சூனியம் புரியாது அழுகிறார்கள்
மரணங்களில்
வெவ்வேறு வீதங்களில்
விஷம் அடைத்த குப்பிகள்
உயிர் உடைக்க அலைகிறது
வெளி எங்கும்
மரண ரட்சகர்களென
பாவிக்கப்பட்டவர்கள எப்போதோ
சிறுகுப்பிகளில் உயிர்நீத்தார்கள்.
பதட்டப்படாதிருங்கள்
உங்களின் துளைகள்
அடைக்கப்பட்டாலும், நுழையும்.
விழுங்கிக்கொண்டாலும்
விருப்பப்படி காலங்கடத்தும்.
வெளிகடந்து
வேறெங்கும் செல்வீர்கள்.
அங்கு பாருங்கள்
பூக்களையும் புல்வெளிகளையும்.
n
குரூர மிருகம்
முதல்தர மிருகத்தை
நடுவில் இருத்திக்கொள்கிறது
அலுக்கும்வரை புணர.
குரூர மிருகத்தைச் சுற்றிலும்
புணர்வோம் என்கிற கனவில்
சுயமைதுனத்தில் கழிகிறது
இரண்டாம்தர மிருகங்களின் வாழ்தல்.
குரூர மிருகக் குழுவினரின்
ஓரினச் சேர்க்கைக்கு
ஒத்துழைக்கிறீர்கள்
மூன்றாம்தர மிருகமாகிய நீங்கள்.
குரூர மிருகம் வடிவிலிருக்கிறது
நாற்காலி.
n
நுழைதல் எனும் நிகழ்வு...
தற்செயலாய் வந்தமர்ந்த
வண்ணத்துப் பூச்சி
சிந்தனையைக் கலைக்கவே
பிடித்துவிட்ட போது
என் விருப்பம் இன்றியே ஒட்டியிருந்தது
விரல் நுனியில்
அதன் வர்ணம்.
தன் இருத்தல்
விரல் மத்தியில் உறுத்தவே
ஏதோ ஒன்றில்
அழுத்தித் துடைத்து அகற்றிவிட்டேன்
அவசரமாய்.
அது எந்த ரூபத்திலும்
பறக்காமலும்
எங்காவது அமர்ந்து சிறகசைக்காமலும் இருக்கத்
தொடர் சிந்தனையினுள்
நுழையவிடாமல் பாதுகாத்தேன்
முழு பிரக்ஞையில்.
ஆனாலும்...
பறத்தல் என்ற நகர்ச்சியின்றி
கவனத்தில் தட்டுப்படாமல்
எப்படியோ புகுந்து
சிறகசைக்கத் தொடங்கிவிட்டது
இப்போது
இந்தக் கவிதை முழுவதும்.
Sunday, March 13, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment