நச்சு இயல்புள்ள குட்டையின் ஓரமாய்
இச்சைகளின் அரசி சர்ப்பங்களை வசியம்செய்துஒதுங்கிய உன் குதிரைகள் ஏவல் வாங்கினாள்: சமிக்ஞைகளைச் சிரமேற்கொள்ளவாய்க் கட்டுண்ட சர்ப்பங்களுக்கு ஏக்கங்களை ஏற்றி உரு மறைந்து திரிய அவள் கற்பித்தாள், போகங்களின் நெருப்பைத் தீனியிட்டாள் அஞ்சனமிட்ட நீள் விழிகளுக்கு -அவை மத்தியில் கூறாய்ப் பிரியா இணைந்த கட்புருவமுடையன- சைகைகளினால் போர்களை ஆணையிடும் வலுவிருந்தது. களங்களின் சூட்சுமங்கள் தேறிக் கொய்த குறிகளை மாலை அணிந்தவளின் ஆழ் புலங்களில் அவளை மாசு அற விசுவாசித்தவர்கள் சேவகம் பணிக்கப்பட்டிருந்தார்கள். ஆசைகளால் உருவேற்றி மந்திரித்த பாம்பின் முட்டைகளை காற்றில் தூவி ஆண்களில் தீரா வியாதிகளை ஏற்றடுத்தியவள் நேரங்களைக் குறுக்கீடுசெய்து அவர்களைப் பித்து நிலையில் பேணிப் பதப்படுத்திவைத்திருக்கும் வித்தை அறிந்திருந்தாள். வசீகரத்தினால் வரம்பெற்றிருந்த அவளது நா கபட மிகு கண்களின் வார்த்தைகளுக்கு ஒலி வடிவு கொடுத்தது - அவை மரபணுக்களில் போகங்களின் துயரச் சாயைகளைப் படியவைக்கிற ஆற்றல் பெற்றிருந்தன. அவள் மேனியில் கமழும் வாசனை தாழம் மடல்களினதும் கொல்லையில் அவள் உரித்த தோல்களுள் வளரும் குடைக்காளான்களினதுமாயிருந்தது. அது தீண்டப்பெற்ற இளைஞர்களுக்குக் கட்குருடு வந்தது அவளை மட்டுமே முன்னிறுத்திய அந்தகம் சிந்தைக்கு. ஒரு நூறு ஆண்டுகள் காலம் சித்து விளையாட்டுகள்பால் ஆட்கொள்ளப்பட்டிருந்தவன் பிறகொருநாள் துர்க் கனாவிலிருந்து விழித்தெழுவதுபோல அந்தத் தோட்டத்திலிருந்து வெளியேறியிருந்தேன். தீரா வேட்கையின் வலியிருந்தது பின் கொஞ்சம் நாட்களுக்கு. . . எனது இரவுகளின் கருமையில் மினுங்கிக்கொண்டிருந்த சிவந்த, வெறிநாய்களின் மணிக் கண்களை இடறும்படி உருட்டிவிட்ட இச்சைகளின் அரசி குயுத்தி மிக்கதும் சாதுர்யமானதுமாய்- என்னை நோக அடிக்க உயிர்நிலைகளைத் தேர்ந்தெடுத்த முதற்கட்டமாய் உனக்கான வலைகளில் தானியங்களைத் தூவத் தொடங்கினாள். உன்னை நோக்கி நெளிந்தன பாம்புகள்- நெளிந்தவை தீண்டவாய்த் தோதுசெய்தாய் நீ. நுரைதள்ளிற்று. நச்சு இயல்புள்ள குட்டையின் ஓரமாய் ஒதுங்கிற்று உன் குதிரைகள். . . பகட்டுமிக்க மாயத்தனங்களில் நீ சிரசு பணிந்தபோது நொய்மையான எனது உறுதிகளின் மீது கேள்வி எழும்பிற்று. அவளுடைய இடைப்பட்டியில் ஒரு விஷம் தோய்ந்த கத்தியாய் உன்னைச் சொருகிக்கொண்டாய். . . எனது காப்பு வியூகங்கள் ஆற்று மணல் அரண்போல் உதிரத் தொடங்கியிருந்தன. எச்சரிக்கைகளை உதாசீனம் செய்தவனாய் நச்சு இயல்புள்ள குட்டையின் கரையில் குதிரைகளை அவிழ்த்துவிட்டாய் ஆற, குறி ஊறிக் குளிக்கவாய் குதித்தாய் நிர்வாணம்கொண்டு. நச்சு இயல்புள்ள குட்டையின் ஓரமாய் ஒதுங்கிற்று உன் குதிரைகள். . . இப்படித்தான் முன்பொருக்கால் நானும் என் குதிரையும் நண்ப. . .
o
இப்போதுள்ள குறி வந்த கதை 2
தள்ளி, உனது கங்குகள் எரிகின்றகிடங்குகளுள் அவனை முங்கியபோது அப்போதுதான் துணைப் பாலியல்புகள் அவனில் தோன்றத் தொடங்கியிருந்தன. இனிப்புகளைப் பராக்குக் காட்டி திக்குகள் தெரியாக் காடுகளில் விரல்பிடித்து வழிநடாத்தி பிஞ்சு என்புகளை ஒடித்து உனது பீடங்களில் பேயின் சிதைகளுக்கு எரியூட்டினாய். இரத்தத்தின் சாற்றிலிருந்து உருக்கொண்டு மனிதர்களை இரைகொள்ளும் விலங்கின் முன் தம்மைப் படையலிடும் வகையைப் பரீட்சிக்க அவனை நெறிப்படுத்தினாய். துர் நடத்தைகளின் கடவுளுக்கு அவனை நீ பலியிட்டபோது கிளர்வுகளைத் தாங்கும் வலுவை அவனது தசைநார்கள் பெற்றிருக்கவில்லை. பிறகு வந்த நாட்கள் காய்ச்சல் கண்டவன்போல் உள் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தான். அறியாமையின் கண்கள் துலக்கி வயதுக்கு மீறிய ஆற்றலால் அவனை நீ முதிர்ந்த சிறுவனாக்கிப் பருவத்தின் இயல்புகளைச் சிதைத்தழித்த மறுபுறம் கேள்விகளாலும் ஆச்சரியங்களாலும் வழிந்தான். ஊன் உருகும் வாசனையும் கொந்தழிக்கும் குருதியின் ஓசையும் சில்லெனச் சுரந்து ஊற்றெடுத்த ஹோமோன் ஒரு கடலுமாய்த் தீயில் கிடந்தவன் ஊறினான். இருண்ட அடவிகளின் ஆழத்தில் வேட்டையாடும் கலையையும்- முடித்து திசை தவறாத் திரும்புதல் மலைகளில் குதித்து நீர்நிலைகளில் சுழித்துக் கரையேறும் சாகசங்களையும் நீ பயிற்றுவித்த பிறகு வதைகளிலிருந்த தேனின் கள்ளைத் தெரிந்தான். உன்னை, போகங்களின் முடிவில் நீண்ட நாழிகளுக்குக் கண்கள் சொருக மயங்கிக் கிடக்கச் செய்தான். பிறகெப்போதும் அவனைத் தன் ப்ராயத்திற்குத் திரும்ப அனுமதித்திராத உன்னிடம்- வெறிகொண்ட நாய்கள் தன்னுள் குரைப்பதாக அவன் முறையிட்ட அன்று உனது மார்பினைத் திறந்து பற்களின் தடங்களைக் காட்டினாய். பிறகொருநாள் தன்மீது நிகழ்த்தப்பட்டிருந்த துஸ்பிரயோகத்தை அவன் அறிந்த நாளில் காலம் தூர நழுவிப்போய் ஆயுளுக்கும் வேறெவளும் துடைத்தெறிய முடியாதபடி உனது எச்சிலும் வாசனையுமாய் அவனை நிரப்பியிருந்தன. தனது வாநாள் முழுவதுமாய் உனது பாரித்துத் தகிக்கும் மார்புகளையும் விம்மிக் கௌவும் வழியையும் தனது சொந்தக் குறியையும் சுமந்து திரியும்படி நீ அவனைச் செய்துவிட்டிருந்ததை உணர்ந்தபோது இளைஞன் பருவத்தில் அநாதரவாக விடப்பட்டிருந்தான். மரணத் தறுவாயில் சைகைகளினால் அவன் அவற்றை மீளவும் வேண்டிக்கொண்டிருந்தான் |
Monday, March 12, 2012
றஷ்மி கவிதைகள்
Friday, February 10, 2012
நான்கு கவிதைகள் இரா. சின்னசாமி
I
ஒரு செஞ்சோளம் அதன் இனிப்பைவிளைவிக்கும்போது எனது
கிழவி அந்த முரட்டுக் கிழவனை முத்தமிடுகிறாள்
கிழவன் விரிசல்விட்டு காய்த்துப்போன விரல்களை
அல்லது
அவளது கருவை மழைக்காலத்தில்
பெரும்பாறைகளை நகர்த்திய நிலத்தின்
உதிரக் கசிவோடு விரும்புகிறான்
அவளது சிசுவே தானியமென்கிறான்
மழை பொழிகின்றது
அவர்கள் முட்செடிகளை அகற்றுகிறார்கள்
ஒரேயொரு பூசணிக்காய்க்கு
அல்லது
நாய்கள் தின்ன மறுக்கும் புடலங்காய்க்கு
கிழவன் உறங்கும்போது
பெரும்பாறைகளை முதுகில் சுமந்திருப்பவனைப் போல
கிழவியைப் புணருகிறான்
அவள்
சிறு தானியங்களால் உயிர்பெற்ற
வளர்ப்புப் பறவையை
அவனுக்கு உணவாக்குகிறாள்
இப்படித்தான் நண்பர்களே
இந்த நிலத்தில் காதல் வளர்ந்தது
ஒரு மொழியுங்கூட
II
கொடும் கோடையின் நீண்ட வறட்சியில்குழந்தைகளையும் ஆடு மாடுகளையும்
அதைவிட
ஏமாற்றும் தானியங்களையும்
சுமந்து சுமந்து
அல்லது
நடந்து நடந்து
நிலத்திற்கு வந்து சேர்ந்தவர்கள் அவர்கள்
அவர்களது உறவினர்கள்
எத்தனை கல் அல்லது
அதன் எறியும் மைல் தொலைவில்
இருக்கிறார்களென்றோ
பஞ்சத்தின் உயிர் எத்தனமாய்
விதியின் பெயரால்
இருக்கிறார்களென்றோ இருந்தால்
நான் அதை முன்னறிவிக்கிறேன்
ஒரு வறட்சிக்குப் பொறுப்பற்றதுதான்
அத்தனை தத்துவங்களும்
கொடும் கோடையில் அவர்களது குழந்தைகளையும்
நம்பிக்கைக்குரிய கால்நடைகளையும்
மிதமிஞ்சி அரவணைத்து வானம் பார்க்கிறார்கள்;
தொடர்ந்து
நிலத்திலிருந்து வெளியேறுபவர்களை
நானுங்கூடக் கைவிடுகிறேன்
கொஞ்சம் கேழ்வரகுக் கூழும்
கீரை மசியலும்
என் புணர்ச்சிக்குத் தந்த
மேன்மையோடு
அந்தக் கிழவனும் கிழவியும்
ஆக அதன் இறுதியில் தளர்ந்தும்
நோயுற்றும் இறந்து விடுவார்களெனில்
நான் உங்களிடம்
ஏதாவதொரு கீரையை மட்டும் பரிந்துரைப்பது
அனைத்து உரிமைகளின் அவமானம்தானே
அந்த முதிய நிலத்தின் மீதான
மஞ்சள் பயிரிலும் இளம் மாலையின்
சூரியக்கிரணங்களிலும்
என் காதல் இப்படித்தான் தொடங்குகிறது.
III
உன் கருக்கரிவாளைஉன்னிடமிருந்து காலம் பறித்துக்கொண்டுவிட்டது
எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது
உன் உறவின் தொப்புள் கொடியையும்
அதைக்கொண்டுதானே அறுவடை செய்தாய்
மொச்சைப் பயிரின் வாசமுள்ள காதலியையும்
நிலத்தையும்
இயந்திரங்கள் எடுத்துக்கொண்டுவிட்டன.
அப்பொழுதுதான் நம் வீட்டுக் கோழிகள்
நடத்தை கெட்டுப் போய்விட்டன
நானும்
குடிபோதைக்குத் திரும்பினேன்
எல்லாம் முடியட்டும்
நமக்கான பழங்கள் அல்லது
அந்த அதிக நம்பிக்கையுள்ள அந்தக் கடவுள் மனம்
கனியட்டும் என்று நாம் செய்த பிரார்த்தனை
ஏன் நதிகளை மாசுபடுத்தியது
உனது தந்தையும் எனது தந்தையும் மைத்துனர்கள்
உனது தந்தை
நமது கிணற்றில் நீந்தும் பல நூறு வருட ஆமை
உன்னிடம் நான் மன்னிப்புக் கேட்பது
என் தந்தையின் பொருட்டுத்தான்
நல்ல நாளில்
அதிக விலைக்கு விற்க முடியாத
முருங்கைக் காய்கள் காத்திருந்தன
சந்தையில் அவை
உன்னைக் காதலிக்க முடியாதபடிக்கு
மலிவு விலையில் சீரழிகின்றன
என் தந்தையைப் போலவே என்னையும் நீ
மன்னித்துவிடு
உனது முத்தத்தால்
விலை மதிப்பற்ற பயிர்களை உண்போரின்
பொருட்டு உண்டாக்குவேன்.
IV
ஆதியின் நிலம் மனிதருக்கானதாகுரங்குகள் புணர்ந்து அலைந்த
முன்னெச்சரிக்கையான நிலமது
நமக்கு நீர் பற்றித் தெரியும் அல்லது
தாகமெடுத்தலையும் நாய்களையும்; அதன்
உப்பு விரும்பும் நாக்கையும் அறிந்தபடியால்
வீட்டு வாசல்களுக்குக் கொணர்ந்தோம்
இப்படித்தானே
தானியங்களின் காதல்
உனக்கும் எனக்கும் நேர்ந்தது
ஆனாலும் நீ நாய்களை நம்புகிறாய்
ஓர் ஆணானவன் நிலங்களையும் கடல்களையும்
கடக்க சபிக்கப்பட்டவன்
எல்லாம் உன்பொருட்டே தேவி
எனினும் உன் காதலை நான்
முழுமையாக வளர்ச்சியடைந்த
அன்னாசிப் பழத்தில் காண்கிறேன்
அது அதிக வெப்பமுடையது
உனக்கும் எனக்கும் அது காதலை உறுதிசெய்யும்
Saturday, December 10, 2011
தேவேந்திர பூபதி கவிதைகள்
நீர்த் தாமரை மணல்
முதல் கப்பல் இன்னும் வந்து சேரவில்லை
கலங்கரை விளக்கருகே
மாலையின் பொன்வண்ணக் கிரணங்கள்
கரை மீனவர்களின் படகு
அதில் மிளிர்கிறது
கால்கள் மணல் புதைய
அலைவீசும் காற்றில்
மண் கண் விழுந்து எரியும்
வெகு நீளக்கரை
நண்டுகள் காய்ந்த குழிகளுக்குள்
ஓடி இறங்குகின்றன
நெய்தலைப் பாடிய புலவன்
நீர்த் தாமரை மணலில்
எவளோடு கூடியிருப்பான்
கள் பானைகள் உருட்டி
எச்சாமம் மரக்கலம் தள்ளியிருப்பான்
இந்நிலத்துப் பாணன் வழியிலோர்
கவிஞன் என்னை
ஆழ்கடல் வெருட்டுகிறது
முன்னிரவில் வருவேன் என்றவள்
நகரத்தின் எச்சாலை நெருக்கடியில்
காத்திருக்கிறாளோ
தொலைவில் எரியும் கட்டடம் போல் ஒரு கப்பல்
மீனவர்கள் மறைந்துவிட்ட இருள்
வீடு திரும்பச்சொல்லி இரைச்சலிட்டு
உறுமுகிறது கடல்
ஒரு நண்டுவளைக்குள் குதித்து
தாமதமாக வீடு வந்துசேர்ந்தேன் நான்
அறையெங்கும் கடல் வாசனை.
நெடுந்தூரம் போக வேண்டியவன்
நடு வழியில் அழைப்பதால்
என்ன சொல்லிக் கடந்து போவது
ஆரம்பம் முடிவும்
தெரியும் என்று சொல்கிறீர்கள்
எதற்காகக் கடக்கிறேன் என்ற
யூகமும் உங்களிடமே இருக்கிறது
எங்கிருந்து எதை
எப்படி ஏன்
அதை எக்காலத்தில் கடக்கிறேன்
என்பதற்கு உங்கள் பழைய கூண்டில்
அகப்படும் வகையில்
ஏதேனும் நான் சொல்லப் போய்
இவ்வளவுதானா எனக் கேட்கவும்
தயாராய் இருக்கிறீர்கள்
நடுநிசியில் நின்று விழித்து மௌனமாய்
ஒளி பயில்கிறது
நெடுந்தூரம் போக வேண்டிய
நிலா.

எம். யுவன் கவிதைகள்
காக்கைப்பாட்டு
அந்தக் காக்கைக்கு
அடுத்த தலைமுறை வந்து
பேரக் காக்கைகள் பறக்கின்றன இப்போது
ஆகாயமே சொந்தமாய் இருந்தும்
அண்டி வாழத் துடிப்பவை
எச்சில் பருக்கைக்கு
ஏங்கி அலைகிறவை
குப்பைத் தொட்டியை
அட்சயப் பாத்திரமாய் நம்பிக் கிளறுபவை
சென்றவாரம் மின்னடிபட்ட
சககாக்கையை மறந்து திரிகிறவை
வெகுளிகளை ஏமாற்றி
தட்டிப் பறித்துத் தின்கிறவை
மின்னணுக் கோபுரத்தின் சன்ன ஒலித்
தாக்குதலில் குருவியினம் அழிவதை
விசனிக்காதவை
என்றாலும்
எல்லாக் காக்கைகளும் காக்கைகள் அல்ல
விலகிவந்த காக்கை ஒன்று
என் ஜன்னல் தட்டில் அமர்கிறது
வழக்கமான பார்வை இன்றி
வேறொரு கோணத்தில் தலைசாய்த்து
ஓரசைப் பதங்களை
நீட்டியும் குறுக்கியும்
புதுமொழி பேசுகிறது
காக்கைக் குரலில் இசைமை சேர்க்கும்
நாடகத் தன்மை
பாராமுகம் காட்டும் இல்லத்தரசிமேல்
லேசான விமர்சனம்
எதிர்வரும் காக்கைகள்
யாருடைய பித்ருக்களோ என்றார்
ஆத்மாநாம்
ஆத்மாநாமேதானோ
வியக்கிறேன் நான்
o
மொட்டை மாடியில் கிடந்தேன்
சும்மாத்தான்
மழைக்காலப் பகல்
வெயிலும் இல்லை வெக்கையும் இல்லை
கட்டாந்தரையில் அழுந்திய முதுகின் கீழ்
அழுந்திய பருக்கைக் கற்கள்
கண்ணில் நிறைவது வானம் இல்லை
பார்வையின் அளவே பரந்து கிறங்கிய
மனம் என்றது மனம்
அளப்பரிய விரிவின் முன்
அடையாளம் எதுவுமற்று
நசுங்கிக் கிடக்கும்
பருக்கைக் கல்லென உணர்ந்தேன்
அற்பன் அற்பன் என்று துடித்தது நாடி
கொதிக்கும் வாழ்வு பலிகொண்ட தருணங்களும்
தினசரியின் பூகம்பத்தில் புதைந்த ஆசைகளும்
நிலவு உறங்கிய நேரத்தில்
கொள்ளைபோன கனவுகளும்
இன்னும் இன்னுமென்று வழக்கம்போல்
துயரத்தின் புதைகுழியில்
அமிழ்ந்துகொண்டேயிருந்தேன்
மதகுடைந்து பெருகியதில்
அணை முழுதும் வெளியோடி
நீர்க்கொடிகளின் பசுமை மண்டி
வறளவும் தொடங்கியது
துரிதமாய்ப் படர்ந்த பாலையின் பரப்பில்
தகித்து ஊர்ந்தபோது
நெற்றியில் சொட்டியது
ஈரத்தின் குளுமையொன்று
எச்சமோ
- என்று விதிர்த்தேன்.
இல்லை, நீர்த்துளி.
பெயரற்ற பெருங்கருணை
விரலால் தீண்டியதோ?
விம்மியது மனம்
அற்பன்தான் நான். ஆனாலும்
அவ்வளவு அற்பமில்லை.

புத்தகங்களின் கூட்டறிக்கை- சுகுமாரன்
பொதுவாக நாங்கள் நிர்க்குணமானவர்கள்
எங்களைப் புரட்டும்போது
முனகலைவிடவோ
சுவாசத்தைப்போலவோ எழும்
மெல்லிய ஓசையிலிருந்து
நீங்கள் அதைத் தெரிந்துகொண்டிருக்கலாம்.
நீங்கள் அறியாத ஏதோ வனத்தின்
பூர்வஜென்ம பந்தம்
இன்றும் எங்களுக்குள் தொடர்கிறது
நாங்கள் புரண்டுகொடுக்கும்போது
ஒரு கானகமும் அசைவதைக் கவனித்திருக்கலாம்
நீங்கள் தொட்டுத் துடிப்பறியாத நாளங்களில்
மண்ணின் குருதி
இன்றும் எங்களுக்குள் பாய்கிறது
மை வரிகளுக்கிடையில் விரலோட்டும்போது
அதன் ஓட்ட அதிர்வை உணர்ந்திருக்கலாம்
உங்களில் யாரோ ஒருவரின்
கண்டு தீராக் கனவு
இன்றும் எங்களுக்குள் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது
திரைக்காட்சியைப் போல
முதுகுக்குப் பின்னாலிருந்தல்ல
தொலைக்காட்சியைப்போல
தலைக்கு முன்னாலிருந்தே
அது எல்லார் கண்களுக்குள்ளும் நுழைவதைப் பார்த்திருக்கலாம்
பொதுவாக நாங்கள் சாத்வீகமானவர்கள்
எங்களில்
உன்னதர்களும் நடுவர்களும் கடையர்களும்
நிர்வாணிகளும் வேடதாரிகளும்
வழிகாட்டிகளும் திசைதிருப்பிகளும் இருப்பது உண்மை
எனினும்
நாங்கள் விதிகளை மதிப்பவர்கள்
எங்களைப்போல வரிசையைக் கடைப்பிடிப்பவர்களை
நீங்கள் ஒருபோதும் காணமுடியாது
நாங்கள் சமாதானப் பிரியர்கள்
எங்களுடைய
ஒரு பக்கம் கிழியும்போது
மறுபக்கம் தானாகவே பிய்த்துக்கொள்கிறது
அழிந்தும் அழியாமல் இருக்கிறோம் என்பது உண்மை
ஏனெனில்
நாங்கள் பக்கங்களில் மட்டும் இருப்பவர்களல்ல
நாங்கள்
குணமற்றவர்கள்
இன்முறையானவர்கள்
அமைதி விரும்பிகள்
எனினும் நீங்கள்
எப்போதும் எங்களை நினைத்து மிரளுகிறீர்கள்
வரிசையாக நிற்கும் நாங்கள்
விதிகளை மீறி
ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்படுவோம் என்றும்
அதன் உயரம்
உங்களை விட உயர்ந்திருக்குமென்றும்
அஞ்சுகிறீர்கள்
பிய்த்துக் கிழித்தாலும்
எங்கள் பக்கங்களுக்கிடையிலிருந்து
அழியாக் கனவுகளின் சாபம்
உங்களைப் பின்தொடரும் என்று
பயப்படுகிறீர்கள்
உங்கள் வெருட்சிக்குக் காரணம்
நாங்களல்ல
பயத்தின் களிமண் கால்களில் நிற்கும்
உங்கள் அதிகார உடல்
நாங்கள் அப்பாவிகள்
தன்னியக்கமில்லாத வெறும் ஜடங்கள் -
மனதில் ஜுவாலையுள்ள ஒருவர்
எங்களைத் தொடும்வரை

Monday, November 14, 2011
தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர்: ஒரு குறிப்பும் சில கவிதைகளும் - சுகுமாரன்
‘நான் யார்? பின் இருக்கையில் விழித்து
பதற்றத்துடன் முறுக்கிக் கொள்ளும்
சாக்குப் பைக்குள்ளிருக்கும் பூனையைப் போன்ற
ஏதோ ஒன்று. யாராம்?’. . .
ஸ்வீடிஷ் மொழியில் எழுதும் ஸ்காண்டிநேவியக் கவிஞரான தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் ஊடகங்களில் பேசப்படுவதும் கவிதை வாசகர்களால் மறுவாசிப்புச் செய்யப்படுவதும் இலக்கிய வட்டாரங்கள் அவரை முன்னிருத்தி உரையாட முற்படுவதும் இரண்டாம் முறையாக நிகழ்கிறது. சென்றமுறை அவர் பேசு பொருளாக இருந்ததும் இம்முறை இருப்பதும் நோபெல் இலக்கியப் பரிசுத் தருணங்களால்.
2008ஆம் ஆண்டு நோபெல் இலக்கியப் பரிசுக்குரிய போட்டியாளர்களின் இறுதிப் பட்டியலில் இருந்தவர்களில் இருவர் கவிஞர்கள். சிரியாவைச் சேர்ந்த அடோனிஸும் ஸ்வீடனைச் சேர்ந்த ட்ரான்ஸ்ட்ரோமரும். இருவரில் ட்ரான்ஸ்ட்ரோமருக்குத்தான் கூடுதல் வாய்ப்பு இருந்தது. எனினும் விருதை வென்றவர் இந்தக் கவிஞர்கள் இருவரைவிடவும் உலக இலக்கிய வாசகர்கள் மத்தியில் குறைவாக அறியப்பட்டிருந்த பிரெஞ்சு எழுத்தாளர் லெ க்ளேசியோ.
கவிஞரும் வாசகர்களும் எதிர்பார்த்திராத வகையில் இம்முறை நோபெல் இலக்கியப் பரிசைப் பெற்றிருக்கிறார் தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர்.
ஐரோப்பிய நவீனக் கவிதையின் நடைமுறையாளர்களாகக் கணிசமான கவிஞர்கள் ஆங்கில மொழியாக்கங்கள் வாயிலாக வாசகர்களுக்கு அறிமுகமாயினர். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஐரோப்பிய மனநிலையை இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். டாட்யூஸ் ரோஸ்விக்ஸ், விஸ்லவா ஸிம்போர்ஸ்கா, செஸ்லாவ் மிலோஸ், மிராஸ்லாவ் ஹோலூப், ஜோசப் ப்ராட்ஸ்கி என்று பேசப்படும் சமகாலக் கவிஞர்களின் வரிசையைச் சேர்ந்தவர் ட்ரான்ஸ்ட்ரோமர். இவர்களில் ஆங்கிலத்தில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளும் அவருடையவைதாம். அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். அமெரிக்கக் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான ராபர்ட் ப்ளையின் நட்பு முதலாவது காரணம். இரண்டாவது காரணம் ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகள்தாம்.
அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளில் நம்மால் இனங்காண முடியாமல் பதுங்கியிருக்கும் ஒளிர் கணங்களை ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகள் முன்வைக்கின்றன. இவை எளிமையான மொழியில் ஒருவகையான தியான மனநிலையை மையமாகக் கொண்டவை. எதிர்பாராத படிமங்களின் மூலம் அவை மனிதனின் சந்தேகங்களையும் வியப்புகளையும் சித்தரிக்கின்றன. ‘விழித்து எழுவது என்பது கனவுகளிலிருந்து பாரா சூட்டில் குதிப்பது’ என்பது அவருடைய ‘முன் தரவு’ (Prelude) என்னும் கவிதையின் ஒரு தருணம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கவிதைகளில் ட்ரான்ஸ்ட்ரோமரின் இயல்பை ஊகிக்கலாம்.
தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர். 1931ஆம் ஆண்டு ஸ்டாக் ஹோமில் பிறந்தார். இளம் பருவத்திலேயே பெற்றோர் மணவிலக்குச் செய்துகொண்டனர். பள்ளி ஆசிரியரான அன்னையால் வளர்க்கப்பட்டார். ஸ்டாக்ஹோம் பல்கலைக் கழகத்தில் உளவியல் பயின்றார். இவரது வாழ்நாளின் பெரும் பகுதி உளவியல் மருத்துவராகப் பணியாற்றியதில் கழிந்தது. இதில் குறிப்பிடத்தகுந்த காலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிச் சிறாருக்கு ஆலோசகராக இருந்தார். இருபத்தி மூன்றாம் வயதில் முதலாவது கவிதைத் தொகுதியை (17 கவிதைகள்) வெளியிட்டார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஒரு தீவில் சில மாதங்கள் வசித்தார். அந்த வாழ்க்கைதான் தன்னைக் கவிதையில் தீவிரம் கொள்ள வைத்தது என்றும் அங்கே உணர்ந்த தனிமை தன்னுடையது மட்டுமல்ல; தன்னைப் போன்ற எல்லாருடையதும் என்றும் பின்னர் குறிப்பிட்டார்.
ஓவியக் கலையிலும் இசையிலும் பெரும் ஆர்வம்கொண்டவர் ட்ரான்ஸ்ட்ரோமர். அதன் அடையாளங்களை அவரது எழுத்தில் காணலாம். பயணங்களிலும் அளப்பரிய மகிழ்ச்சி காண்பவர். சிரியக் கவிஞரும் நண்பருமான அடோனிஸுடன் இணைந்து கவிதை வாசிப்புக்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் இலக்கியப் புகழ்பெற்றவை. 1989இல் மத்தியப் பிரதேச அரசின் பண்பாட்டு மையமான போபால், பாரத் பவனில் நடைபெற்ற கவிதை மாநாட்டில் கலந்துகொண்டிருக்கிறார்.
ட்ரான்ஸ்ட்ரோமர், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டு உடலின் ஒரு பகுதியில் இயக்கமே இல்லாமல் வாழ்ந்துவருகிறார். அந்த நோய் தனக்கு நன்மையையே செய்திருப்பதாகச் சொல்கிறார். ‘வாசகனை அலுப்படையச் செய்யும் நீண்ட கவிதைகளை எழுதுவதிலிருந்து இந்த நோய் என்னைக் காப்பாற்றியிருக்கிறது.’
சிதறுண்ட திருக்குடும்பம்
1
நாங்கள் தயாராகி எங்கள் வீட்டைக் காண்பித்தோம்
விருந்தாளி நினைத்தார்: வசதியாக வாழ்கிறீர்கள்.
சேரி உங்களுக்குள் இருக்க வேண்டும்.
2
நம்பிக்கையின் உடைந்த கையைச் சுற்றி கிடக்கும் வார்ப்படம்போல
தேவாலயத்தின் உள்ளே
வெண்ணிறச் சுதை மண்ணாகக் கவிகை மாடங்களும் தூண்களும்.
3
தேவாலயத்தின் உள்ளே இருக்கும் பிச்சைப்பாத்திரம்
தரையிலிருந்து மெல்ல மேலெழும்பி
திருவிருக்கைகள் வழியாக மிதந்து செல்கிறது
4
ஆனால் தேவாலய மணிகள் தலைமறைவாகி விட்டன
அவை சாக்கடைக் குழாய்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன
எப்போதெல்லாம் நாம் ஒரு அடியெடுத்து வைக்கிறோமா அவை ஒலிக்கின்றன.
5
உறக்கத்தில் நடக்கும் நிக்கோதேமு* தனது வழியில்
அந்த முகவரிக்குப் போய்க்கொண்டிருக்கிறான். யாரிடமிருக்கிறது முகவரி?
தெரியாது? ஆனால் நாமும் அங்கேதான் போய்க் கொண்டிருக்கிறோம்.
*நிக்கோதேமு - Nicodemus. புதிய ஏற்பாடு, யோவான் எழுதின சுவிசேஷத்தில் வரும் பாத்திரம். யேசுவை ஆதரித்ததும் அவருடைய தண்டனை பற்றி முன் எச்சரிக்கை தெரிவித்ததும் மரித்த பின்னர் சடலத்தை அடக்கம் செய்ய உதவியதும் நிக்கோதேமுவின் செயல்கள்.
வசந்தமும் அமைதியும்
வசந்தம் கைவிடப்பட்டுக் கிடக்கிறது
வெல்வெட் கறுப்புக் கால்வாய்
எதையும் பிரதிபலிக்காமல்
என் அருகில் ஊர்கிறது
மின்னுவதெல்லாம்
மஞ்சள் பூக்களாகவே இருக்கின்றன
கறுப்புப் பேழைக்குள் வைத்த வயலினைப் போல
எனது நிழலுக்குள் பொதியப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறேன் நான்
நான் சொல்ல விரும்பும் ஒன்றேயொன்று
கைவசமாகாமல் மினுமினுக்கிறது
அடகுகடை வெள்ளியைப் போல.
நன் பனிக்காலம்
ஒரு நீல வெளிச்சம்
என் ஆடைகளிலிருந்து கதிர்வீசுகிறது
நன்பனிக் காலம்
பனிக்கட்டிகளின் டாம்போரின்களின்* ஓயாத பேச்சு
என் விழிகளை மூடுகிறேன்
மரித்தவர்கள்
எல்லை தாண்டிக் கடத்தப்படும்
பிளவு இருக்கிறது அங்கே
அங்கே இருக்கிறது ஓர் ஒலியற்ற உலகம்.
* டாம்போரின் - கஞ்சிரா போன்ற தாளவாத்தியம்.

ஹெச். ஜி. ரசூல் கவிதைகள்
1. பர்வீன் விரட்டிய பூனை
இன்று அதிகாலை படுக்கையிலிருந்து
பூனைக்கண் சாகிபு
ஒரு கரும்பூனையாய் கண்விழித்தார்.
சாமத்தில் முழித்து
தஹஜ்ஜத் தொழுதபின்
அத்தாளம் குடித்துவிட்டுத்தான்
படுக்கைக்குப் போனாரென்பதை
யாரும் அறிந்திருக்கவில்லை.
கிடந்தபடியே ஒன்றுக்கிருந்தது
பால்யத்தை ஞாபகமூட்டியது.
அரவம் எதுவும் கேட்காது
தனிமை அறையிலிருந்து
கிளம்பிப் போனபோது
பூனை குறுக்கே சாடியதற்கு
கல்லெறிந்து போனான் கடை யூசுபு
தனது பேச்சும் மொழியும்
தானாக மாற்றமடைந்ததை எண்ணி
தவிப்புமட்டுமே மேலிட்டது.
இறைச்சிமுள்ளைக் கடிக்க
சாடி ஓடியபோதுதான்
நோன்பு என்பதும் நினைவுக்கு வந்தது.
மறுமையில் சொர்க்கம் செல்வதற்காக
நோன்பிருந்தது பூனை
தன் வாப்பா பூனையானது தெரியவில்லை
காலடியில் சுற்றிக் கொண்டிருந்த
அப்பூனையை
பர்வீன் கம்பெடுத்து அடித்து விரட்டினாள்
2. இரவுதோறும் கரும்பாறை வளர்கிறது
ஒரு புல்லின் நுனி கரும்பாறையைச் சுமந்திருந்தது
சொட்டுச் சொட்டாய் உள்ளிறங்க வழியற்று
அதில் விழுந்த மழைத் துளிகள்
பெருநதியாகப் பாய்ந்தோடுகிறது
ஆயுள் பூராவும் சேமித்த சூட்டின் தகிப்பு
தன்னுணர்ச்சியை இழக்க விரும்பவில்லை.
பகலுறக்கம் தீய்ந்து
இரவுதோறும் கரும்பாறை வளர்வதை
கண்ணாப்பா சொல்லியிருக்கிறார்
கருகிவிடாது ஒற்றைப்புல் வேர்பிடித்திருக்க
குறு குறுவென ஊதிப் பெருகிய
கரும்பாறையைப் பார்க்கக் கூட்டம் அலைமோதியது.
சாயங்காலமொன்றில் மகுடியெடுத்து
பாம்புப் பிடாரன் ஊதிய இசை பட்டுத்
தடுமாறத்துவங்கியது கரும் பாறை
எத்தனை நாள் உள்ளிருப்பது
பாறையைப் பிளந்து வெளியே சாடியது
சாலிஹ் நபியின் ஒட்டகக் குட்டி
3. கனவில் வந்து பேசிய நபி
எதிரிகளின் பிடியிலிருந்து தப்பித்து
மறைவாக்கிக் கொண்டேன் என்னை
சிலுவையில் அறையப்பட்டது
என்னைப் போலொத்த
பிறிதொரு உருவமென்பது ரகசியம்
இறைவனின் தூததொருவரை
உண்மையிலேயே கொல்லமுடியுமா?
சிலுவையில் அறையப்பட்ட நபி
நேற்றென் கனவில் பேசினார்.
ரத்தம் சொட்டச் சொட்ட
கொல்லப்பட்டது நான்தான்
சிலுவைமரணத்தை ஆட்கொண்ட
என்னுடலின் உறுப்புகள்
சிதைவைத் தழுவின.
கடவுளின் குமாரனென்ற உண்மைக்காய்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தேன்
நண்பனின் கனவில் வந்தும் பேசினார்
சிலுவையில் தொங்கிய நபி.
4. வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை
ஒரு சொர்க்கத்தை சம்பாதிப்பதற்காக
நரகங்களை உருவாக்குபவன்
என்வீதிவழியே வந்து
என்னைத் தட்டி எழுப்பிச் சென்றான்.
கறுப்புவடுவோடு கண்டுணர்ந்த பேரழகு
கீற்றாய்ச் சிறுகோடாய் தேய்ந்து
இரவின் கதையை எழுத
பிறையின் ஒளியை முத்தமிட்டு
அதிசயித்துப் பார்க்கும் கண்கள்
மின்னல் வாகனத்தில் பறந்து சென்றது.
தொடமுடியாத ஏழுவானங்களும் அதிர
அவன் கூக்குரலிட்டான்.
நிரம்பிய கண்ணீரில்
ஒளுவெடுத்துப் புனிதப்படும் உள்ளங்கைகளும்
நெடுவெளி மணற்காட்டில்
தய்யம் செய்யும் விரல்களும்
அறிந்திராதொரு வன்மத்தின் தீண்டலில்
அவனின் அபயக்குரல் தொடர்ந்தது.
லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்
உடைபட்டு கீழேவிழுந்து புலம்பின குரல்
திரும்பவும் கேட்கிறது.
மூசாவையும் ஈசாவையும் குறித்து
அறிவித்த தீர்ப்பால்
சிலுவையிலிருந்தும் போர்வாள்கள் முளைத்து
அவனின் குரல்வளையை நெருங்கிவந்தன.
யுத்த இருளின் புகைமூட்டத்தில்
எதிரே கண்டால் வெட்டச் சொன்ன புனித வசீகரம்
எதிரியின் கைகளிலும் துப்பாக்கிகளைத் திணித்தன.
போதையூட்டப்பட்ட சொற்கள்
எப்போதும் பைஅத்திற்கு தயார்
பைசாகோபுரங்களைத் தகர்த்தும் எறியலாம்
அதன் அடுத்தடுத்த பக்கங்களில்
தினந்தோறும் கவனிப்பாரற்று
துயரம் மேலிட கண்ணீர் சிந்திக் கிடக்கிறது
லக்கும் தீனுக்கும் வலியதீன்.
குண்டுகள் வெகுஅருகாமையிலும் வெடிக்கின்றன.
மறைக்கப்பட்ட வரிகளினூடே
அர்ஷின்முத்திரை ஒன்று தவறிப்போனதை
எல்லோராலும் அறிந்துகொள்ள முடியவில்லை
சொல்லி முடிப்பதற்குள்
லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்
ரத்தத்திலிருந்து முளைக்கத் தொடங்கின.
ஜிகாதின் சொற்களைத்தவிர அவனிடம் இப்போது
வேறெந்தச் சொற்களும் மிச்சமிருக்கவில்லை

Subscribe to:
Posts (Atom)