கண்ணாடிக் கோளத்தின் உட்புற விரிசல்கள்
மரம் ஒவ்வொரு இலையாக உதிர்க்கிறது
பறவை பாடலை இழந்துகொண்டிருக்கிறது
குழந்தை ஒவ்வொரு வார்த்தையாக இழந்துகொண்டிருக்கிறது
இரு மலைகளுக்கு நடுவில் ஒளி ஒவ்வொரு துளியாக
விழுந்துகொண்டிருக்கிறது
ஒரு முதியவனின்
முகத்தை நிழல்களின் விரல்களை மூடுகின்றன
அவன் தொண்டையிலிருந்து எழும் குரல்
காற்றின் குகைக்குள் தொலைகிறது.
தெருவில் மூன்று கால் மட்டுமிருக்கும் நாய்
வளையும் வாலை
காலாக்கத் தோற்று விழுகிறது
நிற்காமல்.
கம்பங்கள் வழி பிரயாணிக்கும் தொலைபேசிக் கம்பியில்
நேற்றும்
இன்றும்
ஹலோ
ஹலோ
என்கின்றன
அடகுக்கடை வாசலில் படுத்திருக்கும் கிழவன்
என்னைப் போலவே இருக்கிறான்
கான்க்ரீட் தரையில் அவன் நாக்கு ஒட்டியிருக்கிறது
அதை அசைத்து அவன் எழுப்பும் ஓசையில்
நான் நிற்கும் நிலம் அதிர்கிறது.
சருகுகள்மீது மோதும் பாலித்தீன் பைகளின்
சருமத்தில் வழிகிறது
பனி
காலி
ரயில்வண்டிக்குள்
பனிமூட்டம்
ஒவ்வொரு பெட்டியாக
யாரைத் தேடுகிறது?
ஒரு சிறுமி தற்கொலை செய்துகொள்கிறாள்
தவளையை முத்தமிட்டு
நெடுஞ்சாலையில் காரைச் செலுத்துபவன்
வழி மாறித்
தொலைந்துபோகிறான்
ஒரு பாடலுக்குள்
பட்டாம்பூச்சி
பறக்கிறது
ஒளியின் ஒற்றைக் கண்ணைச்
சிமிட்டிச்
சிமிட்டி
கட்டில்களடியில்
ஆணுறைகள்
சுரங்கப் பாதையைத் தோண்டுகின்றன
குழந்தை பாடுகிறது
பாடலின்
முதல் வரியை
மீண்டும் மீண்டும்
கைக்கெட்டாது பறக்கின்றன
வண்ண வண்ண பலூன்கள்
திருடனின் கனவில்
வீடற்றவனின் மூச்சுக்காற்று
நடுவாந்தரத்தில்
கோட்டையை உருவாக்குகிறது;
அவன் உறங்குகிறான்
நெடுஞ்சாலையெங்கும்
கடவுள் தொலைத்த
ஓற்றைச் செருப்புகள்
உடைந்த முட்டை ஓட்டுக்குள்
ஒரு அணில் முகத்தைப் புதைத்து
அழுகிறது
மலைமீது மழையில்
நகரும் குதிரை
மழையின் வரைபடத்தைக் குளம்புகளால் வரைந்தபடி
ஜன்னல் வழி எட்டிப் பார்க்கும் நடுத்தர வயதுப் பெண் முன்
தெரு தலைக்குப்புறக் கிடக்கிறது
இருளில் நிற்பவனின் முகத்தைப் போலிருக்கிறது
உன் காதல்
இருப்பதுபோலவும்
இல்லாததுபோலவும்
உறுத்தும் ஒளிப் புள்ளிகளுடனும்
சூதாட்டத்தில்
ஒரு காய்
இருளின் கட்டத்திலிருந்து
ஒளியின் கட்டத்துக்கு
உருளுகிறது
மற்ற காய்
மூச்சிரைப்புடன்
தலையைக் கவிழ்த்து அழுகிறது
யாரும் பார்க்காத
பொழுதுக்குள் பறக்கின்றன
வாத்துகள்
கூட்டமாக
மைதானத்தில் ஆட்டக்காரன்
பந்தை அடிக்கத் தவறி
எறிந்த மட்டை
பார்வையாளனின் மண்டையில் விழ,
தெறிக்கும் மூளையை
குட்டிக்கரணம் போட்டு "கேட்ச்" பிடிக்கிறான் ஃபீல்டர்
அம்பயர் சுட்டுவிரலை உயர்த்தி
அவுட்
என அறிவிக்கிறார்.
Sunday, March 13, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment