இஷ்ட தெய்வத்தின் சந்நிதியில்
முழுக் குடிபோதையில் நுழைந்தேன்
என் இஷ்டதெய்வத்தின் சந்நிதிக்குள்.
மலர்களாய் மாறிக் கையிலிருந்தன
எவரோடும் பகிர்ந்திராத வார்த்தைகள்.
அங்கிருந்த எல்லாத் தீபங்களிலும் இணைந்துகொண்டது
ஐந்து நட்சத்திர ஹோட்டல் கேஸ் ஸ்டவ் நெருப்பைப் போல்
மென்மையாய்க் கனன்றிருந்த என் அறிவு.
தரிசனத்திற்கு வந்த எவரையும் அறிந்திராத நிலையில்
கோயிலிலிருந்த ஆர்வம் குறையத் தொடங்கியது.
பிரார்த்தனையின் முக்கியத்துவமும்
தெய்வத்தின் பேரழகும் சலித்து
வெளியேறுபவர்களினூடாகப் பிரகாரத்தைச்
சுற்றிக்கொண்டேயிருந்தேன்
கடலின் தெளிந்த ஆழத்தில்
பொக்கிஷத்தைத் தேடி நீந்தும் மனிதனாக.
பில்லியர்ட்ஸ் பலகையின் வண்ணப் பந்துகளைப் போன்று
உருளும் என் நினைவுகளில்
நகரை நிராகரித்த காடு தோன்றி
எந்தக் கோவிலைவிடவும் தானே சிறப்பு எனக் கூறியது.
சூரியனைப் போலத் தெய்வத்தையும்
நேருக்கு நேர் பார்க்க முடியாதெனத் தோன்ற
வெளியேறிவிட்டேன்.
ஆய்வகக் கண்ணாடிக் குடுவையில்
ஃபார்மலினில் அமிழ்ந்திருக்கும்
அரிய ஜந்துவாகத் தொடர்ந்து காத்திருக்கிறது
என் ஆதங்கம்.
Saturday, March 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment