Monday, March 12, 2012

விஸ்வாவா சிம்போர்ஸ்கா கவிதைகள்


நூற்றாண்டின் வீழ்ச்சி
நமது இருபதாம் நூற்றாண்டு முன் வந்தவற்றை
முன்னேற்றும் என்று இருந்தது.
இனி அதற்கு எந்த ஆதாரமுமில்லை.
அதன் எஞ்சியிருக்கும் வருடங்கள் சிலவே,
அதன் நடை தள்ளாடுகிறது,
அதற்கு மூச்சிரைக்கிறது.

நடக்கக் கூடாத பல
நடந்துவிட்டன.
நடப்பதாக இருந்தவை
நடந்தேறவில்லை.

வேறு பல விஷயங்கள் தவிர,
மகிழ்ச்சியும் வசந்தமும் ஒன்றை ஒன்று
நெருங்கி வருவதாக இருந்தன.

மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் விட்டுப் பீதி வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பொய்யைவிட உண்மையின் தாக்கம் துரிதப்படும் என்பதாக இருந்தது.

சில பிரச்சினைகள் இனி
எழவே எழாது என்றும் நம்பப்பட்டது:
உதாரணத்திற்கு, பட்டினி,
போர், இத்யாதிகள்.

இயலாதோரின் இயலாமைக்கு மதிப்பு,
நம்பிக்கை, போன்றவை
ஏற்படுவதாக இருந்தது.

உலகத்தை ரசிப்பதாகத் திட்டமிட்டிருந்த எவருக்கும்
அது இப்பொழுது நம்பிக்கையூட்டும்
செயலாக இல்லை.

முட்டாள்தனம் நகைப்பூட்டுவதாக இல்லை.
அறிவு மகிழ்வுள்ளதாக இல்லை.
நம்பிக்கை என்பது முன்பிருந்ததுபோல
இளம் பெண்ணில்லை,
இப்படிப் பல விஷயங்கள்...

நல்லவனும் வலிமையானவனுமான ஒரு மனிதனை
இனி கடவுள் நம்பப்போவதாக இருந்தது.
ஆனால் நல்லவனும் வலிமையானவனும்
இன்னும் வெவ்வேறு மனிதர்களே.

“நாம் எப்படி வாழ வேண்டும்?” என்று ஒருவர் கடிதத்தில் கேட்டிருந்தார்.
நான் அவரிடம் அதையே
கேட்க நினைத்திருந்தேன்.

மீண்டும், எப்பொழுதும் போலவே,
மேற்கண்டது போலவே,
அசட்டுத்தனமான கேள்விகளே
மிக அவசரமானவையாக இருக்கின்றன.

போர்னோக்ராஃபி பற்றி ஒரு கருத்து
சிந்திப்பது என்பதைவிட ஒழுக்கங்கெட்ட செயல் ஒன்று கிடையாது.
மலர்களுக்கென உள்ள நிலத்தில்
காற்று பரப்பும் களை போன்றது இந்தப் பொறுப்பின்மை.

சிந்திப்பவர்களுக்கு எதுவுமே புனிதமல்ல.
வெட்கமின்றி எதையும் பெயரிட்டு அழைப்பது,
ஆபாசமான ஆய்வுகள், காம வெறிகொண்ட கூட்டிணைவுகள்,
அம்மணமான உண்மைகளின் பின் அவசரமான சிற்றின்பத் துறத்தல்கள்,
உணர்ச்சிவசப்படுத்தக் கூடிய விஷயங்களைத் தம்
அசிங்க விரல்களால் தொடுதல்,
சூடான விவாதங்கள் - இவை இவர்கள் காதுகளுக்கு இன்னிசை.

வெட்ட வெளிச்சத்திலோ இரவின் பதுக்கத்திலோ
இவர்கள் வட்டமாகவோ முக்கோணமாகவோ ஜோடிகளாகவோ
இணைகிறார்கள்.
கூட்டாளிகள் ஆணா பெணா, என்ன வயது என்பவை முக்கியமல்ல.
இவர்களது கண்கள் ஒளிர்கின்றன, கண்ணங்கள் சிவக்கின்றன.
நண்பர் நண்பரை வழிதவறச் செய்கிறார்.
சீரழிந்த மகள்கள் தங்கள் தந்தையரைக் கெடுக்கிறார்கள்.
தன் குட்டித் தங்கைக்கு அண்ணன் கூட்டிக்கொடுக்கிறான்.

பளபளக்கும் இதழ்களின் பக்கங்களில் உள்ள
சிவந்த பிட்டங்களைக் காட்டிலும் அவர்கள்
மறுக்கப்பட்ட அறிவுமரத்தின் பழங்களையே விரும்புகிறார்கள் -
இறுதியில் இவர்கள் விட்டுச் செல்லும் அழுக்குத் தடங்கள்
இவர்களின் எளிய இதயங்களுடையவை மட்டுமே.
இவர்கள் ரசிக்கும் புத்தகங்களில் படங்கள் இருப்பதில்லை.
வேறுபாடு என்பது இவர்கள் விரல் நகத்தாலோ
க்ரெயானாலோ குறிக்கும் சில சொற்றொடர்களில் மட்டுமே.

இவர்கள் எடுக்கக் கூடிய நிலைகள்,
தடையற்ற எளிமையுடன் ஒரு மனது
மற்றொன்றைக் கருவுறச் செய்வது, இவை அதிர்ச்சியூட்டுபவை!
இந்த நிலைகளைக் காமசூத்திரம்கூட அறிந்திருக்கவில்லை.

இவர்களது இந்தச் சந்திப்புகளின்பொழுது சூடாக இருக்கும் ஒரே விஷயம்
தேநீர் மட்டுமே.
நாற்காலிகளில் அமர்கிறார்கள், உதடுகளை அசைக்கிறார்கள்.
ஒவ்வொருவரின் காலின் மீதும் இருக்கும் இன்னொரு கால்
அவரவர்களுடையது மட்டுமே.
எனவே ஒரு கால் தரையிலும்
மற்றொன்று சுதந்திரமாய் காற்றில் தொங்கிக்கொண்டும் இருக்கின்றன.
எப்பொழுதாவது மட்டுமே ஒருவர்
எழுந்து சன்னலுக்குச் செல்கிறார்.
திரையின் விரிசலின் வழியே
தெருவை எட்டிப் பார்க்க.

ஒரு சிறிய நட்சத்திரத்தின் கீழ்
எதேச்சையான ஒன்றைத் தவிர்க்க முடியாத ஒன்றெனக் கூறியதற்கு என் மன்னிப்புகள்.
அதுவும் தவறு எனின், அந்தத் தவிர்க்க முடியாமைக்கு என் மன்னிப்புகள்.
மகிழ்ச்சியே, உன்னை நான் உரிமையுடன் எடுத்துக்கொள்வதைக் கண்டு கோவிக்காதே.
அவர்களைக் குறித்த என் நினைவு மங்குவதைப் பற்றி
இறந்தவர்கள் என்மீது பொறுமை கொள்ளட்டும்.
ஒவ்வொரு நொடியும் நான் காணத் தவறுபவை குறித்து காலத்திடம் என் மன்னிப்புகள்.
இந்தச் சமீபத்திய காதலே முதலானதென்று எண்ணியதற்காகக் கடந்த காதல்களிடம் என் மன்னிப்புகள்.
வீட்டிற்குப் பூக்களைக் கொண்டு வந்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள், தொலைவில் நிகழும் போர்களே.
திறந்த காயங்களே, என் விரலைக் குத்திக்கொண்டதற்கு
என்னை மன்னித்துவிடுங்கள்.
என்னிடமுள்ள இசைத் தட்டுகளுக்காக மன்னிப்புக் கோருகிறேன் தங்கள்
ஆழங்களிலிருந்து கதறுவோரிடம்.
இன்று காலை ஐந்து மணிக்கு உறங்கிக்கொண்டிருந்ததற்காக
மன்னிப்புக் கேட்கிறேன் இரயில் நிலையத்தில் அப்பொழுது
காத்துக்கிடந்தவர்களிடம்.


துரத்தித் தேடப்படும் நம்பிக்கையே, அவ்வப்போது சிரித்ததற்காக என்னை மன்னித்துவிடு.
பாலைவனங்களே, கையளவு நீருடன் உங்களை நோக்கி நான் விரையாமலிருந்ததற்கு என்னை மன்னியுங்கள்.
கழுகே, நீ வருடங்கள் தோறும் மாறவில்லை, எப்பொழுதும் அதே கூண்டில்,
உன் விழி என்றும் வெளியில் ஒரு புள்ளியில் உறைந்ததாய்.
நீ பஞ்சடைக்கப்பட்ட ஒன்றெனினும் என்னை மன்னித்துவிடு.
மேசையின் நான்கு கால்களுக்காக வீழ்த்தப்பட்ட மரத்திடம் என் மன்னிப்புகள்.
சிறிய பதில்களுக்காகப் பெரிய கேள்விகளிடம் என் மன்னிப்புகள்.
உண்மையே, என்னைப் பெரிதாய்க் கண்டுகொள்ளாதே.
கௌரவமே, தயவுகூர்ந்து பெரிய மனதுசெய்.
இருத்தல் எனும் புரியா புதிரே, நான் எப்பொழுதோ ஒருமுறை மட்டுமே உன் ஓட்டத்தின்
ஓர் இழையைப் பிடித்துவிடுவது பற்றிப் பொறுத்துக்கொள்.

ஆன்மாவே, நான் அவ்வப்பொழுது மட்டுமே உன்னைக் கொண்டிருப்பதற்காகப் புண்படாதே.
நான் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாததற்காக
எல்லாவற்றிடமும் என் மன்னிப்புகள்.
நான் ஒவ்வொரு பெண்ணாகவும் ஒவ்வொரு ஆணாகவும் இருக்க
முடியாததற்காக எல்லோரிடமும் என் மன்னிப்புகள்.
நான் வாழும்வரை என்னை நியாயப்படுத்திக்கொள்ள முடியாது
என்று எனக்குத் தெரியும்.
ஏனெனில் நானே என் வழியில் குறுக்கிடுகிறேன்.
மொழியே, கனமான சொற்களைக் கடன்வாங்கி அவற்றை
இலேசானதாக்கக் கடினப்படும் என்னிடம் வெறுப்பு கொள்ளாதே.

தமிழில்: அனிருத்தன் வாசுதேவன்
ஆங்கில மூலம்: ஸ்டானிஸ்லாவ் பாரன் ழாக் மற்றும் க்லேர் கவனா

இக்கவிதைகளுக்கான ஓவியங்கள் சஜிதா ஜியின் STREE புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது

No comments: