Saturday, May 12, 2012

போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் - அஜித் ஹேரத் கவிதைகள்


வழிபாடு
புதுக்குடியிருப்புக்குச் செல்லும் தெருவில்
உன்னை அவர்கள் கிடத்தினர்
எறிகளண் துண்டித்த உனது செயற்கைக் காலை
தீய்ந்து கருகிச் சிதறிய மண்ணில்
உன்னருகே வைத்தனர்.


முழந்தாளிட்டு
அந்தச் செயற்கைக் காலை வணங்குகிறேன்
மகனே.
சிலுவையில் அறையப்பட்ட
யேசுவின் பாதங்களைப் போலவோ
தேவதத்தனால் காயம்பட்ட
புத்தரின் காலைப் போலவோ
இந்தக் கால் குருதி சிந்தவில்லை.


எரிந்துபோன உன் உதடுகளைத் திறந்து
எனக்குச் சொல்
மகனே
உனது கடைசிக் கனவைப் பற்றி
தெருவோரத்தில் உனது மரணம் நிகழும் முன்
உன் இறுதித் தாக்கத்தைப் பற்றி.


பரவசம் தரும் இளமைக் கனவொன்றில்
உன் தோழர்களுடன்
அப்போது முழுமையாக இருந்த
உன் கால்களுடன் ஓடித் திரிந்தாயா


இருளிலும் இருளான இரவொன்றில்
குருதி கசியும் வெறுங்கைகளால்
இழந்துபோன காலைத் தேடி
முடிவற்றுப் பெருகும் மனிதப் புதைகுழி மேடுகளைத்
தோண்டுகிற
தனித்து அலையும் ஒருவனைப் பற்றிய
கொடுங்கனவா
மெல்ல மெல்ல ஒளி இழந்துபோகிற
உன் கண்களில்
எங்கள் பாவங்களும்
நூற்றாண்டுக் கால எங்கள் தோல்விகளும்
எழுதப்பட்டுள்ளன.


முகமற்று மரித்த எல்லோர் பேரிலும்
இல்லாமல் போன எல்லாக் கடவுளர் பேரிலும்
மகனே
எங்களை மன்னித்துவிடு.


படுகொலைகளுக்குப் பிற்பாடு
எந்தச் சாட்சியமும் இல்லை
எந்த நீதிபதியும் இல்லை
குற்றவாளிகளையும் கொலையுண்டோரையும் தவிர.
ஏழு கனவுகள்
முதல் கனவு: நீ கவனிக்கவே இல்லை
முடிவிலியின் கற்பனைக்கு எட்டாத
புள்ளிகளிலிருந்து
நான் விழுகின்றேன்
நகரின் தெருக்களில்
சேற்று நீர் பெருகுகிறது.
நீரில் விழுவதற்குக் கணப்பொழுது முன்பாக
மிதந்து வரும் சிதிலங்களுக்கு நடுவில்
ஒரு தொட்டிலில்
குழந்தையாக விழித்தெழுகிறேன்
தங்களுடைய ஆடைகளை
அள்ளித் தூக்கியபடி
சேற்று நீரில் நடந்துவரும்
ஆண்களையும் பெண்களையும்
கடந்துபோகிறேன்.
புன்னகையுடன் கையசைக்கிறார்கள்.


தொட்டில் கவிழ்ந்து
சாக்கடையுள் வீழ்கிறபோது
தாங்கொணாக் குளிரில் நடுங்கித்
தொட்டிலை விட்டு வெளியேறி
ஏக்கத்துடன் உன்னைத் தொடர்கிறேன்
நீ கவனிக்கவே இல்லை
திடீரென
யாரோ என்னை இழுத்துப்
பெருகும் நீருள் வீசியெறிகிறார்
மீளவும்
வீழ்கிறேன், வீழ்கிறேன்
நிலத்தில் மோதும் முன்பாக
விழித்தெழுந்ததாய் உணர்ந்தேன்.
இரண்டாவது கனவு: உனது முத்தம் எனது சாபத்தைப் போக்கவில்லை
முடிவற்ற மழை
சாளரத்தின் வெளியே பார்க்கிறாய்
உனது மூச்சிலிருந்து எழும் புகார்
நக்கிள்ஸ் மலைத் தொடரை மறைக்கிறது


பச்சையத்தின் வீச்சில்
தூக்கத்தில் ஆழ்கிறேன்
விழித்தெழுகிறபோது
ஒரு கண்ணீர்த் துளி உனது கண்ணிலிருந்து
இறங்குகிறது
அறுவைக்கான ஆய்வுக்கூட மேசையில்
விரிந்துகிடந்தபடி
உன்னைப் பார்க்கிறேன்
ஒரேயொரு முறை, அதுதான் இறுதி,
என்னை அணைத்து முத்தமிடுகிறாய்
சாளரத்தைத் திறந்து
என்னை வெளியே வீசி எறிகிறாய்
அன்றைக்கு ஆய்வுக்கூடத்தை விட்டுச் சென்றாய்
பள்ளிக்குத் திரும்பவே இல்லை
உனது முத்தம்
எனது சாபத்தைப் போக்கவில்லை
வீழ்வதற்கு முன்பாக நான்
விழித்தெழவும் இல்லை.
மூன்றாவது கனவு: வெல்ல முடியாத பாலம்
பாலத்தின் மேல்
அம்மணமாக உன்னை
முழந்தாளில் இருத்துகிறார்கள்
உனது கைகளைப் பின்புறமாகக் கட்டுகிறார்கள்
அலறுகிறேன் உன்னைக் காப்பாற்ற
எஞ்சியிருந்த கடைசித் துப்பாக்கியை
ஒளித்த இடத்தை
நீங்கள் யாருமே சொல்ல மறுக்க
நான் நிலத்தைக் கிளறுகிறேன்
துப்பாக்கி தன்னைத் தானே புதைத்திருந்தது
அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை
ஆற்றில் பிணங்கள் மிதந்துவருகின்றன.


எப்போது இந்தப் பாலத்தைக்
கடக்க நேர்ந்தாலும்
காயம்பட்ட இதயத்துடன்
நீரில் வீழ்கிறேன்
இன்னும் வீழ்கிறேன்
நான்காவது கனவு: நீல ஆகாயத்தையும் முகில்களையும் பார்த்தேன்
பழமரம் கொடியாகப் படர்ந்திருக்கிற வேலியோரம்
தடை முகாமில்
உக்கிப்போன மரத்துண்டே கட்டிலென
அமர்ந்திருக்கிறேன்
தப்பிச் செல்லும் வழிகளைப் பற்றியே எண்ணம்
சுரங்கம் அமைத்தால்
ஏழு மலைகளுக்கும் பெருங்காடுகளுக்கும் அப்பால்
இன்னொரு நீல ஆகாயத்தையும்
முகில்களையும் பார்க்க முடியுமென
நீ
என் காதுகளில் மெல்லச் சொல்கிறாய்.


கைவிடப்பட்ட பொதுக் கிணற்றில்
நீர் சாந்தமாக இருக்கும் மதியத்தில்
கிணற்றுக் கட்டில் அமர்ந்தேன்
கிழே தெரிந்தது சுரங்கம்
பூமியின் மறுமுனையில்
இன்னொரு நீல ஆகாயத்தையும்
முகில்களையும் காட்டியது அடியற்ற கிணறு
அங்கிருந்து
என் கண்களுடாகவே நீ என்னைப் பார்க்கிறாய்


படிமங்கள் கலைகின்றன
தடுப்பு முகாம் கைதிகளின் வாளிகளால்
நீர் கலங்கும் முன்பாக
இந்தக் கிணற்றூடாகத் தப்பி ஓட விரும்புகிறேன்
மறுபடியும்
முடிவற்ற குகை ஊடாக
ஆகாயத்தை நோக்கி வீழ்கிறேன்.
ஐந்தாவது கனவு: நீலத் தரப்பாள்* சிதை
நீலத் தரப்பாள் குடிசையும்
அதனுள் தொட்டிலும் எரிகிறபோது
உன் பிஞ்சுக் கைகளும் கால்களும் எரிய
வெளியே தவழ்ந்து வந்தாய்
அச்சம் நிறைந்த உன் போராட்டத்தை
கையறு நிலையில் பார்க்கிறேன்
ஒரு கணம் எங்கள் கண்கள்
சந்தித்துக்கொள்கின்றன
அதை நீ கவனித்தாயா என்பதை
நான் ஒருபோதும் அறியப்போவதில்லை
உறைந்துபோயிருந்த என்னைக் கடந்து சென்று
குழிக்குள் விழுந்தாய்.


பிணங்களுடனும் புகையுடனும்
மறைந்து போய்விட்டாய்
அந்தக் குழியை மண்ணால் மூடி
ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பின
புல்டோசர்கள்
அவை மெல்ல மெல்லத் தொலைவுகொண்டு
மறைந்தாலும்
எனக்குத் தெரிவதெல்லாம்
மண்ணின் மேல் உன் பிஞ்சுக் கை.


*TARPAULIN
ஆறாவது கனவு: தாமதமாக வந்ததால் உன்னை இழந்தேன்
இன்னும் இரவு
துயர்மிகு விழிப்புடன் எழுகிறேன்
யாரோ எங்கோ எனக்காகக் காத்திருப்பதான
உணர்வு
யாரென அறியேன் எங்கே எனவும் தெரியாது
அது நீயாகவும் இருக்கக்கூடும்
சந்திப்புகள், பணிகள் என என் நாள் நிறையும்
கடந்துபோன நாள்களும் மாதமுமே
எஞ்சி இருக்க


கி - 9 தெருவில் நடந்து
கடைசி ராணுவக் காவல் அரணையும் தாண்டி
வருகிறேன்.
நீ இல்லை
தாமதமாக வந்துவிட்டதால்
நீ போய்விட்டாயோ தெரியாது
வன்னிக்கு வந்தேன்; நீ இல்லை
இடிந்திருக்கும் உன் வீட்டின் கதவருகே
காத்திருக்கிறேன்.
கையில் சிகரெட்டின் உனக்கான பாதி.
ஏழாவது கனவு: சிதறிப் பறந்தது கடந்த காலம்
சுற்றி வளைப்பும் தேடுதல் வேட்டையும்
முடிந்த பிற்பாடு படையினர் போய்விட்டனர்
உடைக்கப்பட்டிருந்தது அறை
துண்டு துண்டாகக் கிழித்து வீசப்பட்டிருந்தது
எங்கள் குழுவின் கடைசிப் புகைப்படம்.
காலம் மங்கி மறையும் அந்தத் துண்டுகளில்
இருந்தது எங்கள் புன்னகை
தெரியாத முடிவிடங்களை நோக்கி
நாங்கள் வழி பிரியும் முன்பாக
ஒன்றாக இருந்த கணங்கள்
ஒட்டலாம் என நினைத்து
யன்னலோரமாய் அந்தத் துண்டுகளை
வைக்கிறேன்.
ஒரு மாயக் காற்று அவற்றைக்
குலைத்து வீசிற்று
இலையுதிர் காலத்தின் கடைசி இலைகளோடு
அவற்றைத் தூர இடங்களுக்கு
எடுத்துச் சென்றது
காற்றில் உலையும் காகிதத் துண்டுகள்
நாம்.
1967இல் மத்திய இலங்கையில் பிறந்த அஜித் சி ஹேரத் மாணவர் அரசியல் இயக்கங்களில் தீவிரப் பங்காற்றி 1989இல் ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார். இவருடைய கவிதைகள் மாற்று ஊடகங்களில் அதிகம் வெளியாகியுள்ளன. தற்போதைய இலங்கை அரசின் இனவாத ராணுவ அடக்குமுறையை எதிர்த்துக் கவிதைகளும் கேலிச் சித்திரங்களும் படைத்துவருகிறார்.

No comments: