Sunday, March 3, 2013

கவிதை - க. அம்சப்ரியா.

இந்த முறை
என்னைக் கொல்லப் போவதில்லையென
அறியலானேன்
கொலையாளி
பிறந்த நாளுக்கென
ரோஜாக்களைப் பரிசளிப்பதில்லை
பசித்த முகத்தின்
சுவாச மறிந்து
விருந்துச் சோறு தருவதில்லை
கொலை செய்கிறவன்.
தெருக் குழந்தையை
அள்ளியெடுத்து
இக்கத்தில் வைத்துக் கொள்கிறவன்
கொலை செய்யக் கூடுமென்று
யாரும் நம்பப் போவதில்லை
உதடுகளில் பொருத்திய
சொற்களைத் தூர வீசிவிட்டு
புன்னகையைப் 
போவோர் வருவோர்க்கெல்லாம்
வாரியிறைக்கிறவனுக்கு
கொலை வெறி இருக்குமென
சந்தேகிக்க வேண்டியதில்லை
என்னை முத்தமிடுகிறாய்
அணைத்துக் கொள்கிறாய்
ஆயிரமாயிரம் ஆண்டு
வாழ்ந்துவிட வேண்டுமென்று
திரும்பத் திரும்ப பிரியமாகிறாய்
எனினும்
இவைகளின் வழியே
எப்போதும் மறைத்தே வைத்திருக்கிறாய்
எனைக் கொல்வதற்கான ஆயுதமொன்றை.

இன்று பகல் உணவுக்கு..ஈரோடு தமிழன்பன்


எந்தக் கவிதையும்
இந்தப் பகலில் கனவுகாண முடியாது
வார்த்தைகளின்
வெப்ப தட்ப நிலைகளைப் பொருத்தமாகப்
பராமரிக்க முடியவில்லை;
குளிரூட்டும் யாப்பு உறுப்பு எதையும்
யாப்பிலக்கணக்காரன்
கண்டுபிடித்துத் தரமுடியவில்லை
அர்த்தம் ஆவியாகப் போய்விடாமல்
பாதுகாப்பதற்குக் கவிஞனாலும் வழிசொல்ல
முடியவில்லை.

இன்று பகல் உணவுக்கு உன் வீட்டுக்கு
நீ சொன்னபடி வரமுடியவில்லை நண்பனே!

பகலை எழுத எழுதக்
காலம் கூடத் தனது கையைச்
சுட்டுக் கொள்கிறது
மரத்தின் அடியிலிருந்து வெளியே வர
அஞ்சுகிறது நிழல்
பறவைக் கூடுகள் சட்டிகளாக அவற்றுள்
வெயில்
வெள்ளைக் கிழங்குகளை வேகவைக்கிறது
இரவின் தூதர்கள் கைது செய்யப்பட்டும்
பூடகக் கவிதைகளுக்குள்ளும்
கடவுள் தரகர்களின் உதடுகளுக்குள்
ஒடுங்கியிருக்கும் உச்சாடனங்களிலும்
அடைக்கப்பட்டனர்.

எங்கிருந்து எதிர்ப்புக் கிளம்பும் என்று
வெப்பத் துப்பாக்கிகளோடு
வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது பகலின்
உளவுப் படை
இன்று பகல் உணவுக்கு உன்வீட்டுக்கு
நீ சொன்னபடி வரமுடியவில்லை நண்பனே!

பகல் தாள்களில்
பதிப்பிக்கப்பட்டிருக்கும் கோடை உத்தரவுகளால்
பச்சை உடைகள் களையப்பட்டுப்
பரிசோதிக்கப் படுகின்றன வனங்கள், காடுகள்,
மலைச்சரிவுகள்
கிணறு குளங்களின் திரவ வாழ்க்கை மீது
விசாரணைகள் நடத்தப்படுகின்றன
கருத்த காகங்கள் மேலும் கரித்து
கரைதல் தடைசெய்யப்பட்ட அச்சத்தில்,
உடைய இருக்கும் கிளைகள் மீது
உட்காருவதும் எழுவதுமாய் உள்ளன.

ஈரம் பறிமுதல் செய்யப்பட்ட
உரையாடல்களின் விக்கல்களுக்குள்
புழுங்கிப் புதைகின்றனர் மக்கள்
நதிகளின் ஓடைகளின் ஏரிகளின்
வெறுமைகளுக்குள் இருந்து மனிதர்களை
விழுங்க
ஒரு பெரிய சமாதியாக வாய்திறக்கிறது
பகல்
ஒருவேளை அங்கு நாம் பார்த்துக் கொள்ளலாம்
இன்று பகல் உணவுக்கு உன்வீட்டுக்கு
நீ சொன்னபடி வரமுடியவில்லை நண்பனே!

பணிவதற்கில்லை - நா. விச்வநாதன்

பணிவதற்கில்லை.

இருட்டு பிரிவதற்குள்
ஊர்ப்போய்ச்சேர்
என்றாள் அவள்
முகம் தலை என
முழுசாய் மூடிக்கொண்டு
போய்ச் சேருவதில்லை
சாகசம்.
காண்போர் மெச்ச
கம்பீரம் மிளிர
ஒருராஜ நடை
தேவை அப்போது.
எந்தச் சொல்
புண்படுத்தும் என்பதில்லை.
திசையெட்டும் 
துள்ளிக் குதிக்கும்
என்பதுமில்லை
கோடாய் ஒரு புன்னகையின்
நடுவிலிருந்து
அசுரபலம் சேகரித்து
உயிர்த்தது
யாருமறியாதது.
என்ன முயன்றென்ன
போகின்ற காலம்
வருகின்ற காலம்
எதுவும்
அசைத்துப் பார்ப்பதில்லை.
என் அறத்தை
தானே உருவாக்குவேன்
பேணுவேன் எனும்போது
ஆணை எதற்கும்
அடிபணிவதற்கில்லை.

கைதவம் - நா.கண்ணன்

சூரியக் கொழுந்தொன்று
விண் தாண்டி மண்ணேயேறித்
தழலாகி, நீராகி,
மண்ணாகி, மரமாகி
புழுவாகிப், பாம்பாகி
பல்மிருகமாகி, மனிதனாய்
பா செய்து பாவனையிலிருந்தும்
சூரியக் கொழுந்து
அங்கேயே இருந்தது
இன்னருள் செய்து கொண்டு!

நட்பு - நா.கண்ணன்

முன்னொருநாள் உன் நாமம் கேட்டேன்
பின்னைப் பின்னொருநாளில் என்
அன்னை இட்டுச் செல்ல உன் இல் புகுந்தேன்
சின்னக் கொவ்வாயும் குமிழ் சிரிப்பும்
என்னைக் கொள்ளை கொள்ள
பிந்நைப் பிற பெண்ணே போல்
மண்ணிலும் நீரிலும் களிநடை பயின்றோம்.
பின் என்னைப் பெண் பார்த்தர்
ஆணுக்கு உடமையென்று வதுவை பிற செய்தார்
பெண்ணென்று, ஆணென்று அளுக்கொன்று பெற்றுத்தந்து
மண்ணிலே உலா வந்து ஆடிக்களைத்தபோது
உன் பாலமுகம் மீண்டும் வந்தது
என்ன வினை? உன்னை அப்போதே பிடித்திருக்க வேண்டும்!
எண்ணித் தவமியற்ற இயலாத போழ்து தன்னில்
மன்னி மருகுகின்றேன் உன்னை நான் அறியேனென்று.

பிழைகளின் முகம் - ராம்பிரசாத்


தூரத்துக் காட்டுக்குயிலின்
மெல்லிசையில்
மயங்கிக்கிடந்தது அந்த
அடர்ந்த கானகமும்,
கவிந்த இருளும்...


இயற்கையின் மெல்லிசையில்
பிழை சேர்க்கும்
முயற்சிகளின்றிப் போதலில்
எத்தனை யதார்த்தம்...

கரிய பிசாசென ஆங்கொருவன்
உள் நுழைந்து தன் போக்கில்
மூங்கில் துளையிட்டூதி
முறையாகச் சேர்ந்த பிழைகளை
இசையென கூவிச்சென்றான்...

கானகம் முழுமைக்கும்
அதிர்ந்து ஒடுங்கியது
இயற்கை...

இந்த இயற்கை எத்தனை
மென்மையானது..

எழுத்தும் தண்டனையும் - ம.ரா



எழுத்து தண்டனையெனில்
எழுதுகிறவர்களுக்கா? படிப்பவர்களுக்கா?
படிப்பவர்களுக்கு என்றால்
படிக்காமல் போகலாம்
எழுதுகிறவர்களுக்கு என்றால்
எழுதுவானேன்?
விவரம் அறியும் பருவத்திலேயே
சுவரில் கிறுக்கும் குழந்தைக்கு
எழுத்து, தண்டனையா?
படிக்காமல் இருப்பதும் எழுதாமல் இருப்பதும்
சுயதண்டனைகள் அல்லவா?
படிப்பதும் எழுதுவதும்
மனசாட்சியின் தண்டனையிலிருந்து
தப்பிக்கத்தானோ!
படிக்கவிடாமலும் எழுதவிடாமலும்
தடுப்பவர்களே தண்டனைக்குரியவர்கள்.

தாமத வருகைக்கு
சிறுசிறு தவறுகளுக்குப்
பள்ளிக்கூடத்தில்தான்
எழுத்து, தண்டனையாகிறது.
எண்ணும் எழுத்தும் கண்கள் என்று
சொல்லிக்கொண்டே
இம்போசிஷன் என்று
எழுத்தைத் தண்டனையாக
இளம்வயதில் பதிக்கிறோம்.
தண்டனை என்றால்
பயமும் வெறுப்பும் வரும்.
எழுத்தில் வெறுப்பு வந்தால்
படிப்பதில் வெறுப்பு வராதா?
படிப்பதற்காக அனுப்பப்படும்
பள்ளிக்கூடங்களில்
எழுத்தில் வெறுப்புத்தீ!

ஜெய்ப்பூரில் இலக்கியத்திருவிழா.
எழுத்தாளர்களும் வாசகர்களும்
இருக்கவிரும்பும் உலகம்
2006 முதல் நடந்துவருகிறது
இந்த ஆண்டு ஜனவரி 20- 24
சல்மான்ருஷ்டி தடுக்கப்பட்டார்
The satanic verses
சிந்திப்பதற்கு
யாருக்கும் எப்போதும் தடையில்லை
வெளிப்படுத்தும் போதுதான் தகராறு.
வரலாற்றில் பிப்ரவரி
சிந்தனை வெளிப்பாட்டிற்குத்
தண்டனை வழங்கும் புனிதமாதம்
புருனோ (G iordam o Bruno) வைக்
கைது செய்தனர்;
மணிக்கணக்கில் தலைகீழாகத்
தொங்கவிட்டனர்;
கண்களைக் குத்தினர்.
கட்டுப்பட மறுத்த புருனோவை
உயிருடன் எரித்தநாள்
பிப்ரவரி 17, 1600.
சல்மான்ருஷ்டிக்கு
மரணதண்டனை (Fatwa) விதிக்கப்பட்ட நாள்
பிப்ரவரி 14, 1989
அவருக்கு ஒன்றும் ஆகவில்லை
ஆனால் அவரது புத்தகத்தை
ஜப்பானில் மொழிபெயர்த்தவர்
1991 இல் கொல்லப்பட்டார்.
சல்மான்ருஷ்டியின் எழுத்து,
தரமற்றதாக இருக்கலாம்
அவரைப்படிப்பது
வெளிநாட்டில் வாழ்வதால் போற்றுகிற
இந்தியத் தாழ்வுமனப்பான்மையாக இருக்கலாம்.
ஆனால் சல்மான்ருஷ்டியின்
இலக்கியச் சேவைக்காக
அட்லாண்டா, எமரிக்
பல்கலைக்கழகத்தில் பதவி,
புக்கர் பரிசு
1945க்குப் பிறகு மிகச் சிறந்த
50 எழுத்தாளர்கள் வரிசையில்
டைம்ஸ் இதழ் தந்த 13ஆவது இடம்
ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில்
மதிப்புறு முனைவர் பட்டங்கள் -
தாழ்வு மனப்பான்மை
இந்தியர்களுக்கு மட்டுமல்ல போலும்!

ஆண்டவனை மறுத்ததால்
நக்கீரன் எரிக்கப்பட்டான்.
திருமாலுக்கு எதிராகப் பேசியதால்
இரணியன் கிழிக்கப்பட்டான்.
அப்பரைக் கட்டிக் கடலில் போட்டார்கள்.
இராமனைப் போற்றியவர் கண்களைப் பறித்தார்கள்
நந்தனை நெருப்பில்... வள்ளலாரை அறைக்குள்...
உலகத்தமிழ்மாநாட்டிலிருந்து
கார்த்திகேசு சிவத்தம்பி வெளியேற்றம்.
நமது நாடு
மிகப்பெரிய ஜனநாயக நாடு
எழுத்துரிமையும் பேச்சுரிமையும்
சுதந்திரத்தின் மூச்சுக் காற்றுகள்
எழுத்தை எழுத்தால் பேச்சைப் பேச்சால்
மறுக்கலாம்; மாற்றலாம்.
எழுதுகோல் அல்ல எழுத்தே ஆயுதம்
எழுத்து இல்லாமல் அதிகாரம் இல்லை.
எழுத்தை அதிகாரம் எதிர்க்கலாமோ?
எழுத்தாளர்கள்
சாதி மதம் நாடு கடந்த
உலகக் குடிமக்கள்.
அவர்கள் வாழ்நிலை வேறு
வாழ விரும்பும் உலகம் வேறு
அடிமைப்பட்ட இந்தியாவில்
ஆனந்தப் பள்ளு ஆடியவன் பாரதி.
வரவிரும்பிய உலகை வரவேற்க
வாழும் உலகின் கதவுகளை உடைக்கிறார்கள்
வாழும் உலகைப் போற்றிப் பெறும்
விருதுகளைவிட
வரவேண்டிய உலகிற்கு வழிதிறப்பதில்
விழுப்புண் ஏந்துகிறார்கள்.
எழுத்தாளரின் சுதந்திரத்திற்கு
எழுத்தின் தரமதிப்பீடு தீர்வாகாது
அண்மையில் நடந்த புத்தகக் காட்சியில்
நீதிநாயகம் சந்துரு சொல்லியிருக்கிறார்
“ஓர் எழுத்தாளரின் நூல்கள் தாக்கப்பட்டால்
ஒரு சமுதாயத்தின் பண்பாடு அழிக்கப்படுகிறது.
ஓர் எழுத்தாளர் தாக்கப்பட்டால்
ஒரு வரலாறு அழிக்கப்படுகிறது”
ஆம்! ஒரு சமுதாயத்தின்
பண்பாடு என்பதும் வரலாறு என்பதும்
ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றில்
உள்ளடங்கும் தானே!
வாழும் உலகை எப்படிப் பார்ப்பது?
வரவேண்டிய உலகை வரவேற்பது எப்படி என்று
யாரும் யாரையும்
கட்டாயப்படுத்துவதில்
நாகரிகம் தண்டனைக்காளாகிறது.
தடையும் தண்டனையும்
எழுத்திற்கென்றாலும்
எழுத்தாளருக்கென்றாலும்
தலைகுனிவது மானுட நேயமே!