துடைத்துக்கொள்ளுங்கள்
பேன் பிடித்த
பரட்டைத் தலைப்பிள்ளைகள்
அவர்களுடைய அழுக்கேறிய
விரல்களால்
உங்கள் டெனிம் டிரௌஸர்களைத் தொடுகிறார்கள்.
உங்கள் முக அருவருப்பும்
ஒரு ரூபாயும்
விதிக்கப்பட்டிருக்கிறது
அவர்களுக்கு.
சுய திருப்தியும்
நிமிடக் கடவுள் உணர்வும்
உங்களுக்கு.
நாட்டைப் பற்றிய கவலையும்கூட.
நிலங்களை
உறிஞ்சிக் குடித்த நர்மதை
எங்களை உமிழ்கிறது
உங்கள் முகங்களின் மேல்.
துடைத்துக்கொள்ளுங்கள்.
நர்மதையின் சிரிப்பு
இலைகள் உதிர்ந்து
விழுந்துகொண்டிருந்தும்
நீரின் விளிம்புகள்
சலனமின்றிப் படுத்துக்கிடக்கின்றன.
வனப் பறவைகள்
குழப்பத்தோடு
நீரில் தேடிக்கொண்டிருக்கின்றன
தமது பிம்பங்களை.
எவ்வளவு முயன்றும்
நீரால் அழிக்க முடியவில்லை
வனதேவதைகளின்
சூலங்களின் மேல்
எங்கள் இறுதிப் பிரார்த்தனையின்
குங்குமத்தையும் மஞ்சளையும்.
சுவர்களில் ஈரம் கூடக் கூடப்
பல்லிகள் கதறுகின்றன.
பறவைகளுக்குச் சகுனங்கள்
புரியப்போவதில்லை.
ஏளனமாய்ச் சிரிக்கும் நர்மதையே
சொல்லிவிடு அவற்றுக்கு
புனரமைப்பும் மறுவாழ்வும்
வென்றுவிட்டதை.
நிமிடங்கள்
நிமிடங்கள் நம்
இருவருக்கும் இடையில்
கரைந்துகொண்டிருக்கின்றன.
மௌனம் பனிப் பாறையாய்
உறைந்துபோய் இருக்கிறது.
பனியின் ஆவியாய்
நம் மூச்சுக் காற்று
காற்றோடு கரைந்து
நிறைகிறது.
பார்வைகளின் சுமை தாளாத
இமைகள் சாய்ந்து
இறுகிக்கிடக்கின்றன.
மெல்ல கூடும்
இதயங்களின் ஓசை
உறைந்த பனியைச்
சின்ன உளியாய்ச்
செதுக்கிப் பார்க்கிறது.
செதுக்கித் தெறிக்கும் துண்டுகள்
நம்மீது விழ
படபடக்கும் இமைகளின்
இடையில் சிக்கி
நொந்து தவிக்கிறது
பூப்போன்ற நம் காதல்.
நினைவுப் பரிசு
கருவில்லென வளைந்த
இரு புருவங்களின்
எல்லையெங்கிலும்
செம்பூவாய் மலர்ந்திருக்கும்
இதழின் கரையோரத்திலும்
சட்டென்று பிறந்த
வியர்வை முத்துக்களில்
பட்டுத் தெறித்த
சூரியனை
இரு கைகளால் மெல்லப் பிடித்துச்
சட்டைப் பைக்குள் வைத்துக்கொள்கிறேன்
உன் நினைவாக.
Sunday, March 13, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment