Sunday, January 4, 2009

கல் திறந்த கணம் - க.மோகனரங்கன்

"பெயரழிந்த ஊர்
அரவமற்ற பிரகாரம்
கரையழியா சரவிளக்கு
திரியெரிந்து பிரகாசித்தது இருள்
காலடியோசைக்கு
சடசடத்துப் பறந்தது புறாக்கள்
எச்சம் வழிந்த முலையொன்றில்
எதேச்சையாய் விரல்பட்டுவிட
உறுத்துப் பார்த்தது
கருத்த சிலை
திகைப்புற்றுக் கண் திருப்ப
காதில் விழுந்தது
நூறு நூறு வருடங்கள் கடந்து
உளியின் ஒளி..."

என்.டி.ராஜ்குமார் கவிதை

"அம்மாவிற்கு உளுந்துவடை ரொம்பப் புடிக்கும்
நான் விடியற்காலையில் எழுந்து குடிக்கும் முதல் கோப்பை
சாராயத்தைப்போல
ரசித்து ருசித்துத் தின்பாள்

மேலும்
எந்த அவசியத்திற்கு வைத்திருக்கும் பணமானாலும் சரிதான்
கடன் வாங்கியேனும்
கேட்ட உடனே யெடுத்துத்தரும் ஒற்றை ரூபாயில்கூட
அவளின் அதீத அன்பு நிறைந்திருக்கும்

பிறகு
அம்மாயில்லாத வாழ்வை நினைத்தால்கூட
நீரின்றி துடிக்குமெனது மீன்குஞ்சு

இருப்பினும் நான் தாயில்லா பிள்ளையானால் என்ன செய்வேன்

உழைக்காமல் மக்குப்பிடித்துப்போன உடலை
கட்டாயப்படுத்தி கூலிவேலைக்கு அழைத்துச் சென்றுவருகிறேன்

கொஞ்சமிருந்து ஓய்வெடுக்கும் சுக்குக்காப்பிக் கடையில்
சூடு மணக்க வடைபோடுகிறான் தொழிலாளி

ஒரு குழந்தையைப்போல
வாங்கித்தாடாவென
அடம்பிடிக்கிறது அம்மாவின் நினைவு

போன மாதமே பாதுகாத்து வைத்திருக்குமிந்த
நூறுரூபாய் நோட்டை
சில்லறையாக்க மனமின்றி
தினமும் கடந்துசெல்கிறானிந்த அம்மாவின் செல்வம்..."

இன்னும் செதுக்கப்படாமலொரு சிற்பம் - சூத்ரதாரி.

"ஆக்ரோஷக் கண்களுடன்
வலக்கரத்தில் வீச்சரிவாளோடு
கருப்பராயன்.
பயந்து பதுங்கும் எலியொன்று.
இன்னும் அரசமரத்தடி கிடைக்காத ஏக்கத்தில்
வியாசருக்கு எழுத மறுத்து
துண்டாடப்பட்ட துதிக்கையுடன் பிள்ளையார்.
ஞானப்பழம் பெற்ற
இன்னொரு விநாயகன் முகம் திருப்பிக்கொள்ள
முதுகில் சாய்ந்திருந்தனர் ஒன்பது கன்னிமார்கள்.
கொட்டும் மழைக்கு ஒதுங்கி ஒடுங்கின
மாரியம்மனுக்கு எதிரில்
சுவைக்க முடியாக் கரும்புடன் காமாட்சியம்மன்.
கட்டிலடங்காத ஆநிரைகளுக்காய்
துளையற்ற குழலை இசைத்தபடி ஆயர்பாடிக்காரன்.
இன்னுமொரு தேவி காலடியில் மூச்சின்றி கிடக்க
உளியொன்று கண் திறந்து கொண்டிருந்தது.
உடைந்து தெறித்த நெருப்புத் துணுக்குகள்
மோதி விழுந்தன காத்திருக்கும் கண்களில்
எந்தக் கல்லில் ஒளிந்து கிடக்கிறதோ
அவன் செதுக்க நினைத்த சிற்பம்..."

ஒரு மனிதன் முயலாக - யூமா.வாசுகி.

"ஸ்கர்ட்டின் கீழ்விளிம்பை கடித்தபடி
ஜட்டி தெரிய வாசலில் நிற்கிற
சிறுமி புவனா கேட்கிறாள்
'முயல் என்ன செய்கிறது?'
அவளைக் கவர்வதற்காக
அறையினுள் ரகசியமாக
ஒரு முயல் வளர்ப்பதாகச் சொல்லியிருந்தேன்.
'முயல் சாப்பிடுகிறது'
என்னும் பதிலில் திருப்தியுற்றவளாய்
விளையாடப் போனாள்
'எங்கே முயல்? காட்டு பார்க்கலாம்'
என்று அடுத்த நாள் வந்தாள்
ஆப்பிள் தின்றபடி.
'பெரிய முயல் கடித்துவிடும்' என்று சொல்ல
சந்தேகச் சிரிப்புடன் வெளியே போனாள்
அவள் சொல்லித்தான் நான் முயல் வளர்ப்பது
மற்ற சிறுவர்களுக்கும் தெரிந்தது
வாசலில் கூட்டமாய் வந்து நின்று
'என்ன செய்கிறது முயல்' என்பவர்களுக்கு
பல தடவைகள் அறைக்குள் எட்டிப் பார்த்து
முயல் பற்றிய நிலவரத்தை தெரிவித்தேன்
நாளாக,
அப்படியொரு முயல் இங்கே இல்லை
எனும் உண்மை புரிந்தாலும்
நான் வீட்டைப் பூட்டிப் புறப்படும்போது
என்னையே முயலாக்கி
புவனா கேட்கிறாள்,
'முயல் எங்கே போகிறது..?'
நீண்ட கைகளை ஆட்டி
பஞ்சு ரோமத்தைச் சிலிர்த்து
மிரண்ட விழிகளால்
குறுகுறுப்பாகப் பார்த்து
முயல் சொல்கிறது..."

பட்சிகளுக்கான பாடம் - வி.அமலன் ஸ்டேன்லி

"அடுத்த இளம்பனிக்காலத்தில்
கட்டிடங்கள் கொண்டுவிடும்
பழம்பெரும் வறண்ட குளம்

பெருநகர் கூளங்களும்
மண்ணும் சரளையுமென
கொட்டி நிரம்புகிறது

போக்கிடமற்று ஒழிந்துபோகலாம்
கொக்கும் நாரைகளும்

சுவரிடுக்குகளில் வாழ
புறாக்களிடமும்
எச்சில்களை ஜீரணிக்க
காக்கைகளிடமும்
கற்றுக் கொள்ளட்டும்
சீக்கிரமே அவை
மனிதரைப் போல..."

சங்கரராம சுப்பிரமணியன் கவிதை

"தங்களுக்கும் ஒரு இறந்த காலமும்
ஏக்கமும் உருவாகுமென்று
ஸ்கூட்டர்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை
அவைகளுக்கும்
ஒரு காவிய முடிவும்
வழியனுப்புதலும் நிகழ்ந்து விட்டன.
மஞ்சள் விளக்குகள்
கடற்காற்று
அவைகளின் நினைவை அழித்துவிடுகின்றன
பட்டறைகளிலும்
எங்கோ இருட்டறைகளிலும்
கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றன
இந்த நெடிய பூமியில் எல்லோரும்
தொலைந்து போகும் அபாயத்தை எண்ணி..."

விலகின தடத்தில் - பூமா.ஈஸ்வரமூர்த்தி.

"மாமிசம் உண்ணும்
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்
இந்நேரம் கிடைத்திருக்கும் சமிக்ஞை
பக்கத்து ரயில்நிலையத்திற்கும்
விபத்து நடக்கும் போதெல்லாம்
திருடக் காத்திருக்கும்
சனங்களுக்கும்தான் இன்னும் இல்லை

எல்லாம்
ஒற்றைக் கணத்தின்
ஒரு துளியிலேயே நடந்தேறியது

தடம் விலகின
ரயில்ப் பெட்டிகள்
உடைந்துபோன எழுத்துக்கள் போல
அந்தரத்தில் தொங்கின

நுரையீரலை
பதட்டமும் திகைப்பும் நிறைக்க
ஓலமும் கதறலும் பிளிறலும்
காற்று வெளியை நிறைத்தது

திருகிப் போடப்பட்ட உடல்கள்
மிஞ்சின ரத்தத்தோடு சுயநினைவும்
வெளியேற
ஒளி விலகின உடல்கள்
தோல் கிழிந்து சதை தெரிந்த உடல்கள்
இரத்தம் உறையத் துவங்கியிருக்கும்
உடல்கள்

ஆனால் எனக்குத் தெரியும்
பிறிதொரு இடத்தில்
மறுநாள் காலை
பணிக்குத் திரும்பும் சாவு
கையில் அன்றைய
செய்தித்தாளை
சரி பார்த்துக் கொண்டிருக்கும்
மிகுந்த அக்கறையுடன்..."

Saturday, January 3, 2009

இந்தச் சிங்கம் - எம்.யுவன்

"சிங்கத்தைப்
பலமுறை பார்த்திருக்கிறேன்

படங்களில்
படக்காட்சிகளில்
வித்தைக் காட்சிகளில்
காட்சிசாலைகளில்
கனவுகளில்

பிடரிமயிரின் தோரணையுடன்
பிளந்த வாயின் கூர்பற்களுடன்
பாய்ச்சலின் பயங்கரத்துடன்
ஓய்வான வேளையில்
சாந்தத்தின் வெகுளியுடன்

என் பயத்தின்
மறுவுருவாய் எனக்குள்
மிதந்தது அது

இந்தச் சிங்கத்தைப்
பார்க்கும்போது புரிகிறது
சிங்கத்தை இதுவரை
பார்த்ததேயில்லை நான்..."

ஏதோ ஒரு பறவை - உமா மகேஸ்வரி.

"வாளிக்குப்பையைக் கொட்ட
வாசல்தாண்டியபோது,
பறத்தலினின்று நழுவி
எருக்கங்செடியில் இருந்தது
பார்த்தேயிராத ஒரு பறவை

விசிறி மடிப்பு பாவாடை நலுங்காது
கொசுவி அமர்ந்த சிறுமியின்
தோற்ற ஒழுங்கிலிருக்கும் சிறகுகள்

அவை-
நீலத்தோடு நிறங்கள் தோய்ந்த
மாலை வானை நறுக்கி வார்த்தவை
உருளாத விழிகளோ
உயிரற்ற பகல் நட்சத்திரங்கள்

ஏராள மரங்கள் தவிர்த்து
எருக்கைத் தேர்ந்தது
ஏனோ தெரியவில்லை
களைப்பின் சாயலில்லா
கம்பீர அலட்சியம்
இறகுகள் கோதி
விரல் வழி பிரியம் செலுத்த
விருப்பூட்டும் என்னுள்
ஆனாலதன் பாராமுகத்தால்
ஆதங்கம் சுடும்

கையிலோ குப்பை கனக்கும்
கதவு திறந்த வீட்டில் காரியங்கள் இருக்கும்

ஓசையற்று குப்பை சிரித்தாலும்
உலுக்கிப் பறக்கும் அது-

ஒரு முறையேனும் குரலைக் காட்டாமல்;
வண்ண அம்புபோல்;
வாய்க்காத கனவைப்போல்;
இன்னும் அனுபவித்திராத
இனிமையின் இறுதி விளிம்பைப்போல்..."

மனம் - ஜெயபாஸ்கரன்

"நகரப் பேருந்துகளின்
நடத்துனர்களின் மீது
அதிருப்தியாய்
இருக்கிறேன் நான்.

தரவேண்டிய பத்து பைசாவை
தருவதேயில்லை
தருவதற்கில்லை என்றும்
சொல்வதற்கில்லை

ஏறுவதற்குள் விசிலடித்து
எத்தனையோ பயணிகளை
குப்புறக் கவிழ்த்திருக்கிறார்கள்
அவர்கள்.

போட்டி போட்டுக் கொண்டு
போகிறார்கள் காலியாக.
நிறுத்தங்களில் நிறுத்தாமல்
நிற்பவர்களின் வலியறியாமல்.

எல்லாவற்றுக்கும் மேலாக
எச்சிலைத் தொட்டுத் தொட்டு
பொட்டு வைத்து
பயணச் சீட்டுகளை
பரிமாறுகிறார்கள்

இப்படியாக
நடத்துனர்களுக் கெதிரான
கற்களை தேடித் தேடி
கண்டெடுத்து வந்து
மீண்டும் மீண்டும்
கல்லறை கட்டுகிறேன் நான்.

ஆயினும்
ஒவ்வொரு முறையும்
அதை உடைத்து
உயிர்த்தெழுந்து நிற்கிறது
5E நடத்துனரிடம்
அதிகப்படியாக நான்
பெற்றுக் கொண்டு வந்துவிட்ட
ஐந்து ரூபாய்..."

கோடைகாலக் குறிப்புகள் - சுகுமாரன்.

"ஒரு பிரம்மாண்ட சிலந்தி போல
கான்கிரீட் காடுகளுக்கு மேல் அசைகிறது சூரியன்
வெயில்
எலும்புகளுக்குள்ளும் நுழைந்து கருணையைக் கொல்கிறது
என் நம்பிக்கைகள் வற்றிக் கொண்டிருக்கின்றன

பறவைகள் உலர்ந்த குரலில் புலம்புகின்றன
காலிக் குடங்கள் அலறுகின்றன
கோபத்துடன் நிமிரும் கைகளில் விலங்குகள்
பளபளக்கின்றன
வயிற்றிலடிக்கப்பட்டவர்களின் ஊர்வலங்கள் நகர்கின்றன
தார்ச்சாலை உருகி
பாரவண்டிக்காரனின் கால்கள் புதைகின்றன

காற்றைக் கடந்தன யாருடையதோ சொற்கள்:
'கொடுமையானது
இந்த கோடைக் காலம்'

இல்லை
எப்போதும் நாம் வாழ்வது கோடை காலத்தில்..."

நெடுங்கோடை - திருமாவளவன்

"அடையாளக் குறிப்புகள்
எதுவும் கிடையாது
எங்கிருந்து தோன்றும் என்பதறியோம்
எப்பொழுதென்ற விபரம் ஏதுமில்லை

குதிரை மீதில்
ராஜகுமாரன் ஆரோகணிக்கும் தோற்றத்தில்
அன்றில்
இறக்கை முளைத்த தேவதைக் குஞ்சொன்றாய்
மலை உச்சியிலிருந்து இறங்கி வரும்

இன்னும்
நெடிய தோற்றமும் ஒளி கசியும் விழிகளும்
கற்றைச் சடையுமாய் யோகியின்
வடிவில் அவதரிக்கும்
அற்புதங்கள் நிகழ்த்தும்
அள்ளியள்ளிக் கொட்டும்

வெறும் புனைவுகளில் கழிந்துகொண்டிருக்கிற
பொழுதில்
சிலர் கண்டதாகக் கூட
கதைகள் பறைவர்

நீள இரவுகள்
நெடு வருடங்கள்
கொடிய மழை நாட்கள்
எத்தனையோ இலையுதிர் காலம்

கழிந்து போயிற்று

கண்கள் பூத்துப் பூஞ்சை படர்கிறது
தேடிப் போன குழந்தைகளின்
குருதி வாடை
காற்றிலே கைவீசித் திரிகிறது
மூக்கைப் பொத்தியபடி பார்த்திருக்கிறோம்

காத்திருப்பின் ஆற்றில் நெடும் கோடை
பாளம் வெடித்த சுவடுகளிடை
தொலைந்து போயிற்று
வாழ்வு

இப்பொழுது
உடல் மெலிந்து
எலும்பும் தோலுமாய்
குழிக்குள் இறுகிய விழிகளோடு
பிச்சைக்காரன் தோற்றத்தில்
ஒன்றின் நடமாட்டம்
ஊருக்குள் தெரிவதாய் பேச்சுலாவுகிறது..."

பூங்கா - எஸ்.வைதீஸ்வரன்

"மரக் கிளைகளின்
லேசான ஆட்டம்..
காற்றின் மழலையை
கூர்ந்து ரஸிப்பது போல்.

பூமியை அள்ளிக் கொள்ளவென
ஓடுகின்றன குழந்தைகள்
புல்வெளியெங்கும்.
மலருக்குள் பூச்சிகள்
மோதி மோதிப் பரபரக்கின்றன
மகிழ்ச்சி ஏனென்று தெரியாமல்.

வானத்தை மடியில் போட்டுக் கொண்டு
தூங்குகின்றன நீர்க் குட்டைகள்
காலத்தை மறந்து.

வாங்குவோரின்றி பழக்கூடைக் காரன்
வேலியோரம் வதங்கி நிற்கிறான்
விரலைத் தின்றவாறு.
அரிவாளும் இளநீரும்
பகை மறந்து கிடக்கின்றன
பகல் நிற வண்டிகளில்.

இரண்டொரு தனித்தவர்கள்
சோகத்தை அழகாக்கிப் பார்க்கிறார்கள்
அவரவர் கற்பனையில்.

காக்கி சட்டைக்குள் நகருகின்ற
காவல்காரன் கைத்தடியை
தட்டி தட்டிக் கனைக்கிறான்
காதலர்களின் இடைவெளியைக்
காபந்து செய்ய.

கைகளையும் கால்களையும்
வீரமாக உதறி வீசி
நீட்டி ஆட்டி
அண்டிவரும் மரண பயத்தை
ஆன மட்டும் விரட்டுகிறார்கள்
நாகரீக முதியவர்கள்
நடுங்கும் இருதயத்துடன்.

அந்தி யழிந்து
பூட்டிய இருட்டுக்குள்
தூங்காமல் தூங்கும் பூங்காக்கள்
நடந்து போன பலதை எண்ணி
நள்ளிரவில் 'களுக்' கென்று
சிரித்துக் கொள்ளும் எனத் தோன்றுகிறது..."

தேவதச்சன் கவிதை

"ரோஜாவும்
முல்லையும் வேண்டுமா
என்று வாசலிலிருந்து
கூவுகிறான்
பூக்காரன்.
அடுப்படியிலிருந்து
கத்துகிறாள்
நாளைக்கு வாங்கிக்கொள்கிறேன் என்று.
நாளை
வாங்க
அவள் வாசல் வரும்போது
பூ
புதுசாகவே இருக்கிறது
எப்போதும் போல்
நாளையும் அது
மரத்திலிருந்து மறைவதில்லை..."

தேவதச்சன் கவிதை

"ரோஜாவும்
முல்லையும் வேண்டுமா
என்று வாசலிலிருந்து
கூவுகிறான்
பூக்காரன்.
அடுப்படியிலிருந்து
கத்துகிறாள்
நாளைக்கு வாங்கிக்கொள்கிறேன் என்று.
நாளை
வாங்க
அவள் வாசல் வரும்போது
பூ
புதுசாகவே இருக்கிறது
எப்போதும் போல்
நாளையும் அது
மரத்திலிருந்து மறைவதில்லை..."

தூக்கம் - கந்தர்வன்

"அதிகாலை எழுந்து வாசல் வந்தால்
ஈரக் குறுமணல் சித்திரம் வரைந்து
தெரு வற்றிய ஆறாய்க் கிடக்கும்

மழையா பெய்தது ராத்திரி என
வாயசையும் மெல்ல

கொடு வாயோடிய முகத்தில்
கண்களைக் கசக்கி பாயைச் சுருட்டையில்
மதுரைச் சித்தியின் குரல்
பட்டாசாலையில் சங்கீதமாய்க் கேட்கும்

சித்தியா வந்தது ராத்திரி என
வாயசையும் மெல்ல

தொழுவத்தில் அம்மா
வாளியும் வைக்கோலுமாய்த் திரியும்
அப்பா சிரித்த முகமாய்
ஓலைப் பெட்டியில் இளங்கொடி சேர்ப்பார்
லெச்சுமி கன்னா போட்டுச்சு என
வாயசையும் மெல்ல

சுடலை சாம்பல் பூசி உடுக்கையடித்து
குடுகுடுப்பைக்காரன் ஆங்காரமாய் வந்து
தெருவை நடுங்க வைத்துப் போனானென
பெரியம்மா பாதி வாய் திறந்து
பயந்தபடி சொல்லும்

குடுகுடுப்பையா வந்தான் ராத்திரி என
வாயசையும் மெல்ல

அடிக்கடி தெருவிலும் ஊருக்குள்ளும்
விடிகாலைப் பொழுதுகளில்
வீட்டு வாசல்கள் முன்
சங்கும் சேகண்டியும் கேட்கும்
சட்டடித் தீயும் பச்சை மூங்கிலும் தெரியும்

ராத்திரி எப்ப நடந்ததென
குடம் உடைக்கும் வரை
கேட்டுத் திரியும் கூட்டம்..."

தனிமை - சல்மா

"இராப்பகலாய்
சலசலக்கிறது அரச மரம்

அதன் மொழியில்
பாடிக்கொண்டிருக்கிறது
அதனுடைய பாடலை

மறந்த காதல்களை
பிரிந்த நண்பர்களை
கழிந்த இனிய நாட்களைத்
தூண்டும் பாடல்கள்

இப்பாடல்கள்
என்னையும் ஒரு பறவையாய்
தன்னிடம் ஓடிவரச் செய்யும்
ஒரு தந்திரமாக இருக்கலாம்

காற்றால்
பறவையால்
பாடல்களால் நிறைந்த
இம்மரம் அறியுமா
என் சிறகின்மைகளை..."

மனப்பறவை - ராஜமார்த்தாண்டன்

"விண்ணிலேறிப் பறந்தொரு புள்ளியாகி
விருட்டெனத் தரையிறங்கியதென் சினேகப் பறவை

சாலையோரக் கண்ணாடித் துண்டுகள் பொறுக்கி
குப்பைத் தொட்டியில் போட்டது

எதிர்வீட்டுத் தோட்டத்தில் ரோஜாப்பூ கொய்து வந்து
பள்ளிச் சிறுமியின் தலைசூடி மகிழ்ந்தது

சுடிதார் மாணவியிடம் குறும்பு செய்த
காலிகளை கூரலகால் கொத்தி எச்சரித்தது

நடைபாதைக் குடியிருப்பில் அழும் குழந்தையின் கையில்
கொய்யாப்பழம் கொத்தி வந்து வைத்தது

பஸ் நிறுத்தக் கிழவனின் வீங்கிய காலுக்கு
மூலிகை கொண்டு ஒத்தடம் கொடுத்தது

அரிசிமணிகள் பொறுக்கி வந்து
அவன் பாத்திரத்தில் கவனமாய் இட்டது

தந்திக் கம்பத்தில் பறந்தமர்ந்து
சுவாசமாய் அங்குமிங்கும் நோக்கியபின்
பாட்டிசைத்துப் பறந்தது மலைச்சிகரம் நோக்கி..."

வண்ணத்துப் பூச்சி - கள்ளழகர்

"வண்ணத்துப் பூச்சி
பறந்து கொண்டிருக்கிறது
கண்ணுக்கெட்டும் தூரத்தில்
அழைக்கிறது அதன் சிறகுகளால்
ஈர்ப்பில் லயித்து
பின்னோடும் என் பார்வைகள்
இலையில் காலூன்றி
கனமற்ற கனத்தின் கனம் தாளாது
இலை ஆட
ஆடும் வரை சிறகசைத்து
அமரும்
உயிரின் கைகள்
உணர்வின் விரல் குவித்துப்
பிடிக்கும்போது
பறந்திருக்கும்
அங்கும் இங்கும் பறந்து
வேறோர் இடத்தில் அமரும்
பிடிகொடுக்காது
கைக்கெட்டும் தூரத்தில்
பறந்து கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி
அழைக்கிறது அதன் சிறகுகளால்..."

கலைடாஸ்கோப் - அன்பாதவன்.

"சாப்பாட்டு மேசைமேல்
தொலைக்காட்சியைப்
பார்த்ததுண்டா நீங்கள்
வாருங்களென் வீட்டுக்கு...

அழகிய நாற்காலிகளில்
புத்தகப் பைகள், பள்ளிப்பைகள்
உள்ளாடைகள் கூடக் கிடக்கலாம்...

குளிர்பதனப் பெட்டி மீது
போட்டோ ஸ்டாண்டை
எதிர்பார்த்தால்
ஏமாந்து தான் போவீர்கள்...

பழைய ரசீதுகளும்
பதிலெழுத மறந்த கடிதங்களுமே
வீற்றிருக்கும் தூசியோடு...

தொலைக்காட்சி பெட்டி மீது தூங்கும்
பிள்ளைகளின் பென்சில் டப்பா...

கொக்கிகள் சுவர் பார்க்க
சாவிகளைத் தேடுவது நித்ய
வாழ்க்கை...

மீனில்லாத கண்ணாடித்
தொட்டிக்குள்
மழிப்பு சமாச்சாரங்கள்...

வேடிக்கையாகவும் விநோதமாகவும்கூட
தோன்று முங்களுக்கு

அவதானிக்கையில் மாறுகிற
கலைடாஸ்கோப்பின் வடிவங்களாய்

அபத்தங்கள் நிறைந்த வாழ்வு..."

முன்பெல்லாம் - பூமா ஈஷ்வரமுர்த்தி

முன்பெல்லாம்
மின்சாரக் கம்பிகள்
மட்டுமே
நளினமற்று
குறுக்கே குறுக்கே
போகும்
இப்போது
டிவி ஆன்டெனாக்கள்...

பகலில்
வானம் பார்த்தால்
சூரியன் திட்டித் தொலையும்...

சூரியன்
மறையக் காத்திருக்கும்
இளைய ராத்திரியில்
கோயில் கோபுரங்கள்
பேங்க் கட்டிடங்கள்
சோடியம் வேப்பர்கள்
'தும்பமாய்'
வானம் மறைக்கும்...

இன்னும் கொஞ்சம்
ராத்திரியானாலோ
பெண் தான் வானம் பார்ப்பாள்...

பிறகு

குழந்தைக்கு
நிலா காட்டும் சாக்கில்
நாமும்
வானம் பார்க்கலாம்
கைகளில்
குழந்தை இருக்க
வானம் யார் பார்ப்பார்..."