Thursday, October 18, 2012

Salutes The Author

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! 
வசதியாகத்தான் இருக்கிறது மகனே… 
நீ கொண்டு வந்து சேர்த்த 
முதியோர் இல்லம் 

பொறுப்பாய் என்னை 
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ 
வெளியேறிய போது, முன்பு நானும் 
இது போல் உன்னை 
வகுப்பறையில் விட்டு விட்டு 
என் முதுகுக்குப் பின்னால் 
நீ கதறக் கதறக் 
கண்ணீரை மறைத்தபடி 
புறப்பட்ட காட்சி 
ஞாபகத்தில் எழுகிறது! 

முதல் தரமிக்க 
இந்த இல்லத்தை 
தேடித் திரிந்து 
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட 
அன்று உனக்காக நானும் 
பொருத்தமான பள்ளி 
எதுவென்றே 
ஓடி அலைந்ததை 
ஒப்பீடு செய்கிறேன்! 

இதுவரையில் 
ஒருமுறையேனும் 
என் முகம் பார்க்க 
நீ வராமல் போனாலும் 
என் பராமரிப்பிற்கான 
மாதத் தொகையை 
மறக்காமல் 
அனுப்பி வைப்பதற்காக 
மனம் மகிழ்ச்சியடைகிறது 
நீ விடுதியில் 
தங்கிப் படித்த காலத்தில் 
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற 
ஆவல் இருந்தாலும் 
படிப்பை நினைத்து 
உன்னை சந்திக்க மறுத்ததன் 
எதிர்வினையே இதுவென்று 
இப்போது அறிகிறேன்! 

இளம் வயதினில் 
நீ சிறுகச் சிறுக சேமித்த 
அனுபவத்தை 
என் முதுமைப் பருவத்தில் 
மொத்தமாக எனக்கே 
செலவு செய்கிறாய் 
ஆயினும்… 
உனக்கும் எனக்கும் 
ஒரு சிறு வேறுபாடு 
நான் கற்றுக்கொடுத்தேன் 
உனக்கு… 
வாழ்க்கை இதுதானென்று 
நீ கற்றுக் கொடுக்கிறாய் 
எனக்கு… 
உறவுகள் இதுதானென்று! 

Sunday, September 9, 2012

அனார் கவிதைகள்

1 கருமை
முற்று முழுதாய் இருட்டி
கறுத்துப்போன அமாவாசையின் ஏணியில்
உன் உயரங்களுக்கு
ஏறிவருகின்றன என் கால்கள்

இருட்டிய மழைக் காற்று
தூசிகளாலும் காய்ந்த இலைகளாலும்
ஆகாயத்தை நிரப்புகிறது

கருமுகில் மூட்டங்கள் மூடிய வானத்தின் கீழ்
காகங்கள் மாத்திரமே பறவைகள்

வீசிக்கொண்டிருக்கும் புயலுக்குள்
ஒரு ஜன்னல் என
என் கண்கள் திறந்துகிடக்கின்றன

முதலும் முடிவுமற்ற
உன் உச்சரிப்புகள்
இடத்தைப் பாழ்படியவைத்து
வவ்வால்களாகத் தலைகீழாய்த் தொங்குகின்றன

என் உதடுகளை
விரல்களைச்
சுழலும் காற்றில் உதிர்த்துவிடுகிறேன்

காரிருளில் பாய்ந்தோடும்
கறுப்புக் குதிரையின் கண்களில்
இறுகி மின்னுகிறது
என்னுடைய கண்ணீர்

கறுப்புமொழியின் கரைகளிலே
எங்கோ ஒதுங்கிக்கிடக்கும்
இரு கூவல் சங்குகள்
என்னுடைய காதுகள்
2 போகும் ரயில்
நிலைகொள்ளாது ஆடும்
பொன் மிளிர்வுத் தூவல்களில்
ரயில் பட்டுப்புழுவைப் போல் நீளுகிறது

வெள்ளைப் பேய்களும். . . கரும் பூதங்களும். . . உலவும்
ஆகாயம். . . பூமிக்கிடையேயான தண்டவாளத்தில்

எனக்குள் கேட்கின்ற ரயிலில்
காலங்களின் வெளியே
பயணித்துக்கொண்டிருந்தேன்

ரயிலின் பெட்டிகள் அனைத்திலும்
பருவங்களின் பன்மைகளாய். . .
பல்வேறு உருவங்கள் கொண்ட
நான் அமர்ந்திருக்கிறேன்

எங்கோவோர் திசையில் வைத்து
மறைந்த சூரியன்
பெட்டியில் வந்தமர்ந்துள்ளது

உலகம் இருளிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும் பயணத்திலிருந்தேன்

அருகாமையில் இருந்த அனைத்தும்
தூரத்துக்கே போய்விடுகின்றன

புகைக்கோடுகளில்
பழுப்புநிறத்தில்
பிரகாசமும் மங்கலுமான தடங்கள்

உள் நரம்புகளில்
ரயில் போகும் தடக். . . தடக். . . ஓசை
குளிரும் பனியின் வசியமாகக் கவியும் மேகப்பஞ்சு. . .
ரயிலின் நினைவைத் தழுவுகின்றன

அந்த ராட்சதப்பூரான்
வெறும் பெட்டிகளையா?
நிரப்பிவிடப்பட்டவற்றையா இழுத்துச் செல்கிறது?

3 படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பவன்
கோடை அந்தி நிழல் சாயும்
சதுக்கமொன்றின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தான்

தொலைவுப் பாலத்தின் மேலே
சூரியனையும்
படிக்கட்டுகளின் கீழே
செவ்விரத்தம் பூக்களையும் பார்த்துக்கொண்டிருந்தான்

முழுச் சிவப்பேறிய சூரியன் பாலத்தின் மத்திக்கு
வந்ததும்
‘கொலை முயற்சி நடந்துகொண்டிருக்கையில்
எதையும் ரசிக்கமுடியாதென’
அன்று எழுந்து சென்றுவிட்டான்

படித்துறையில் அமர்ந்தவாறு
தூண்டிலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கையிலும்
சேர்ந்து குளிக்கையிலும்
‘சடுதியாக வெடித்து
வித்துகளை உதிர்க்கின்ற பருத்திகள்’ என
உலைந்து
நிலைகுலையுமொரு துயரப்பாடலையே
விடாமல் பாடிக்கொண்டிருந்தான்

நேர்ந்த விபத்தொன்றின் பிறகு
கடைசியாகப் பார்த்தபொழுது
மணல் குன்றுகளும் தாழை மரங்களும் தாண்டி
பாழடைந்த பேய் வீட்டின்
உடைந்த குட்டிச் சுவரருகே
காளான்களும். . . புற்களும் மண்டிய. . .
எட்டாவது படிக்கட்டில்
அவன் அமர்ந்திருந்தான். =

அரும்பு கவிதைகள்

மாற்றம்
நுழையத் தொடங்கும்போதே
என்னை மாற்றத் தொடங்கினாய்

விரும்பிக் கேட்ட இசையை
வெறுக்கச் சொன்னாய்

மகிழம்பூ மணமும்
உனக்கு உகந்ததாயில்லை

பறவைகளுக்கு நீர்வைப்பதிலும்
உவப்பில்லை உனக்கு

முழுவதும்
ஆக்கிரமித்த பின்னும்
நீ என்னவோ
அப்படியேதான் இருக்கிறாய்.

ஆனால்
ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில்
வந்துகொண்டுதான் இருக்கின்றன
என் பிரியத்துக்குரிய பூனைகள்
மௌனம்
மௌனம் சிறுசிறு துண்டுகளாகச்
சிதறிக்கிடந்தபோதே
ஒரு முறத்தில்
அள்ளியிருக்கலாம்

இப்போது
இந்த அறை நிறைந்திருக்கிறது
அதை நீ செய்வாயா
நான் செய்வேனா
என்ற யுத்தத்தில்

வேண்டாம்
நீயும் அதைச் சொல்லிவிடாதே

உயிர் அளித்து
ஊன் வளர்த்து
திரிய விட்டுவிடாதே

சிசு மரணம்கூடத் தாங்கேன்

இனி
தாய்மைக் கூறுடன் வாழ்ந்து முடிய
சித்தங்கொண்ட பின்
பிரிந்து பிறழ்வுற
அது நிகழ்ந்திட வேண்டாம்.

நீயும் அதைச் சொல்லிவிடாதே

Sunday, July 15, 2012

இளம்பிறை கவிதைகள்


நிரம்பித் ததும்பும் நீர்
உங்கள் கிணற்றிலிருந்து
தூர் வாரி வெளியேற்றப்படும்
வெற்று மண்ணாய்க்
கொட்டப்படுகிறேன் நான்.
என் கிணற்றில் எப்போதும்
நிரம்பித் ததும்பும்
நீராக இருக்கிறீர் நீங்கள்.
இறகுகள் உதிர்ந்துகிடக்கும் ஏரி
திருப்பித் துரத்தும் பேராறு
எதிர்பாரா தருணத்தில்
சாபச் சாம்பலை வீசிமறையும்
வரம் கேட்ட தெய்வங்கள்

புழுதி மண்ணில்
புரண்டழுது அடம்பிடிக்கும்
குளிப்பாட்டி துடைத்தெடுத்த
நினைவுகள் தனித்தனியே

விழிப்பைச் சுற்றிலும்
பசித்த மலைப் பாம்புகளாகத்
தொங்கிக்கொண்டிருக்கும்
பயத்தின் நாவுகள்
இருள் வனத்தில்
மின்மினிப் பூச்சிகளாகிப்
பறந்துகொண்டிருக்கும் உயிர்

மனம் கவ்விப் பறக்கும்
பெரும் பறவையொன்றின்
வெளிர் வண்ண இறகுகள்
உதிர்ந்து கிடக்கும்
வற்றிய ஏரியில்
வானம் உரசிப் பறக்கும்
முன்பு அமர்ந்து மீன் தின்ற
பறவைகளைப் பார்த்து
வரப்போகும் மழைக்காலத்தை
எண்ணிக் கொண்டது ஏரி
நீங்களும் நனைவீர்
ஜென்மம் முழுதும்
செலவழித்தே வாழ்ந்தாலும்
தீரப் போவதில்லை
அவமதிப்புகளால் பொறிக்கப்பட்ட
என் துயர நாணயங்கள்

என் ஒரு கரத்தை
இன்னொரு கரத்தால்
பற்றிக்கொண்டு
எழுந்து நிற்பது உங்களை
சபிக்கவோ . . . முந்திச் செல்லவோ . . . என்ற
அச்சம் பதற்றம் அறவே தவிர்ப்பீர்
வாழ்வதற்காக மட்டுமே

எரியும் காட்டில்
தீச்சுடர் பார்க்கத்
திரளும் நீங்களும்
நனைந்து மகிழும்
மழைநாள் . . . வரும் எனக்கு.
கனவுகள் எவையுமற்று
பெரு வெள்ளச் சுழல்களில் சிக்கி
உள்ளிழுத்துச் செல்லப்படும்
நீந்தப் பழகாத கன்றுக்குட்டியின்
உயிர் போராட்டத்துடன்
விடியும் பொழுதுகளில்
தடைகள் கடந்து
விரைந்தோடிக்கொண்டிருக்கிறேன்
என் தூரம்
எங்கோ கிடக்கிறது
அன்பு வண்ணம் பூசப்பட்ட உள்ளங்களின்
வஞ்சகம் புரிந்த பின்
பொய்யும் நடிப்பும்
பொறுக்க முடியா
இயல்பின் நெருக்குதல் சுமந்து
விரைந்தோடிக்கொண்டிருக்கும் நானோ

அசதியுறும் போதெல்லாம்
அவமதிக்கப்பட்ட பிரியங்களின்
உறைந்த ரத்தகட்டிகள்மீது
சற்றயர்ந்து, கண்மூடிக்கொண்டிருக்கிறேன்
கனவுகள் எவையுமற்று.

Thursday, June 28, 2012

பத்மபாரதி கவிதைகள்


(அ)
சம்ஷாபாத் விடுதியின் கதவுகள்
மிக அலங்காரமானவை
அழகிய சிற்பங்கள் கொண்டவை
உனது சொற்களைப் போன்ற
தேர்ந்த கவனத்துடன் துல்லியமாகச்
செதுக்கப்பட்ட சிற்பங்கள்
கச்சிதமான இடத்தில் எவரையும்
மெல்லத் தொட்டுவிடுபவை
அதன் பிறகு ஒன்றுமேயில்லை
கரைந்து கரைந்து மிக ஆழத்தின்
துக்கங்களுக்கான
பெருகி வழியும் கண்ணீருடன்
இந்த உலகமே அரவணைக்கக் கதறுகிறார்கள்
மிகமிக லேசான மனத்துடன்
தங்கள் சின்னஞ்சிறு கரங்களால்
உலகத்தைத் தழுவிக்கொள்கிறார்கள்
நீயோ இந்த உலகத்துக்கு வெளியே
நிறைந்த கவனத்துடன் ஒளிந்துகொள்கிறாய்
அழகிய சிற்பங்கள் கொண்ட
இந்த அகன்ற கதவுகள்
தங்களுக்குப் பின்னே
அறைகளெவையுமற்றிருப்பது போலவே
மறைந்துபோகிறாய் நீயும்

(ஆ)
இலக்குகளற்ற இந்தப் பயணத்தில்
நகர்ந்து செல்லப்
புதிய திசையின் வசீகரங்களைத்
துளித்துளியாய் வியக்க
எனது விழிகளை
என்னிடம் அளிக்கிறாய்
எனது விரல்கள் குரல் செவி
இன்னும் இந்த உடலும் மனமும்
என்னிடமே இருக்கும்படி
சுதந்திர எழுச்சி அல்லது
விதிகளெவையுமற்று இன்றும்
கிழக்கில் உதிக்கும்
சூரியோதயத்தைப் போன்று
அவ்வளவு சுதந்திரத்துடன்
தங்கள் அழகில் ஈர்ப்பில் வண்ணங்களில்
காற்றில் தூவும் மணங்களில் லயித்திடாமல்
தொடர்ந்து பூத்துக்கொண்டேயிருக்கும்
இந்த மலர்களைப் போன்று
அவ்வளவு சுதந்திரத்துடன்
என்னிடமிருக்கும்படி
என்னை என் எல்லாவற்றுடனும்
என்னிடமளிக்கிறாய்

(இ)
இந்த இடம் ஏன் எனக்குச்
சமயங்களில் ரோமானிய
மைதானங்களை நினைவூட்டுகிறது
உங்கள் அழைப்பைச்
சரியாகப் புரிந்திருக்கிறேனா என்றேன் அச்சமுறுகிறேன்
இனி ஒன்றுமேயில்லை எனும்படி
நான் திறந்திருக்கிறேன்
நீங்களும் அதை உணர்ந்திருக்கிறீர்கள்
உணர்ந்திருக்கிறீர்கள்தானே
உங்களில் துளிர்க்கும் கண்ணீரும்
என் ஆவி அமைதியுறும்படியான அரவணைப்பும்
இருந்தும் ஏன் தனிமையடைகிறேன்
உள்ளே ஆழத்தில் செல்லச் செல்ல
நான் அடையும் பதைபதைப்பு
என்னோடிருக்கும் உங்களுக்குப் புரிந்திருக்கும்தானே
சொற்களை ஏன் நமக்கிடையில் நிறுத்துகிறீர்கள்
உங்கள் கையிலிருக்கும் வாளின் கூர்மையை
அறியாதவனிடம்
ஏற்கனவே ஆழத்தில் தத்தளிப்பவனிடம்
அதன் பளபளக்கும் கூர்மையைப் பிரயோகிக்கிறீர்கள்
துளிமாசும் ஒட்டியிராத
இந்த மனத்துக்காகத்தானே தவமிருக்கிறோம்
உனது ஆழங்களை நீதான் தொடவேண்டுமெனும்போது
ரோமின் அன்றைய மைதானங்களில்
தனித்துத் தவிக்கிறேன்
நல்லது
தேவதைகளின் பரந்த இறக்கைகள்
வானத்தின் பிரம்மாண்டத்திலிருந்து
துளி ஒளியைக் கசியச்செய்திடும்
காலத்துக்காக
நிழலின் கருமையை இன்னும் கூட்டியபடி
அடர்ந்த
ஆலமரப்பொந்துகளில்
சொக்கிக்கிடக்கும் சிட்டுக்குருவியின்
சின்னஞ்சிறு கண்மணிகளில் பட்டுப்
பிரகாசிக்கும் துளிக் கிரணத்துக்காகக்
காத்திருக்கலாம்தான்.

(உ)
உன்னைச் சந்தேகிக்கவில்லை..

இந்தப் பேரொளியில்
மூழ்கிக்கொண்டிருக்கும்போது
நான் தனித்திருப்பதாகவே தோன்றுகிறது
இது உன்னை அவமதிப்பதல்ல
உன் பிரியத்தைச் சந்தேகிப்பதல்ல
மீளாத் துயரில் உன்னை ஆழ்த்துவதல்ல
நீயும் அறிவாய்
எங்கிருக்கிறேன் நானென்பதை
பிரகாசத்தின் உச்சம்
என்னை இல்லாமலாக்கிக்கொண்டிருப்பதை
வழியும் கண்ணீரில்
நாமறிந்த உணர்வுகளின்
சாயல் இல்லாதிருப்பதை
உன்னைச் சந்தேகிப்பது
துயரில் ஆழ்த்துவது
உனது அண்மையை மறுதலிப்பது
எல்லாமே எனக்குச்
செய்துகொள்வதாகத்தான் இருக்கிறதென்பதை
நீ அறிவாய்தானே
இந்தப் பேரொளி இருவிழிகளைக் குருடாக்குவது
சுற்றத்தை இயலிருப்பை
அறியாமைக்குள் தள்ளுவது
அறியாமையின் குற்றவுணர்வைப் போஷிப்பது
அது வீணானதொரு உணர்வு எனினும்
புரிந்துகொள்ளப்படாமல் போவதான சாபத்திலிருந்து
என்னை ரட்சித்துச்
சேய்மையிலுமான உன் அருகிருப்பு
இந்தப் பூமியில் என்னை நிறுத்தும்தானே.

(ஊ)
என்மீது கோபங்கொள்ளுங்கள்
உங்கள் கையிலிருக்கும் பொருளைத்
தூக்கியெறியுங்கள்
கொலைவெறித்தாக்குதல் நடக்கட்டும்
என் இருப்பின் மீது
உங்கள் நேசத்தில் மூழ்கி
இறப்பது அல்லது ஜீவித்திருப்பது
என்மீதான துயரம் சந்தேகம் அல்லது மகிழ்ச்சி
இவையெல்லாமே
ஒரு புன்னகையைத்தான் தருகிறது
இவை எதுவும்
தியாகம் அல்லது வியப்பின் எச்சமன்று
என்மீதான உங்கள் குறுக்கீடு
மகிழ்ச்சியளிக்கிறது
என்னைக் கையளித்துவிடுகிறேன் உங்களிடம்
அதற்கான மனவுறுதியைத் துணிச்சலைத் தந்தது
நீங்கள்தானே
உங்கள் வெளிப்பாடுகளெல்லாம்
எனது இருப்பின் அல்லது இல்லாமையின் மீதான
உங்கள் பிரியமன்றி வேறென்ன

(எ)
எனது அன்பை யாரிடம் பகிர்ந்துகொள்ள

உனது பேரன்பை யாரிடம் பகிர்ந்துகொள்வாய்
என்றந்தக் கேள்வி எழுமுன்னேயே
என்னைப் பதைபதைப்புக்குள்ளாக்குகிறது
அது நிகழ்ந்துவிடக் கூடாது என்று
உள் ஆழத்தில் விரும்புகிறேன்
ஆனால் விதிகள் நம் விருப்பங்களை வென்றுவிடுகின்றன
இந்த உலகமே என்மீது நேசத்தைப் பொழிகையில்
எப்படி நான் உன்னுடன் தனித்திருக்க விரும்புவது
எப்படி நாம்
நேசத்தின் படிநிலைகளை உள்வெளியாக
மேல்கீழாக அடுக்குவது
அவ்வளவு கொடூரமான மனம் நமக்கிருக்கிறதா
விதிகளின் மீது முரண்பட நான் இன்னும் துணியவில்லை
எனது அந்தத் துணிச்சல் உன்னிடம்தானே இருக்கிறது
ஏதோ ஒரு கணத்தின் மீச்சிறு துளியில்
மெலிதானதொரு வற்புறுத்தலாக
என் பிரியம் அமைந்துவிடுவதை வெறுக்கிறேன்
ஆனால் ஏற்றுக்கொள்கிறாய் அப்படியே என்னை
மறுமுறை என்னை இழுத்து அரவணைக்கையில்
உன் மனத்தின் மீத்தூய்மை பொங்கும் பிரியம்
அதன் கதகதப்பு
எனது ஆவியை அமைதிப்படுத்துகிறது
விதிகளற்று முகிழ்க்கும் பிரியமது
இந்த உலகம் உருவானபோது
துளிர்த்த பிரியமாக அடைகிறது என்னை

பா. அகிலன் கவிதைகள்


கால்
மனிதர்கள் சுவாசிக்க முடியாதவொரு காலை
எடுத்துவந்தார்கள் இன்று
தற்காப்புப் படைகள் தரித்த பின்
ஒழுகும் சீழுக்கு ஒரு கிண்ணமும்
சிதம்பிய தசைக்கு இன்னொரு பாத்திரமும் வைத்தபின்
பிடுங்கியுடன் அமர்ந்து
நெளியும் புழுக்களைப் பிடுங்கத் தொடங்கினேன்.

அதிசயம் தெரியுமா?
காலுக்கு ஒரு தலையும்
தலைக்கு இரண்டு கண்களும் இருந்தன.

பிண இலக்கம் 178
இரத்த விளாறாய்க் கிடந்தான்:
பாதித்தலை
பிளந்த நெஞ்சறையில் நூலிட்டு இறங்க
திரவமாய்க் கசிந்தது இருள்
தடுமாறிக் கடந்தால்
காத்துப் பசித்தவொரு முதிய தாய்
ஒரு நோயாளித் தந்தை
மாலையிட்ட சில புகைப்படங்கள்

தேகத்தின் பாதாளத்துள் இறங்க முதல்
முற்றிலாக் கேவலால் துரத்துண்டோம்
முள்ளாள் கிடந்த கனத்தது கண்ணீர்

அவசரமாய் வெளியேறிய பின்
மூடி
துணிப் பந்தொன்றை அடைத்து
தைக்கத் தொடங்கினேன்.

பிண இலக்கம் 182
சிதைவாடை
நீக்கினால்
ஓலமுறைந்து சீழ்கொண்ட இன்னோராடை

முலையொன்றில்லை:
மறு முலையில் கிடந்தது ஒரு சிறுவுடல்
பிரித்தால் பிரியாது
ஓருடலாய் ஒட்டிக் கிடந்தது

சுத்தப்படுத்திய பின் எழுதினேன்
பிண இலக்கம் 182.

பிண இலக்கம் 182உம்,
உயிரிலக்கம் 02உம்
உயிரில்லை:
இரத்தம் ஒரு சேலை
யோனியிற் தொங்கிய தொப்புழ் வீழ்தில்
ஆடியது ஓர் புத்துடல்.
வெட்டிப் பிரித்தோம்:
குலுக்கிய பின் அழுதது.

எழுதினேன் பேரேட்டில்
பிண இலக்கம் 183
உயிரிலக்கம் 02.

பொதி இலக்கம் 106 உம் பிறவும்
முண்டத்திற்கு மேலும் கீழும் ஒன்றுமில்லை.
இரத்த வெடில்
சிதம்பியழுகிய உடலைத் தொட முதல்
முறிந்தன என்புகள்

“குழந்தைகள் போலும்”

முடையாய்க் கட்டிய பின்
ஓரமாய்க் குவிக்கத் தொடங்கினோம்.

மாந்தோவின் பெண்கள்*
ஒட்டிக் கிடந்தது உயிரின் கடைசிச் சவ்வு

அருகு வர
யாந்திரிகமாய் நீக்கினாள் கீழாடை
இரத்தக் கிடங்கில்
மொய்த்துக் கிடந்தன ஆயிரமாண் குறிகள்

நீரள்ளிப் பெய்த பின்
அவள் மூளையிலிருந்து
ஒவ்வொரு ஆண்குறியாய் பிடுங்கத் தொடங்கினேன்.

காலம் கலங்கியபடி மடிந்தது.

*சதாத் ஆசன் மந்தோவின் சிறுகதை ஒன்றில் வரும் தொடர்ச்சியாக வன்புணர்ச்சிக்கு உட்பட்ட பெண் பாத்திரம்.
கைகள்
மணிக்கட்டுகள் சில
முழுக்கைகள் சில
அங்குமிங்குமாய் உடைந்தும் கிழிந்த வேறும் பல

ஒன்றெடுத்தேன்
பராயம் இருபதிருக்குமோர் ஆண் கை
முரட்டு விரல்கள்
நெடிய ஆயுள்ரேகை கைவிட்டிறங்கி
மேலும் பயணமானது

இறங்கிப் பார்த்தேன்
பச்சை குத்தியிருந்தான்
“சஞ்சுதா”

விசரி
காயமேதும் இல்லை.

ஒற்றையாடையில் மலமும்
மாதவிடாய் இரத்தமும் ஊறிக்கிடக்க
மாற்றுடை மறுத்தாள்
ஊன் மறுத்தாள்
பகலையும் இரவையும் ஊடறுத்தலறினாள்
மகவே
மகவே
மாயமே

துரத்தி
விலங்கிட்டுக் கூடிய பின்
உள மருத்துவருக்கு சிபாரிசு செய்தோம்.

பா.அகிலன்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். முதலாவது கவிதைத் தொகுதியான பதுங்கு குழி நாட்கள் 2001இல் வெளியானது. இரண்டாவது கவிதைத் தொகுதி சரமகவிகள் என்னும் தலைப்பில் 2011இல் யாழ்ப்பாணத்தில் வெளியாகியுள்ளது. சரமகவிகள் தொகுதியிலிருந்து இந்தக் கவிதைகள் எடுக்கப்பட்டன.