Friday, December 26, 2008

வாடகை வீட்டில் வளர்ந்த மரம் - பாவண்ணன்

"விட்டுச்சென்றதும் குடிவைத்துக் கொள்ள
ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்
நாள் கடந்து போவதை ஞாபகமுட்டுகிறீர்கள்...

அன்புக்குரிய உரிமையாளரே
பெட்டிகள் படுக்கை மின்விசிறி
தொலைக்காட்சி அடுப்பு எரிவாயு
மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறோம்
வாடகை வண்டி வந்ததும்
ஏற்றிக் கொண்டு கிளம்புகிறோம்...

கொண்டு செல்லமுடியாத சொத்தாக
பின்புறத்தில் நிற்கிறது ஒரு மரம்
எங்களை நினைவுட்டினாலும்
எங்களைப் போல இருக்காது அது
குழாயில் தண்ணீரை ஏன் நிறுத்தினீர்கள்
என்று ஒரு போதும் கேட்காது
மின்சார நேரத்தைக் குட்டச்சொல்லி
முற்றத்தை மறித்து குழையாது
மழை புயல் கஷ்டங்களை முன்வைத்து
பழுது பார்க்கவும் வேண்டாது
நேருக்கு நேர் பார்த்தாலும்
எவ்வித சங்கடமும் தராது
வருத்தமோ கசப்போ எங்களோடு போகட்டும்
மரத்துக்காவது கருணை காட்டுங்கள்..."

Tuesday, December 16, 2008

நானும் நீயும் - ஜெயபாஸ்கரன்

"நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்கு பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ...

உன் இனத்து கற்ப்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாய் இருப்பாய் நீ...

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்..
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாகவேண்டும் நீ...

எனக்கு பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்கு பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை..."

அம்மா - தாஜ்

"அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்...

அம்மா
என்றேன் உடனே!

கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்
நீ... என்று!"

அம்மா - பூமா ஈஸ்வரமுர்த்தி

"அம்மா
வீடு
தொடாத
நாட்களில்
சின்னப்
பெண்குழந்தை
தம்ளரில்
விரல்பொத்தி
வாசல்
தெளிக்கும்...

ஒரு
மிருது
அருவியில்
பூமி குளிரும்...

அன்றைக்
கென்றே
அழகாய்
உதிக்கும்
சூரியன்..."

Sunday, December 14, 2008

காற்றின் பாடல் - சமயவேல்

"இடை விடாமல் தொடர்ந்து
காற்று பாடிக்கொண்டிருக்கிறது ...

அதன் ஒவ்வொரு பாடலிலும்
கோடி உயிர்கள் முளைத்தெழுகின்றன..

அதன் ஒவ்வொரு வரியிலும் மரங்கள்
செடி கொடிகள் ஆனந்தக் கூத்தாடுகின்றன ...

அதன் வார்த்தைகளுக்குள் குழந்தைகள்
குதித்து ஓடி கும்மாளமிடுகின்றன ...

அதன் இசைக்குள் மனிதர்கள்
விதம் விதமாக நேசம் கொள்கிறார்கள்...

அதன் சிறிய ஒளிக் குறிப்புகளைக் கேட்டு
பறவைகள் சிறகடித்துப் பறக்கின்றன...

வெறும் மண் பூமி
உயிர் கொண்டு சுழழ்கின்றது...

கற்றே உன் ஒப்பற்ற கருணையில்
காட்டு மூங்கிலோடு நானும் பாடுகிறேன்...

கதவைத் தள்ளி அறைக்குள் நுழையும்
காற்றின் அன்பில் கரைந்து பாடுகிறேன்...

எனது காற்று என்று இங்கே
எதனைக் கூறுவேன்
எனது பாடல் இன்று இங்கே
எதைச் சொல்லுவேன்
எல்லாம் இங்கே காற்றின் பாடலே...."

கெட்டாலும் மேன்மக்கள் - நா முத்துகுமார்

"இந்த முறையும் அம்மா
ஈசல் வறுத்து அனுப்பியிருக்கிறாள்...

பொரி அரிசியுடன் கலந்து
அம்மா வருக்கும்
ஈசல்களின் ருசி
மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ் (ஒரிஜினல்)
ஓட்டல்களின்
சமையலறைக்கு புலப்படாது...

வேட்டைகளில்
விருப்பமுள்ளவன் நான்...

கடாவிளக்கும்
கொஞ்சமே கொஞ்சூண்டு
குழந்தை குதூகலமும் போதும்
ஈசல் வேட்டையாட...

வறட்டி தட்டுவதற்கு
சாணம் கொட்டிவைத்த நிலத்தில்
ஈசல் குழிகள் ஏராளம் இருக்கும்

கூளத்திற்காய் குவித்த
வைக்கோல் துணுக்குகளில்
முளைவிட்டிருக்கும்
நெல் மணிகளை
மிதிக்காமல் நெருங்கி,
கண்ணாடி ரெக்கைகள்
உள்ளங்கையில் குறுகுறுக்க
கொத்தாகப் பிடிப்போம்...

அந்தியில் பறக்கும் ஈசல்களிடமிருந்து
அடைமழைக்கான
சாத்தியங்கள் தேடும்
வயதைத் தொலைத்து,
நதியில் நடந்த பாதங்கள்
நகரத்திற்கு வந்து
நாளாயிற்று...

இப்போதும்
வேட்டையாடிக்கொண்டுதானிருக்கிறேன்...

காகிதத்தில் எண்ணெய் தேய்த்து
விளக்கிற்கடியில் தொங்கவிட்டு...
கொசுக்களை..."

Sunday, December 7, 2008

வலியறிதல் - கல்யாண்ஜி

"இப்படியா அப்படியா
எப்படி இருந்தது என்று
நாலைந்து சொற்களை
அவரே தந்து
வழியினைச் சொல்லுடன்
பொருத்தச் சொன்னார்
உச்ச மகிழ்ச்சிக்கும்
உச்ச வலிக்கும்
அனுபவிப்பவனிடம்
அடைமொழி இல்லை
மேலும்
எம் வழியும் ஆகாது
உம் வலி..."

Saturday, December 6, 2008

பலூன்கள் - ரா. ஸ்ரீனிவாசன்

"கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர் சிலபேர்
ரூபாய்க்கு மூன்று தோட்டா வாங்கிச்
சுட்டுப் பார்த்தனர் - அங்கே ஊதிப் பெருத்த
வட்ட வட்ட முட்டைத தலைகளோ
தோட்டாவிற்க்குத் தன்னை கொடுத்து
தட்டியில் கட்டிய வெள்ளைத்
திரைக்கு பொருந்தி வரிசையாய் நிற்கின்ற
வண்ண பலூன்கள் -
சுட்டுப் பார்க்க வந்தோரில் ஒருவர்
கவனமாய் நெடுநேரம்
குறிவைத்துத் தவறவிட்டவர்-
எடுத்தேன் சுட்டேனென்று சுட்டுச் சென்றவன்-
காதலி அருகே
கவலையுடன் சுடுகின்ற வாலிபன் -
பெரியோர் சுடப் பார்த்துத்
தானும் சுடுவேனென்று
பிடிவாதம் காட்டிய சிறுவனும் சுட்டான் -

வருவோர் போவோர்
இச்சைப் பட்டு விளையாட்டாய்ச் சுட்டுச்
சிதறிக் கிடக்கும் பொத்தல் பலூன்கள்
பல வண்ணத் தோல்கள் -

சுடுவதற்கெவரும் இல்லாதபோது
பிழைப்புக் குரியவன் தானே சுட்டுப்
பார்த்ததும் போக -
எஞ்சிய சிலவை
நேரமானதும் கொத்துப் போல
உருவிக் கட்டுகிறான் அவன் -
அப்படிக் கட்டும் போது
கட்டவிழ்ந்து தப்பியோடப் பார்த்தன
ஓர்சில - மணர் கூரையில்
ஓடப் பார்த்த அவற்ற்றிலிரண்டை
ஓடிப் பிடிக்கிறான் சிறுவனொருவன் -

ஆனால் ஆரஞ்சு வண்ணப் பலூன் ஒன்று
அகப்படாது செல்கிறது -
எண்ணத்ற்றவரின் ஈயத் தோட்டக்களுக்கும்
கழுத்தை நெரித்த கரங்களுக்கும்
துரத்திப் பிடிக்கும் சிறுவனுக்கும் தப்பி
எட்டாமல் பறக்கிறது காற்றில் எழும்பி
மேலே மேலே மேலே....."

Thursday, December 4, 2008

எனது வாள் - ராஜமார்த்தாண்டன்

"கூர்வாளொன்று
எப்போதும என்னிடம்.

நண்பர்களைக் கண்டால்
முதுகுக்குப் பின் ஒதுங்கிவிடும்
அபிமானிகளைக் கண்டால்
உரையுனுள்ளிருந்து
கம்பீரமாய் எட்டிப்பார்த்து
அவர் முகம் நோட்டமிடும்
வேண்டாதவரென்றால்
நாக்கில் வந்து ஒட்டிக் கொள்ளும்
அழகிய பெண்களை எதிர்கொண்டால்
முலைகளை அறுத்து ரசித்து மகிழும்
குழந்தைகளிடம்
பிரியம் காட்டுவதாய் நினைத்து
குரல்வளையை கீறிவிடும்
ரோஜாக்களைக் கொய்து
கைப்பிடியில் சூடி மகிழும்
வாளுடன் எதிரி வந்தால்
உறையினுள் பதுங்கிக்கொள்ளும்
வாளின்றி வரக்கண்டாலோ
உறைவிட்டுக் கிளம்பிப் பயமுறுத்தும்.

விட்டெறியும் மார்க்கமறியேன்
என்னிடம் எப்போதும்
கூர்வாளொன்று..."

நுழைகிறதென்று - வசந்த் Senthil

"கதவுகளை மூடச்சொன்னாய்
மூடி விட்டு வந்தேன் ....

தாழ்பாள் திறக்க முயல்கிற
சப்தம் கேட்கிறது...

முயற்சி செய்கிறது என்கிறேன்
முயற்சி தானே என்கிறாய்...

முயற்சி என்பது வெற்றி தானே?"

Wednesday, December 3, 2008

அவர்கள் வருகிறார்கள் - மு.மேத்தா

"நம்பிக்கை
நார் மட்டும்
நம் கையில்
இருந்தால்

உதிர்ந்த
பூக்களும்
ஒவ்வொன்றாய்
வந்து
ஒட்டிக் கொள்ளும்...

கழுத்து
மாலையாகவும்
தன்னைத்
தானே
கட்டிக்கொள்ளும்!"

Monday, December 1, 2008

எங்கே என் மொழி - சிவதாணு

"காலி புட்டியாகிப் போன
மனிதர்கள் வாழும் நகரத்தில்
மறைப்பற்குக் காகிதத்தை
சுற்றி கொள்கிறேன்
அதிலிருந்தும் வார்த்தைகள்
என்னவென்று தெரியாமலே
புட்டிகள் உடைந்து
வார்த்தைகள் சிதறி
புரியா மொழி பேசி
மீடியாவுக்குள் மூழ்கி
கல்,மண் தோன்றா
காலத்து முன் தோன்றிய
என் மொழியைத் தேடுகிறேன்..."