Saturday, March 12, 2011

கவிதைகள் சேரன்

ஒளி பரவும் பெரும் பொழுது

முடியாதென இருந்த காலம் முடிந்துவிட்டது
சீடார் மரங்கள் வேலி அமைத்திருந்த
பூங்காவின் உலர்ந்த தரையில் அமர்ந்திருந்தபோது
வழமையாக என்னிடம் வரும்
கறுப்பு அணில்களையும் காணவில்லை

யாரோ ஒருவர் என்னைக் கடந்து போகிறார்
புன்னகை தருகின்ற கடைசி மனிதராக
அவர்தான் இருக்கக்கூடும்

துயரத்தில் ததும்பும்
என் இதயத்தை மறைத்து
வாவென அழைத்தாலும்
வாரார் ஒருவரும்

எவருக்காவது என் குரல் கேட்கிறதா?

வெள¢ளிகள் இரவின் கண்களைக் குருடாக்குகின்றன
நிறங்கள் கறுப்பின் கருவறைக்குத் திரும்புகின்றன
உயிரோடு ஆடும் விளக்கென எதுவுமில்லை
ஊரைத் தருவதற்கும் யாருமில்லை

ஊரில்
புளியங் கொப்பில் துடங்கிச் செத்தவளின்
சாபமும் துர்க்கனவும் காற்றை நிறைக்கின்றன

என் காலடி ஒலிக்காகக் காத்திருந்த நாய்க்குட்டியும்
நம்பிக்கை இழந்து
துடக்கத்தில் ஆழ்ந்துவிட்டது

கண்ணாடிக் கிண்ணங்கள்
உடைந்து சிதற
போதையின் எல்லாக் கனவுகளும்
குளிர்காலப் பனித் தீயில்
பற்றி எரியட்டும்

எப்போதும் மூடித் திறக்கும் மனக்குகையின்
துயிலற்ற வாயில்களை
என்றென்றைக்குமாக அடைத்துவிடுகிறேன்
அவற்றைத் திறக்க வரும்
ஒவ்வொரு கவிதையும்
வேட்கையின் ஒவ்வொரு துளியும்
முறிந்து விழுகின்றது

எவரும் இனி வரமாட்டார்.

No comments: