Saturday, March 12, 2011

கவிதைகள் தேன்மொழி எஸ்.

என்னுடைய ஓவியம்

என்னுடைய ஓவியத்தின்
கருப்பொருள் நானாக இருக்கிறேன்
இருப்பதையே வரைகிறேன்
இடைஇடையே
இப்படி இருக்கலாம் என்று
நினைப்பதையும் தருகிறேன்
எப்படியோ இது அழகான
ஓவியமாகச் சொல்லப்பட வேண்டும்
தோலுக்கு நிறமேற்றுகிறேன்
வடுக்கள் பருக்கள் மறைந்து
விளக்கி வைத்த முகத்தின் பிரசவம்
அணிந்திராத ஒரு
மிடுக்கான உடையைக்
கொண்டு என்னைப் போர்த்துகிறேன்
என் நீளம்கூட சற்று
கூட்டப்பட்டிருக்கிறது
கூட்டிக் குறைத்து வரைந்து
ஒரு பாராட்டுதலுக்குரிய
ஓவியமாக மாறிவிட்டேன்
ஆயினும்
உயிர்ப்பு மின்னல் உலாவர
வெடிப்பில் மாட்டிக்கொண்ட மனம்
ஓவியனின்
கைகளுக்குப் பின்னேதான்
இருக்கிறது.

No comments: