Sunday, June 12, 2011

கவிதைகள் பெருந்தேவி

கடைசி மேசையில் ஓர நாற்காலியில்

ஊமத்தைக் குளிர் ஊடுருவ
சாக்ஸை நன்றாக மேலே இழுத்துவிடுகிறேன்
ஆண்களும் பெண்களும் சரவிளக்குகள் கீழே
நிழல்களின்றி நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள்
மெல்ல நடந்து
ஒருவனின் கையைப்பற்ற
விரைகின்றன கால்கள்
“மன்னிக்க வேண்டும்
நான் ஏற்கனவே ஒருத்தியோடு ஆடிக்கொண்டிருக்கிறேன்”
அப்படி யாருமில்லை என்கிறேன்
“இல்லை இங்கே பாருங்கள்”
அங்கே எவளுமில்லை என்கிறேன்
“இதோ இவளைத் தெரியவில்லையா”
நான் தான் இவள் என்கிறேன்
“குடித்திருக்கிறீர்களா?”
அவன் அவமானப்படுத்துவதாகக் கத்துகிறேன்
“நீ பைத்தியமென்று நினைக்கிறேன்”
யார் பைத்தியமென்று தரையை உதைக்கிறேன்
“நாம் சற்றுத் தள்ளி நகர்ந்து ஆடலாம், இந்தக் கிறுக்கு
நம் இன்பத்தைக் குலைக்கிறது”
நானன்றி எவள் உனக்கு இன்பத்தைத் தரமுடியும்?
“தள்ளிப் போ இல்லையென்றால் செக்யூரிட்டியைக் கூப்பிடுவேன்”
யாரையேனும் கூப்பிடு நான்தான் இவள்
இவள் இல்லை நான்தான் இவள்
நீ நீ என்றால் நான்தான் இவள்
ஒரு கணம் அவன் மறுப்பேதுமின்றி
என் கரங்களைத் தொடுகிறான் என்னிடுப்பை வளைக்கிறான்
“என்னாயிற்று, ஏன் எங்கோ பார்க்கிறாய்?”
கடைசி மேசையில் ஓர நாற்காலியில்
ஷூவைச் சரிசெய்தபடி நிமிர்கிறாள் ஒருத்தி
எங்களைப் பார்த்தும் பாராது பின்னர்
வெளியே நடக்கிறாள்.

o

இருவர் கொண்ட ஓர் உறவு

சட்டையிலிருந்து அவனை விடுவித்தாள்
அவன் புஜங்கள் மினுத்து அலர்ந்தன
நீ பஹுத் செக்சி
கருங்குழல் விளக்குகள் இவை
கூச்சப்பட்டான்
ஆறு பேக்குகளில் ஐந்து வந்துவிட்டிருந்தன
அடேயப்பா என்றாள்
என்ன பாதாமா போடறே
மீண்டும் கூச்சப்பட்டான்
மீசையில் பூத்த நுனிநரை
புதுபியரில் நுரை போலொரு துள்ளல்
இதுகூட நல்லாத்தான் இருக்கு
கூச்சப்பட்டான்
என்ன வெட்கம் என் கன்னுக்குட்டி
இறுக்கினாள் முன்னேறினாள்
நம் பரப்பிய புனைவுகளில் காலம்காலமாக
பெண்ணை ஆண் இறுக்குவதுபோல
பெண்ணிடம் ஆண் முன்னேறிக் காட்டுவதுபோல
நிசத்தில் இங்கே
அவள் வலுவில்
அவனையும் முன்னேற்றினாள்
கண்மூடாக் கலை
வித்தற்ற ஒரு புள்ளி
சின்ன நிறுத்தம்
இன்னும் கூச்சப்பட்டான்
பெண்ணிடம் மட்டுமே கூச்சப்படுவேன்
என்று அவளில் குழைந்தான்
அவள் பெண்ணா
யாருக்குத் தெரியும்
அவளுக்கும் வெட்கம் வந்தது
அவள் பெண்ணென்று அது வரவில்லை.

o

தனித்து

நெளிவிலும் சுழிவிலும்
நேரம் தொலைத்தும்
பார்வை தப்பியும்
நினைவற்ற ஒருவழியில்
நின்றும் நிற்காமலும்
ஓட்டமாய் நகர்கிறது
சின்னஞ்சிறு
மணி.

o

நேயம்

யாரையும் பிடிக்காத என்னை
யாரையும் பிடிக்கும் ஓர் உலகு துரத்துகிறது
சக்கரைக்குவியலில் மூச்சுமுட்டி
அழுந்திக்கிடக்கிறது ஓர் எறும்பு

கவிதைகள் ரவிசுப்ரமணியன்

செயற்கைக்கோள் சிகிச்சை

அதிகாரத்தின் குரலைக் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டதால்
ஒரு நாள் கேட்கவில்லை எனினும் துடித்துப் போவர் மக்கள்
மயக்கும் அதன் மதுரத்தில் சொக்கிக்கிடந்தனர்

அலுவலகங்களில், வீடுகளில்,
கடைத்தெருவில், சந்தைகளில்
கடற்கரையில், குளக்கரையில்
கோவில் வாசல்கள் உட்பட
அதன் கட்டளைகள் கேட்டபின்தான் விடியும்பொழுது

படிக்கச் செல்பவர்களும்
இதற்கு விதிவிலக்கில்லை
காற்றைப் போல் தவழ்ந்து வந்து
அனைவரது செயலையும் தீர்மானிக்கும் காரணியான
அதன் உள்ளடக்கக் சுருதியே வேதமானது எல்லோருக்கும்

எல்லா வலிகளுக்கும் மருந்தாக
எல்லா அவசங்களுக்கும் ஆறுதலாக
எல்லாத் தேவைக்கான தத்துவங்களாக
எல்லோரும் முணுமுணுக்கும்
எளிய மந்திரமாக மாறியிருந்தது அது

நண்பகல் நேரத்துத் தேநீரின்போது வடையாக
மதிய உணவின் ஊறுகாயாக
மாலைநேரச் சிற்றுண்டியின்
சன்ன உரைப்புக்குப்பின் ருசிக்கும் காப்பியாக
இரவு உணவுக்குப் பின்னான மலிவுப்பழமாக
மாறி மாறி உவகை தந்த அற்புதமது

சீமானுக்கும்
சாக்கடையின் மூடியில் படுத்துறங்கும் தோமானுக்கும்
அதுவே அமுது
ஓர் அசரிரீயின் வாக்கைப் போல
அதிகாரத்தின் குரலைக் கேட்டுச் சீரழியும் மக்களுக்கு
அதிகாரம் சதா
தங்களைப் பகடிசெய்யும் குரல் மட்டும் கேட்கவேயில்லை.

யார் காதிலும் விழாதவாறு
எல்லோரது காதுகளின் ஒரு மர்ம நரம்பை மட்டும்
எப்படிச் செயற்கைக்கோளின் லேசர் சிகிச்சையால் அறுத்தார்கள்
என்பதைத்தான் இன்னும் வெளிநாட்டு உளவாளிகளாலும்
கண்டுபிடிக்க முடியவில்லை.

கவிதைகள் மனோமோகன்

அரக்கனும் கதைகளும்

விடுகதைகளாலான அவளது சுருக்குப்பை
அவ்வளவு எளிதில் அவிழ்வதில்லை
இரண்டு வெற்றிலையோ ஒற்றை மண்பாக்கோ
குழந்தையின் கள்ளமற்ற சிரிப்போ
ஏதேனும் வேண்டும் ஒரு புதிரவிழ
அவளது கதைகளில்
இளவரசியைக் கடத்திப்போகும் அரக்கனின்
உயிர் எதிலிருக்குமென்று அவளுக்கு மட்டுமே தெரியும்
ஒருமுறை அது கிளியிலிருந்தது
ஒருமுறை வண்டியிலிருந்தது
ஒருமுறை சமுத்திரத்தின் அடியாழத்தில்
கடல்குதிரைகளால் பாதுகாக்கப்படும்
எலுமிச்சம் பழத்திலிருந்தது
ஒருமுறை தேடிச் செல்பவனின் கனவிலிருந்தது
ஒருமுறை
அதுவரை அவிழ்க்கப்படாத புதிரொன்றிலிருந்தது
ஒருமுறை
என் வீட்டுத் தேநீர்க் கோப்பையிலிருந்தது
இளவரசியை மீட்கப்போகும்
குதிரைவீரர்களால் நிறைந்த எனது தெருவில்
நேற்றைய தினம் அரக்கன் வந்து போனான்
இந்தமுறை அவன் கடத்திப்போனது இளவரசியையல்ல
இளவரசியைப் பற்றிய கதைகளை
விடியலில் எரிப்பார்களோ புதைப்பார்களோ
கதைகளைத் தொலைத்த பின்னிரவில்
அரக்கனைக் கொல்லும் சூட்சுமம் மறந்து
வெளிவாசலில் உறங்குகிறாள்
ஆயிரம் கதைகளாலான அந்தப் பாட்டி.

வால் தின்னும் பல்லி

இழக்கவியலாத வால் பகுதியில்
தனது மரணம் இருப்பதறிந்து
என்னை எதிர்கொள்ளும் கணங்களில்
தனது வாலைப் புசித்துவிடும்
சுவர்ப் பல்லி வடிவிலான அவதாரக் கதையை
உன்னைப் போலவே கதைகளோடு வாழ நேர்ந்த நான்
வால் தின்னும் கதையென்கிறேன்
நீயதைப் புராணமென்கிறாய்
யாரிடமும் சொல்லிவிடாதே
ஆப்பிள் தோட்டத்தில் சந்தித்த பெண் சாத்தானின்
நிர்வாணம் ரசித்த உலகத்தின் முதல் பெண்
தானொரு பெண்சுகியென உணர்ந்த கணத்தை
உண்டு செரித்தலும்கூட
அந்தப் பல்லிதான்