Monday, November 14, 2011

ஹெச். ஜி. ரசூல் கவிதைகள்

1. பர்வீன் விரட்டிய பூனை

இன்று அதிகாலை படுக்கையிலிருந்து
பூனைக்கண் சாகிபு
ஒரு கரும்பூனையாய் கண்விழித்தார்.
சாமத்தில் முழித்து
தஹஜ்ஜத் தொழுதபின்
அத்தாளம் குடித்துவிட்டுத்தான்
படுக்கைக்குப் போனாரென்பதை
யாரும் அறிந்திருக்கவில்லை.
கிடந்தபடியே ஒன்றுக்கிருந்தது
பால்யத்தை ஞாபகமூட்டியது.
அரவம் எதுவும் கேட்காது
தனிமை அறையிலிருந்து
கிளம்பிப் போனபோது
பூனை குறுக்கே சாடியதற்கு
கல்லெறிந்து போனான் கடை யூசுபு
தனது பேச்சும் மொழியும்
தானாக மாற்றமடைந்ததை எண்ணி
தவிப்புமட்டுமே மேலிட்டது.
இறைச்சிமுள்ளைக் கடிக்க
சாடி ஓடியபோதுதான்
நோன்பு என்பதும் நினைவுக்கு வந்தது.
மறுமையில் சொர்க்கம் செல்வதற்காக
நோன்பிருந்தது பூனை
தன் வாப்பா பூனையானது தெரியவில்லை
காலடியில் சுற்றிக் கொண்டிருந்த
அப்பூனையை
பர்வீன் கம்பெடுத்து அடித்து விரட்டினாள்

2. இரவுதோறும் கரும்பாறை வளர்கிறது

ஒரு புல்லின் நுனி கரும்பாறையைச் சுமந்திருந்தது
சொட்டுச் சொட்டாய் உள்ளிறங்க வழியற்று
அதில் விழுந்த மழைத் துளிகள்
பெருநதியாகப் பாய்ந்தோடுகிறது
ஆயுள் பூராவும் சேமித்த சூட்டின் தகிப்பு
தன்னுணர்ச்சியை இழக்க விரும்பவில்லை.
பகலுறக்கம் தீய்ந்து
இரவுதோறும் கரும்பாறை வளர்வதை
கண்ணாப்பா சொல்லியிருக்கிறார்
கருகிவிடாது ஒற்றைப்புல் வேர்பிடித்திருக்க
குறு குறுவென ஊதிப் பெருகிய
கரும்பாறையைப் பார்க்கக் கூட்டம் அலைமோதியது.
சாயங்காலமொன்றில் மகுடியெடுத்து
பாம்புப் பிடாரன் ஊதிய இசை பட்டுத்
தடுமாறத்துவங்கியது கரும் பாறை
எத்தனை நாள் உள்ளிருப்பது
பாறையைப் பிளந்து வெளியே சாடியது
சாலிஹ் நபியின் ஒட்டகக் குட்டி

3. கனவில் வந்து பேசிய நபி

எதிரிகளின் பிடியிலிருந்து தப்பித்து
மறைவாக்கிக் கொண்டேன் என்னை
சிலுவையில் அறையப்பட்டது
என்னைப் போலொத்த
பிறிதொரு உருவமென்பது ரகசியம்
இறைவனின் தூததொருவரை
உண்மையிலேயே கொல்லமுடியுமா?
சிலுவையில் அறையப்பட்ட நபி
நேற்றென் கனவில் பேசினார்.
ரத்தம் சொட்டச் சொட்ட
கொல்லப்பட்டது நான்தான்
சிலுவைமரணத்தை ஆட்கொண்ட
என்னுடலின் உறுப்புகள்
சிதைவைத் தழுவின.
கடவுளின் குமாரனென்ற உண்மைக்காய்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தேன்
நண்பனின் கனவில் வந்தும் பேசினார்
சிலுவையில் தொங்கிய நபி.

4. வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை

ஒரு சொர்க்கத்தை சம்பாதிப்பதற்காக
நரகங்களை உருவாக்குபவன்
என்வீதிவழியே வந்து
என்னைத் தட்டி எழுப்பிச் சென்றான்.
கறுப்புவடுவோடு கண்டுணர்ந்த பேரழகு
கீற்றாய்ச் சிறுகோடாய் தேய்ந்து
இரவின் கதையை எழுத
பிறையின் ஒளியை முத்தமிட்டு
அதிசயித்துப் பார்க்கும் கண்கள்
மின்னல் வாகனத்தில் பறந்து சென்றது.
தொடமுடியாத ஏழுவானங்களும் அதிர
அவன் கூக்குரலிட்டான்.
நிரம்பிய கண்ணீரில்
ஒளுவெடுத்துப் புனிதப்படும் உள்ளங்கைகளும்
நெடுவெளி மணற்காட்டில்
தய்யம் செய்யும் விரல்களும்
அறிந்திராதொரு வன்மத்தின் தீண்டலில்
அவனின் அபயக்குரல் தொடர்ந்தது.
லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்
உடைபட்டு கீழேவிழுந்து புலம்பின குரல்
திரும்பவும் கேட்கிறது.
மூசாவையும் ஈசாவையும் குறித்து
அறிவித்த தீர்ப்பால்
சிலுவையிலிருந்தும் போர்வாள்கள் முளைத்து
அவனின் குரல்வளையை நெருங்கிவந்தன.
யுத்த இருளின் புகைமூட்டத்தில்
எதிரே கண்டால் வெட்டச் சொன்ன புனித வசீகரம்
எதிரியின் கைகளிலும் துப்பாக்கிகளைத் திணித்தன.
போதையூட்டப்பட்ட சொற்கள்
எப்போதும் பைஅத்திற்கு தயார்
பைசாகோபுரங்களைத் தகர்த்தும் எறியலாம்
அதன் அடுத்தடுத்த பக்கங்களில்
தினந்தோறும் கவனிப்பாரற்று
துயரம் மேலிட கண்ணீர் சிந்திக் கிடக்கிறது
லக்கும் தீனுக்கும் வலியதீன்.
குண்டுகள் வெகுஅருகாமையிலும் வெடிக்கின்றன.
மறைக்கப்பட்ட வரிகளினூடே
அர்ஷின்முத்திரை ஒன்று தவறிப்போனதை
எல்லோராலும் அறிந்துகொள்ள முடியவில்லை
சொல்லி முடிப்பதற்குள்
லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்
ரத்தத்திலிருந்து முளைக்கத் தொடங்கின.
ஜிகாதின் சொற்களைத்தவிர அவனிடம் இப்போது
வேறெந்தச் சொற்களும் மிச்சமிருக்கவில்லை

No comments: