Thursday, April 14, 2011

கவிதைகள் - தேவதேவன்

கை கழுவுதல்


கைவிரல்களைச்
சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிலும்
இடதுகை விரல்களுக்குக்
கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்
என்றார் அம்மா
கழிப்பறைக் கடன்களின்போது
இடதுகையினைச் சோப்பு தொட்டு
தூய்மையாக்கிக்கொள்ளும் பழக்கத்தை
அம்மா சொல்லிக்கொடுத்த முதல்நாள்
ஞாபகமிருக்கிறது.
அய்யய்ய அந்தச் சோப்பைப் பின் யார் தொடுவா
என அருவருத்து அந்தச் சோப்பையும்
சுத்தமாக்கிவைக்கும் பழக்கத்தை
என் துணைவியார்தான் இயற்றிவைத்தார்.
அன்று முதன்முறையாக ஒரு சோப்புக்கட்டி
என்னைப் பார்த்து நன்றியுடன்
கண்பனிக்க நெகிழ்ந்து நின்றதைக்
கண்டேன் நான்
எனது துணைவியாரின் நுண்ணுணர்வை
மறக்காமல் பாராட்டி நானும் நன்றி சொன்னேன்.
ஆனால் இடதுகை விரல்கள் தீண்டிக் கழற்றிச் சுழற்றி
தங்களைத் தாங்களே சுத்தப்படுத்திக்கொண்டு
சோப்பையும் சுத்தப்படுத்தியதைக் கண்டு
என் துணையின் விழிகளில் ஒளிர்ந்த
ஒரு திருப்தியையும் மீறி
ஏதோ ஒரு குறையுணர்வு
பாரமாய் அங்கே நிலவியது போலிருந்தது.
அதற்கு அடுத்தமுறை
அன்று அந்த இடதுகையின்
வேலைபாதியில்
மிகுந்த நட்புடன் குறுக்கிட்டு
அந்தச் சோப்பினை வாங்கி அமர்த்திவிட்டு
கொஞ்சம் சோப்புகொண்ட
தன் விரல்கள்கொண்டே
இடதுகையின் விரல்களைக் கழுவியது
வலதுகை.
அய்யய்ய என்று
இப்போதும் தோன்றிய சொற்கள்
ஆனால் சுருதி குன்றி மடிந்தன.
இதுவரை தங்கள் வாழ்நாள் கண்டிராத பிரியமுடன்
இரு கைவிரல்களும் கூடி
சோப்பினைக் கழுவி வைத்தபடி,
மேலும் மேலும் நெகிழ்ந்தொழுகும் நீரில்
தங்களைச் சுத்தப்படுத்திக்கொண்டு
அருகிலிருந்த துவாலையினை உருவி
தங்களை உலர்த்திக்கொண்ட காட்சி. . .

No comments: