Saturday, March 12, 2011

ஈழத்துக் கவிதைகள்- றஞ்சினி

ஓ . . .

யாருமற்ற பரந்தவெளி
தேவையாக உள்ளது
வண்ணங்களும் நகரங்களும்
சேர்ந்து அதிர்ந்த
பிரபல ஓவியம்போல . . .
ஏற்க முடியவில்லை உன்னால்
என் அறிவின் வேகத்தைக்
கொன்றுவிட்டாய் என்னை
மௌனமாக இருந்தே
நீ தந்த வலிகள்
நியாயமற்றவை
அதனால்தான் இன்னும்
வலிக்கிறது
என் காதலே
கிறுக்கலில்தான்
கிறுக்கலுக்கும் கவிதைக்கும்
காதல் வருமா என்கிறாய் நீ
புரிதலில் எப்பவுமே
குழப்பம்தான் எமக்கு.
சாதாரண வாழ்வு இல்லைதான்
என்னது
இருப்பினும் வாழ்வை உறவை
நேசிப்பவள்;
என்னை
கவிதைகளில் ஆராய்கிறார்கள்
தடயங்களை நான்
அழிக்காதபோதும்.

அசைவின்றி ஒரு பொழுது

ஞாயிற்றுக்கிழமை
நேரம் நான்கு மணிதான்
மனிதர்கள் இருப்பதாகத்
தெரியவில்லை
காற்றோடு போராடும்
மரங்களும் குளிரும்
மழையும் நானும்தான் . . .
அயல் வீடுகளில்
இருள் குடிவந்திருக்கிறது
தொலைபேசி அடிக்கடி
சிணுங்கிக்கொண்டிருக்கிறது
எப்பவோ நினைவிலிருந்து
விலகிப்போன காதலன்
இன்றும் அழைக்கிறான்
நண்பியின் சலிப்பான
வார்த்தைகள்
ஒலிப்பதிவு நாடாவில்
யாருடனும்
பேச வேண்டும்போல்
இல்லை
எதைப் பற்றியும் அறியவோ
சிந்திக்கவோ
ஆசையும் இல்லை
போர்வையின்
கணகணப்பான
அணைப்பிலிருந்து
உடல் அசைய மறுக்கிறது.

அழகியல் . . .

ரசனையாலான உனது அறையில்
உயிரான உன் ஓவியங்களுடன்
நானும் நீயும்
நீண்ட நாட்கள் பழகிய உணர்வுடன்
உன் ஈர்ப்பில் அசைவற்ற என்னை
ஓவியமாக்கி உயிராக்கினாய்
உன்னை நான் கவிதையாக்கினேன்
கலையும் இலக்கியமும்
கலந்து மகிழ்ந்தோம்
உன்னால் உனது ஓவியம் அழகா
ஓவியனானதால் நீ அழகா
பிரிக்க முடியவில்லை
இரண்டையுமே.

No comments: