புறவரிகள்
(i)
என் எல்லைகளுக்குள் வந்தவர்களைப்
புறக்கணிக்கவில்லை.
வரவேற்று விசாரித்தேன்
அவர்களைப் பற்றிய செய்திகள்
சேகரிப்பில் நிறைய:
ஏகதாரன் வந்தான்
முகமன் கூறி வரவேற்றபோது
ஈர்க்கினால் செய்த அம்பையும்
வில்லையும் கீழே வைத்து வணங்கினான்.
சுமையாக இல்லையா என்றேன்
என்னைச் சுமக்க வைத்துவிட்டார்கள்
என்றான்.
இதனால் நீ கண்டதென்ன என்றேன்
இன்னும் காடுகளுக்குள்
அலைந்து திரிகிறேன் என்றான்.
உன் மகுடத்தை எடுத்துக்கொள் என்றேன்
பிழை நேர்ந்துவிட்டது
பிழைப்புக்காகச் சிலரால்
சொல்லப்பட்ட கதைகள்
வரலாறுகளாகிப் போன பின்
என் நிலையை எப்படி விளக்குவது
எனக்கு வழி சொல்ல வேண்டும் என்று
வேண்டினான்.
கைமீறிப் போய்விட்டது
நீயே போய்ச் சொன்னாலும்
நம்பமாட்டார்கள் குடிகள்
கதைகளால் வாழ்பவர்கள் கயவர்கள்
உழைத்துப் பிழைத்துக்கொள் என்றேன்
ஒரு கப் காப்பியுடன்
விடைபெற்றுச் சென்றவன்
குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டான்
இன்னும்
கயவர்கள் வாழ்கிறார்கள்.
(ii)
நதியின் பிரவாஹத்தை
உடலின் மிக மெல்லிய கேசத்தால்
தடுத்துத் தாங்கிவிட்டாயே
பஞ்ச பூதங்களைத் தமதாக்கி
கூத்தாடும் உன் செயல்
வினோதம் என்றேன்.
ஆச்சரியத்துடன் பார்த்தான்
எனக்கு
வயதாகி வழுக்கை விழுந்துவிட்டது
இன்னும் அப்படி நம்புகிறார்களா
என்றான்.
சாட்சியாகித் துணைபோனவன்
பேசுவது வியப்பில்லை என்றேன்
அப்படியல்ல -
நயமாய்ச் சொல்லப்படும் கதைகளை
உண்மையென நம்புகிறவன் முட்டாளில்லையா என்றான்
தண்ணீரின் கால்களைத் தேடி
அலையும் எனக்கு
ரத்த அபிஷேகம் செய்கிறார்கள்
எனக்கும் அவர்களுக்குமான
இடைவெளி நீண்டு செல்கிறது.
நான் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறேன்
இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளின்
ரத்தத்தைப் பருகத் தருகிறார்கள்
என்றான்.
அழிப்பதற்கென நீ
அறியப்படுகிறாய் என்றபோது
கேவி அழுதான்
நான் கட்டுக்கதைகளால் பிழைப்பவன்
அவற்றை உருவி எடுத்துவிட்டால்
சூன்யம்தான் என்றான்
முடிவாக என்ன சொல்கிறாய்
என்றேன்
நான்கு கட்டுகளையும்
ஐந்து பூதங்களையும்
ஆறு புத்திகளையும்
ஏழு உலகங்களையும்
எட்டுத் திசைகளையும்
என்னைவிட்டு அகற்ற
கொஞ்சம் மது கொடு என்றான்
கொஞ்சம் விஷம் கொடுத்தேன்.
Sunday, March 13, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment