Saturday, March 12, 2011

கவிதைகள் வினோதினி

முகமூடி செய்பவள்

அவளது வீட்டின் சுவர்களெங்கும்
அவள் செய்யும் முகங்கள்.

தனது
குருதியிலொரு துளி
மூச்சின் ஒற்றைத் துணுக்கு
மூப்புறுந் தசைத்திரள் சிறிது சேர்த்து
முகங்கள் செய்கிறாள்.

நடு நிசியில் பகலின் வெளிச்சத்தில்
எனது ஊரில்
எங்கோ ஓர் உயிர் இறக்கையிலும்
மற்றொன்று பிறக்கையிலும்
யாரோ ஒருவர் கொல்லப்படுகையில்
கேள்வி கேட்கும் உரிமை தொலைத்து
அவர்கள் தலைகள் தாழ்கையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

ஒரு பெண்ணின் காதல் மறுக்கப்படுகையில்
அவள் பலவந்தமாக இச்சிக்கப்படும்
பொழுதுகளில்
குழந்தைகள் பயந்து அழ மறக்கையில்
வெடிச்சத்தங்கள் பறவைகளின் கூடுகளை
உலுப்புகையில்
காரணமேதுமற்றுக் கடத்தப்பட்டவன்
தன் வாழ்வு பற்றி அச்சமுறுகையில்
வீடொன்று ஆளற்றுத் தனிக்கையில்
கிராமமொன்று கைவிடப்படுகையில்
அங்கே நாயொன்று
உணவின்றி அலைந்து உயிர்விடுங் கணத்தில்
பாலுந் தேனுங் குடிக்கும் எமது கடவுளர்
இல்லை எனத் திட்டப்படுகையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

முகங்களின் மூச்சும்
மூடாத கண்களின் பார்வையும்
குழந்தைகளது என ஏமாந்து
அவள் உயிரூட்டும் முகங்கள் எப்படியோ
அவளது கனவுகளைக் களவாடிவிடுகின்றன
அவ்வப்போது.

நீ போனதும்

செய்ய வேண்டியது நிறைய இருந்தது
நீ போனதும்
உனக்கும் எனக்கும் இடையில்
தங்கிய காலத்தை அகற்றுதல்
உனது வாசனை பரவிய

படுக்கையை மாற்றுதல்
நீ பிய்த்தெறிந்த பூவிதழ்களை வீசுதல்
உனது ஆன்மாவை ஒளிக்கும்
உடைகளைத் துவைத்தல்
நீ கிழித்துப்போட்ட காகிதத் துண்டுகளை ஒட்டுதல்
(அதில் நீ நமது பெயர்களை
எழுதியிருக்கக்கூடும்)
எனச் செய்ய வேண்டியது நிறைய இருந்தது.
நீ போனதும்
மழை பெய்துகொண்டிருந்தது
நகரெங்கும் என்மீதும்.

l

எனது பாடல்களை நான்
எழுதி முடிப்பது இன்றல்ல நாளையுமல்ல
எனில் என்று?
எழுதாத எனது பாடல்கள்
எல்லாம் அந்தச் சிறுமியின் கைகளில்,
எப்போது வேண்டுமெனிலும் தரமாட்டாளாம்.
தான் விளையாடாதபோது
எடுத்துக்கொள்ளென்கிறாள்.
அவள் தூங்கும்போது முயல்கையில்
ஒரு சொல் வருவதற்குள்
விழித்துக்கொண்டு அவள் சண்டையிடத்
தோற்றுப்போய்ப் பதுங்கிவிடுகிறதென் ஆன்மா
எனது பாடல்களை நான்
எழுதி முடிப்பது இன்றல்ல நாளையுமல்ல
யாருமறியாமல் அவை பத்திரமாக
இருக்கின்றன
அந்தச் சிறுமியிடம்.

வினோதினி (வினோதினி சச்சிதானந்தன்) யாழ்ப்பாணத்தில் இருக்கிறார். இவரது 'முகமூடி செய்பவள்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவை.

No comments: