Tuesday, October 11, 2011

சக்தி ஜோதி கவிதைகள்

வாகை என்ற இனம்

கோடைமழைக்குப் பிந்திய
இந்த அதிகாலையில்
வாகை மரத்தினடியில் நிற்கிறேன்

இந்த வாகை மரம்தான் எத்தனை பெரியது
எத்தனை எத்தனை பூக்கள்
இளமஞ்சளாய் மலர்ந்திருக்கின்றன
என்றபோதும்
வாகை மரம் புறக்கணிக்கப்பட்ட மரங்களில் ஒன்று

நானும் வாகையும் இவ்விதத்தில் ஒன்றுதான்
ஓர் இனத்தின் முன்னே பெண்ணாக
விருட்சங்களின் நடுவே வாகையாக
புறக்கணிப்பின் வேதனையை அறிந்தவர்களாக

வேர்கள் நிலத்திலும்
கிளைகள் ஆகாயத்திலுமாய் வியாபித்திருக்கிறோம்

வெற்றியை அறிந்திடச் செய்பவர்கள்தான் நாங்கள்

வாகையும் நானும் ஒருபோதும்
நிழலுக்காகவோ பூக்களுக்காகவோ
வளர்க்கப்படவில்லை
என்றறியும் ஒருவன்
வாகை மலரைச் சூடிக்கொள்ளும் இரவில்

நிராகரிப்பின் வலி மறந்து பெருமையடைவேன்.

நதிக்கரையில் நிற்கும் புதிர்

நதிக்கரையில்
தனித்து விடப்பட்ட குடத்தைப் பார்க்கிறேன்

ஒரு தாயின்
சுமை தூக்க முடியாத
இயலாமையால் இருக்கலாம்

காதலனுக்காய்க்
காத்திருந்ததன் சலிப்பாக இருக்கலாம்

கணவனின் துன்புறுத்தல் தாங்காமல்
ஆற்றில் விழுவதற்குத்
துணைக்கு வந்ததாய் இருக்கலாம்

புதிதாக
நீர் சுமந்து பழக ஆற்றுக்கு வந்த
சிறுமியின் விளையாட்டாக இருக்கலாம்

ஒரு வெற்றுக் குடத்துடன்
நதிக்கரையில் நின்றிருக்கும்
என்னைப் பற்றி
யாருக்குக் கவலை.

கல்வாரி மலைப்பாதையில்

ஜெருசலத்து நகரின் வீதியில்
கல்வாரி மலைப்பாதையில் நடந்துகொண்டிருந்தேன்

நெருக்கமான கடைகளும்
கூட்டமாக மனிதர்களும்
சற்றே களைப்புற்ற
பயணத்தின் இடைவெளியில்
இயேசுவைச் சந்தித்தேன்

அவர் முக்காடிட்டிருந்தார்
தேவரீர்
ஏன் முக்காடிட்டிருக்கிறீர்
எனக் கேட்டேன்
ஒருவரும் என்னைத் தரிசிக்க விரும்பவில்லை
மேலும்
நான் வியாபாரப் பொருளாகிவிட்டேன்
வியாபாரிகள்
யாரொருவரையும் பார்க்க விரும்பவில்லை

கைப்பையிலிருந்த
முகம் பார்க்கும் கண்ணாடியை
அவரிடம் தந்தேன்
அவர்
தன் முகத்தையும்கூடக் காண்பதற்கு
விரும்பவில்லை என்றார்

தன் முகமும்
தன் இருப்பும்
மனிதத் திரையில் மறைந்திருப்பதாகவும்
கூறிக் கடந்தார்
அவர் நடந்து செல்லும் பாதையைப்
பார்த்துக்கொண்டிருந்தேன் இருளில்.

ஆடைகளற்ற தினம்

ஒரு நாளில்
நிறைய ஆடைகளை அணிய வேண்டியதிருக்கிறது
ஒவ்வொரு ஆடையை அணிந்துகொள்ளும்போதும்
அத்தனை சலிப்புத்தட்டுகிறது

ஓர் ஆதிவாசியாக இருந்திருந்தால்
இத்தனை ஆடைகள் தேவைப்பட்டிருக்காது

நவீன யுகத்தில் ஆடைகள் பெருகிவிட்டன
ஆடைகள் மனிதர்களைத் தின்றுவிட்டன

நான்
ஆடைகள்மீது வெறுப்புற்று இருக்கிறேன்
ஒரு பெண்ணாய்
இத்தனை ஆடைகளை அணியத்தான் வேண்டுமா

ஒரு நாளின் முடிவில்
வீடு திரும்பி
ஆடைகளைக் களைந்து எறிகிறேன்

என்னைச் சுற்றியிருந்த இரும்பு வளையங்கள்
ஒவ்வொன்றாய்க் கழன்று விழுகின்றன
குளியலறையில் பிரவேசிக்கின்றேன்
தலைக்கு மேல் பொழியும் நீர்
என் துயரங்களைக் கழுவிச் செல்கிறது
நீரால் குளிர்ந்தபடி இருக்கின்றேன்

என்றபோதும்
இன்னும் ஓர் ஆடை
வெளியே காத்துக்கொண்டிருக்கிறது.

No comments: