Tuesday, September 20, 2011

மண்குதிரை கவிதைகள்

திணைகளின் காதல்

நீ விடுமுறைக்குச் சென்ற
உன் சிற்றூரைச் சுற்றி
சூழ்ந்து படர்கின்றன
மேகங்கள்

கலக்கத்திலோ மகிழ்ச்சியிலோ
பதற்றமடைந்த
ரப்பர் மரங்கள் எல்லாம்
சலசலக்கத் தொடங்குகின்றன

மழையின் வாசனையை உணர்ந்த
உன் குடும்பத்தின் நிறைந்த மனுஷி
வெளியே உலர்த்தவிட்டிருந்த ஆடைகளைச்
சேகரித்துத் திரும்புகிறாள்

உன்னச்சனின்
நிறமிழந்த பழைய ஆடையில்
வாசனை பிடித்துக் கிடக்கும் நீ
ஒரு மழைப் பூச்சியைப் போல்
சோம்பல் முறித்தெழுந்து
ஓடு வேய்ந்த அவள் வீட்டிலிருந்து
கீழிறங்கி வருகிறாய்

உன் ப்ரியமான லேகாவைப் போல்
மேட்டு நிலத்திலிருந்து வாஞ்சையோடு
கைகள் விரித்து வருகிறது
அம்மழை

ரப்பர் மரங்களில் இறங்கிய துளிகள்
தேங்காய் ஓடுகளில் நிரம்பி
உன் நிலத்தில் வழிந்தோடுகின்றன

ஒரு துளியைப் பருகும் ஆவலோடு
ஓடுடைத்த சிறிய ஜீவன்போல்
வாய் திறந்து ஓடுகிறாய்

என் மூதாதையர்
செப்பனிட்டு மேடேற்றிய
எங்கள் கரிசல் நிலத்தில்
உளுந்து விதைத்துக் காத்திருக்கும்
எங்கள் மூத்தவளும்
மழையின் குறிப்பையறிந்து
ஒட மரத்தின் கீழ் பதுங்குகிறாள்

வியர்வை மணக்கும்
அவள் சீலையணைப்பிலிருந்து விடுபட்டு
ஒரு துளியைப் பற்றிவிடும்
ஆவல் கொண்டோடுகிறேன் நானும்

நம்மிருவருக்குமான
அச்சிறுமழை
என் உள்ளங்கையில் விழுந்து
உன் தெத்துப் பல்லில் தெறித்துக்கொண்டிருக்கிறது

o

எண்ணற்ற பறவைகள் சிறகு விரித்துப் பறந்த
என் வானத்தில்
ஓர் ஒற்றைப் பறவையாய்
வியாபித்துவிட்டாய்

காலம் என்னும் பெரும் புதிர்
என் வானுக்கும் நிலத்துக்குமான
உன் சிறிய சிறகசைவில்தான்
அவிழ்ந்துகொண்டிருக்கிறது

பால்யச் சட்டங்களில் நடந்து
எங்கள் கரிசல் நிலத்திலிருந்து
உனக்கொரு மண்குதிரையை
எடுத்துத் தருகிறேன்
நீயும் உன் மலையாள நிலத்தின்
நானறியா மஞ்சள் பூவொன்றைப் பறித்துத் தருகிறாய்
நிலமும் வானுமற்ற ஓர் இடத்தில்
சந்தித்துக்கொள்கிறோம்
அது பிரபஞ்சம் தோன்றிய முதல் நாள் போலிருக்கிறது.

மீதமிருக்கும் என் நாட்களுக்கான ஆதாரமே
இவற்றையெல்லாம் நம்பமுடியவில்லையெனச்
சொல்லிக்கொண்டே இருக்கிறாய்
என் சிதைவின் துகள்கள் தொட்டு
மையிட்டுக்கொள்ளும் ஒருமுறையாவது உணர்வாயா
என் மனப் பூவின் மென்மையை

o

உன் இருபத்தெட்டு வயது உடலைத் தூக்கிக்கொண்டு
சிறுபெண்பிள்ளைபோல் துள்ளிக் குதித்தோடுகிறாய்
நான் உன்னைத் தொடர்ந்து வருகிறேன்

என்னைப் புறக்கணிக்கிறாய்
செல்லமான மலையாளச் சொல்லொன்றை எறிந்து விரட்டுகிறாய்
சின்னஞ்சிறு கையை உயர்த்தி எச்சரிக்கிறாய்
நான் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்

நானே எதிர்பாராத வேளையில்
திடீரெனக் கையிலேந்தி என்னைக் கொஞ்சுகிறாய்
மொழியறியா நாய்க்குட்டிபோல்
உன்னைச் சுற்றிச் சுற்றி வருகிறேன்

நீ பேசிக்கொண்டே இருக்கிறாய்
நான் கேட்டுக்கொண்டே நடக்கிறேன்
உன் சிறு வார்த்தையில்
ஓர் ஒற்றைச் சொல்லில்கூட
நான் பாதுகாப்பாக அடைந்துகொள்வேன்

பேசிக்கொண்டே இரு
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
உன் பேச்சுகள் தீர்ந்தெஞ்சும் மௌனம் போதும்
என் பெண்ணே
மீதமிருக்கும் என் நாட்களுக்கு

கோகுலக் கண்ணன் கவிதைகள்

மாறிவரும்

இந்த நட்சத்திரங்களா உயிரற்றவை
அன்பின் மொட்டுகளை யார் அங்கே விதைத்தது
படர்ந்து கிடக்கும் ஒவ்வொரு பூவும்
மெல்லத் துடிப்பது
யாருடைய அன்பைச் சொல்ல
இனியொருமுறை
இவற்றை எரி கல்லெனப் பார்க்க முடியுமா

மாறிக்கொண்டே வருகிறது எல்லாம்

புகைபோலப் படரும் பாதி வெளிச்சத்தில்
நகரும் நம் உடல்கள்
எந்த விருட்சத்தின் இலைகள்
எந்தக் காற்று நம்மை அள்ளியெடுத்து
வெளியெங்கும் இறைக்கப்போகிறது?

பழசாகிப்போன பரிசுகள் இருக்கும் அறை

பழசாகிப்போன பரிசுகள் நிறைந்த அறையில்
ஏற்கனவே திறந்து உலர்ந்த முத்தங்களும்
திறந்திருக்கும் நோட்டுப்புத்தகத்தின் நடுவில்
ஒளிந்திருக்கும் ஒரு துளி கண்ணீரும்
அதில் கசியும் ரகசியமும்

ஒரு சொல்லின் கதவு மூட
ஒரு சொல்லின் கதவு திறக்கிறது

பழசாகிப்போன பரிசுகள் இருக்கும் அறையின் கதவை
இனி திறக்க முடியாது
அங்கிருந்து வெளியேறவும் முடியாது

பரிசுகளின் அவிழ்ந்த ரிப்பன்கள்
ஞாபகப் பாம்புகளாய்ச் சீறலுடன் காலைச் சுற்ற
உள்ளே
உள்ளுக்கும் உள்ளே
தவிர
வெளியெங்கும் வேறு இல்லை

எங்கிருந்தோ கேட்கும் ஒரு பிரார்த்தனை
யாருடைய குரல்போல இருக்கிறது?

பரிசுகளின் பெருமூச்சைக் கடக்க முடியுமா?

யார் தட்டுவது கதவை
இதயத்தை உடைப்பதுபோல்
வெளியிலிருந்து?

அமிர்தத் துளி

கண்களுக்குள் பெயரற்ற நிறங்கள் மிதக்கும்
இருந்தும்
நீலமாகவே எல்லாவற்றையும் பார்க்கிறேன்

மழையால் ஆன உலகத்தில்
இருளைப் பிதுக்கி விரிகிறது
எலுமிச்சை ஒளி
அதில் மிதந்தபடி உலகை அறிந்துகொள்கிறாள்
ஒரு குட்டிப் பெண்

உறக்கத்தின் மூடிய கதவுகளுக்குப் பின்னால்
வளையும் வானவில்
விரல்களைப் பற்றுகிறது

ஒரு குழந்தையின் கைப்பிடியிலிருந்து
விரல்களை எப்படி விடுவித்துக்கொள்ளுவது

இப்போது மிதக்கும் அமிர்தத் துளி
எந்தப் பனிப்பாறைக்குள் ஒளிந்திருந்தது
இத்தனை காலம்?

உன்னிடம் வருவேன்

நம் உலகம் மழையால் ஆகும்போது
உன்னிடம் வருவேன்

அப்போது
தூரம் என்பது கிடையாது
நானும் மழையாவேன்
நீயும்கூட
இந்தப் பாடலும் மழையாகும்

மழை செய்யும்
உலகத்தில்
பெய்யும் மழையில்
மிதக்கும் காலடிச்சுவடுகள்
எங்கு செல்லும்?

உன் கண்ணீர்த் துளியின்
மூடிய கதவுகளைத்
திறந்து நான் வருவேன்

நடனம்

மிருகத்துடன்
நடனமாடும் சிறுமி
காலத்தை மாற்றுகிறாள்
சிறுமியின் விரல் அசைவில் மழை பொங்குகிறது
அவளுடைய கண்ணசைவில் மரங்கள் பூத்துக்குலுங்குகின்றன
அவளுடைய நகரும் பாதங்களுக்குக் கீழே உறைபனி படர்கிறது
மிருகத்தின் மூச்சுக் காற்றில் சிறுமியின் பாவாடை உயர்ந்து குடையாய் விரிகிறது
மிருகம் பசியுடன் நடனமாடுகிறது
சிறுமியின் பசி வேறு மாதிரியானது
காலம் சுழல்கிறது சிறுமியின் இடையைப் போல்

இரவுக்கும் பகலுக்கும் இடையில் விழித்தவனைச் சுற்றி
சிறுமியும் மிருகமும் ஆடுகிறார்கள்
அவனுடைய நினைவுகள் குழம்புகின்றன
அடையாளம் சொல்ல முடியாத குரல்கள்
அவனை அழைக்கின்றன
அவனுடைய கால்களுக்கடியில் நிலம் நகர்ந்துகொண்டே போகிறது

ஒரு அசைவுமின்றி நகராமலேயே
அவனும் அந்த நடனத்தை
ஆடிக்கொண்டிருக்கிறான்
என்று அறியும்போது
அந்த நடனத்திற்கான பாடலை அவன் இதயம்
எழுதத் துவங்குகிறது