Sunday, March 13, 2011

கவிதை பொ. செந்திலரசு

(அ)ரூப திசைகள்

ஒரு மலையை
எவ்வாறு நீங்கள் அடையாளப்படுத்துவீர்கள்
பெயர் சார்ந்து . . .
மண் சார்ந்து . . .
மரங்கள் சார்ந்து . . .
பறவைகள் சார்ந்து . . .
பசுமை சார்ந்து . . ?
அன்று,
மதுக்கோப்பைகள் வழுக்க
திசைகளின் மேல் தடுமாறி விழுந்த
மூவரில்
மலைகளை,
திசைகள் சார்ந்து
பிரமாதப்படுத்திக்கொண்டிருந்தான்
முதலாமவன்.
வடக்கில் கஞ்சமலையும்
கிழக்கில் கொல்லிமலையும்
மேற்கிலிருப்பது
சங்ககிரி மலையுமென.
- அம்
மலையுச்சியில் தெரியும் திப்புசுல்தான் கோட்டையின்
தென்புறம் மசூதியும்,
அதன்
வடபுறமுள்ள உள்ளொடுங்கும் நிலவறையின்
ஒருபகுதி
கஞ்சமலையின் தென்மேற்கிலும்
மற்றொரு பகுதி
கொல்லிமலையின் தென்கிழக்கிலும்
திறப்பதாயும்,
சித்தர்கள் அவ்வழி வந்து செல்வதாயும்,
காட்டு முயலும் உடும்பும் தென்படும்
அந்நிலவறைக்கு வடகிழக்கில்
மரகதப்பச்சையாய்
களிப்பின் உதிரம் தேங்கிய
இராணிகளின் பொற்றாமரைக் குளத்தின்
வடமேற்காழத்தில் புதையலிருப்பதாயும்
கதைத்து முடிக்கையில்
ஒரு பிளேட் ‘சில்லிசிக்கன்’ தீர்ந்திருப்பது கண்டு
சுற்றுமுற்றும் பார்த்த
இரண்டாமவன்,
அமானுஷ்யத்தின் பிரதியாயுள்ள அந்
நிலவறையினுள்ளே நுழையத் தொடங்கினான்
முயல் வேட்டை நிகழ்த்த.
அதற்கு முன்பே,
ஆச்சர்யக் குடுவையை முதுகில் கட்டிய
மூன்றாமவன்,
முங்கிக்கொண்டிருந்தான் அப்
பொற்றாமரைக் குளத்தில்.
- திசைகளற்ற சித்தனான
முதலாமவன்
யாவற்றையும் அரூபிக்க.

No comments: