Monday, November 14, 2011

தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர்: ஒரு குறிப்பும் சில கவிதைகளும் - சுகுமாரன்

‘நான் யார்? பின் இருக்கையில் விழித்து
பதற்றத்துடன் முறுக்கிக் கொள்ளும்
சாக்குப் பைக்குள்ளிருக்கும் பூனையைப் போன்ற
ஏதோ ஒன்று. யாராம்?’. . .

ஸ்வீடிஷ் மொழியில் எழுதும் ஸ்காண்டிநேவியக் கவிஞரான தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் ஊடகங்களில் பேசப்படுவதும் கவிதை வாசகர்களால் மறுவாசிப்புச் செய்யப்படுவதும் இலக்கிய வட்டாரங்கள் அவரை முன்னிருத்தி உரையாட முற்படுவதும் இரண்டாம் முறையாக நிகழ்கிறது. சென்றமுறை அவர் பேசு பொருளாக இருந்ததும் இம்முறை இருப்பதும் நோபெல் இலக்கியப் பரிசுத் தருணங்களால்.

2008ஆம் ஆண்டு நோபெல் இலக்கியப் பரிசுக்குரிய போட்டியாளர்களின் இறுதிப் பட்டியலில் இருந்தவர்களில் இருவர் கவிஞர்கள். சிரியாவைச் சேர்ந்த அடோனிஸும் ஸ்வீடனைச் சேர்ந்த ட்ரான்ஸ்ட்ரோமரும். இருவரில் ட்ரான்ஸ்ட்ரோமருக்குத்தான் கூடுதல் வாய்ப்பு இருந்தது. எனினும் விருதை வென்றவர் இந்தக் கவிஞர்கள் இருவரைவிடவும் உலக இலக்கிய வாசகர்கள் மத்தியில் குறைவாக அறியப்பட்டிருந்த பிரெஞ்சு எழுத்தாளர் லெ க்ளேசியோ.

கவிஞரும் வாசகர்களும் எதிர்பார்த்திராத வகையில் இம்முறை நோபெல் இலக்கியப் பரிசைப் பெற்றிருக்கிறார் தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர்.

ஐரோப்பிய நவீனக் கவிதையின் நடைமுறையாளர்களாகக் கணிசமான கவிஞர்கள் ஆங்கில மொழியாக்கங்கள் வாயிலாக வாசகர்களுக்கு அறிமுகமாயினர். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஐரோப்பிய மனநிலையை இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். டாட்யூஸ் ரோஸ்விக்ஸ், விஸ்லவா ஸிம்போர்ஸ்கா, செஸ்லாவ் மிலோஸ், மிராஸ்லாவ் ஹோலூப், ஜோசப் ப்ராட்ஸ்கி என்று பேசப்படும் சமகாலக் கவிஞர்களின் வரிசையைச் சேர்ந்தவர் ட்ரான்ஸ்ட்ரோமர். இவர்களில் ஆங்கிலத்தில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளும் அவருடையவைதாம். அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். அமெரிக்கக் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான ராபர்ட் ப்ளையின் நட்பு முதலாவது காரணம். இரண்டாவது காரணம் ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகள்தாம்.

அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளில் நம்மால் இனங்காண முடியாமல் பதுங்கியிருக்கும் ஒளிர் கணங்களை ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகள் முன்வைக்கின்றன. இவை எளிமையான மொழியில் ஒருவகையான தியான மனநிலையை மையமாகக் கொண்டவை. எதிர்பாராத படிமங்களின் மூலம் அவை மனிதனின் சந்தேகங்களையும் வியப்புகளையும் சித்தரிக்கின்றன. ‘விழித்து எழுவது என்பது கனவுகளிலிருந்து பாரா சூட்டில் குதிப்பது’ என்பது அவருடைய ‘முன் தரவு’ (Prelude) என்னும் கவிதையின் ஒரு தருணம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கவிதைகளில் ட்ரான்ஸ்ட்ரோமரின் இயல்பை ஊகிக்கலாம்.

தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர். 1931ஆம் ஆண்டு ஸ்டாக் ஹோமில் பிறந்தார். இளம் பருவத்திலேயே பெற்றோர் மணவிலக்குச் செய்துகொண்டனர். பள்ளி ஆசிரியரான அன்னையால் வளர்க்கப்பட்டார். ஸ்டாக்ஹோம் பல்கலைக் கழகத்தில் உளவியல் பயின்றார். இவரது வாழ்நாளின் பெரும் பகுதி உளவியல் மருத்துவராகப் பணியாற்றியதில் கழிந்தது. இதில் குறிப்பிடத்தகுந்த காலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிச் சிறாருக்கு ஆலோசகராக இருந்தார். இருபத்தி மூன்றாம் வயதில் முதலாவது கவிதைத் தொகுதியை (17 கவிதைகள்) வெளியிட்டார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஒரு தீவில் சில மாதங்கள் வசித்தார். அந்த வாழ்க்கைதான் தன்னைக் கவிதையில் தீவிரம் கொள்ள வைத்தது என்றும் அங்கே உணர்ந்த தனிமை தன்னுடையது மட்டுமல்ல; தன்னைப் போன்ற எல்லாருடையதும் என்றும் பின்னர் குறிப்பிட்டார்.

ஓவியக் கலையிலும் இசையிலும் பெரும் ஆர்வம்கொண்டவர் ட்ரான்ஸ்ட்ரோமர். அதன் அடையாளங்களை அவரது எழுத்தில் காணலாம். பயணங்களிலும் அளப்பரிய மகிழ்ச்சி காண்பவர். சிரியக் கவிஞரும் நண்பருமான அடோனிஸுடன் இணைந்து கவிதை வாசிப்புக்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் இலக்கியப் புகழ்பெற்றவை. 1989இல் மத்தியப் பிரதேச அரசின் பண்பாட்டு மையமான போபால், பாரத் பவனில் நடைபெற்ற கவிதை மாநாட்டில் கலந்துகொண்டிருக்கிறார்.

ட்ரான்ஸ்ட்ரோமர், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டு உடலின் ஒரு பகுதியில் இயக்கமே இல்லாமல் வாழ்ந்துவருகிறார். அந்த நோய் தனக்கு நன்மையையே செய்திருப்பதாகச் சொல்கிறார். ‘வாசகனை அலுப்படையச் செய்யும் நீண்ட கவிதைகளை எழுதுவதிலிருந்து இந்த நோய் என்னைக் காப்பாற்றியிருக்கிறது.’

சிதறுண்ட திருக்குடும்பம்

1
நாங்கள் தயாராகி எங்கள் வீட்டைக் காண்பித்தோம்
விருந்தாளி நினைத்தார்: வசதியாக வாழ்கிறீர்கள்.
சேரி உங்களுக்குள் இருக்க வேண்டும்.
2
நம்பிக்கையின் உடைந்த கையைச் சுற்றி கிடக்கும் வார்ப்படம்போல
தேவாலயத்தின் உள்ளே
வெண்ணிறச் சுதை மண்ணாகக் கவிகை மாடங்களும் தூண்களும்.
3
தேவாலயத்தின் உள்ளே இருக்கும் பிச்சைப்பாத்திரம்
தரையிலிருந்து மெல்ல மேலெழும்பி
திருவிருக்கைகள் வழியாக மிதந்து செல்கிறது
4
ஆனால் தேவாலய மணிகள் தலைமறைவாகி விட்டன
அவை சாக்கடைக் குழாய்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன
எப்போதெல்லாம் நாம் ஒரு அடியெடுத்து வைக்கிறோமா அவை ஒலிக்கின்றன.
5
உறக்கத்தில் நடக்கும் நிக்கோதேமு* தனது வழியில்
அந்த முகவரிக்குப் போய்க்கொண்டிருக்கிறான். யாரிடமிருக்கிறது முகவரி?
தெரியாது? ஆனால் நாமும் அங்கேதான் போய்க் கொண்டிருக்கிறோம்.

*நிக்கோதேமு - Nicodemus. புதிய ஏற்பாடு, யோவான் எழுதின சுவிசேஷத்தில் வரும் பாத்திரம். யேசுவை ஆதரித்ததும் அவருடைய தண்டனை பற்றி முன் எச்சரிக்கை தெரிவித்ததும் மரித்த பின்னர் சடலத்தை அடக்கம் செய்ய உதவியதும் நிக்கோதேமுவின் செயல்கள்.

வசந்தமும் அமைதியும்

வசந்தம் கைவிடப்பட்டுக் கிடக்கிறது

வெல்வெட் கறுப்புக் கால்வாய்
எதையும் பிரதிபலிக்காமல்
என் அருகில் ஊர்கிறது

மின்னுவதெல்லாம்
மஞ்சள் பூக்களாகவே இருக்கின்றன

கறுப்புப் பேழைக்குள் வைத்த வயலினைப் போல
எனது நிழலுக்குள் பொதியப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறேன் நான்

நான் சொல்ல விரும்பும் ஒன்றேயொன்று
கைவசமாகாமல் மினுமினுக்கிறது
அடகுகடை வெள்ளியைப் போல.

நன் பனிக்காலம்

ஒரு நீல வெளிச்சம்
என் ஆடைகளிலிருந்து கதிர்வீசுகிறது
நன்பனிக் காலம்
பனிக்கட்டிகளின் டாம்போரின்களின்* ஓயாத பேச்சு
என் விழிகளை மூடுகிறேன்

மரித்தவர்கள்
எல்லை தாண்டிக் கடத்தப்படும்
பிளவு இருக்கிறது அங்கே
அங்கே இருக்கிறது ஓர் ஒலியற்ற உலகம்.

* டாம்போரின் - கஞ்சிரா போன்ற தாளவாத்தியம்.

No comments: