Thursday, April 14, 2011

கவிதைகள் - தேவதேவன்

கை கழுவுதல்


கைவிரல்களைச்
சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிலும்
இடதுகை விரல்களுக்குக்
கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்
என்றார் அம்மா
கழிப்பறைக் கடன்களின்போது
இடதுகையினைச் சோப்பு தொட்டு
தூய்மையாக்கிக்கொள்ளும் பழக்கத்தை
அம்மா சொல்லிக்கொடுத்த முதல்நாள்
ஞாபகமிருக்கிறது.
அய்யய்ய அந்தச் சோப்பைப் பின் யார் தொடுவா
என அருவருத்து அந்தச் சோப்பையும்
சுத்தமாக்கிவைக்கும் பழக்கத்தை
என் துணைவியார்தான் இயற்றிவைத்தார்.
அன்று முதன்முறையாக ஒரு சோப்புக்கட்டி
என்னைப் பார்த்து நன்றியுடன்
கண்பனிக்க நெகிழ்ந்து நின்றதைக்
கண்டேன் நான்
எனது துணைவியாரின் நுண்ணுணர்வை
மறக்காமல் பாராட்டி நானும் நன்றி சொன்னேன்.
ஆனால் இடதுகை விரல்கள் தீண்டிக் கழற்றிச் சுழற்றி
தங்களைத் தாங்களே சுத்தப்படுத்திக்கொண்டு
சோப்பையும் சுத்தப்படுத்தியதைக் கண்டு
என் துணையின் விழிகளில் ஒளிர்ந்த
ஒரு திருப்தியையும் மீறி
ஏதோ ஒரு குறையுணர்வு
பாரமாய் அங்கே நிலவியது போலிருந்தது.
அதற்கு அடுத்தமுறை
அன்று அந்த இடதுகையின்
வேலைபாதியில்
மிகுந்த நட்புடன் குறுக்கிட்டு
அந்தச் சோப்பினை வாங்கி அமர்த்திவிட்டு
கொஞ்சம் சோப்புகொண்ட
தன் விரல்கள்கொண்டே
இடதுகையின் விரல்களைக் கழுவியது
வலதுகை.
அய்யய்ய என்று
இப்போதும் தோன்றிய சொற்கள்
ஆனால் சுருதி குன்றி மடிந்தன.
இதுவரை தங்கள் வாழ்நாள் கண்டிராத பிரியமுடன்
இரு கைவிரல்களும் கூடி
சோப்பினைக் கழுவி வைத்தபடி,
மேலும் மேலும் நெகிழ்ந்தொழுகும் நீரில்
தங்களைச் சுத்தப்படுத்திக்கொண்டு
அருகிலிருந்த துவாலையினை உருவி
தங்களை உலர்த்திக்கொண்ட காட்சி. . .

கவிதைகள் - எஸ். செந்தில்குமார்

நீங்கள் அந்தப் பெண்ணைக் காதலிக்கத் தொடங்கிவிட்டீர்களா?
இந்தக் கோடைக்காலத்தில்
உங்களது காதல் வெற்றியடைய
எனது வாழ்த்துகள்.

அவள் காதலர்களுக்குச் செய்த துரோகத்தின் கதைகளைக்
கேட்டுத்தெரிந்துகொண்டிருப்பீர்களென நம்புகிறேன்.

அவளது காதலர்களைச் சமாதானம் செய்யும் பொருட்டு
நீங்கள் சில வாக்கியங்களை
மனத்தில் உருவாக்கியிருக்கிறீர்கள்
அது தேவையற்ற ஒன்றுதான்
என்றபோதிலும்
என்றாவது அந்த வாக்கியங்கள்
உங்களை நீங்களே சமாதானப்படுத்தத் தேவைப்படலாம்.

இந்தக் கோடைக்காலத்தில்
எந்தக் காதலும் தோல்வியில் முடிவதற்குச் சாத்தியமே இல்லை
இந்தக் கோடைக்காலத்தில்
எந்தக் காதலும் வெற்றியுடன் தொடங்குவதற்கான
சாத்தியங்களும் இல்லை

நீங்கள் கணிதவியல் மாணவனைப் போல
நிகழ்தகவு பற்றிய கற்பனையுடன்
அவளுடன் ஊர் சுற்றுவதாகச் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள்

நீங்கள் அவளை முதலில் அழைத்துச் செல்லும்
இடம் குறித்து மிகுந்த சிரத்தையுடன் தேர்வுசெய்கிறீர்கள்
சில தகவல்கள் பெறும் பொருட்டு
அவளது அந்தரங்கமான தோழிகளிடம்
விசாரித்துக் கொள்கிறீர்கள்
எதன்பொருட்டோ பதற்றம் தொடர்கிறது உங்களுக்கு
அந்தப் பதற்றம்தான்
அந்த நிமிடம்தான்
உங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமைகிறது.

அப்போது ஒரு குறுங்கத்தியொன்றை
உங்களது தோல்பையில் வைத்திருக்க வேண்டும்
அல்லது டிபன்பாக்ஸில் விஷமிட்ட உணவை
வீட்டிலிருந்து கொண்டுவந்திருக்க வேண்டும்
இன்னும் அல்லது நீச்சல் தெரியாத நபராக இருக்க வேண்டும்

இந்தக் கோடைக்காலத்தில்
உங்களது காதலை ஏற்றுக்கொள்ளும் தருணத்தில்
ஒருவேளை டிபன்பாக்ஸ் உணவை
உங்களுடன் பங்கிட்டுக்கொள்ளலாம்

நீங்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும்
குறுங்கத்தியால் தன் முன்னாள் காதலர்களைக் கொன்றுவிட
உங்களை ஏவிவிடலாம்
அல்லது அவளிடமிருக்கும் விஷமிடப்படாத அல்லது விஷம் கலந்த
உணவை முத்தங்களுடன் தரலாம்
கோடை ஒருபோதும் காதலர்களைக் கொன்றுவிடுவதில்லையென
நீங்கள் அவளிடம் சொல்லத்தயாராக இருக்க வேண்டும்
அப்போது அவள் கோடையின் இரு கன்னங்களைப் பிடித்து
முத்தமிட்டு வழியனுப்பிக்கொண்டிருக்கலாம்
நீங்கள் நடுவானத்தில் கோடையை ஒளித்துவைக்க விரும்பி
குறுங்கத்தியின் உதவியுடன்
நடுத்தெருவில் நின்று தாவித் தாவிக் குதித்துக்கொண்டிருக்கலாம்.

எனக்குத் தெரிந்த சில பெண்கள்

எனக்குச் சில பெண்களைத் தெரியும்
அவர்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறேன்

ஓடிப்போய் திரும்பியவர்கள்
காதலித்து தூக்கமாத்திரை உண்டு குணமாகி நடமாடுபவர்கள்
தற்கொலைக்குப் பிறகு உதிரிப்பூக்களைத் தொடுத்துக்கொண்டிருப்பவர்கள்
கருச்சிதைவுக்குக் காரணமறிய கோவில் கோவிலாகத் திரிபவர்கள்
கருவை அழிக்கும் பொருட்டு ரகசியமாக மருந்து உட்கொள்பவர்கள்
தன் மகளின் பூப்பை மறைக்கும் இளம்வயதுப் பெண்கள்
என்று சிலரை எனக்குத் தெரியும்.

இன்னும் சிலர் இருக்கின்றனர்
தங்களது கணவர்மார்களை
மது பாட்டிலில் விஷத்தைக் கலந்து கொன்றுவிடத் துடிக்கும்
பெண்கள்
இன்னும் சிலர் இருக்கின்றனர்
எங்கோ, எங்கோ, எப்படியோ, எப்படியோ.

நடைபாதையில் பிரியும் குறுக்குப்பாதைகள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்னைச் சந்தித்தேன்
அவளுடைய முகம் பொலிவிழந்திருந்தது
கண்களில் துயரத்தின் நிறம் படர்ந்திருந்தது
யாரோ தன்னைப் பின்தொடர்வதாக என்னிடம் முறையிட்டாள்
நீ கருவைச் சுமந்துகொண்டிருக்கிறாயா
என்று கேட்டேன்
ஆமாம் என்றாள்
பிறக்காத குழந்தைதான் உன்னைக் கண்காணிக்கிறது என்று சொன்னேன்
அவள் அமைதியானவளாக என்னைக் கடந்து சென்றாள்.

நீண்டநாட்களுக்குப் பிறகு திரும்பவும் அந்தப் பெண்னைச் சந்தித்தேன்
அவளுடைய முகம் பூத்தப் பூவைப் போலிருந்தது
கண்களில் காமத்தின் ஒளி துளிர்ந்துகொண்டிருந்தது
யாரோ தன்னைப் பின்தொடர்வதாக என்னிடம் முறையிட்டாள்
நீ சமீபத்தில் யாரையேனும் காதலிப்பதென முடிவுசெய்திருந்தாயா என்று கேட்டேன்

அவள் பதில் சொல்லாமல் அமைதியாகக் கடந்து சென்றாள்.

இப்படியாகத்தான் நாங்கள் ஒருவரையொருவர் கடந்துசெல்வதும்
ஒருவரையொருவர் விசாரித்துக்கொள்வதும்
காலை நேரத்தில் நடைபாதைச் சந்திப்பில் வாய்த்திருக்கிறது

அவள் தன் காதலைப் பற்றி எதுவும் சொல்வதுமில்லை
நானும் எத்தனை முறை இழந்து மீண்டிருக்கிறேன் என்று சொல்வதுமில்லை.