Saturday, March 12, 2011

கவிதைகள் இசை

என் காதலியைக் கொல்ல வேண்டும்


என்னை ஒரு மனநோயாளி ஆக்க வேண்டும்
எனக் கடவுள் விரும்புகிறார்
அதற்காக அவர் என் வழிகளைக் குழப்புகிறார்
என் உறக்கத்தைக் கொத்தச் சொல்லி
பாம்புகளை ஏவுகிறார்
மண்டைக்குள் ஒரு அடுப்பை நிறுவி
அதை இருபத்தி நான்கு மணி நேரமும்
எரியூட்டுகிறார்
எப்போது வேண்டுமானாலும்
நிகழலாம் எனும்படிக்கு
என்னைச் சுற்றிலும் எண்ணற்ற தீமைகளை விதைத்தார்
ஆனால் எனக்கொரு காதலி இருக்கிறாள்
தாய் போல் என்னை மாரோடணைத்துக்கொள்கிறாள்
மடியிலே கிடத்தி களிமுத்தமிடுகிறாள்
கடவுளே
நீர் என்னை ஒரு மனநோயாளி ஆக்க வேண்டுமெனில்
முதலில் என் காதலியைக் கொன்றாக வேண்டும்

No comments: