Thursday, August 11, 2011

அழகுநிலா கவிதைகள்

மந்திரச்சொல் ஏதுமில்லை
மாயக்காரனும் யாருமில்லை
சுழன்று ஓடும் ஆற்றுக்கடியில்
புரண்டு படுக்கிறது
கூழாங்கல்லும்

o

மீண்டும் அந்த
ஒற்றையடிப்பாதை
காத்துக்கொண்டிருக்கிறது. . .
இந்த முறை
வழியனுப்புவதற்காக.

o

ஆற்றில் விழுந்த இலை
மரத்தைவிட்டு வெகுதூரம்
வந்தாயிற்று.
அது இலை என்பது
ஆற்றுக்குத் தெரியாது.
அடுத்து அருவி என்பது
இலைக்கும் தெரியாது
தும்பியொன்று பயணிக்கிறது
இலைமீது,
ஆறு, தும்பி, அருவி
இலை
யாருக்கும் தெரியாது யார்
யாரென்பது.

o

விண்மீன்கள் ஒளிரும் மகா இரவில்
அண்டத்தின் தீராத பேரிருட்டில்
மரம் உதிர்க்கிறது மற்றுமோர்
இலையை,
அது
இந்த முறை
காற்றில் அலைகிறது.

o

வெண்கலக் குதிரை
உடல் உயிர் வாழ்வு
கனவு எல்லாமே
வெண்கலம்.

o

விளையாட்டு என்றால்
விளையாட்டுத்தான்.
அங்கேயென்ன. . . குருதி
காயம் தழும்பு வலி. . .
அங்கே பாருங்கள்
எத்தனை விளையாட்டாய்
போர்க்களம். . . பாதிப்பாதி
யானைகளும் குதிரைகளுமாய். . .
அல்லிக் குளமாய்
தலைகள் மிதக்க மிதக்க.

சுகிர்தராணி கவிதைகள்

பறைத்தொகை

திணை - குறிஞ்சி
துறை - தோழி தலைமகற்கு அறிவுறுத்தியது

இருந்துறை படர்ந்த பாசி அன்ன
ஆழ்நிறம் சுடரும் இலைவடி நீரை
பருகும் சாடி இரட்டை ஊர!
அறிந்திசின் யான்ஒரு மடமொழி தொழி
ஆவின் உலர்ஊன் தொங்கும் இல்வாய்
சாவில் முழங்கும் பறையும் மிளிர
எந்தை செய்தொழில் யாங்கனம் பகர்வேன்
சிந்தை அறிவீர் எம்ஊர் சேரி
பன்னெடும் மரபு அன்னையும் அவள்தாய்
சொல்லரும் துயரம் நெஞ்சம் துய்ப்ப
தோழியாய் உழன்று காலம் கழிப்ப
ஊழியும் வருமோ எம்நிலை தீர?
மண்புதை தேறல் தெளிசுவை உறழ
கண்டிசின் எந்தன் காமமும் உளதே
தருசூழ் அருவி ஆங்கண் புக்கு
மருள்விழி தலைவி நாட்படு காமம்
தண்பூ ஆரம் அணிந்த மார்ப!
பண்டை உரைத்தனள் என்இயல் மறைத்தே
கடுகினும் விரையும் நெடுந்தேர் கொள்ளும்
படுஇடம் அறியுமோ நறும்பூ காற்று?
ஊரும் சேரியும் ஒருநிலம் சுருக்கு
கூர்முலை அழுந்த கூடுதி எனையே!

தவமணி மகள் சுகிர்தராணியார்

திணை - குறிஞ்சி
துறை - தோழி தலைவிக்கு உரைத்தது

முதுவெயில் எல்லி சிலம்பு மறைய
மதுவுண் சுரும்பர் இன்னொலி கிளர்த்தும்
மென்சிற குடைய அம்சிற புள்ளினம்
சென்றுறை கூடு அதிர்வுறும் அன்ன
புன்செய் மாலை கருஇருள் சேர்பு
பொன்சுடர் மங்கும் பசலை பெரிதே
வாழி தோழி யான்என் செய்கேன்
நிலம்புகு முளைவிதை தலைகாண் பன்ன
தளர்நடைப் பருவம் தொடங்கக் கண்டாய்
உம்முடன் யாம்கொள் நட்புவாழி
கால்உகிர்க் கிளியினம் இளம்பழம் கொத்தும்
அகிலுடன் நாற்றம் பிணைதல் போல
தேள்விடக் கூடல் கொங்கை உதிர்க்கும்
காமமும் உடலும் முயங்கல் அறிவாய்
அடிதொழு வினையின் நோயோடு மிக்கு
சுடுமண் சிற்பம் சிதறள் ஆனேன்
வளைவரி புலிசெல் அம்நெடுங் காட்டில்
நெளிஉயிர் ஈனும் சூல்கொள் பேதையாய்
உந்தன் கழிபடர் காமமும் வாழ்வும்
செலுத்துவை நீயே நெறிபட ஆகி
என்நசை வாழ்வு தேர்ந்திசின் யானே!

அனார் கவிதைகள்

பெண் சிலந்திப்பூச்சியின் வீடு

ஒவ்வொரு கால்களிலும்
காமம் நடன ஊற்றாகி
கொடுக்கில் விசம் ஏற்றி . . . மயக்கி
மோகத் திளைப்பில் சுருளும்
ஆண் சிலந்தியைக் கலவி
ஆற அமர ஆசையாய். . . என்ன சுவையாய். . .
கொன்று. . .
இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி

நிலவில் துளையிட்ட ராட்சத முனையை
மலைமுகட்டில் இழுத்துக்கட்டி
முடிகிறாள் மறுமுனையை

முதலையின் தருணக் காத்திருப்பில்
கோடித் தாபங்களாய் வலை விரித்திருக்கிறாள்

வெறும் கோதுகளாகிய பிற பூச்சிகளும்
ஆண் சிலந்திகளின் இறந்த உறுப்புகளும்
பெண் சிலந்தியின் சிறைவாசலில் எறியப்பட்டிருக்க

கனவின் துவாரங்கள் வழி
சொட்டித் தேங்கிய
காமக் கடல் அலைகள் பாய்கின்றது
சிலந்தி வயிற்றினுள்

சிலந்திப் பெண்ணிலிருந்து தோன்றி
நீளத் தொடங்குகிற நூலாம்படைகள்
மிதமிஞ்சிய வல்லமைகளாய்ப் பொங்கி
உலகைத் தாண்டிப் பெரிதாகிறது . . .

வெசாக் பூரணை தினம்

நினைவின் அதிமென்மை படியும்
பனியின் அணைப்பு ஒளியில் எரிகின்றது

பளபளப்பான வெள்ளி வார்ப்புகள் கொண்டசையும்
சூரியகாந்தி வயல்களில் சஞ்சரிக்கின்றது
நம்முடைய பௌர்ணமி

ஒரு பாவமும் அறியாத
உன் கை விரல்களின் குளிர் தூவல்களில்
காதலை உணர்ந்தவாறு கூடவருகிறேன்

விகாரையின் முகப்பில்
கண்ணீர் துளிர்த்த இமைகளை மூடிய புத்தனின் சிலை
மேலே ஆண்மையின் திளைப்பைப் பாடுகின்ற அரசிலைகள்
காதலாகிக் கசிந்து வழிகின்ற பூரணை ஒளி

ஒளித்தாரைகளை அள்ளும் காற்று
சிறு சுடர்களின் உயிருடன் விளையாடுகின்றது
வாவிக்கரையில்
மூன்று சிவப்புநிற வெசாக் தாமரைகள் பூத்துநிற்கின்றன

அனைத்தையும் தாண்டி எங்கு செல்கின்றோம் ?

நிலவின் மங்கலான அழுகை ஒலியுடன்
சறுக்கலும் அபாயமுமான பயணத்தில்
வந்துகொண்டேயிருக்கிறது
விம்மும் தாரகைகளும்
ஆறத்தழுவுகின்ற உன் கைகளும்

மாலதி மைத்ரி கவிதைகள்

எனது மதுக்குடுவை

என்னிடமுள்ள இக்குடுவை
என் மூதாதையரிடமிருந்து வந்தது
நூற்றாண்டுகளாக
உன்மத்த வாசம் வீசுமது
எம் பெண்களின்
முத்தத்தால் நிரம்பியிருந்தது
அதன் ரேகைகளில் ஒளிந்திருக்கும்
அமுதின் ஊற்று
என்னைக் காணும்போதெல்லாம்
பிள்ளைச் சூரியனாய் வழிந்தது
கள்ளுடன் சுட்டக்கருவாடும்
மாசிமாதக் கூத்துமாய் களைகட்டிய
இளமையின் நினைவைப் பருகுகிறாள்
குடுவையைப் போலிருக்கும் பாட்டி
ஊர்ச்சுற்றி மீன் விற்கும்
நெடிய அலைச்சலுக்குப்பின்
அவளின் மாலைப் பெரும்பொழுதுகள்
பொங்கும் மதுவுடன்
காதலும் நுரைத்து வழிந்ததாம்
அவளின் பேரானந்தத்தின் குளம்
எப்போதும் நிரம்பித் தளும்பியபடியிருந்தது

எங்களின் தாழ்ந்த எரவாணத்தில்
சொருகிய மீன்பரிக்கு அருகில்
கயிற்றில் ஊஞ்சலாடும் சுரக்குடுவை
ஒரு குட்டித் தேவதையென
எனது பால்யத்திலிருந்து
என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது
அதற்கு எப்போதும் வசீகரமான
ஒரு மர்மப் புன்னகையை
நான் பரிசளித்துக்கொண்டிருந்தேன்

வீட்டுத் தென்னையின் முதல்காய்
குலதெய்வப் படையலானது
அடுத்த பாளையில் கள்ளிறக்கி
உலகை இரண்டாவது முறை
சுவைக்கக் கொடுத்தாள் அம்மா
மோகத்தின் பித்தேறிப் பருகிக்கொண்டிருக்கிறேன்
இவ்வுலகை இக்குடுவையில் ஊற்றி.

ஒட்டகங்கள் குதிரைகள் ஒரு மீன்கூடை

என் பாட்டியிடம்
ஐந்து அரபு ஒட்டகங்களும்
ஆறு கிரேக்கக் குதிரைகளும்
ஒரு மீன்கூடையும் இருந்தன
அவள் தனது கூரை வீட்டின்
சுற்றுக் கால்களிலேயே
அவைகளைக் கட்டிவைத்திருந்தாள்
அதனால் வீடு குழந்தைகள்
கும்மாளமிடும் மைதானமாயிருந்தது

விடிவெள்ளியே எழ அஞ்சும்
கருக்கலிலே வாசல் பெருக்கி
சட்டிப்பானை கழுவி
பல் துலக்கி
நிமிர்ந்து கீழ்வானத்தைப் பார்த்து
ஒரு கும்பிடு வைத்து
ஒரு சொம்பு நீராகாரத்தால்
வயிற்றை நிரப்பியபின்
மீன்கூடையுடன்
பத்துமைல் தொலைவு
கிழக்கே நடப்பாள்
ஒளி தீண்டாத குளிர்காற்று
இவள் அலுப்பைத் துடைத்தபடியே
துணையாய் கைகோத்து வரும்
கரைபிடிக்க முந்தும்
தூரத்துப் பாய்மரங்களுக்கிடையே
இவளின் வெற்றிலைச் சிவப்பேறிய
உதடு போன்ற தொடுவானத்துச் சூரியன்
கடலை முத்தமிட்டுச் சிரிக்கும்
கடற்கரையில்
காத்திருப்பவளைக் கண்டவுடன்

ஊரூராய் மீன் விற்றுத் திரும்புகையில்
காலிக்கூடையில் அரிசி புளி மிளகாய்
பிள்ளைகளுக்குக் கொஞ்சம் தீனி
விறகுகட்டு மொந்தைக் கள்ளுடன்
பேய் பிசாசு முனி மோகினி
தேவதைகளைக் கையில் பிடித்தபடி
மாலை வீடுவந்து சேர்வாள்
இந்த ஒட்டகங்களும் குதிரைகளும்
அவளைப் பின்தொடர்ந்து வந்துவிட்டன

குளித்து முடித்து வாசலில் பாய் விரித்து
வெற்றிலையை மென்றபடியே துவங்குவாள்
மோகினியின் மடியில் உறங்கும்
குழந்தைகளின் அருகில்
ஒட்டகங்கள் அசைபோட்டுக்கொண்டிருக்கும்
குதிரைகள் கால்மாற்றி நின்று கனைக்கும்.

நீலியின் மகன்கள்

கழிவறைத் தடுப்புக்குள்
பிசுபிசுத்துக் காய்ந்த விந்துவை
அலசியபடி மனைவிமார்கள்
பெய்யும் மூத்திரத்துடன்
அதிருப்தியுடன் விடிகிறது
அன்று காலை

தோப்புகளில் புதர்களில்
வல்லுறவில் சிதைக்கப்பட்ட
சிறுமிகளின் பெண்களின்
ரத்தக் களரியான
ஈ மொய்க்கும் யோனியுடன்
எழுகிறது சூரியன்

பசி எரியும் சூல்கொண்ட
வயிற்றைத் தடவியபடி
வீதிகளில்; கையேந்தித் திரிகிறது
பைத்தியக்காரிகளின் அன்றைய பொழுது

ரப்பருறை மாட்டிய குறிகள்
உரசி காந்தும் யோனிக்கு
களிம்பிடும் விலைமகளிர்
மலிந்த விடுதிகள்
ஆறாத ரணங்களுடன்
ஒரு தேநீரின் கதகதப்பில் விழிக்கிறது


காலம்
வன்மமேறி விடைத்த
ஆண்குறியைக் கையில் பிடித்தபடி
வேட்டைக்குக் கிளம்புகிறது தினமும்

சங்கம் தொட்டு
காதல் புதையுண்டுபோன நிலத்தில்
ஈன்று புறம் தரும் மகளிர்

பிரசவமனையில்
அறுக்கப்படும் தொப்புள்கொடிகளுடன்
பிஞ்சுக் குறிகளைக் கொய்கிறாள்
மருத்துவச்சி நீலி.

கெடுக சிந்தை கொடிது இவள் பணிவே

முன்னொரு பாட்டனை இவள் பாட்டி
பரத்தை வீட்டுக்குக் கூடையில் சுமந்து சென்றாள்
தந்தையோ ஊருக்கொரு குடித்தனம்
வில்வண்டி கட்டிக்கொண்டு போனான்
கணவனோ களையெடுக்கும் பெண்களை
மிரட்டிப் புணர்ந்தான் காணிகளில் சிலதை
வித்து விலைமகள்களிடம் சென்றான் மூத்தமகன்
திருவிழா கோலம் பூண்ட கிராமத்தின்
மேளயொலி கேட்டதும் குளித்துக் கிளம்பும்
இளையவனுக்குத் துவைத்த துணி எடுத்துக் கொடுத்து
வேளையோடு வந்து சாப்பிட்டுப் போகும்படி
சொல்லி அனுப்புகிறாள் எல்லாமறிந்த இவள்
கெடுக சிந்தை கொடிது இவள் பணிவே.

சிறுசுடரான யோனி

கொழுத்த களிநண்டுகள்
அலையும் அலையாத்திக்காட்டில்
செம்பவள சில்லென
ஒளிர்ந்துகொண்டிருக்கிறதென் யோனி
காமத்தின் பேரலையை
ஆத்திக்கொண்டிருக்கும் விழுதுகளின்
மேலே கூடமைக்கின்றன
தூரதேசப் பறவைகள்
நட்சத்திரங்கள் புதைந்துபோன
சதுப்பு நிலத்தின்
கூதிர்கால இரவொன்றில்
இளம் குஞ்சுகளுக்கு ஒளியேற்ற
கொத்திக்கொண்டு பறக்கிறது
கருங்கால் நாரை
அதன் அலகில்
சிறுசுடரென எரிகிறதென் யோனி
கரும்திரையென நிற்கும் வானில்
சிலாக்கோல்கள் போன்ற
சுரபுன்னைகாய்கள் நீரைக் கிழித்து
சேற்றில் விழும் சத்தம்
மிகமிகச் சன்னமாகக் கேட்கிறது
அப்போது.