Sunday, November 11, 2012

வே. பாபு கவிதை


நான்கு இட்லிகளும்
ஒரு தண்ணீர்ப் பாட்டிலும்
முதல் இட்லியோடு
K தெருவின் 23ஆம் எண் வீட்டிற்குள்
அவன் நுழைந்தபோது
கோழிகள்
கூடையினுள் அடைந்துகொண்டிருந்தன
இரண்டாவது இட்லியோடு
போனபோது
அவை
குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தன
மூன்றாவது இட்லியோடு
போனபோது
அவற்றின் கண்கள்
கேமராபோல் சுழன்றுகொண்டிருந்தன
நான்காவது இட்லியோடு
தண்ணீர்ப் பாட்டிலையும்
எடுத்துச் சென்றபோது
அவை
அவனைப் பின்தொடர ஆரம்பித்தன

அப்பொழுதிலிருந்துதான்
நான்கு இட்லிகள்
ஒரு தண்ணீர்ப் பாட்டிலை
யார்
எடுத்துச் சென்றாலும்
அறம் அறம் எனக்
கோழிகள் கூவ ஆரம்பித்தன.

அகச்சேரன் கவிதை


அந்திக் கருக்கலில்
பறவைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்
அந்திக் கருக்கலில்
மிதக்க ஆரம்பித்து விடுகிறது
என் நிச்சலனத் தனி ஏரி

அதில்
ஒரு பரிசல்
ஒரு துடுப்பு
உங்களை அழைக்கிறது
என் வற்புறுத்தலுக்குப் பிறகும்

இரும்பு ரேழிக்கு வெளியே
பேசத் துடிக்கும்
பைத்தியத்தின் கைபோல.

ஹெச். ஜி. ரசூல் கவிதைகள்


ஒரு மலைப் பாம்பின் மீது அமர்ந்திருக்கின்றேன்
யாரைக் கூப்பிட்டாலும்
என்னைக் கூப்பிடுவதுபோல் இருக்கிறது
எதிரே மரத்தின் இலை அசையும் போதும்
பயம் தொற்றிக்கொள்கிறது
எனது நிழலைப் பார்த்தபோது
கூரிய ஆயுதங்களோடு
அது என்னைத் துரத்திவருகிறது.
எனது பெயரை திரும்பக் கூப்பிடுகிறாய்
அது எனது பெயரல்ல என்பது தெரிந்தும்.
எழுந்துநின்று வணங்குகிறேன்
வெவ்வேறு சைகைகள் காட்டி
என் இருப்பையே நிலைகுலையச் செய்கிறாய்.
எழுதிய பேனாவின் ரத்தத் துளியில்
வெற்றுத்தாள் நனைந்திட
எழுத்துகள் எதுவும் தெரியவில்லை.
ஒவ்வொருதடவையும் வெவ்வேறு வேண்டுதல்களோடு
கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன.
எனது பெயர் சொல்லி
என்னையே நான் கூப்பிட்டுக் கொள்கிறேன்
உட்கார்ந்திருந்த இருக்கை
திடீரென அசைகிறது.
ஒரு மலைப்பாம்பின் மீது அமர்ந்திருக்கின்றேன்.
நான் குடித்த விஷம்
எனது கடைசி நம்பிக்கையை
இந்த மனுவில் சுமந்துகொண்டு வந்திருக்கிறேன்.
நீ இதை வாசித்து முடிக்குமுன்
ஒருவேளை
நான் குடித்த விஷம்
என்னைக் கொன்றுவிடக் கூடும்.
உன் முதுகில் அமர்ந்திருக்கும் குழந்தை
மிகப் பிரமாண்ட கட்டடங்களின் வாசலோரம்
ஒரு சின்ன எறும்பாய்
ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறேன்.
உன் முதுகில் அமர்ந்திருக்கும்
குழந்தை கதறி அழுகிறது
குழந்தையின் அழுகையை அடக்க
வாயைப் பொத்துகிறாய்
மூச்சுத் திணறி
அது செத்துக் கொண்டிருப்பதை
உன்னால் உணர முடியவில்லை.
கடலின் கிளர்ச்சி
\கடலைக் கொல்வதற்கு ஒத்திகைப் பார்க்கிறாய்.
கடல் பிணமாகிவிட்டால்
எந்த அலைகளையும்
கடலால் எழுப்பமுடியாதென்ற
இறுமாப்பில் இருக்கிறாய்.
கடல்நீரை வற்றச் செய்வதற்கு
நீ செய்த மந்திரவாத வேலைகள்
பலனளிக்காமல் போய்விட்டது.
ஆழிக் காத்து வீசி எறிந்த
கடற்கரை மணல்துகள்பட்டு
கண்களைக் கசக்கிக் கொள்கிறாய்.
ராட்சச திமிங்கலங்களைப் பிடிப்பதற்கு
வலைகளை மணலில் வீசி காத்திருக்கிறோம்.
துப்பாக்கிகளால் குறிவைத்து
கடலலையைத் துளைக்கிறாய்.
தன் குஞ்சுக்கு உணவூட்டிக்கொண்டிருந்த
தாய்மீன் மடிந்து போகிறது.
கடலில் மிதக்கும் வள்ளங்கள்
கன்ணீரால் நிறைந்திருக்கிறது.
குண்டு துளைக்காத ஆடை போட்டு
அணு மின்பொம்மை
தனது ஆட்டத்தைத் துவக்குகிறது.
கடல் மீண்டும் கிளர்கிறது.
கொலைகாரன் இசைக்கத் துவங்கிய பாடல்
திறக்காத புத்தகத்தின் பக்கங்களை
அவன் வாசித்துவிட்டதாக
என்னிடம் கூறுகிறான்
ஒரு புத்தகத்தைத் திறந்து பார்க்காமலே
வாசித்துவிட்ட அவன்
எழுதப்படாத எனது புத்தகத்திற்கு
விமர்சனமும் சொல்கிறான்.
அவனின் அதீத ஆற்றல் கண்டு
புத்தகம் திகைத்து நிற்கிறது.
புத்தகத்தின் வரிகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்த
கொலைகாரன் எழும்பிவந்து
விமர்சகனைத் தாக்க முற்பட்டபோது
புத்தகம் கிழிந்து தொங்க ஆரம்பித்தது.
விதவிதமாகப் புத்தகங்களை
கிழித்துத் தொங்கவிட்ட பெருமிதத்தில்
கொலைக்காரன்
புல்லாங்குழலெடுத்துத் தனது பாடலை
இசைக்கத் தொடங்குகிறான்.