Friday, February 10, 2012

நான்கு கவிதைகள் இரா. சின்னசாமி


I
ஒரு செஞ்சோளம் அதன் இனிப்பை
விளைவிக்கும்போது எனது
கிழவி அந்த முரட்டுக் கிழவனை முத்தமிடுகிறாள்
கிழவன் விரிசல்விட்டு காய்த்துப்போன விரல்களை
அல்லது
அவளது கருவை மழைக்காலத்தில்
பெரும்பாறைகளை நகர்த்திய நிலத்தின்
உதிரக் கசிவோடு விரும்புகிறான்
அவளது சிசுவே தானியமென்கிறான்
மழை பொழிகின்றது
அவர்கள் முட்செடிகளை அகற்றுகிறார்கள்
ஒரேயொரு பூசணிக்காய்க்கு
அல்லது
நாய்கள் தின்ன மறுக்கும் புடலங்காய்க்கு
கிழவன் உறங்கும்போது
பெரும்பாறைகளை முதுகில் சுமந்திருப்பவனைப் போல
கிழவியைப் புணருகிறான்
அவள்
சிறு தானியங்களால் உயிர்பெற்ற
வளர்ப்புப் பறவையை
அவனுக்கு உணவாக்குகிறாள்
இப்படித்தான் நண்பர்களே
இந்த நிலத்தில் காதல் வளர்ந்தது
ஒரு மொழியுங்கூட
II
கொடும் கோடையின் நீண்ட வறட்சியில்
குழந்தைகளையும் ஆடு மாடுகளையும்
அதைவிட
ஏமாற்றும் தானியங்களையும்
சுமந்து சுமந்து
அல்லது
நடந்து நடந்து
நிலத்திற்கு வந்து சேர்ந்தவர்கள் அவர்கள்
அவர்களது உறவினர்கள்
எத்தனை கல் அல்லது
அதன் எறியும் மைல் தொலைவில்
இருக்கிறார்களென்றோ
பஞ்சத்தின் உயிர் எத்தனமாய்
விதியின் பெயரால்
இருக்கிறார்களென்றோ இருந்தால்
நான் அதை முன்னறிவிக்கிறேன்
ஒரு வறட்சிக்குப் பொறுப்பற்றதுதான்
அத்தனை தத்துவங்களும்
கொடும் கோடையில் அவர்களது குழந்தைகளையும்
நம்பிக்கைக்குரிய கால்நடைகளையும்
மிதமிஞ்சி அரவணைத்து வானம் பார்க்கிறார்கள்;
தொடர்ந்து
நிலத்திலிருந்து வெளியேறுபவர்களை
நானுங்கூடக் கைவிடுகிறேன்
கொஞ்சம் கேழ்வரகுக் கூழும்
கீரை மசியலும்
என் புணர்ச்சிக்குத் தந்த
மேன்மையோடு
அந்தக் கிழவனும் கிழவியும்
ஆக அதன் இறுதியில் தளர்ந்தும்
நோயுற்றும் இறந்து விடுவார்களெனில்
நான் உங்களிடம்
ஏதாவதொரு கீரையை மட்டும் பரிந்துரைப்பது
அனைத்து உரிமைகளின் அவமானம்தானே
அந்த முதிய நிலத்தின் மீதான
மஞ்சள் பயிரிலும் இளம் மாலையின்
சூரியக்கிரணங்களிலும்
என் காதல் இப்படித்தான் தொடங்குகிறது.
III
உன் கருக்கரிவாளை
உன்னிடமிருந்து காலம் பறித்துக்கொண்டுவிட்டது
எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது
உன் உறவின் தொப்புள் கொடியையும்
அதைக்கொண்டுதானே அறுவடை செய்தாய்
மொச்சைப் பயிரின் வாசமுள்ள காதலியையும்
நிலத்தையும்
இயந்திரங்கள் எடுத்துக்கொண்டுவிட்டன.
அப்பொழுதுதான் நம் வீட்டுக் கோழிகள்
நடத்தை கெட்டுப் போய்விட்டன
நானும்
குடிபோதைக்குத் திரும்பினேன்
எல்லாம் முடியட்டும்
நமக்கான பழங்கள் அல்லது
அந்த அதிக நம்பிக்கையுள்ள அந்தக் கடவுள் மனம்
கனியட்டும் என்று நாம் செய்த பிரார்த்தனை
ஏன் நதிகளை மாசுபடுத்தியது
உனது தந்தையும் எனது தந்தையும் மைத்துனர்கள்
உனது தந்தை
நமது கிணற்றில் நீந்தும் பல நூறு வருட ஆமை
உன்னிடம் நான் மன்னிப்புக் கேட்பது
என் தந்தையின் பொருட்டுத்தான்
நல்ல நாளில்
அதிக விலைக்கு விற்க முடியாத
முருங்கைக் காய்கள் காத்திருந்தன
சந்தையில் அவை
உன்னைக் காதலிக்க முடியாதபடிக்கு
மலிவு விலையில் சீரழிகின்றன
என் தந்தையைப் போலவே என்னையும் நீ
மன்னித்துவிடு
உனது முத்தத்தால்
விலை மதிப்பற்ற பயிர்களை உண்போரின்
பொருட்டு உண்டாக்குவேன்.
IV
ஆதியின் நிலம் மனிதருக்கானதா
குரங்குகள் புணர்ந்து அலைந்த
முன்னெச்சரிக்கையான நிலமது
நமக்கு நீர் பற்றித் தெரியும் அல்லது
தாகமெடுத்தலையும் நாய்களையும்; அதன்
உப்பு விரும்பும் நாக்கையும் அறிந்தபடியால்
வீட்டு வாசல்களுக்குக் கொணர்ந்தோம்
இப்படித்தானே
தானியங்களின் காதல்
உனக்கும் எனக்கும் நேர்ந்தது
ஆனாலும் நீ நாய்களை நம்புகிறாய்
ஓர் ஆணானவன் நிலங்களையும் கடல்களையும்
கடக்க சபிக்கப்பட்டவன்
எல்லாம் உன்பொருட்டே தேவி
எனினும் உன் காதலை நான்
முழுமையாக வளர்ச்சியடைந்த
அன்னாசிப் பழத்தில் காண்கிறேன்
அது அதிக வெப்பமுடையது
உனக்கும் எனக்கும் அது காதலை உறுதிசெய்யும்

No comments: