Monday, November 14, 2011

அய்யப்பமாதவன் வசன கவிதைகள்

இருளுக்கு முன் விழுந்த தூறலிடையே நனையாதிருக்க தேநீர்க் கடையின் சதுரத்தினுள் நுழைந்தேன். கண்ணாடிக் குவளையினைப் பிடித்தவாறு அழகிய அந்த அரக்கு வண்ணத் திரவத்தைத் தொண்டைக்குள் இறக்கினேன். தூறிய மழையின் சுகத்திற்கேற்ப தேகமெங்கும் வெப்பமூட்டிய தேநீர் மகிமையுடனிருந்தது. காலியான குவளை மழை விலகிக் கலைந்த மேகங்களிடையில் இறக்கும் பரிதியின் ஒளி பட்டுப் பிரதிபலிக்கிறது. நான் உட்சென்ற தேநீரின் கதகதப்பில் பல ஞாபகங்களிடையே பிரதிபலிக்கிறேன்.

o

மதியத்தில் நல்ல வெயிலில் ஒரு கொன்றை மரத்தின் கீழ் ஒரு மிதிவண்டியின் பின்னால் வண்ண வண்ண நிறங்களில் ரோஜாமலர்களை என் மாடியிலிருந்து கண்டேன். அவற்றின் ஒளிவு மறைவிலா அழகினூடே நான் என்னை மேலும் கவிஞனாக்கிக்கொண்டிருந்தேன். மண் அடைத்த சிறு பையிலிருந்து பிரமாண்ட நிலத்தினிடையே சிச்சிறு கவர்ச்சியில் காற்றின் மெல்லிய வருடலில் விற்பவனின் முன்னே விற்கப்படுவது தெரியாமல் அசைந்துகொண்டிருந்தன. இதற்கு முன் வாங்கி வைத்த இதே மாதிரியான பூந்தொட்டி ரோஜாப்பூக்கள் பல நாட்களிருந்து வசீகரத்தை எனக்களித்தன. மூன்று நாள்கள் இல்லாது பின் வீடு திரும்பிய வேளை ரோஜாக்களின் உயிர் சருகாகியிருந்தது. அழகின் உயிரைக் காப்பது அவ்வளவு எளிதல்ல என்பதைத் தெரிந்திருந்தேன். மிதிவண்டிக்காரனோ ரோஜாக்களில் உயிரைச் சருகாகாமல் பார்த்துக்கொள்கிறான் போலும்.

o

சிறுமிகள் முதுகில் பாடசாலைகளைச் சுமந்து பாடத்தின் சுமையை மறந்து ஒருவர்மீது நீர் தெளித்து விளையாடிக்கொண்டிருந்தனர். கல்வி தரும் அழுத்தத்தில் மூளை கலங்கித் தவிக்கும் சின்னப் பிள்ளைகள் கடைசி மணியில்தான் நிம்மதியடைந்தவர்களாய் வெளியுலகின் விடுதலையில் புன்னகைகளை முகங்களாக்கி வருகிறார்கள். அவர்கள் பார்க்கும் எவற்றிலும் கோலாகலத்தை உணர்கிறார்கள். சிரிப்பின் மொழியைப் பகிர்ந்துகொள்கிற வேளையில் வீட்டின் பள்ளியின் அடக்குமுறைகளில் மீறி மகிழ்ச்சியின் உச்சத்தையடைகிறார்கள். தெருவில் போன கோழிக்குஞ்சுகளில் கோழிக்குஞ்சுகளாய் மாறி சுதந்திரவெளியில் பறப்பதிலிருந்தனர்.

o

படுபயங்கரக் காற்று வீசியபோது தாழ்போடாத கதவு ஹோவென்று திறந்தது. மொத்த வெளியும் என் மேல் கவிந்தபோது நான் ஆகாயமானேன். என்மீது முகிலொட்டிய ஈரமும் நட்சத்திரத்தின் மணல் போன்ற மினுமினுப்பும் நிலவின் ஒளித் துளிகளும் படிந்ததுபோல் உணர்ந்தேன். கிறுக்குப் பிடித்த காற்றில் மரங்கள் தலைவிரி கோலத்திலிருந்தன. வேரோடு பிடுங்கி என்மீது மரம் சாய்ந்துவிடுமோ என்று அச்சமாகவே மாறினேன். வெருண்டோடிய கறுத்த மேகங்கள் பொழிய கங்கணம் கட்டிக்கொண்டிருந்தபோது சின்ன சின்னதாய்த் தூறல் துவங்க கதவினால் இயற்கையை மூடினேன்.

No comments: