Tuesday, October 11, 2011

தேவதேவன் கவிதைகள்

எங்கே எனத் தெரியாது...

எங்கே எனத் தெரியாது
சாகசங்களும் போராட்டங்களுமாய்க்
கொந்தளித்து விரைந்துகொண்டிருக்கும்
சாலையில்
இரு சக்கர ஊர்தியின் பின்னிருக்கையில்
மருங்கு நோக்கி அமர்ந்திருந்த ஒரு பெண்.
மரச்செறிவின் நிழல் இருக்கை ஒன்றில்
தன் உயிர்வாழ்வின் மர்மத்தை
ஒற்றையாய் உண்டுணர்ந்தபடி
தன்னந்தனியாய் அமர்ந்திருப்பவள் போன்றாள்.
சாலையின் புழுதி தீண்ட அஞ்சும் ஒரு சுடர்
சலனமற்றுக் கனன்றுகொண்டிருந்த ஓர் அற்புதம்!
என் உள்ளுறையும் தெய்வமோ
அன்றி, என் வாழ்வில்
கடந்து மறையும் ஒரு படிமம் மாத்திரம்தானோ?





மாடித்தளத்தில் நின்று கூந்தலுலர்த்தும் பெண்

உப்பரிகையில் வந்துநிற்கும்
ராணி போலிருந்தாள்
மாடித்தளத்தில் வந்துநின்று
கூந்தலுலர்த்தும் பெண்.

அங்கே ஒரு புல்பூண்டையும்
முளைக்கவைக்க இயலாத
சூரியனுக்காய் இரங்கித்தானோ
மாடித்தளம் முகிழ்த்த ஒரு மலராய்
அவள் வந்து நின்றாள்?

அவன் ஆசையால் பூத்த மலர்
தனது ஆசையைக் கோதிக்கொண்டிருந்தாள்
அவனிடமிருந்தே பிறந்து
அவனே அண்ணாந்து பார்க்கும்படியான
எழில் மலர்.

ஒரு முழுநிலவு தன் உலகிருளைச்
செவ்வையாய்ச் சமாளிப்பதுபோல்
அவள் கூந்தல் கோதிக்கொண்டிருந்தாள்

எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு
அவள் முன்னால் வந்து நின்றான்
சூரியன்.

அவள் கூந்தலின் ஈரத்தை
வாங்கிக் குளிர்ந்தானோ?
உலராத அவள் புன்னகையின்
ஈரத்திற் திளைத்தானோ?
அவள் காதலின் கருணையிற்
தனை மறந்தானோ?
மரணமற்ற ஒரு பேரழகில்
தன் உயிர் கரைந்தானோ?

No comments: