Thursday, June 28, 2012

பத்மபாரதி கவிதைகள்


(அ)
சம்ஷாபாத் விடுதியின் கதவுகள்
மிக அலங்காரமானவை
அழகிய சிற்பங்கள் கொண்டவை
உனது சொற்களைப் போன்ற
தேர்ந்த கவனத்துடன் துல்லியமாகச்
செதுக்கப்பட்ட சிற்பங்கள்
கச்சிதமான இடத்தில் எவரையும்
மெல்லத் தொட்டுவிடுபவை
அதன் பிறகு ஒன்றுமேயில்லை
கரைந்து கரைந்து மிக ஆழத்தின்
துக்கங்களுக்கான
பெருகி வழியும் கண்ணீருடன்
இந்த உலகமே அரவணைக்கக் கதறுகிறார்கள்
மிகமிக லேசான மனத்துடன்
தங்கள் சின்னஞ்சிறு கரங்களால்
உலகத்தைத் தழுவிக்கொள்கிறார்கள்
நீயோ இந்த உலகத்துக்கு வெளியே
நிறைந்த கவனத்துடன் ஒளிந்துகொள்கிறாய்
அழகிய சிற்பங்கள் கொண்ட
இந்த அகன்ற கதவுகள்
தங்களுக்குப் பின்னே
அறைகளெவையுமற்றிருப்பது போலவே
மறைந்துபோகிறாய் நீயும்

(ஆ)
இலக்குகளற்ற இந்தப் பயணத்தில்
நகர்ந்து செல்லப்
புதிய திசையின் வசீகரங்களைத்
துளித்துளியாய் வியக்க
எனது விழிகளை
என்னிடம் அளிக்கிறாய்
எனது விரல்கள் குரல் செவி
இன்னும் இந்த உடலும் மனமும்
என்னிடமே இருக்கும்படி
சுதந்திர எழுச்சி அல்லது
விதிகளெவையுமற்று இன்றும்
கிழக்கில் உதிக்கும்
சூரியோதயத்தைப் போன்று
அவ்வளவு சுதந்திரத்துடன்
தங்கள் அழகில் ஈர்ப்பில் வண்ணங்களில்
காற்றில் தூவும் மணங்களில் லயித்திடாமல்
தொடர்ந்து பூத்துக்கொண்டேயிருக்கும்
இந்த மலர்களைப் போன்று
அவ்வளவு சுதந்திரத்துடன்
என்னிடமிருக்கும்படி
என்னை என் எல்லாவற்றுடனும்
என்னிடமளிக்கிறாய்

(இ)
இந்த இடம் ஏன் எனக்குச்
சமயங்களில் ரோமானிய
மைதானங்களை நினைவூட்டுகிறது
உங்கள் அழைப்பைச்
சரியாகப் புரிந்திருக்கிறேனா என்றேன் அச்சமுறுகிறேன்
இனி ஒன்றுமேயில்லை எனும்படி
நான் திறந்திருக்கிறேன்
நீங்களும் அதை உணர்ந்திருக்கிறீர்கள்
உணர்ந்திருக்கிறீர்கள்தானே
உங்களில் துளிர்க்கும் கண்ணீரும்
என் ஆவி அமைதியுறும்படியான அரவணைப்பும்
இருந்தும் ஏன் தனிமையடைகிறேன்
உள்ளே ஆழத்தில் செல்லச் செல்ல
நான் அடையும் பதைபதைப்பு
என்னோடிருக்கும் உங்களுக்குப் புரிந்திருக்கும்தானே
சொற்களை ஏன் நமக்கிடையில் நிறுத்துகிறீர்கள்
உங்கள் கையிலிருக்கும் வாளின் கூர்மையை
அறியாதவனிடம்
ஏற்கனவே ஆழத்தில் தத்தளிப்பவனிடம்
அதன் பளபளக்கும் கூர்மையைப் பிரயோகிக்கிறீர்கள்
துளிமாசும் ஒட்டியிராத
இந்த மனத்துக்காகத்தானே தவமிருக்கிறோம்
உனது ஆழங்களை நீதான் தொடவேண்டுமெனும்போது
ரோமின் அன்றைய மைதானங்களில்
தனித்துத் தவிக்கிறேன்
நல்லது
தேவதைகளின் பரந்த இறக்கைகள்
வானத்தின் பிரம்மாண்டத்திலிருந்து
துளி ஒளியைக் கசியச்செய்திடும்
காலத்துக்காக
நிழலின் கருமையை இன்னும் கூட்டியபடி
அடர்ந்த
ஆலமரப்பொந்துகளில்
சொக்கிக்கிடக்கும் சிட்டுக்குருவியின்
சின்னஞ்சிறு கண்மணிகளில் பட்டுப்
பிரகாசிக்கும் துளிக் கிரணத்துக்காகக்
காத்திருக்கலாம்தான்.

(உ)
உன்னைச் சந்தேகிக்கவில்லை..

இந்தப் பேரொளியில்
மூழ்கிக்கொண்டிருக்கும்போது
நான் தனித்திருப்பதாகவே தோன்றுகிறது
இது உன்னை அவமதிப்பதல்ல
உன் பிரியத்தைச் சந்தேகிப்பதல்ல
மீளாத் துயரில் உன்னை ஆழ்த்துவதல்ல
நீயும் அறிவாய்
எங்கிருக்கிறேன் நானென்பதை
பிரகாசத்தின் உச்சம்
என்னை இல்லாமலாக்கிக்கொண்டிருப்பதை
வழியும் கண்ணீரில்
நாமறிந்த உணர்வுகளின்
சாயல் இல்லாதிருப்பதை
உன்னைச் சந்தேகிப்பது
துயரில் ஆழ்த்துவது
உனது அண்மையை மறுதலிப்பது
எல்லாமே எனக்குச்
செய்துகொள்வதாகத்தான் இருக்கிறதென்பதை
நீ அறிவாய்தானே
இந்தப் பேரொளி இருவிழிகளைக் குருடாக்குவது
சுற்றத்தை இயலிருப்பை
அறியாமைக்குள் தள்ளுவது
அறியாமையின் குற்றவுணர்வைப் போஷிப்பது
அது வீணானதொரு உணர்வு எனினும்
புரிந்துகொள்ளப்படாமல் போவதான சாபத்திலிருந்து
என்னை ரட்சித்துச்
சேய்மையிலுமான உன் அருகிருப்பு
இந்தப் பூமியில் என்னை நிறுத்தும்தானே.

(ஊ)
என்மீது கோபங்கொள்ளுங்கள்
உங்கள் கையிலிருக்கும் பொருளைத்
தூக்கியெறியுங்கள்
கொலைவெறித்தாக்குதல் நடக்கட்டும்
என் இருப்பின் மீது
உங்கள் நேசத்தில் மூழ்கி
இறப்பது அல்லது ஜீவித்திருப்பது
என்மீதான துயரம் சந்தேகம் அல்லது மகிழ்ச்சி
இவையெல்லாமே
ஒரு புன்னகையைத்தான் தருகிறது
இவை எதுவும்
தியாகம் அல்லது வியப்பின் எச்சமன்று
என்மீதான உங்கள் குறுக்கீடு
மகிழ்ச்சியளிக்கிறது
என்னைக் கையளித்துவிடுகிறேன் உங்களிடம்
அதற்கான மனவுறுதியைத் துணிச்சலைத் தந்தது
நீங்கள்தானே
உங்கள் வெளிப்பாடுகளெல்லாம்
எனது இருப்பின் அல்லது இல்லாமையின் மீதான
உங்கள் பிரியமன்றி வேறென்ன

(எ)
எனது அன்பை யாரிடம் பகிர்ந்துகொள்ள

உனது பேரன்பை யாரிடம் பகிர்ந்துகொள்வாய்
என்றந்தக் கேள்வி எழுமுன்னேயே
என்னைப் பதைபதைப்புக்குள்ளாக்குகிறது
அது நிகழ்ந்துவிடக் கூடாது என்று
உள் ஆழத்தில் விரும்புகிறேன்
ஆனால் விதிகள் நம் விருப்பங்களை வென்றுவிடுகின்றன
இந்த உலகமே என்மீது நேசத்தைப் பொழிகையில்
எப்படி நான் உன்னுடன் தனித்திருக்க விரும்புவது
எப்படி நாம்
நேசத்தின் படிநிலைகளை உள்வெளியாக
மேல்கீழாக அடுக்குவது
அவ்வளவு கொடூரமான மனம் நமக்கிருக்கிறதா
விதிகளின் மீது முரண்பட நான் இன்னும் துணியவில்லை
எனது அந்தத் துணிச்சல் உன்னிடம்தானே இருக்கிறது
ஏதோ ஒரு கணத்தின் மீச்சிறு துளியில்
மெலிதானதொரு வற்புறுத்தலாக
என் பிரியம் அமைந்துவிடுவதை வெறுக்கிறேன்
ஆனால் ஏற்றுக்கொள்கிறாய் அப்படியே என்னை
மறுமுறை என்னை இழுத்து அரவணைக்கையில்
உன் மனத்தின் மீத்தூய்மை பொங்கும் பிரியம்
அதன் கதகதப்பு
எனது ஆவியை அமைதிப்படுத்துகிறது
விதிகளற்று முகிழ்க்கும் பிரியமது
இந்த உலகம் உருவானபோது
துளிர்த்த பிரியமாக அடைகிறது என்னை

No comments: