ஆதிமொழி
தண்ணீரில்தான்
எல்லா ரகசியங்களும்
பரிமாற்றம் கொள்கின்றன
முன்னெப்போதும் இல்லாத சாகசங்களில்
முனைந்து திரியும் பறவைகள்
ஆதிமொழியில் பேசிக்கொள்கின்றன
பல கற்றும் பல கேட்டும்
பறவையின் இறகொன்று
வேண்டுமென்று அலையும்போது
வழியில் கண்ட முதிர்கன்னிகள்
சேர்த்துவைத்திருந்த கதைகளில்
இளவரசியின் இரவுப் பொழுதுகள் பற்றி
வெளியில் பரவின வதந்திகள்
ஆற்றங்கரையில் அலைகள்
அற்றுப்போகும் காலம் வேண்டி
காத்திருந்த வேளையில்
காதங்கள் கடந்துவந்த
கானத்தில் பொதிந்து நின்றது
உனக்கும் எனக்கும்
மட்டுமேயான ரகசியம்.
நத்தைகளின் பயணம்
எல்லாம் மாறிப்போகும்
கணத்துக்கு முன்னால்
கைகூப்ப மறுத்ததில்
ஒழுங்கு கலங்கியது
கட்டடங்களின் சுவர்களும்
வாசல்களும் சாளரங்களும்
காணாமல்போகும்போது
மிஞ்சுவது கல்மரங்கள்
பித்தனும் சித்தனும்
குதிகாலைப் பிடித்திழுக்கும் வேளையில்
அடையாளம் காண முடியாமல்
அமைதி குலைந்தது
விரிந்தன இதழ்கள்
வீட்டுக்கு வெளியில் ஒரு காலும்
உள்ளே ஒரு காலும் வைத்து
மனம் திரிந்துபோனது
மண்ணும் நீரும் சேர்ந்து
சேறாகக் கலந்து
புதிய பயணத்தைத் தொடங்கின
நத்தைகள்.
n
எனக்கான இடங்கள்
இப்போது
மலையேறி விளையாடுகிறேன்
கணக்குப் போடுகிறேன்
மாடிப்படி ஏறியிறங்குகிறேன்
சிறுவயதுக்குப் போய்
கனவுகள் காண்கிறேன்
கற்பனைகளில் சஞ்சரிக்கிறேன்
பிறப்பதற்கு முன்னால்
இருந்த இடத்துக்குப் போய்
தூங்குகிறேன்
நீண்டு விரியும் வெளியில்
யாருமற்றுக் கரைந்துபோகிறேன்.
Saturday, March 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment