Saturday, March 12, 2011

கவிதைகள் வசுமித்ர

அப்பா
நான் உங்களைக் கொலை செய்யப்போகிறேன்
சரி மகளே
முத்தம் தா

இல்லையப்பா... குருதி கசிய
சரி மகளே
முத்தம் தா

அப்பா...
உங்கள் உடலைச் சிதைத்து
சரி மகளே
முத்தம் தா

அப்பா...
அப்பா...
நிஜமாகவே...

சரி மகளே
முத்தம் தா

அப்பா
இந்த விளையாட்டு பிடிக்கவில்லை
வேறு விளையாட்டு சொல்லித் தாருங்கள்

சரி மகளே
முத்தம் தா.

l

சபிப்பது பற்றிய
ஞானத்தைக் கற்றுக்கொள்கிறேனே அப்பா
அடம் பிடிக்கிறாள் நேயா

விழிகள் குமைய
அனுப்பிவைத்தேன் அவளை
என் முகத்தில் அறையுங்கள்
அவளை...
அவளை...
சாத்தானுக்கு அறிமுகம் செய்தேன்

நகங்களை நீட்டாதே
விழிகளின் நிறம் மாற்று
அவள் சிறுமி

அறிவுரைகளை
வேண்டுகோளாய்க் கொட்டி
வீடு திரும்பினேன் கண்ணீர்த் துணையுடன்

விரல்கள் உலரும் முன்
வீட்டுக்கு வந்தாள் சிறுமி நேயா குதித்தபடி
சாத்தான் நிழல்போல் பின்னால் நின்றான்

வழியனுப்ப வந்ததாகவும்
அவள் சிறுமியென்றும் சொல்லி அகன்றான்

பிறிதொரு நாள்
அலுவல் வேலையாய்ச் சாலையைக் குறுக்காகக் கடக்கையில்

நடை வீதியில் நின்று
சாத்தான் அனைவருக்காகவும்
ஆசீர்வதித்துக்கொண்டிருந்தான்.

l

துரோகம், மயக்கும் விழிகளுடன் வருகைபுரிகிறது
தனிமையில் பற்றியெரியும் என் அறையை நோட்டமிடுகிறது

நளினமான உடலசையக் கதவைத் தட்டுகிறது
திறந்த கதவின் வழியே வசந்தம் பீறிட்டு வீச
மயங்கிச் சரியும் துரோகத்தை அணைத்துக்கொள்கிறாள்
சிறுமி

அறைக்குள் நுழையும்
நான்
விசித்திர சப்தம் கேட்கிறேன்

ஒரு
குடம்
தண்ணீர் ஊற்றி
ஒரு
வனம் பூத்ததே...

என் விரல்கள் உதற
செவிக்குள் தாவரம் பூக்க

துரோகத்தைப்
புல்லாங்குழலாக்கி
என்
உதட்டில் பொருத்துகிறாள்
நேயா.

l

மீன்களை மயக்கி
நித்திரை கொள்ளச் செய்யும்
குளமொன்றிற்கு
முத்தம் தருகிறாள்
மகள் நேயா...

குளம்
கடலாக
திமிங்கிலங்கள்
விழித்தெழுகின்றன.

l

அறை அதிர
சுண்டுவிரலால் கதவு தட்டும் சப்தம்
முழு மௌனம் கொண்டு
தாழ் நீக்குகிறேன்

சூரியனின் ஒரு துண்டை வாயில் கடித்தபடி
ஒளித் திவலை வழிய அவன்
நண்பன் மற்றும் வீரியமிக்க எதிரி

வழியும் நீரைப் புறங்கையால் துடைத்தபடி
கால்களை நிதானித்து மாற்றி
எங்கே உன் சிறுமி
பார்க்க வேண்டும் அவளை

கனவுகள் குழம்ப
தரையில் அமர்கிறேன்

என் விழிகள் பார்த்தவனின் கைத்தொலைபேசி ஒலிக்க
சாவகாசமாய் கையில் எடுத்து
பதில் வாங்கக் காதில் பொருத்துகிறான்

எங்கே போனாய்
நான் உன் அறையில்...

சிறுமியின் குரல்
அறையை நிறைக்க
மயங்கிச் சாய்கிறான்

அவனுக்கு
சிறுமியென்றே அவளை விவரித்திருந்தேன்

சொல்லியிருக்க வேண்டும்
அவளுக்கு விலாப்புறம் இரண்டு சிறகுகள்
மற்றும்....

No comments: