Sunday, November 30, 2008

குதிரைக் கவிதைகள் - பாலகுமாரன் - தொடர்ச்சி

"ஏழாம் பாடம்...

அவல ஆடுகள் கூட இங்கே
கொம்புடன் ஜனித்ததாக
கீச்சுப் பூனைகள் கொண்டதிங்கே
கூரிய நகமும் பல்லும்

யாருக்கும் தீங்கு செய்யா
நத்தைக்கும் கல்லாய் ஓடு
பச்சோந்தி நிறத்தை மாற்றும்
பல்லிவால் விஷத்தைத் தேக்கும்

குதிரைகள் மட்டுமிங்கே
கொம்பின்றி பிறந்ததென்ன ?
வெறுப்புடன் பிறந்த மாக்கள்
பயத்தினைத் துணையாய்க் கொள்ள
விருப்புடன் பிறந்த குதிரைக்கு
கொம்பில்லை ; விஷமுமில்லை
தர்மத்தைச் சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவர் ?
குதிரைகள் காதைப் பாரும்
உள்ளங்கை சிவப்பு தோற்கும்
- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஏழாம் பாடம்.

***

இதுவரை வெளிவராத கவிதை இது, இரும்பு குதிரை நாவலில் ஐந்தாம் பாடம் இல்லையே என்று கேட்டதற்கு எழுதிக் கொள்ளுங்கள் என்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் மூன்று நிமிடத்தில் சொன்ன கவிதை இது...

மனிதரின் செருமல் போல
குதிரையின் கனைப்பு இல்லை
குதிரைகள் கனைப்பின் மூலம்
செய்திகள் சொல்வதில்லை.
அது அடிக்குரல் பேச்சு அல்ல
அந்தரங்க கேலியுமில்லை
குதிரைகள் தனக்குத் தானே
பேசலின் முயற்சி கனைப்பு
சிலசமயம் குதிரை கனைப்பில்
சின்னதோர் அலுப்பு உண்டு
அடுத்ததாய் செய்யப் போகும்
வேலையின் முனைப்பு உண்டு

குதிரையின் கனைப்பைக் கேட்டு
மறு குதிரைத் திரும்பிப் பாரா
ஒரு கனைப்புச் சத்தம் கேட்டு
மறு கனைப்பு பதிலாய் தாரா.
குதிரைகள் உலகம் எளிது
எதிர்பார்ப்பு ஏதும் இல்லை.
தன் நெஞ்சைத் தானே நோக்கி
குதிரைகள் பேச்சே கனைப்பு

மற்றவர் என்ன சொல்வார்
என்பதே மனிதர் உலகம்
உற்றவர் எனக்கு நானே
என்பதே குதிரை வாழ்வு
குதிரையின் கனைப்பு கேட்க
எனக்கு நான் வணக்கம் சொல்வேன்
வேறெவரும் வாழ்த்த வேண்டாம்
வேறெவரும் வணங்க வேண்டாம்
என் செய்கை எனக்குத் தெரியும்
பூமாலைத் தேவையில்லை
தொடர்ந்து போ மேலே மேலே
குதிரையின் கனைப்புச் சொல்லும்

- இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஐந்தாம் பாடம்.

No comments: