்றிவிட்டு
வேக வேகமாக ஓடும்
கல் நெஞ்சக் காரனைப் போல்
நடந்து கொள்கிறாயே!
இது நியாயமா?
16
என் நாசியால்
சந்தனத்தையும் சவ்வாதையும்
மோந்து மகிழ்ந்திருக்கிறேன்.
சண்பகத்தையும் மல்லிகையையும்
மோந்து சுவைத்திருக்கிறேன்.
இப்போது
உன் வண்ணப் பாதங்களையும்
பாதங்கள் முத்தமிட்ட மண்ணையும்
மோந்து பார்க்கும்
மோகவெறி கொள்கிறேன்.
17
நாட்டு வைத்தியம் தெரிந்த ஒருவர்,
மாலை வெயில் உடலுக்கு நல்லது-
மாலைக்காற்று உடலுக்கு நல்லது-
என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
நானோ,
உடலின் பூரிப்புக்கும்
உயிரின் பசுமைக்கும்
பார்வை விருந்தைப்
பரிமாறிக் கொள்ளும்
மாலைச் சந்திப்புத்தான் நல்லது
என்று கூற நினைத்தேன்.
அப்படிக் கூறினாலும்
அவருக்கு எங்கே
விளங்கப் போகிறது?
பாவம்,
அவர் நாட்டு வைத்தியம்
மட்டும் தெரிந்தவர்!
18
பாகவதர் சொல்கிறார்:
பகவான் ஒருவன்தான் புருஷன்;
மற்றவர்கள் பெண்கள்.
நான் சொல்கிறேன்:
நீ ஒருத்திதான் பெண்;
மற்றவர்கள்......
ஒரு தரமல்ல
மூன்று தரம் சொல்கிறேன்:
என் மாதவிக் கொடியே!
நீ ஒருத்திதான்
பெண்! பெண்! பெண்!
19
உன் கை
தொட்டதைத் துலங்கச் செய்யும் கை
என்பது எனக்குத் தெரியும்.
பாவங்களையும் விகாரங்களையும்
போர்த்தி வைத்திருக்கும்
என் புலால் உடம்பைத் தொடு;
புனிதமாக்கு.
இரும்பாக இருக்கும் என்னைப்
பொன்னாக்கு.
உப்புநீராக இருக்கும் என்னை
உண்ணும் நீராக்கு.
20
என் எழுதுகோல்
வெறும் எழுதுகோல் அல்ல.
தேசம் தழுவும்
பொதுவுடைமைக்கு
வரவேற்புரை எழுதும் போதும்
தேகம் தழுவும்
உனக்கு-
என் தனியுடைமைக்கு-
வாழ்த்துரை எழுதும்போதும்
என் எழுதுகோல்
வெறும் எழுதுகோல் அல்ல.
21
உலக மொழிகள் அனைத்திலுமுள்ள
உயர்ந்த கவிதைகளைத்
தேடி எடுத்துப் படித்துள்ளேன்.
என்றாலும்
எனக்குப் பிடித்த கவிதை
உன் பெயர்தான்!
வையப் புகழ் வாய்ந்த
ஓவியர்கள் வரைந்துள்ள
சிறந்த சித்திரங்களை
விரும்பி வாங்கிப் பார்த்துள்ளேன்;
என்றாலும்
எனக்குப் பிடித்த சித்திரம்
உன் முகம்தான்!
22
சமீபத்தில்
உதக மண்டலம் போயிருந்தேன்.
நீலகிரியின்
மாயக் கவர்ச்சியில்
மயங்கிய நான்
மலர்க் கண்காட்சிக்குச்
சென்றிருந்தேன்.
அங்கே
இலையுதிர் காலத்தில் மலரும்
விதவிதமான பூக்களை
வைத்திருந்தார்கள்.
அதில்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்
பிறகு மலர்ந்த
குறிஞ்சிப் பூக்களும் இருந்தன.
அவற்றைப் பார்த்துச்
சிலர் அதிசயித்தார்கள்-
நானோ
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு
மலர்ந்துள்ள உன்னை
அந்தப் பூக்களுக்கிடையே
வைத்திருந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
என்று எண்ணினேன்.
23
கோடைக் காலம்
வரும்போதெல்லாம்
ஓர் எஸ்கிமோவைப் போல்
பனிப் பிரதேசத்தின்
பக்கம் திரியவேண்டும்
என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.
குளிர்காலம்
வரும்போதெல்லாம்
ஒரு புகைவண்டி ஓட்டியைப்போல்
நெருப்பின் பக்கம்
நிற்கவேண்டும்
என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.
இப்போது
எந்தக் காலத்திலும்
உன் பக்கமே இருக்கவேண்டும்
என்று ஆசைப்படுகிறேன்.
24
உண்மையை ஒப்புக் கொள்கிறேன்;
நான் பேராசைக்காரன்தான்.
முதலில்
உன் இதழ்களால்
பால்போன்ற புன்னகைகளைச்
சிந்தினால் போதும்
வேறு எதுவும் வேண்டாம்
என்று எண்ணினேன்;
நீ என் எண்ணத்தைப்
பொய்யாக்கவில்லை.
அத்தோடு என் ஆசை அடங்கியதா?
பின்னர்,
உன் இதழ்களால்
தேன்போன்ற சொற்களைச்
சிந்தினால் போதும்
இதற்குமேல் எதுவும் வேண்டாம்
என்று ஏங்கினேன்;
நீ என் ஏக்கத்தைக்
கனவாக்கவில்லை;
அத்தோடும் என் ஆசை அடங்கியதா?
கொஞ்ச காலமாக
உன் இதழ்களால்
அமுதம் போன்ற .........
........... ..........
நான் பேராசைக்காரன் தான்.
25
பொய்யல்ல..
இதற்குமுன்
எந்தப் பெண்ணையும்
ஏறெடுத்துப் பார்த்ததில்லை
உன்னைப் பார்த்த பிறகு
எதிரில் வரும்
எந்தப் பெண்ணையும் விடுவதில்லை.
என் பார்வையில்
இருட்டில் கட்டிப்பிடிக்கும்
இச்சை எதுவும் இல்லை.
என் காதலிக்கு இணையாக
இன்னொருத்தி இருக்கிறாளா என்று
வெளிச்சத்தில் கண்டுபிடிக்கும்
ஒரேஒரு இலட்சியம் உண்டு.
இன்றுவரை... இன்றுவரை...
எனக்குத் தோல்வியே.!
26
ஒரு காலத்தில்
தன் காதலிக்காகத்
தலையைக் கொடுத்தான்
ஒரு கவிஞன்
என்று படித்தபோது
‘இது என்ன மூடத்தனம்’
என்று எண்ணிப்
பரிகசித்தேன்.
இப்போது -
எனக்கு
ஒரே ஒரு தலை தானே இருக்கிறது
என்று நினைத்துப்
பரிதவிக்கிறேன்.
27
என் மூதாதை ஒருவன்
பராசக்தியிடம் வரம் கேட்டான்.
காணி நிலம்
மாட மாளிகை
தென்னந் தோப்பு
அது இது என்று வேண்டி
இறுதியில்
ஒரு பத்தினிப் பெண்ணைக் கேட்டான்.
நான் கேட்டால்
உன்னை மட்டும்தான் கேட்பேன்.
உன்னைப் பெற்றால்
உலகத்தில் உள்ள
எல்லாம் பெற்ற மாதிரி தானே!
28
பால்யத்தில்
என் பாட்டி என்னைத்
திருவிழாவுக்குக்
கூட்டிக் கொண்டு போகும் போது
கண்டகண்ட மிட்டாய்களைக் காட்டி
வாங்கித்தா என்று
அடம் பிடிப்பேனாம், அழுவேனாம்.
இப்போது
என் பாட்டி இல்லையே..
இந்தக் கற்கண்டை
வாங்கித்தா
என்று அழுது பார்க்கலாம்..
இப்போது
என் பாட்டி இல்லையே!
29
நான் துறவியாகப் போகிறேன்.
பற்றுகள் அனைத்தையும்
முற்றும் நீக்கிப்
பரம்பொருளிடம் மட்டும்
பற்று வைக்கும் துறவிகளை
நீ கேள்விப்பட்டிருப்பாய்.
நான்
சகல பற்றுகளையும்
வீசியெறிந்து விட்டு
உன் மீது மட்டும்
பற்று வைக்கும்
துறவியாகப் போகிறேன்.
30
சில நாட்களுக்கு முன்பு
காட்டுக்குப் புறப்பட்டேன்.
தலையை வெளுக்கச் செய்யும்
அற்பக் கவலைகளையும்
அன்றாடச் சிக்கல்களையும்
இறக்கி வைத்துவிட்டு
மனித ஒலி பெருக்கிகளற்ற
மலையடிவாரத்திற்குப் புறப்பட்டேன்.
அதற்குள் நீ வந்துவிட்டாய்
உன்னால்
என் பயணம்
ஒத்திவைக்கப்பட்டது.
இதோ,
மீண்டும் தயாராகிவிட்டேன்
ஆனால், தனியாக அல்ல...
துணையோடு!
காற்றைப் போலவும்
கலைமான்களைப் போலவும்
கட்டின்றித் திரியலாம்.
பர்ணசாலைகளில் மலர் மஞ்சங்களில்
பனிக்கால இரவுகளை வரவேற்கலாம்.
என் இரண்டாம் சீதையே, எழு!
31
புண்ணியத் தலம் நோக்கிப்
புறப்பட்ட கூட்டத்தோடு
நானும் போனோன்.
உன் கிராமத்துக்குப்
பக்கத்தில் வந்ததும்
நான் நின்று கொண்டேன்.
“இன்னும் எழுபது கல்
செல்ல வேண்டும்; புறப்படு”
என்று கூட்டத்தினர் கூறினர்
“நானோ
என் புண்ணியத் தலம்
இதோ தெரிகிறது
நீங்கள் போகலாம்”
என்று சொல்லிவிட்டு
என் பருவக் கனவுகள் படரும்
உன் வீட்டு முற்றத்தை
நோக்கினேன்.
சாளரத்தின் வழியாகப்
பரந்த உலகத்தைப் பார்த்துப்
பெருமூச்சுவிடும்
ஒரு சிறைக்கைதியைப் போல
நெடுநேரம்
அப்படியே நின்றேன்.
32
நான்
வீழ்ந்து விட்டேனாம்
பிரியத்தோடு
பாடம் படிக்க வந்த
பாவை ஒருத்தியிடம்
குரு ஒருவன்
வீழ்வதைப் போல் -
ஆர்வத்தோடு
பாதபூசை
செய்ய வந்த
பக்தை ஒருத்தியிடம்
யோகி ஒருவன்
வீழ்வதைப் போல் -
நான் வீழ்ந்து விட்டேனாம்!
என்னை
எவரெஸ்டாகப் பார்க்கும்
இந்த ஊரின் பார்வையில்
என் வீழ்ச்சி
மிகப் பெரிய வீழ்ச்சியே.
எனினும்
இது இயல்பானது
தடுக்க முடியாதது.
சமதளத்தில்
ஓடி வரும் நீரைத் தடுக்கலாம்.
அணை போடலாம்.
மலைத் தலையிலிருந்து
விழும் நீரை
எப்படித் தடுக்க முடியும்?
என் வீழ்ச்சி
நீர் வீழ்ச்சியே!
33
‘இது தவறு’ என்று
என் ஆருயிர்த் தோழர் ஒருவர்
தினமும் இடித்துரைக்கிறார்.
ஒரு வேளை தவறாகவே இருக்கலாம்.
எனினும்
இந்தத் தவற்றைப் புரியும்
ஒவ்வொரு நொடியும்
ஒரு தவம் புரிவதைப் போல்
என்னை ஆக்கிக் கொள்கிறேன்.
எதிர்பார்த்துக் காத்திருந்து
உன்னை நெருங்கும்போது
வெடிமருந்துச் சாலையருகே
கொள்ளிக் கட்டையோடு
கவனமின்றிப் போகும்
ஒரு பேதையைப் போல்
நடந்து கொள்ளப் போகிறேன்
என்று அவர் கவலைப் படுகிறார்.
நானோ,
மூலத்தானம் அருகே
திருவிளக்கேந்திச் செல்லும்
அடியவனைப் போல்
ஆனந்தமடைகிறேன்.
34
சின்ன வயதில்
என்னை நன்றாக ஏமாற்றியிருக்கிறார்கள்.
கையில் அரிவாள்;
கண்ணில் கொலைவெறி,
நாவில் குருதிப்பசி,
கோரத் தோற்றம்
கொண்ட ஒரு சிலையைக் காட்டி
“இதுதான்
உன் குலதெய்வம், கும்பிடு”
என்றார்கள்
நான் கும்பிட்டேனோ, என்னவோ?
அமிர்தத்தின் மகளான
உன்னைக் கண்டபோது
யாரும் கூறாமலேயே
என் வாய்,
குலதெய்வம், குலதெய்வம்
என்று உச்சரித்தது;
என்னைக் கேட்காமலேயே
என் கை குவிந்தது.
இனிமேல்
என்னை யாரும் ஏமாற்ற முடியாது.
35
உன்னிடம் எவ்வளவோ பேசவேண்டும்
என்று நினைக்கிறேன்.
அரங்கம் ஏறுமுன்
ஒத்திகை பார்க்கும்
ஒரு நல்ல நடிகனைப்போல்
நீ வருமுன் உன்னிடம்
என்னென்ன பேசவேண்டும் என்று
தைரியமாய்த் தீர்மானிக்கிறேன்.
நீ எதிரில்
தென்பட்ட நிமிடத்தில்
ஆசிரியரின் திடீரென்ற கேள்விக்குப்
பதில் சொல்ல முடியாத
ஒரு பள்ளிச் சிறுவனைப்போல்
பாவமாய் விழிக்கிறேன்.
36
நேற்றுவரை
ஊரார் என்னைக் ‘கவிஞன்’ என்றார்கள்.
இன்று
‘பித்தன்’ என்கிறார்கள்.
அந்த மேடையில் ஒரு பெரியவர்,
தெய்வத்தை யாராவது பார்த்ததுண்டா
என்று கேட்டார்.
‘இதோ’ என்று
உன் உருவப் படத்தைக் காட்டினேன்.
அதனால்தான் பித்தன் என்கிறார்கள்;
ஊர் கிடக்கட்டும்.
கவிஞன், பித்தன் என்று
எதையாவது சொல்லும்.
நீ மட்டும் என்னை
என் இனிய ‘காதலன்’ என்று சொல்:
போதும்.
37
என் கொல்லையில்
வாழை வைத்திருக்கிறேன்.
வாழை நன்றாக
வளர்ந்திருக்கிறது.
பூத்துக் காய்த்துப்
பூரித்து நிற்கிறது.
நீ
ஒரு வார்த்தை சொல்.
கொல்லையில் நிற்கும் வாழையை
வாசலில் கொண்டுவந்து வைக்கிறேன்.
38
அந்த மரத்தடியில் நிற்கிறேன்;
இன்று நேற்றல்ல...
எத்தனையோ நாட்களாக.
நீ போகும்போதும் வரும்போதும்
உன்னை ஒருமுறை பார்க்க வேண்டும்
என்ற பசியால்
நின்று கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும்
என்னைப் பாரத்துவிட்டுத்தான்
செல்கிறாய்.
என்றாவது ஒரு நாள்
என் அருகே வர மாட்டாயா
என்று காத்திருக்கிறேன்.
ஒரு நாள், உண்மையிலேயே
என் அருகே வருகிறாய்;
என் மணிக்கட்டைப் பற்றுகிறாய்;
என் தோளைத் தொடுகிறாய்;
என் காலைச் சுற்றிக்
கங்கை பாய்வதைப் போலவும்
என் மேனியெங்கும்
கோடிப்பூக்கள்
மலர்வதைப் போலவும்
நான் சிலிர்க்கிறேன்.
என் சிலிர்ப்பைப் புரிந்து கொண்ட நீ
“சிலை என்று நினைத்துத் தொட்டேன்.
ஓ...உயிர் இருக்கிறதா?” என்கிறாய்.
“இவ்வளவு நாட்களாகச்
சிலையாகத்தான் இருந்தேன்;
நீ தொட்டதால் உயிர் பெற்றேன்”
என்கிறேன் நான்.
ஓ...இது ஒரு கனவு தான்!
39
ஒருநாள்
உனக்கு அழைப்பு விடுக்கிறேன்.
நீ என் அறை நோக்கி வருகிறாய்.
“கூப்பிட்டீர்களாமே, என்ன?”
என்று கேட்கிறாய்.
நான் விழிக்கிறேன்.
“ஒன்றுமில்லை” என்கிறேன்.
“ஒன்றுமில்லாமல்
என்னை ஏன் கூப்பிட வேண்டும்?”
-உன் பார்வை வினாவாகிறது.
நான் என்ன செய்வது?
உன் நினைவைத் தவிர
என் உள்ளத்தில் வேறு ‘ஒன்றுமில்லை’
என்று எப்படிச் சொல்வது?
ஓ...இது ஒரு கற்பனைதான்!
40
நீ சுவரில் சாய்ந்து கொண்டு நிற்கிறாய்.
உன் தோழி
“நீங்கள் ஏழையா, பணக்காரரா?”
என்று கேட்கிறாள்.
நான் ஏங்கல்ஸின் மாணவன்,
எனினும் வேடிக்கைக்காக
“நான் இதுவரை ஏழைதான்,
இனிமேல்தான் பணக்காரன் ஆகவேண்டும்”
என்று உன்னைப் பார்த்துக்கொண்டே
பதில் சொல்கிறேன்,
ஒரு கைத் தாமரையால்
உன் முகத் தாமரையின்
ஒரு பாதியை மறைத்தவாறு
நீ என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்.
உன் தோழிக்குப் புரிகிறதோ, என்னவோ?
இதுவும் ஒரு கனவுதான்.
41
உன்னைத்தேடி வருகிறேன்.
நீ வைக்கோற் போரில் சாய்ந்தவாறு
கரும்பைக் கடித்துக் கொண்டிருக்கிறாய்.
என் கண்,
மதுவுண்ட வண்டாகிறது.
என்மனம்,
மாங்கொழுந்தைச் சுவைத்த குயிலாகிறது.
என் வாய்,
‘கரும்பே இன்னொரு கரும்பைக் கடிக்கும்
காட்சி இதோ, இதோ’
என்று பாடுகிறது.
42 பல நாட்கள்
உன் பின்னால் தொடர்ந்து வருகிறேன்-
பண்ணையாருக்குப் பின்னால் வரும்
கூலிக்காரனைப் போல!
சில நாட்கள்
உன் கூடவே வருகிறேன்-
பாதத்தில் ஒட்டியிருக்கும்
செருப்பைப் போல!
எனினும்,
நீ உன் வீட்டுக்குள் நுழையும்போது
என்னால் பின் தொடர முடியவில்லை;
கூட வரமுடியவில்லை.
வாசலில் நின்றவாறு
உன் வீட்டையே பார்க்கிறேன்-
எல்லையில் நின்றவாறு
நாடு கடத்தப்பட்ட ஒரு தேசாபிமானி
தன் நாட்டை ஏக்கத்தோடு பார்ப்பதைப் போல!
43 “நீங்கள் புதிதாக எதுவும் எழுதவில்லையா?”
என்கிறாய்.
நான் எதை எழுதுவது?
ஒரு காலத்தில்
என் எழுத்தில் சுடர்விட்ட அழகை
எண்ணிஎண்ணிப் பெருமிதங் கொண்டதுண்டு.
இன்றோ, எதை எழுதினாலும்
சிறுமைக்கு ஆளாக நேரும்
என்ற அச்சம் பிறக்கிறது.
காரணம்... எதை எழுதினாலும்
உன்னைப் பார்த்து எழுதியதைப் போன்ற-
படி எடுத்ததைப் போன்ற
உணர்வே தோன்றுகிறது.
இப்படித் திருடி எழுதுவது சரியா?
அப்படி எழுதுவதென்றாலும்
அசல் இருக்கும்போது எதற்காக நகல்
என்று என்னுள் கேள்வி எழுகிறது;
பிறகு எப்படி எழுதுவது?
44
நீ அந்த மணலில் அமர்ந்திருக்கிறாய்
சொர்க்கத்தின் சாவியே
உன் கையிலிருப்பதைப் போல்
ஒரு கர்வங் கலந்த ஒய்யாரத்தோடு
அமர்ந்திருக்கிறாய்.
உன் மென்மையான விரலால்
மணலில் ஏதோ எழுதுகிறாய்.
உனக்குத் தெரியாமல்
உன் பின்னால் நின்றவாறு
ஏதேனும் புதிய ஓவியம் தீட்டுகிறாயோ
என்று கவனிக்கிறேன்.
ஓவியக்கலை
உன் கூடப்பிறந்த கலையாயிற்றே!
நான் நினைத்ததைப் போல்
நீ ஓவியம் வரையவில்லை.
மலைக் குகைகளிலும்
கல் மண்டபங்களிலும்
எதிரொலிக்கும் சப்தம் போல்
உன் உதடுகளின் உச்சரிப்பால்
என் இதய அறைகளில்
எப்பொழுதும் எதிரொலிக்கும்
உன் திருப்பெயரை முதலில் எழுதிப்
பக்கத்தில் என் பெயரையும் இணைக்கிறாய்.
என் பெயரின்
முதல் இரு எழுத்துக்களைத்
தொடங்கும்போதே
இன்பக்காற்று
என்னை உன் முன்னால்
இழுத்துப் போடுகிறது.
அவ்வளவுதான்......
நீ கண்புதைத்துப் பயந்தோடுகிறாய்.
சிறு குழந்தை தானாகப் பாடும்போது
மறைந்திருந்து கேட்க வேண்டும்;
எதிரில் சென்றால்,
பாதியிலேயே
பாட்டை நிறுத்தி ஓடிவிடும்.
இதை நான் மறக்கலாமா?
45
கடற்கரையில்
மணல் வீடு
கட்டிக் கொண்டிருக்கிறேன்.
என் புறமிருந்து
நீ சிரிக்கிறாய்.
நான்
பாலகாண்டத்தைப்
புரட்டுவதாக நினைக்கிறாய்.
உன் ஊடலில்
குளிர்காயும் ஆசையில்
எதுவும் பேசாமல்
ஒரு கிணறு தோண்டுகிறேன்.
“உங்கள் கிணற்றில்
நீர் சுரக்கிறதா?” என்கிறாய்
“உன் இதயத்தில்
அன்பு சுரக்கிறதா?” என்கிறேன்
நீ கண்களால் மழைபொழிகிறாய்.
என் கிணறே
அந்த நீரில்
கரைந்து விடுமோ என்று
பயப்படுகிறேன்.
சமாதானப் புறாவைப்
பறக்கவிட்டு
உன் மார்புக் கூட்டில்
தலை சாய்க்கிறேன்.
“கிணற்று நீரை
வெள்ளமா கொண்டுபோகும்?”
என்று நீ
மெல்ல நழுவுகிறாய்.
ஓ...இதுவும் ஒரு கற்பனை தான்.
46
நீ
“எங்கள் கிராமத்திற்கு
மின்சார வசதியில்லை”
என்று வருத்தப்படுகிறாய்;
அதிகாரிகள் மேல் ஆத்திரப்படுகிறாய்.
நான்
“உன்வதனப்
பொன் வெளிச்சம் இருக்கும்போது
மின் வெளிச்சம் எதற்கு”
என்று பேசாமல் விட்டிருப்பார்கள்
என்கிறேன்.
உன் முகத்தில்
வெட்கம் சித்திரம் வரைய,
நீ “போங்கள்” என்கிறாய்,
நான் உன் அருகே வருகிறேன்-
உண்ணும் போது
வாய்க்கு அருகே வரும் கையைப் போல!
47
என் இதழ்கள்
விண்ணப்பம் அளிக்கின்றன.
நீ
“இப்போது எதுவும் இல்லை” என்கிறாய்.
ஏக்கத்தோடு
“இந்த ரோஜாப் பூவுக்காவது” என்கிறேன்.
நீ கண்ணால் சிரித்தபடி
ரோஜாப் பூவுக்கு
ஒன்று கொடுக்கிறாய்.
அடுத்த வினாடி
அது என் கைக்கு வருகிறது.
“ரோஜாப் பூவே
நீயாவது கொடு” என்கிறேன்.
அது
என் உயிருக்கு ஊதியம் தருகிறது.
ரோஜாப்பூ நல்லபூ.
48
செம்படவன் ஒருவன்,
இரண்டு வரால் மீன்களைப்
பிடித்து வருகிறான்;
நீ அவற்றை விலைக்கு வாங்கித்
தடாகத்தில் துள்ள விடுகிறாய்.
வேடன் ஒருவன்
இரண்டு புறாக்களைப்
பிடித்து வருகிறான்;
நீ அவற்றையும் வாங்கி
வானத்தில் பறக்க விடுகிறாய்.
நான்
என்றோ என்றோ
என் உள்ளுயிரை வாங்கி வைத்திருக்கும்
உன்னை வியந்து பார்க்கிறேன்.
“என்ன பார்க்கிறீர்கள்...உங்களுக்கும்...”
“வேண்டாம்...வேண்டாம்...
என்னை மட்டும் விட்டு விடாதே!
விடுதலை செய்து விடாதே!”
என்று கெஞ்சுகிறேன்.
49
“தெரியுமா..
போன பிறவியில்
நீயும் நானும் தம்பதிகளாய் இருந்தோம்”
என்கிறேன்.
இந்தப் பிறவியில் நாம் இருவரும்
இணைய வேண்டும் என்ற ஆசையால் தான்
அப்படிச் சொல்கிறேன்.
இது உனக்குத் தெரியாதா, என்ன?
நீயோ,
“அடுத்த பிறவியிலும்
நாமிருவரும் தம்பதிகள் தாம்
அதில் என்ன சந்தேகம்?”
என்கிறாய்.
இந்தப் பிறவியைப் பற்றி
எதுவும் சொல்லாமல்
என்னை அந்தரத்தில் தவிக்க விடுகிறாயே?
50
மதுரைவீரன் பார்த்த மயக்கத்தில்
ஒரு மதுரக்காட்சி...
நீ ஆற்று வெள்ளத்தில்
தத்தளிக்கிறாய்.
என்னைக் கரைசேர்க்கக் கூடாதா
என்று கதறுகிறாய்.
நான் மீன் குஞ்சாகிறேன்.
துள்ளிக் குதிக்கிறேன்.
தூண்டிலாய் மாறித்
தூக்கி வருகிறேன்.
நீ நன்றியை உதிர்த்துவிட்டு
நடையைக் கட்டுகிறாய்.
நான் அபயக்குரல் கொடுக்கிறேன்;
“என்னைக் கரைசேர்க்கக்கூடாதா?”
51
“கண்ணில் தூசுவிழுந்து விட்டது.
கொஞ்சம் ஊதி எடுங்கள்” என்கிறாய்;
நல்ல உதவி...நான் மறுப்பேனா?
ஊதிக் கொண்டிருக்கிறேன்.
“நீங்கள் ஊதுகிறீர்களா? உறிஞ்சுகிறீர்களா?
இது உதடு அல்ல; கண்?”
என்கிறாய்.
நான் சிரித்துக்கொண்டே,
“எனக்கு
இப்படியெல்லாம்
வித்தியாசம் பார்க்கத் தெரியாது”
என்கிறேன்.
“உங்கள் உதட்டில்
தூசு ஒட்டிக் கொண்டிருக்கிறதே”
என்று தொடர்கிறாய்.
“அதை விட்டு விடு.
அது என்னுள்ளே போகட்டும்;
உன் கண்ணின் செய்தியைத்
தூதாக இருந்து சொல்லட்டும்”
என்கிறேன்.
இதுவும் ஒரு கற்பனைதான்!
52
“மார்கழி மாதத்தில்
என் பிறந்த நாள் வரப்போகிறது”
என்று கூறிவிட்டுப் போகிறாய்.
உன் பிறந்ததினப் பரிசாக
ஒரு மானையோ மயிலையோ
கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்
என் பரிசு
உயிருள்ள பரிசாக
இருக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்.
அடுத்த வினாடியே
அப்படிக் கொடுத்தால்
நீ என் மீது பொழியும்
அன்பு வெள்ளத்தில்
ஒரு துளியை
அந்த உயிரின் மீது
சிந்தி விடுவாயோ
என்று பயப்படுகிறேன்.
நான்
வெறுங்கையோடு வரத்
தீர்மானிக்கிறேன்.
53
ஒரு நாள் ஓடோடி வந்து
“எங்கள் கிராமத்தில்
அறுவடை ஆரம்பமாகப் போகிறது”
என்கிறாய்.
“உங்கள் வயலிலுமா?” என்று
கேட்கிறேன்.
“இல்லை; இன்னும் சிறிது காலம் ஆகும்.
எங்கள் வயலில் வளரும் பயிர்
ஆறு மாதப் பயிர்”
என்று பதிலுரைக்கிறாய்.
இன்னொரு நாள்,
குதூகலத்தைத்
தோளில் தூக்கிக் கொண்டு வந்து
“எங்கள் வயலில்
அறுவடை நடக்கப் போகிறது”
என்கிறாய்.
இதுதான் நல்ல சமயம் என்று எண்ணி
“நமது வயலில் எப்போது...”
என்று மெல்லக் கேட்கிறேன்,
“அவசரப்படாதீர்கள்...
அது ஆயிரங்காலத்துப்பயிர்”
என்று சொல்லிக்
காலைச் சிறகாக்குகிறாய்.
54
ஒரு நண்பகலில்,
அந்தத் தென்னந் தோப்பில்
நீ நித்திரையில் ஆழ்ந்திருக்கிறாய்.
உலகத்தின்
அமர சௌந்தரியம் அனைத்தும்
உன்னிடம் கொலுவிருப்பதைத்
தரிசித்து மெய்மறக்கிறேன்.
புரட்சியில் மலர்ந்த சோவியத் பூமியின்
கூட்டுப் பண்ணைகளைப்
பார்த்து மலைக்கும்
ஓர் இந்திய உழவனைப் போல்
வியப்படைகிறேன்;
அந்த வியப்பில் ஆழ்ந்தபடியே
உன்னை எழுப்பாமல் நிற்கிறேன்.
அப்படி எழுப்பினால்,
ஒரு கல்லை வீசியதும்
வரிசை வரிசையாய்
அமர்ந்திருக்கும்
பறவைகள் சிதறிப்
பறப்பதைப் போல்
உன் துயில் அழகுகள்
சிதறிப் பறந்து விடுமே
என்று அஞ்சுகிறேன்.
55
ஒரு மாலையில்,
நீ புல்லாங்குழலை
ஊதிக் கொண்டிருக்கிறாய்.
உன் உதடு படும் பேறு
அதற்குக் கிடைத்ததே
என்று பொறாமைப் படுகிறேன்.
சின்னப் பிள்ளையிடம் ஏமாற்றி ஏமாற்றிப்
பண்டங்களை வாங்கித் தின்னும்
கெட்டிக்கார வேலைக்காரி போல்
அது உன் வாயமுதத்தைக்
கொள்ளையடிப்பதைக் கண்டு
கோபப்படுகிறேன்.
“அந்தப் புல்லாங்குழலைக் கொடு” என்கிறேன்,
“சும்மா வாங்கப்பார்க்கிறீர்களே” என்கிறாய்:
“ஏதாவது கொடுத்து வாங்குகிறேன்”
என்று உன்னை நெருங்குகிறேன்.
மண்ணும் விண்ணும் ஒன்றாகின்றன.
56
ஒரு வைகறையில்,
நீ ஈர உடையோடு வருகிறாய்;
உன்னை மேலும் கீழும் பார்க்கிறேன்.
கண்ணாடிக் கிண்ணத்தில் தென்படும்
திராட்சைச் சாறு போல
நீ என் விழிக்கு விருந்து வைக்கிறாய்.
“இந்த அழகை இதுவரை நான் பார்த்ததில்லையே..”
“உம்......”
“இரு கைகளாலும் அப்படியே அள்ளப் போகிறேன்.”
“வீதியில் இப்படி விளையாடலாமா?
விலகுங்கள்...நீரோடு நிற்கிறேன்...”
“நான் மேனியை நீறாக்கும்
நெருப்போடு நின்று கொண்டிருக்கிறேன்...”
“பேசாமல் அந்தக் குளத்தில் போய்க்குதியுங்கள்;
நான் போகிறேன்.”
“உன் பாதம் பட்ட படித்துறையையாவது
காட்டி விட்டுப் போகக் கூடாதா?”
இதுவும் ஒரு கனவுதான்!
57
ஒரு காலையில்,
என்னைக் கண்டு மலர்ந்த
உன் கருநீலப் பூக்களைக் கவனித்ததும்
என் வாய்
தமிழ் பேசத் தொடங்குகிறது.
“சில பூக்கள் கொடியில் மலரும்;
சில பூக்கள் செடியில் மலரும்;
சில பூக்கள் மரத்தில் மலரும்..”
-நான் முடிக்கவில்லை.
“நீங்கள் ஏதோ சொல்லப்போகிறீர்கள்...”
என்று நீ சிணுங்குகிறாய்.
“வேறொன்றுமில்லை.
சில பூக்கள்
என் காதலியின் முகத்தில் மலரும்
என்று சொல்ல வந்தேன்”
உடனே நீ நாணிச் சிவக்கிறாய்.
“அடடா.. சில பூக்கள்
என் காதலியின் கன்னத்திலும் மலரும்”
என்கிறேன்.
58
நான்
“தலைநகரில்
எழுத்தாளர்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள்;
என்னையும் அழைத்திருக்கிறார்கள்”
என்கிறேன்.
நீ
“என்ன பரிசு”
என்று கேட்கிறாய்.
“இரண்டாம் பரிசுதான்..”
நீ என்ன நினைத்தாயோ
செவ்விதழைக் கடித்தவாறு
“விடுங்கள்...நான் முதற் பரிசு தருகிறேன்...”
என்கிறாய்.
நான் என் கண்களை
உன் கண்களில் செருகியவாறு,
“என் இரண்டாம் பரிசே! உனக்கு நன்றி”
என்கிறேன்.
59
நீ தொடங்குகிறாய்;
“ஊருக்குப் போகிறேன்;
உங்களுக்குச் சங்கடமாக இருக்கிறதா?”
“ஆமாம் இரண்டு நாட்களுக்குச்
சங்கடமாகத்தான் இருக்கும்”
“அப்படியானால்
அதற்குப்பின் சங்கடமாயிருக்காதோ?
சரியாய்ப் போய்விடுமோ,”
-நீ ஊடிப் பிணங்குகிறாய்.
“அதற்குப் பின்தான்
நீயே வந்து விடுவாயே..
இரண்டு நாட்களுக்கு மேல்
என்னைப் பிரிந்து உன்னால்
இருக்க முடியாதே”
-நான் உன் ஊடலை அணைக்கிறேன்.
உன் முகம்
பௌர்ணமிப் புன்னகை சிந்துகிறது.
60
நான் உனக்குப் பூச்சூட்டுகிறேன்.
நீ சிரிக்கிறாய்.
புதிதாய்த்
தானம் கொடுக்கப் புறப்பட்டவன்
ஆள் தெரியாமல்
கர்ணன் வீட்டுக்
கதவைத் தட்டுவதைப் போல்--
புதிதாய்ச்
சாற்றுக்கவி பாடப் பழகியவன்
அடையாளம் தெரியாமல்
கம்பன் தெருவில்
கால்வைப்பதைப் போல்-
நான் உனக்குப் பூச்சூட்டுகிறேன்.
பூங்கொடியே,
நீ சிரிக்காமல்
என்ன செய்வாய்?
61
உன் செவியில் மெதுவாகச் சொல்கிறேன்;
நான் இல்லாதபோது சிரிக்காதே.
சிரித்தால்,
உன் புன்னகைகளைக் கவர்ந்து சென்று
தூர தேசத்தில்
மணிகள் என்று விற்றுவிடச்
சிலர் காத்திருக்கிறார்கள்.
நான் இல்லாதபோது கண்ணீர் சிந்தாதே.
சிந்தினால்,
உன் கண்ணீர்த் துளிகளைச் சேகரித்து
அந்நிய நாட்டுச் சந்தைகளில்
முத்துக்கள் என்று விற்பதற்குச்
சிலர் தயாராயிருக்கிறார்கள்.
இனிமேல்
சிரிப்பதென்றாலும், அழுவதென்றாலும்
நான் இருக்கும்போது சிரி; அழு!
ஓ...நான் இருக்கும்போது
நீ அழவேண்டிய அவசியமில்லையே.
62
உன் நெற்றியைப் பார்த்துவிட்டு
“எந்தக் கோயிலுக்குப்
போய்விட்டு வருகிறாய்”
என்கிறேன்.
“முருகன் கோயிலுக்கு...”
பதில் பஞ்சாமிர்தமாய் வருகிறது.
“அவன்
ஒரு மயில் மேல் மட்டுமல்ல
இரு மயில்களோடும் இருக்கிறான்
என்பதை மறந்து விட்டாயா?”
என்கிறேன்.
“அந்தத் துணிச்சலில்
அரைவாசியாவது
உங்களுக்கு இருந்தால்
இந்நேரம்...
என்று தான் நினைத்துக் கொண்டு வருகிறேன்”
உன் பதில் வேலாய் வந்து விழுகிறது.
நீ பொல்லாதவள்!
63
“உலகத்திலேயே
நான்தான் பெரிய கொள்ளைக்காரன்”
என்கிறேன்.
“நீங்களா?” என்று கேட்டு வியக்கிறாய்.
“ஆமாம்..
உன்னிடம் அடைக்கலம் புகுந்துள்ள
அழகுச் செல்வத்தையெல்லாம்
நான்தானே கொள்ளையடித்துக்
கொண்டிருக்கிறேன்.
பாவம்,
நீ இவ்வளவு அழகைப் பெற்றிருந்தும்
அனுபவிக்க முடியவில்லையே!
செல்வத்தைச் சேர்ப்பவர் ஒருவர்;
துய்ப்பவர் ஒருவர்.
உண்மையில் நான் கொடுத்து வைத்தவன்”
என்கிறேன்.
“நீ சிரித்துக்கொண்டே
பாவம், நீங்கள் ஏமாந்து போய்விட்டீர்கள்;
நான் வெறும் அழகைக் கொடுத்துவிட்டு
உங்கள் அழியா அன்பு முழுவதையும்
கொள்ளையடித்து விட்டேனே..”
என்கிறாய்.
நீ மிகமிகப் பொல்லாதவள்.
64
அழகிப் போட்டியில்
வென்று திரும்புவதைப் போல்
என் எதிரே நின்று
“நான் எப்படி?” என்கிறாய்.
வேண்டுமென்றே
“உலகத்தில் நான் சந்தித்த
இரண்டாவது அழகி நீதான்”
என்கிறேன்.
அடுத்த வினாடியில்
ஐயமும் பொறாமையும்
கூடிப்பெற்ற கோபக் குழந்தை
உன் முகத்தில் தவழ்கிறது.
“அந்த முதல் அழகி யாரோ?”
என்று கேட்கிறாய்.
இல்லாத ஒருவனுக்கு
இருந்ததாகச் சொல்லப்படும்
நெற்றிக் கண்ணைப் போன்ற
உன் கேள்வியால் நடுங்குகிறேன்.
“வா, அவளைக் காட்டுகிறேன்”
என்று உன்னை
ஏரிப்பக்கம்
அழைத்துச் செல்கிறேன்.
அவள் அழகிய முகத்தைச்
சுட்டிக் காட்டுகிறேன்.
அவ்வளவுதான்...
அலையின் உச்சியில் துள்ளும் மீனைப்போல்
கோபத்தின் உச்சியில்
உனக்குச் சிரிப்பு வருகிறது.
உடனே ஒரு கல்லை எடுத்து
அவள் முகத்தில் வீசுகிறாய்.
பாவம்,
அவள் பயந்து மறைந்து விடுகிறாள்.
தண்ணீர் கலங்குகிறது.
65
“நான் மருத்துவம் படிக்கலாம் என்று பார்க்கிறேன்”
என்கிறாய்.
நான் மகிழ்ச்சிக் கரையின் விளிம்பில் நின்றவாறு,
“எனக்கு ஓர் ஆசை; சொல்லவா” என்கிறேன்.
“சொல்லுங்கள்” என்கிறாய்.
“ஒரு நாள்...
நீ மருத்துவப் பட்டம் பெற்றுவரும் முதல்நாள்...
மடி நிறைய ரோஜா மலர்களைப்
பறித்து வைத்திருக்கும்
தோட்டக்காரன் மகள் போல்
என் மனம் நிறைய உன் நினைவுகளைச்
சேர்த்து வைத்திருக்கும் செருக்கில்
மயங்கி வருகிறேன்.
என்னை யறியாமல் ஒரு சிரிப்பு...
வெடித்த மாதுளம் பழம் போன்ற
உன் கன்னத்தை வருடுவதாகவும்
நீ வெட்கி ஒதுங்குவதாகவும் ஒரு நினைப்பு...
இந்தப் புனித போதையில் ஆடிப்
பாதையின் நடுவே வந்து விடுகிறேன்;
எதிரே
ஒரு தெய்வப் பெண்
மனிதவாகனம் ஒன்றை
அசுர வேகத்தில்
ஓட்டி வருகிறாள்.
நான் மோதி வீழ்கிறேன்.
விழித்துப் பார்க்கும்போது
மருத்துவ மனையில் இருப்பது புரிகிறது.
நீ என் அருகே உலர்ந்த கண்ணீரோடு நிற்கிறாய்;
‘உங்கள் உயிரைக் குடிக்கப் பார்த்தேனே..
பாவி நான்’ என்று அழுகிறாய்.
“வருந்தாதே... நீ பட்டம் பெற்றவுடன்
முதன் முதலாக எனக்கு வைத்தியம் செய்ய
உண்மையில்
நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
என்கிறேன்...”
நான் இப்படிக் கூறிக் கொண்டிருக்கும்போதே
நீ குறுக்கிட்டு
“நான் மருத்துவம் படிக்கப் போவதில்லை”
என்கிறாய்.
நான் பதறிப்போய் “ஏன்” என்கிறேன்,
“எவ்வளவு அழகாகக் கதை சொல்கிறீர்கள்...”
பேசாமல் உங்களிடம்
இலக்கியம் படிக்கப் போகிறேன்”
என்கிறாய்.
நீ சரியான குறும்புக்காரி!
66
நானும் நீயும் உரையாடுகிறோம்;
“நெடுங்கடலில் மூழ்கி
நித்திலங்களை எடுத்துத் தொடுத்து
உனக்கு மாலை சூட்ட விரும்புகிறேன்:
நீ ஏற்றுக் கொள்வாயல்லவா?”
“நீங்கள் பெரிய தீரர்தான்;
ஆனால் அந்த முத்துமாலை எனக்கு வேண்டாம்”
“வானத்தில் ஏறி
விண்மீன்களைக் கொய்துகட்டி
உனக்கு மாலை அணிவிப்பேன்;
அதையாவது ஏற்றுக் கொள்வாயல்லவா?”
“நீங்கள் பெரிய கவிஞர்தான்;
ஆனால் அந்த நட்சத்திரமாலை
எனக்கு வேண்டாம்.”
“ஓ...சாதாரண மலர் மாலையைத்தான்
நீயும் விரும்புகிறாயா?”
“இல்லை... அதுவும் வேண்டாம்.”
“இப்படி எதுவும் வேண்டாமென்று மறுத்தால்
உன் கண்கள் என் கண்ணீரையல்லவா
சந்திக்கக் கூடும்”
“எனக்கு அந்தக்
கண்ணீர் மாலைதான் வேண்டும்”
67
“நீங்கள் ஏன்
இந்த மரண விளையாட்டில் ஈடுபட்டீர்கள்?
எந்த உணர்ச்சியும் எல்லை மீறும்போது
உங்களால் தாங்க முடியாதே.
ஒரு நாள்
என்னை மறந்து விடுங்கள்,
நான் வேறு ஒருவரை...
என்று என் நாவினால் சொல்கிறேன்
என்று வைத்துக்கொள்ளுங்கள்...
அப்போது உங்கள் இதயம்
துன்பக் கத்திரியால் வெட்டுப்பட்டுத்
துடிதுடிக்காதா?
அல்லது
நீங்கள் எதிர்பார்க்காதவாறு,
நாளையே எனக்கு மாலை சூட்டலாம்
என்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்...
அப்போது உங்கள் இதயம்
ஆனந்த மின்னலின் அதிர்ச்சியால்
படபடக்காதா?
எப்படியும்
உங்கள் உயிருக்கு உறுதி இல்லையே!
நீங்கள் ஏன்
இந்த மரண விளையாட்டில் ஈடுபட்டீர்கள்?”
நீ கேள்வியை எழுப்பிவிட்டுப் போகிறாய்.
நான் தனிமையில் புலம்புகிறேன்;
“நான் ஏன்
இந்த மரண விளையாட்டில் ஈடுபட்டேன்.”
68
ஒரு நள்ளிரவில்
அந்த நந்தவனத்தில் இருக்கிறேன்
ஊமை இருட்டின்
மௌன அழகை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
என் ஏகாந்தத்தைக் கலைக்கும் வண்ணம்
நீ ஓடி வருகிறாய்.
காரணம் புரியாத காரிருள் என்மேல் படிகிறது
“இந்த நேரத்தில்
இப்படி வரலாமா?” என்கிறேன்.
“ஏன் பதறுகிறீர்கள்?
ஊர் வாய்க்குப் பயப்படுகிறீர்களா!” என்கிறாய்,
“ஊர் வாய்க்கு மட்டுமல்ல;
நம்மையும் மீறி இந்த உடல்
பசி கொள்ளத் தொடங்கினால்
என்ன செய்வது...”
என்கிறேன்.
“நீங்கள் உடலைப் பற்றியே நினைக்கிறீர்கள்.
நானோ என் ஆன்மாவை
உங்கள் திருவடிகளில்
சமர்ப்பிக்க ஓடி வந்திருக்கிறேன்”
என்கிறாய்.
நீ என் பார்வையில்
நெடுவேள் குன்றம்போல்
நிமிர்ந்து நிற்கிறாய்.
என் குற்றமுள்ள நெஞ்சத்தின் சார்பாக
நான் தலை குனிகிறேன்.
69 ஓர் அந்தியில்,
பழக்கமான அந்தப்
பசும்புல் கம்பளத்தில் அமர்ந்தவாறு
நாம் கண்களின் மொழியைக்
கௌரவப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
யாரோ ஒருவன் தடையாய் வருகிறான்.
வாயைத் திறக்கிறான்;
“நான் தேவன்.
இதோ, இந்தக் கனியைக் கொடுக்கவே வந்தேன்;
இதை உண்டால்
உன்மேனி,
சுக்கைப்போல் உலராது;
உன் இளமை
கடற்கரையில் பதிந்த அடிச்சுவட்டைப்போல்
விரைவில் அழியாது.
ஒவ்வோர் இரவும் நீ உறங்கும் போது
உன்னுள் பரவும்
நரையும் திரையும் மூப்பும்
உன்னை விட்டு ஓடும்.
ஓராயிரம் ஆண்டுகள்
யயாதியைப் போல்
நீ வாலிபத்தின் வாசனையை
நுகர்ந்து கொண்டிருக்கலாம்.
இந்தா, பெற்றுக்கொள்;
இதற்குப் பதிலாக
இந்தக் கன்னியைத் துறந்துவிடு”
வந்தவன் வாய் ஒருவாறு ஓய்கிறது.
நான் அமைதியாகச் சிரிக்கிறேன்;
“நீ கண்ணாடியைக் காட்டி
வைரத்தை வாங்கப் பார்க்கிறாய்
ஆபரணத்தை நீட்டி
மானத்தை உரியக் கருதுகிறாய்.
உன் கனியோ
ஓராயிரம் ஆண்டு வாழ்வோ எனக்கு வேண்டாம்.
என் காதலியோடு வாழும் ஒவ்வொரு வினாடியும்
ஓராயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக நிறைவடைவேன்.
நீ தேவனோ இல்லையோ,
உன் கனிக்காக என் வாழ்வை விற்றுவிடும்
கயவன் நான் இல்லை”
என்கிறேன்.
நீ என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறாய்;
என் உடல் நரம்பு ஒவ்வொன்றிலும்
நளினமான நாதம் பிறக்கிறது.
இதுவும் ஒரு கனவுதான்!
ஒரு கற்பனைதான்.
இப்படி எத்தனை கனவுகள்...!
எத்தனை எத்தனை கற்பனைகள்!
70
=காகிதங்கள்
நான் துயில்கிறேன்.
நீ வருகிறாய்; வாரி அணைக்கிறேன்
ஒரு மல்லிகை மாலையைப் போல்
உன்னை எடுத்துப் படுக்கையில் வைக்கிறேன்.
உன் பக்கம் வந்து அமர்கிறேன்.
அப்போது
யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்கிறது.
விழித்து விடுகிறேன்..
என் இனிய கனவு கலைந்து விட்டதே
என்று கோபம் கொள்கிறேன்.
வேண்டுமென்றே
கதவைத் திறக்காமல் இருக்கிறேன்.
இரண்டு மூன்று முறை வெளியே
முயற்சி நடக்கிறது;
தோல்வியில் முடிகிறது.
சிறிது நேரம் சென்று
சாளரத்தின் வழியாகப் பார்க்கிறேன்;
தூரத்தில் போய்க்கொண்டிருக்கும் உருவம்,
உன்னுருவமாக இருக்கக்கண்டு
அதிர்ச்சியடைகிறேன்.
கனவில் வந்த நீ
கனவு கலைந்ததால்
போய்க் கொண்டிருக்கிறாயா?
அல்லது
நான் கனவில் மூழ்கியிருக்கிறேன் என்று
நனவில் வந்த நீ திரும்பிப் போகிறாயா?
நான் குழப்பமடைகிறேன்.
71 நான் பகலைக் காட்டிலும் இரவை வரவேற்பேன்.
விழிப்பைக் காட்டிலும் துயிலை விரும்புவேன்.
நனவைக் காட்டிலும் கனவை யாசிப்பேன்.
இரவு மண்டபத்தில்
துயில் மேடையில்
கனவு நாடகம் நடைபெற வேண்டும்;
அதில் நீ நாயகியாக வர வேண்டும்.
இந்த வாழ்வு மட்டும் நிரந்தரமாகக்
கிடைத்தால் போதும்.
ஆனால்
கிடைப்பதாகத் தெரியவில்லையே!
இரவு என்னவோ ஒழுங்காக வருகிறது.
ஆனால்
எல்லா இரவுகளிலும் துயில் வருவதில்லையே!
எப்போதும் கனவு வருவதில்லையே!
துயிலும் கனவும் சேர்ந்து வந்தாலும்
பல வேளைகளில் நீ வருவதில்லையே!
என்மேல் உனக்கு இரக்கமில்லையே!
72
இரண்டில் ஒன்று சொல்லி விடு
இப்போது என்னால்
எதையும் தாங்கிக்கொள்ள முடியும்.
இரண்டில் ஒன்று சொல்லி விடு.
எனக்காக இன்னொருத்தி
காத்துக் கொண்டிருக்கிறாள்.
உன் முடிவைத் தெரிந்த பிறகுதான்
அவளிடம் செல்ல வேண்டும்.
அவள் ஊருக்கு வெளியே
நின்று கொண்டிருக்கிறாள்.
எனக்காகக் கல்லால்
ஓர் அழகிய அறை
கட்டத் தயாராயிருக்கிறாள்.
அவள் பெயர்...
அவள் பெயர்...
மரணம்.
73 நீ தாமதிக்காதே!
தேரோட்டம் முடிந்தபிறகு
திருவிழாக் காணவரும்
ஒரு பக்தனைப் போல்-
வண்டி போன பிறகு
நிலையம் வந்து சேரும்
ஒரு பயணியைப் போல்-
நோயாளி மடிந்த பிறகு
மருந்து வாங்கி வரும்
ஒரு சொந்தக்காரனைப் போல்-
நீ காலங்கழித்து வராதே;
பிறகு வருந்தாதே!
74 என் ஆசைகளைப்
பாறைமேல் முளைக்கும் புற்களைப் போல்
வேகமாக உலர்ந்து போகவிடாதே.
என் நம்பிக்கைகளை
வயல்களில் முளைக்கும் களைகளைப் போல்
கிள்ளி எறிந்து விடாதே.
என் கனவுகளையும் கற்பனைகளையும்
ஒன்றுக்கும் உதவாத துண்டுக்
காகிதங்களைப் போல்
கிழித்தெறிந்து விடாதே.
75
உன் வீட்டுக்குப் போகும் பாதையில்
சுடுகாடு இருக்கிறது.
நான் உரிமையோடு
உன் வீட்டுக்கு வரவேண்டும்
என்று ஆசைப்பட்டேன்.
ஆனால்
சுடுகாட்டிலேயே நான் தங்கிவிட வேண்டும்;
அதைத் தாண்டி வரவேண்டாம்
என்று நீ ஆசைப்படுகிறாய்...இல்லையா?
76
நான்,
உன் முகத்தைக்
தாமரை என்று சொன்னால்
பொய் என்று சொல்;
உன் நெற்றியைப்
பிறை என்று சொன்னால்
பொய் என்று சொல்;
உன் இதழ்களைக்
கோவைப் பழங்கள் என்று சொன்னால்
பொய் என்று சொல்;
இப்படி
அடி முதல் முடி வரை
உன்னை அழகழகான வார்த்தைகளால்
அற்புதமான உவமைகளால்
வருணித்தால்
அவற்றையெல்லாம்
பொய் என்று சொல்;
வேண்டாம் என்று சொல்லவில்லை.
ஆனால்... ஆனால்
உன் இனிய வாயால்
என் காதலை மட்டும்
பொய் என்று சொல்லிவிடாதே!
77
குறைந்த அளவு
நீ இந்த வார்த்தையாவது கொடு.
நீ என்னைக் கைபிடிக்க வேண்டாம்;
காதலித்தால் போதும்.
நீ என்னைக் காதலிக்கக்கூட
வேண்டாம், வேண்டாம்;
அன்பு காட்டினால் போதும்.
நீ என்னிடம்
அன்பு காட்டாவிட்டாலும் பரவாயில்லை.
என்னை வெறுக்காமல் இருந்தால் போதும்.
குறைந்த அளவு
நீ இந்த வரத்தையாவது கொடு.
78
நீ என்னை விட்டுப் பிரியப் போகிறாயா?
செப்புக் கம்பிகளில் மின்சாரத்தை
ஊடுருவ வைத்துவிட்டு
விஞ்ஞான வேலைக்காரன்
விலகிக் கொள்வதைப் போல்
என் சிந்தனை அணு ஒவ்வொன்றிலும்
உன் ஆதிக்கத்தை ஊடுருவ வைத்து விட்டு
நீ விலகப் போகிறாயா?
கப்பல் எவ்வளவு பெரிதாகப் போட்டாலும்
கணப் பொழுதில் காணாமற் போகும்
தண்ணீர்ப் பாதையைப் போல்
என்னைவிட்டு
எங்கோ போகப் போகிறாயா?
பிழைக்கப் போன இடத்தில்
தன் கணவன் கள்வன் என்று
குற்றம் சாட்டப் பட்டதோடு
கொலையும் செய்யப்பட்ட
கொடுமையைக் கேட்டுக்
குலை நடுங்கிய ஒரு பத்தினியைப் போல்
என்னை நடுங்கவைக்கப் போகிறாயா?
நீ என்னை விட்டுப் பிரியப் போகிறாயா?
79
என்னைப்பார்
ஏகாதிபத்தியத்தின்
கொடுமைக்கு இரையாகும்
ஒரு சிற்றரசைப்போல்
வாடி வருந்தும் என் மேனியைப் பார்.
முதலாளித்துவத்தின்
சுரண்டலுக்குப் பலியாகும்
பாட்டாளி வர்க்கம் போல்
சாரம் இழக்கும் என் இளமையைப் பார்.
நிலப் பிரபுத்துவத்தின்
நீசக் கரத்தில் சிக்கிக் கிடக்கும்
கூலி விவசாயிகள் குடும்பம் போல்
வெந்து பொசுங்கும் என் வாழ்வைப் பார்.
பார்த்து விட்டுப்போ!
80
என்னை மன்னித்துவிடு,
வேதனையில் வெளிப்படுத்தும் என் சொற்கள்,
தேள்களாகவும் அரவங்களாகவும் தோன்றினால்
என்னை மன்னித்துவிடு.
நீராடும் பொய்கை என்று
நீ என்னை நம்பி வந்தபோது
நான் உனக்குச்
சேறாகத் தென்பட்டிருந்தால்
என்னை மன்னித்துவிடு.
பிரிவின் வலிய கையில்
பிடிபட்டிருக்கும் இந்த நேரத்தில்
என் குற்றங்களை மறந்து
கொஞ்சம் கருணை காட்டு.
தூக்கில் தொங்கவிருக்கும் கைதி ஒருவனின்
கடைசி ஆசையைப் பூர்த்தி செய்யும்
ஒரு பழங்கால மன்னனைப் போல் நடந்துகொள்;
என் இறுதி வேட்கையை நிறைவேற்று.
உன் மனத்தில்
வசந்த மண்டபம் அமைக்கவந்த நான்
இதோ மயான வெளியை நோக்கிப்
போகிறேன்.
நீ தினமும் கண் விழித்ததும்
நான் உறங்கும் மண்ணைப் பார்த்து
ஒரு பெருமூச்சு விடு;
ஆண்டுக்கு ஒருமுறை
நீயே நீரூற்றி வளர்க்கும்
செடி கொடிகளின் சிரிப்புகளை
என் சமாதியின்மேல் தூவு..,
அது போதும்; அது போதும்.
81
நான் புறப்படப்போகிறேன்
என்று தெரிந்ததும்
என் நேயர்கள் எல்லோரும்
என் அருகில் வருத்தமாக நிற்கிறார்கள்;
“பேரவைகளிலும்
கலை இலக்கியப் பெருமன்றங்களிலும்
உன் புகழ் எதிரொலிக்கும்
என்று எதிர்பார்த்தோம்;
கிணற்றுக்குள் கேட்கும் குரல்போல்
அது குறுகி அடங்கி விட்டதே;
ஜனசக்தியின் ஒளியில் அரும்பி
ஒரு மகாகவியாக
மலர்ந்து கொண்டிருந்த நீ
இடையில் இப்படி
ஒரு பலவீனத்தின் கரம்பட்டுக்
கருகி விட்டாயே!
சரி...... ஏதாவது
விட்டு விட்டுப் போகிறாயா?”
என்கிறார்கள்.
நான் சொல்கிறேன்;
அவளும் நானும் சந்தித்த-
அழகுகள் கூடிக் குலாவும்-
அந்தப் பாதையை விட்டுச் செல்கிறேன்
அந்தப் பாதை நெடுக
நாங்கள் நடக்கும்போது
குளிர்ந்த நிழலையும்
கூடவே பூக்களையும் காய்களையும்
தூவிக் கொண்டிருந்த
வேப்பமரங்களை விட்டுச் செல்கிறேன்.
அந்தப் பாதைக்கு நேர் உச்சியில்
அருட்கைகளாகத் தோன்றும்
ஐப்பசி மேகங்களை விட்டுச் செல்கிறேன்.
அந்தப் பாதையிலே வளர்ந்த
வசீகரமான கனவுகளையும்
கற்பனைகளையும்
விட்டுச் செல்கிறேன்”
நான் புறப்படுகிறேன்.
82
ஓர் ஆன்மாவின் யாத்திரை அடங்கப் போகிறது.
ஒரு தேவகானம் ஒடுங்கப் போகிறது.
ஒரு மன்மதப் பந்தல் சரியப் போகிறது.
ஒரு தூய கலைத்திரையில்
ஓடிக் கொண்டிருந்த
ஊமைப் படம்
முடியப் போகிறது...
முடியப் போகிறது.
83
உலகபந்தம் என்னும்
ஒரு சக்தியின் பிடியிலிருந்து
மீற முடியாமல் - அதே நேரத்தில்
மீற வேண்டும் என்னும்
வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல்
தவிக்கும் ஓர் ஆன்மா,
ஒரு தெய்வாம்சம் பொருந்திய பேரழகை
அள்ளி அணைக்கும்
ஆர்வ வெறியில் அலைகிறது.
ஆனால்...அந்தப் பேரழகு
அதன் கைகளில் சிக்காமல் நழுவுகிறது.
ஆன்மா துடிக்கிறது.
அந்தத் துடிப்பின்
அலை ஓசைகளை இங்கே கேட்கலாம்.
Wednesday, November 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment