மின்சாரமற்ற இரவில் மௌனம்
தூரத்து ஒலியைக் கூர்மையோடு
இருளில் பாய்த்துச் செல்லும்.
மரணத்தில் கரிய மலர்கள்
தமது வசீகர மனத்தைப் பரப்பத் தொடங்குகின்றன.
சப்தங்கள் ஒளிதழுவி
இயங்குவதை விரும்புகின்றன.
வெளிச்சம்போலன்றி
இழுப்பதற்கு எதுவுமற்று
அறையினுள்ளும் புறமும்
ஒரு மரக்கட்டையாய் வாழ்வு வெள்ளத்தில்
மிதக்கிறது இருள்.
ஒளியை ஒருக்காலும்
கட்டித் தழுவ முடியாது
இருளை எப்போதும்
தழுவிப் புணர முடியும்.
இருளின் நிறமென்ன என்ற கேள்வி
எழும்போது நகைக்காதே
ஒருவேளை அது மிருகங்களுக்கு மாத்திரம்
தெரிந்த விஷயமாயிருக்கலாம்
ஏனெனில் மிருகங்கள்தான் இருளைப் பார்க்கின்றன.
l
எதன்மீதும் குறுக்கீடு நிகழ்த்தவில்லை நான்
எனது இருப்போ
மண்புழுவினுடையது போன்று மறைவாயிருக்கிறது.
மங்கலான எனது மொழி
காற்றைக் கீறிப் பிளக்கக் கூடாமல்
நீரிலிட்ட பரல்கல்போல் மூழ்கி மறைகிறது.
எனது உடலைக் கையால் ஒதுக்கியபடி
கூட்டத்தில் ஆட்கள் நகர்கின்றனர்.
எனது பாதச் சுவடுகளில் கால்களால் மண் பறித்து
மூத்திரம் பெய்து மூடுகின்றன பூனைகள்.
ஒரு கோணிப்பையாய்
பேருந்தில் பயணிக்கிறேன்.
தலைக்கு மேலாகப் பறக்கும் புறாக்கள்
எந்தத் தேவனின்
ஆசீர்வாதத்தையும் கொண்டுவராமல்
தொலைவில் கடக்கின்றன.
அகண்ட வெளியின்
ஒரு சிறிய இழையை எடுத்துப்
பின்னத் துவங்குகையில்
சொப்பனம் முடிந்துவிடுகிறது. எதன்மீதும் . . .
l
உனது பாதங்கள்
நாளொன்றில்
மிகச் சிறிய பரப்பினைத் தீண்டி மீள்கின்றன.
குறைந்த சொற்களை
ஒரே மாதிரி உச்சரிப்பதில்
ஒரு நாளின் உரையாடல் முடிகிறது.
ஒளியில் கரைந்திருக்கும்
நிழல்களை உற்று நோக்காமல்
விழிகள் குனிந்து பார்ப்பதோடு
ஒரு நாளின் விழிப்பு வீழ்கிறது.
உடலின் தூர ஒலி கேட்காத
உன் செவிகளில்
நாளெல்லாம்
கண்ணாடி உடைவது போன்ற சப்தம்
குடைந்தபடியிருக்கிறது.
பாய் விரிக்கும்போதெல்லாம்
உனது ஒரு முடி நரைக்கிறது
இன்னொரு முடி உதிர்கிறது.
ஆடை கழற்றி முடிவதற்குள்
உனது
சொப்பன ஸ்கலிதம் நிகழ்ந்துவிடுகிறது
Saturday, March 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment