Monday, March 12, 2012

றஷ்மி கவிதைகள்


நச்சு இயல்புள்ள குட்டையின் ஓரமாய்
ஒதுங்கிய உன் குதிரைகள்
இச்சைகளின் அரசி சர்ப்பங்களை வசியம்செய்து
ஏவல் வாங்கினாள்:
சமிக்ஞைகளைச் சிரமேற்கொள்ளவாய்க் கட்டுண்ட சர்ப்பங்களுக்கு
ஏக்கங்களை ஏற்றி உரு மறைந்து திரிய அவள் கற்பித்தாள்,
போகங்களின் நெருப்பைத் தீனியிட்டாள்


அஞ்சனமிட்ட நீள் விழிகளுக்கு
-அவை மத்தியில் கூறாய்ப் பிரியா இணைந்த கட்புருவமுடையன-
சைகைகளினால் போர்களை ஆணையிடும்
வலுவிருந்தது.
களங்களின் சூட்சுமங்கள் தேறிக்
கொய்த குறிகளை மாலை அணிந்தவளின் ஆழ் புலங்களில்
அவளை மாசு அற விசுவாசித்தவர்கள்
சேவகம் பணிக்கப்பட்டிருந்தார்கள்.


ஆசைகளால் உருவேற்றி மந்திரித்த பாம்பின் முட்டைகளை
காற்றில் தூவி ஆண்களில் தீரா வியாதிகளை ஏற்றடுத்தியவள்
நேரங்களைக் குறுக்கீடுசெய்து
அவர்களைப் பித்து நிலையில் பேணிப் பதப்படுத்திவைத்திருக்கும்
வித்தை அறிந்திருந்தாள்.


வசீகரத்தினால் வரம்பெற்றிருந்த அவளது நா
கபட மிகு கண்களின் வார்த்தைகளுக்கு
ஒலி வடிவு கொடுத்தது - அவை
மரபணுக்களில் போகங்களின் துயரச் சாயைகளைப்
படியவைக்கிற ஆற்றல் பெற்றிருந்தன.


அவள் மேனியில் கமழும் வாசனை
தாழம் மடல்களினதும்
கொல்லையில் அவள் உரித்த தோல்களுள் வளரும்
குடைக்காளான்களினதுமாயிருந்தது.
அது தீண்டப்பெற்ற
இளைஞர்களுக்குக் கட்குருடு வந்தது
அவளை மட்டுமே முன்னிறுத்திய அந்தகம் சிந்தைக்கு.


ஒரு நூறு ஆண்டுகள் காலம்
சித்து விளையாட்டுகள்பால் ஆட்கொள்ளப்பட்டிருந்தவன்
பிறகொருநாள் துர்க் கனாவிலிருந்து
விழித்தெழுவதுபோல அந்தத் தோட்டத்திலிருந்து
வெளியேறியிருந்தேன்.
தீரா வேட்கையின் வலியிருந்தது பின்
கொஞ்சம் நாட்களுக்கு. . .


எனது இரவுகளின் கருமையில் மினுங்கிக்கொண்டிருந்த
சிவந்த, வெறிநாய்களின் மணிக் கண்களை
இடறும்படி உருட்டிவிட்ட இச்சைகளின் அரசி
குயுத்தி மிக்கதும் சாதுர்யமானதுமாய்-
என்னை நோக அடிக்க
உயிர்நிலைகளைத் தேர்ந்தெடுத்த
முதற்கட்டமாய்
உனக்கான வலைகளில் தானியங்களைத் தூவத் தொடங்கினாள்.
உன்னை நோக்கி நெளிந்தன பாம்புகள்-
நெளிந்தவை தீண்டவாய்த் தோதுசெய்தாய் நீ.


நுரைதள்ளிற்று.


நச்சு இயல்புள்ள குட்டையின் ஓரமாய் ஒதுங்கிற்று உன் குதிரைகள். . .


பகட்டுமிக்க மாயத்தனங்களில் நீ
சிரசு பணிந்தபோது
நொய்மையான எனது உறுதிகளின் மீது
கேள்வி எழும்பிற்று.
அவளுடைய இடைப்பட்டியில்
ஒரு விஷம் தோய்ந்த கத்தியாய்
உன்னைச் சொருகிக்கொண்டாய். . .
எனது காப்பு வியூகங்கள் ஆற்று மணல் அரண்போல்
உதிரத் தொடங்கியிருந்தன.


எச்சரிக்கைகளை உதாசீனம் செய்தவனாய்
நச்சு இயல்புள்ள குட்டையின் கரையில் குதிரைகளை
அவிழ்த்துவிட்டாய் ஆற,
குறி ஊறிக் குளிக்கவாய் குதித்தாய் நிர்வாணம்கொண்டு.


நச்சு இயல்புள்ள குட்டையின் ஓரமாய் ஒதுங்கிற்று உன் குதிரைகள். . .
இப்படித்தான் முன்பொருக்கால்
நானும் என் குதிரையும் நண்ப. . .
o
இப்போதுள்ள குறி வந்த கதை 2
தள்ளி, உனது கங்குகள் எரிகின்ற
கிடங்குகளுள் அவனை முங்கியபோது
அப்போதுதான்
துணைப் பாலியல்புகள் அவனில்
தோன்றத் தொடங்கியிருந்தன.


இனிப்புகளைப் பராக்குக் காட்டி
திக்குகள் தெரியாக் காடுகளில்
விரல்பிடித்து
வழிநடாத்தி
பிஞ்சு என்புகளை ஒடித்து உனது பீடங்களில்
பேயின் சிதைகளுக்கு எரியூட்டினாய்.


இரத்தத்தின் சாற்றிலிருந்து உருக்கொண்டு
மனிதர்களை இரைகொள்ளும் விலங்கின் முன்
தம்மைப் படையலிடும் வகையைப் பரீட்சிக்க
அவனை நெறிப்படுத்தினாய்.


துர் நடத்தைகளின் கடவுளுக்கு அவனை நீ
பலியிட்டபோது
கிளர்வுகளைத் தாங்கும் வலுவை
அவனது தசைநார்கள் பெற்றிருக்கவில்லை.
பிறகு வந்த நாட்கள் காய்ச்சல் கண்டவன்போல்
உள் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தான்.


அறியாமையின் கண்கள் துலக்கி
வயதுக்கு மீறிய ஆற்றலால் அவனை நீ
முதிர்ந்த சிறுவனாக்கிப்
பருவத்தின் இயல்புகளைச் சிதைத்தழித்த மறுபுறம்
கேள்விகளாலும் ஆச்சரியங்களாலும் வழிந்தான்.


ஊன் உருகும் வாசனையும்
கொந்தழிக்கும் குருதியின் ஓசையும்
சில்லெனச் சுரந்து ஊற்றெடுத்த ஹோமோன் ஒரு கடலுமாய்த்
தீயில் கிடந்தவன் ஊறினான்.


இருண்ட அடவிகளின் ஆழத்தில் வேட்டையாடும் கலையையும்-
முடித்து திசை தவறாத் திரும்புதல்
மலைகளில் குதித்து நீர்நிலைகளில் சுழித்துக்
கரையேறும் சாகசங்களையும் நீ பயிற்றுவித்த பிறகு
வதைகளிலிருந்த தேனின் கள்ளைத் தெரிந்தான்.
உன்னை, போகங்களின் முடிவில்
நீண்ட நாழிகளுக்குக் கண்கள் சொருக
மயங்கிக் கிடக்கச் செய்தான்.


பிறகெப்போதும் அவனைத் தன் ப்ராயத்திற்குத் திரும்ப
அனுமதித்திராத உன்னிடம்-
வெறிகொண்ட நாய்கள் தன்னுள் குரைப்பதாக
அவன் முறையிட்ட அன்று
உனது மார்பினைத் திறந்து பற்களின்
தடங்களைக் காட்டினாய்.


பிறகொருநாள்
தன்மீது நிகழ்த்தப்பட்டிருந்த
துஸ்பிரயோகத்தை அவன் அறிந்த நாளில்
காலம் தூர நழுவிப்போய்
ஆயுளுக்கும் வேறெவளும் துடைத்தெறிய முடியாதபடி
உனது எச்சிலும்
வாசனையுமாய் அவனை நிரப்பியிருந்தன.


தனது வாநாள் முழுவதுமாய் உனது
பாரித்துத் தகிக்கும் மார்புகளையும்
விம்மிக் கௌவும் வழியையும்
தனது சொந்தக் குறியையும் சுமந்து திரியும்படி நீ
அவனைச்
செய்துவிட்டிருந்ததை உணர்ந்தபோது
இளைஞன் பருவத்தில் அநாதரவாக விடப்பட்டிருந்தான்.


மரணத் தறுவாயில்
சைகைகளினால் அவன் அவற்றை
மீளவும் வேண்டிக்கொண்டிருந்தான்

No comments: