Monday, October 18, 2010

மற்றுமொரு மாலைவேளைக்கான காத்திருப்பு ஆறுமுகம் முருகேசன்

புன்னகைத்து திரும்பியவேளை
கைபற்றி குலுக்குவாளென நானும்
அழுத்தமான முத்தமொன்று
பதியவிடுவேனென்று அவளும்
யோசித்திருக்கலாம்..!

எல்லாமும் ...
காற்றின் ரீங்காரத்தில்
கசிந்து கொண்டிருக்கிறதென
எதுவுமே நிகழாத
விடைபெறுதலொன்று
மறுசந்திப்புக்கான ஆதியாய்..!

ஒளிந்திருக்கும் காதல் ,
காதல் கவிதையென
பிரகடனப்பட ..
அவளொருவள் அனுமானித்தாலே
திருப்தியென்ற பாசாங்குடன் ,
வார்த்தைகளற்று நீள்கிறது..

வண்ணத்துப்பூச்சியும்
சிறகுகளைசைக்கும் சிறுமியும்
முந்திகொண்டனர் எனக்கென..!

தீபாவளி ஹைக்கூ கோவை புதியவன்

1. ஒரு நாள் விடுமுறை
நரகாசுரனுக்கு நன்றி
சிவகாசி விரல்கள்

2. செய்யா தவறுக்கு
நவீன நரகாசுரன் தண்டனை
“உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக”

3. பூமித்தாயின் மடியில்
புகைத் திருவிழா
மூர்ச்சையாய் ஓசோன் குழந்தை

4. தெருவெங்கும் கொண்டாட்டம்
தலைவர்கள் வாழ்த்து
தெருக்களில் வாழ்வோர்க்கும்

5. அசுரனுக்கு நினைவஞ்சலி
உயிர் பெற்றன இயந்திரங்கள்
ஒரு நாள் மனிதர்களாய்

கீதாஞ்சலி உன் காதல் என் மீது ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் ) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

உள்ளத்தைக் கவர்ந்த காதலனே!
உன்னை நானறிவேன்,
காதலைத் தவிர,
யாதொன்று மில்லை,
என்மீது நீ
கொண்டிருப்பது!
பரிதியின்
தங்க ஒளிகள் துள்ளி
நடனமிடும்,
சலசலக்கும் மரத்தின் இலைகளில்!
படகுபோல்
மிதந்து செல்லும்,
வான வெளியின் குறுக்கே,
மோன முகிற் கூட்டம்!
தவழ்ந்திடும்
தென்றலின் சிலுசிலுப்பு,
தனது குளிர்ச்சியைத்
தடவிப் போகும்
நடுவே
என் நெற்றியில்!


பொழுது புலர்ந்ததும்
பொற்சுடர் ஒளிமயம்
கண்ணிமை கட்குத் திரையிடும்,
வெண்ணிற வெள்ளத்தால்!
என் நெஞ்சுக்கு உணர்த்திடும்,
உன் அறிவுரை
அதுவே!
மேலிருந்து வளைகிறது,
கீழ் நோக்கி
உன்முகம்!
விண்ணிலிருந்து பார்க்கின்றன
கீழே
என்னிரு விழிகளை,
நின் விழிகள்!
என்னிதயம் தொடுகின்றது,
பணிந்து சென்று
நின்னிரு
பாதங்களை!